தமிழர் அரசியல் புலத்தில் விடை தெரியாத கேள்விகள்..!! (கட்டுரை)
சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த’ கதையாகியுள்ளது வடக்கு, கிழக்கு அரசியல் நிலைமைகள் என்றால் மறுப்பதற்கில்லை.
தமிழர்களது போராட்ட வரலாறுகளும் அதனூடான உரிமைக்கான குரலும் ஓங்கி ஒலித்த காலத்தில் இருந்த திடமான அரசியல் களம், தற்போது தடம்புரளும் வங்குரோத்தில் செல்கின்றமை ஆரோக்கிமானதாக இல்லை.
விடுதலைப் புலிகளினால் உருவாக்கம் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று ஆரம்பகால தார்ப்பரியங்களை மறந்து செயற்படுவதாகப் பல்வேறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அந்தப் பந்தையக் குதிரையில் பயணிப்போர் தமிழர் நிலைப்பாட்டை உணர்ந்துள்ளனரா என்ற கேள்விகள் பலமாகவே உள்ளன.
சிங்கள ஆட்சியாளர்கள் எவருமே, தமிழர்கள் விரும்பும் நீதியான, அரசியல் அதிகாரங்களைத் தர மறுப்பர் என்பது, இன்று-நேற்று அறியப்பட்ட விடயமல்ல; தந்தை செல்வா காலத்திலேயே உணரப்பட்டமையால் ஆயுதப்போராட்ட வழிமுறை என்ற நிலைப்பாட்டைத் தமிழ் இளைஞர்கள் கையில் எடுத்திருந்தனர்.
ஆயுதப்போராட்டத்தின் தோல்வியின் பின்னரான இன்றைய அரசியல் நிலைமையில், பெரும்பான்மை இனத் தலைமைகள் தற்போது திருந்தியுள்ளதாகவும் அதனூடாகத் தமிழர்களின் கோரிக்கைகளை அவர்கள் உணர்ந்துள்ளார்கள் எனவும் அதற்குச் சாதகமாகச் செயற்படுவார்கள் என்றும் இதயபூர்வமாக நம்பி, மத்திய அரசாங்கத்தை ஆதரிப்பது அல்லது அவர்களுடன் ஒத்தோதிப் போவது எந்தளவுக்குச் சாத்தியமாகும் என்ற மிகப்பெரிய கேள்விக்குறி தற்போது தமிழ்மக்கள் மத்தியில் உருவெடுத்துள்ளது. இத்தகைய போக்கு எதிர்காலத்தில் தமிழரின் இருப்பையே பெயர்த்துவிடுமோ என்ற ஐயப்பாடும் அவர்கள் மத்தியில் எழாமல் இல்லை.
தற்போது, புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில், “முதல் இரண்டு பக்கங்களையும் படித்துப்பாருங்கள்” என மேடைபோட்டுக் கூறிவரும் அரசியல் முக்கியஸ்தர்கள், முதல்பகுதியின் முதலாவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, ‘பிரிக்கமுடியாத இறைமை’ என்பதற்கான வரைவிலக்கணத்தைத் தௌிவுபடுத்த வேண்டும்.
‘பிரிக்க முடியாத இறைமை’ என்பது மத்தியில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் பிரிந்து செல்ல அனுமதிக்க முடியாத பலத்தையும் கொண்ட மத்திய அரசாங்கத்தின் ஆழுமையையே காட்டுகின்றது.
இவ்வாறிருக்கையில், சமஷ்டி என்ற சொல்லாடல் மறைந்திருப்பதாகவும் அதுவே இது; இதுவே அது என்கின்ற வகையிலும் மாறுபட்ட சொல்லாடல்களைக் கொண்டு, மக்கள் மத்தியில் மயக்கத்தை விதைக்க முற்படுவது எத்தகைய மனநிலையின் வெளிப்பாடு என்பதை மக்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள்.
வெறுமனே ஊடகங்களே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிழையாகப் பிரதிபலிப்பதாகவும் ஊடகங்கள் தவறான வாதத்தையும் பிரசாரத்தையும் மக்கள் முன்வைப்பதாகவும் குற்றம்சாட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர்கள், ஊடகவியலாளர்கள் முன்வைக்கும் கேள்விகளும் கருத்தியல் வாதங்களும் மக்களின் தளத்தில் இருந்து உருவானவை என்பதை உணரவேண்டும். சாதாரண மக்களின் சிந்தனைப்போக்கு அவ்வாறுதான் இருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
வெறுமனே ஊடகங்களைப் பிழையாகச் சுட்டிக்காட்டி, தமது அரசியல் பயணத்தை மேற்கொள்ள எத்தனிப்பதானது, மக்களின் செல்நெறியை, கருத்தியலை அல்லது ஜனநாயகத்தின் பண்பை மதித்து சிந்தையில் கொள்ளவில்லை என்பதையே புலப்படுத்துவதாக அமைந்துவிடும்.
இவ்வாறான நிலையில், உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தலில், இடைக்கால அறிக்கை தொடர்பான வாதங்களை முன்வைத்து, உள்ளூராட்சி மன்றங்களின் மூலம் மேற்கொள்ளக் கூடிய அபிவிருத்தி என்ற மனநிலைமையை மாற்றியமைத்து, அரசியல் அமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பே இடம்பெறவுள்ளதான தோரணையொன்று வடக்கில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இழப்பு ஏற்படுமாக இருந்தால், தமிழர்களின் பலம் இழக்கப்படுவதாகக் கூட்டமைப்பின் கூட்டுக்குள் உள்ள பங்காளிக்கட்சிகளின் கருத்துகள் அமைந்துள்ளன.
ஆனால், வயதுவேறுபாடின்றி சந்திசந்தியாக, ஊண்உறக்கமின்றிப் போராடும் காணாமல் போனோரின் உறவினர்கள், சொந்த இடத்தில் மீள்குடியேற்றம் வேண்டுவோர் போன்ற இன்னோரன்ன கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுவோரின் பிரச்சினைகளுக்கு இதுவரை ஏன் தீர்வு காணவில்லை என்ற மக்களின் கேள்விக்கு விடையேதும் அவர்களைச் சென்றடையவில்லை.
வெறுமனே தேர்தல் காலத்தில் மாத்திரம், சர்வதேசத்தையும் தமிழர் பலத்தையும் வைத்துப் பூச்சாண்டி காட்டப்படுகின்றதா என்ற சந்தேகத்தை இன்றுள்ள நிலைமைகள் தமிழர்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளதாகவே அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுஇவ்வாறிருக்க, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற புதிய கூட்டு, தமிழர்களின் அரசியல் தளத்தில் எந்தளவுக்கு நின்று நிலைக்கும் சக்தி கொண்டதாக அமையப்போகின்றது என்பதைக் கால ஓட்டமே பதில் கூறவேண்டும்.
ஆசனப்பங்கீட்டு அடிப்படையில் தாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து வெளியேறவில்லை என மார்தட்டிக்கொள்ளும் ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எந்தத் தொகுதியிலும் ஆசனப்பங்கீட்டைச் சரிவரக் கொடுக்காமையினால், அதன் தலைவரான வீ. ஆனந்தசங்கரி விசனத்துக்குள்ளாகி இருந்தார்.
இதன் காரணமாக, வவுனியா மாவட்டத்தில் தமிழ் மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் சபைகள் நான்கு உள்ளபோதிலும், வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபைக்காக மாத்திரம் மூன்று ஆசனங்கள் வழங்கப்பட்டிருந்தன.
எனினும், இந்த மூன்று ஆசனங்களைக்கூட, தனது ஆதரவாளர்களைக் கொண்டு நிரப்பமுடியாத நிலையில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு, அரசாங்கத்துடன் கைகோர்த்துள்ள சிறி டெலோ கட்சியின் அங்கத்தவர்களை உள்ளீர்த்து, நிரப்பவேண்டிய தேவையேற்பட்டுள்ளது.
குறிப்பாக, சிறி டெலோ கட்சியானது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து, வவுனியா மாவட்டத்தில் போட்டியிடுகின்ற போதிலும், தனது இளைஞரணியின் செயலாளர் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட, மூவரைத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆசன ஒதுக்கீட்டின் மூலம், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்குள் களம் இறக்கியுள்ளது.
எனவே கொள்கை, தேசியம் என்பவற்றுக்காக உருவாக்கப்பட்டதாக வெளிப்படுத்தப்பட்ட இக்கூட்டு, இவ்வாறாக அரச கட்சிகளுடன் கூட்டு வைத்துள்ளவர்களை உள்ளீர்த்து வைத்துள்ளமை அவர்களுக்குள்ளேயே முரண்பாடான நிலையை தற்போது தோற்றுவித்துள்ளது.
அதற்குமப்பால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து வெளியேறி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கட்சிகள், தற்போது அக்கட்சியின் உரிமையாளரையே கூட்டங்களுக்கு அழைக்காமை, வீ. ஆனந்தசங்கரி என்ற மூத்த அரசியல்வாதிக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலைமையானது, இக்கூட்டமைப்பின் நிலைபேறு தன்மை தொடர்பான அவதானத்தைச் செலுத்த வேண்டிய தேவையை எடுத்துக்காட்டுகின்றது.
இதற்குமப்பால், வடக்கு மாகாண முதலமைச்சரின் செல்வாக்கைப் பயன்படுத்தி, அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்க முற்பட்ட சில அரசியலாளர்களுக்கு, அண்மையில் அவரால் வெளிப்படுத்தப்பட்ட அறிக்கை, அவர்களுக்கு மக்கள் முன்னிலையில் தமது அரசியல் பயணத்தை முன்கொண்டு செல்வதில் ஒரு தடைக்கல்லாகவே விழுந்துவிட்டது.
காலச்சூழலில் மாற்றுத்தலைமை என்பதன் தேவை தொடர்பாக, மக்கள் உணரத்தலைப்பட்டபோது, அது ஆக்கபூர்வமான அரசியல் நிலைப்பாடுகளை உள்ளடக்கிய சக்தியாகப் பரிணமிக்கும் என்ற அவா தமிழர்கள் மத்தியில் இருந்தது.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வெளியேறியபோது, அவ்வாறான ஒரு தலைமை உருவாகும் என மக்களே எண்ணாத நிலையில், “காங்கிரஸைத் தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் சக்தியாகவே மக்கள் பார்க்க தலைப்பட்டிருந்தனர்” என அக்கட்சியின் தலைவரே கூறியிருக்கின்றார்.
எனினும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, கூட்டமைப்பில் இருந்து வெளியேறியபோது, சிறந்த மாற்றுத் தலைமையின் வெளிப்பாடாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில், வெளியேறிய ஈ.பி.ஆர்.எல்.எவ், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸுடன் இணைந்து, புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணப்பாடு காணப்பட்டது.
அதற்குமப்பால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்துகொண்டே கூட்டமைப்பை விமர்சனம் செய்து, சரியான பாதைக்குக் கொண்டு செல்ல முற்படும் நபராக, சுரேஷ் பிரேமச்சந்திரனை பார்க்க நேரிட்டிருந்தது.
இவ்வாறான காரணங்களை முன்வைத்து, ஆரோக்கியமான அரசியல் சூழலை எதிர்பார்த்த தமிழ் மக்கள் மத்தியில், சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல.எப் எடுத்திருந்த முடிவு சற்று வெறுப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது.
உதயசூரியன் சின்னம் என்பது, தமிழர்களின் அரசியல் வரலாற்றில் ஒரு சரித்திரமாக உள்ளபோதிலும், அது தற்போது எவர் கையில் உள்ளது என்பதே விமர்சனத்துக்குள்ளாகி இருக்கின்றது.
வீ. ஆனந்தசங்கரி என்ற முதுபெரும் அரசியல்வாதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒன்றை விடுதலைப்புலிகள் உருவாக்கம் செய்திருந்தபோது, உருவாக்கிக்கொண்ட முரண்பாடான நிலையில் இருந்து, அவர் மீதான விமர்சனம் தமிழர் மத்தியில் ஆழமாகப் பதிந்த விடயமாகவே உள்ளது.
இந்தநிலையில், புதிய ஆத்மார்த்தமான மாற்றுத் தலைமையொன்றின் உருவாக்கம் பற்றிய அவாவில் இருந்த தமிழர்களுக்கு, காங்கிரஸும் ஈ.பி.ஆர்.எல்.எப் உம் தனித்தனிக் கட்சிகளாக மீண்டும் பயணிக்கப்போவதாக வந்த செய்திகளும் மக்களால் விமர்சன நோக்கத்தில் பார்க்கப்பட்ட சின்னத்தை, புதிய கூட்டாக இணைத்துக் கொண்டமையும் ஜீரணிக்க முடியாத நிலைமையே தோற்றுவித்துள்ளன.
இவ்வாறான நிலைமைகள், தமிழர்களின் அரசியல் வகிபாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான தலைமை எது என்கின்ற தேடலை, தமிழர் அரசியல் தளத்தில் தற்போது தேடவைத்துள்ளது.
பதவிகளையும் அதனூடான வசதிகளையும் பெறமுனையும் கட்சிகளை ஆதரிப்பதா, தேசியம், சுயநிர்ணயம் என்ற தளத்தில் பயணிக்கும் அரசியலாளர்களை ஏற்பதா? இல்லையேல் புதிய தலைமையாகத் தம்மை அடையாளப்படுத்தி நீடித்து நிலைக்கும் தன்மையைக் கேள்விக்குட்படுத்தியுள்ள புதிய கூட்டமைப்புகளை ஆதரிப்பதா என்ற ஐயப்பாடும் விடை தெரியா கேள்விகளும் நிறைந்தே தமிழர் அரசியல்புலம் உள்ளது.
வெறுமனே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் தேர்தல் களம் என்பதாக உருவகப்படுத்தி, எவரது வண்டவாளம் வெளியில் வரும் என மக்களை வெகுளிகளாக்கி, முனைவதைவிடுத்து, வறுமையும் வாழ்வாதார சுமையும் தாக்கி நிற்கும் மக்களுக்கு, ஏதுவான வழிவகைகள் எவை என்பதையும் எதைத் தாம் சாதிக்க முனைகின்றோம் என்பதையும் சுட்டிக்காட்ட தவறும் தலைமைகள் தொடர்பில் தமிழர்கள் நொந்துகொள்வதைத் தவிர, மாற்று வழி இல்லை என்பதே இன்றைய அரசியல் நகர்வில் வெளிப்படுகின்றது.
எனவே, ஆக்கபூர்வமான அபிவிருத்திகளையும் அதனூடான நிலையான தமிழர் அரசியல் களத்தையும் உருவாக்குவதனூடாகத் தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தை ஜனநாயக வழிநின்று கொண்டு செல்வதற்கு வழிசமைக்கவேண்டும் என்பதை இன்றைய அரசியல் தலைமைகளாகத் தம்மை அடையாளப்படுத்துவோர் மனத்தில் கொள்ளவேண்டும் என்பதே யதார்த்தம்.
Average Rating