பந்தயத்தில் குதிரை..!! (கட்டுரை)
முஸ்லிம்களின் அரசியல், கடந்த இரு தசாப்தங்களாக அடைந்துள்ள பின்னடைவுகளில் இருந்து மீட்சிபெற்று, வேறு ஒரு பரிமாணத்தை எடுக்க எத்தனிக்கின்ற ஒரு காலப்பகுதியில், புதிய தேர்தல் முறையிலான ஓர் உள்ளூராட்சி தேர்தலை, இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளனர்.
புதிய தேர்தல் முறைமையின் முக்கிய கூறுகள் என்ன? அதில் உறுப்பினர் தெரிவு எவ்வாறு இடம்பெறும்? வெற்றியாளர் எவ்வாறு தீர்மானிக்கப்படுவார்? ஆட்சியமைப்பதும் சபையின் தவிசாளரை தெரிவதும் எவ்வாறு அமையும்? பெண்களின் பிரதிநிதித்துவம் எவ்வாறு உறுதிப்படுத்தப்படும் என்பது உள்ளடங்கலாக, பல விடயதானங்களில் எவ்வித விளக்கங்களும் இன்றி கட்சிகளும் வேட்பாளர்களும் களத்தில் குதித்திருக்கின்றனர். கட்சிகளின் நிலையே இதுவென்றான போது, வாக்காளப் பெருமக்களின் நிலை பற்றி சொல்லத் தேவையில்லை.
இது வட்டார முறை தேர்தல் என்பதால் ஒரு புதுவிதமான தேர்தல் போக்கை இம்முறை காணக்கூடியதாக இருக்கும்.
நாம் ஏற்கெனவே இப்பக்கத்தில் குறிப்பிட்டது போன்று, உள்ளூராட்சித் தேர்தல் என்பது சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய விடயமல்ல.
தேசிய அரச ஆளுகைக் கட்டமைப்பின் அடிமட்டக் கூறுதான் உள்ளூராட்சி மன்றங்களாகும். உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தே மாகாண சபைக்கும் நாடாளுமன்றத்துக்கும் மக்கள் பிரதிநிதிகள் அதிகாரப் பதவிகளின் ஊடாக மேல்நோக்கிச் செல்கின்றார்கள். இந்நிலையில் முஸ்லிம் கட்சிகள் வகுத்திருக்கின்ற வியூகங்கள், சுருங்கக் கூறின், அதிக உறுப்பினர்களைப் பெறுதல் அல்லது எதிரணியை வீழ்த்துதல் என்ற குறுகிய சிந்தனை வட்டத்துக்குள் பயணிக்கும் வியூகங்களாகவே தெரிகின்றன.
செயற்பாட்டு அரசியலில் இருக்கின்ற மூன்று பிரதான முஸ்லிம் கட்சிகளில் எந்தவொரு கட்சியும் நாடு முழுவதிலும் தனதுசொந்தச் சின்னத்திலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு தனித்த சின்னத்திலோ போட்டியிடவில்லை.
புதிதாக அரசியல் கட்சி அந்தஸ்து பெற்றுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மட்டுமே, சொந்தச் சின்னத்தில் களமிறங்கியுள்ளது.
எல்லா முஸ்லிம் கட்சிகளும் பெருந்தேசியக் கட்சிகளின் அரசியல் எனும் தேன் குவளைக்குள் மூழ்கிய வண்டுகளாகவே இருக்கின்றன.
அந்தவகையில், முஸ்லிம்களுக்கு தனியான ஓர் அரசியல் அடையாளமும் தனிவழி அரசியல் பயணமும் அவசியம் என்ற கோதாவில் உருவாக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை நான்கு சின்னங்களில் போட்டியிடுகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தேசிய காங்கிரஸும் இவ்விரு சின்னங்களில் போட்டியிடுகின்றன.
பெருந்தேசிய அரசியல் சக்திகளாகக் கருதப்படுகின்ற ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் சிறுபான்மைக் கட்சிகளின் அரசியல் தீர்மானங்களில் எந்தளவுக்குச் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதையும், ஐ.தே.கவைப் பகைத்துக் கொண்டு மு.கா மற்றும் ம.கா கட்சிகளுக்கோ, சு.கவை விட்டுவிலகி தேசிய காங்கிரஸுக்குத் தனித்து பயணிக்க முடியாத விதத்தில் பெருந்தேசியக் கட்சிகளின் செல்வாக்கு இருப்பதையுமே இது எடுத்துக் காட்டுகின்றது. எது எவ்வாறிந்த போதிலும், மூன்று பிரதான முஸ்லிம் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் கூட்டுகள், வியூகங்கள் தொடர்பில் பெருமிதம் கொள்வதுடன் அதனை நியாயப்படுத்தவும் முனைகின்றன.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் தேர்தல் வியூகம் பற்றிப் பல்வேறு அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுகின்றமையால், அதுபற்றிப் பேச வேண்டியிருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அதாவுல்லா பலம் பொருந்திய அமைச்சராக, ஒரு குறிப்பிடத்தக்க வகிபாகத்தைக் கொண்டிருந்தார்.
அக்காலப்பகுதியில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் வட்டமடு காணிகள் உள்ளிட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை, நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஒலுவிலில் காணி இழந்தவர்களுக்கான நட்டஈடு, நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை என்ற விமர்சனங்கள் இப்போதும் முன்வைக்கப்படுவதுண்டு.
ஆனால், இதற்கெல்லாம் அப்பால் தன்னுடைய சொந்த ஊருக்குக் குறிப்பாகவும் ஏனைய ஊர்களுக்குப் பரவலாகவும் பல சேவைகளை அவர் செய்திருக்கின்றார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா சேவை செய்ததைப் போல், அம்பாறை மாவட்டத்தில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்புக்குப் பிறகு குறிப்பிடத்தக்க சேவையை அதாவுல்லா செய்திருக்கின்றார் என்று ஒரு பொதுவான அபிப்பிராயம் உள்ளது. அபிவிருத்தித் திட்டங்களும் பலநூற்றுக்கணக்கானோருக்கு வழங்கிய தொழில்களும் இவற்றில் முக்கியமானவை எனலாம்.
இவ்வாறு பல அபிவிருத்திகளை அதாவுல்லாவும் தேசிய காங்கிரஸும் மேற்கொண்டிருந்த போதிலும், உரிமை அரசியலில் குறிப்பாக, இனவாதம் முஸ்லிம்களின் மீது சீறிப்பாய்ந்த வேளையில், அதற்கெதிராக முஸ்லிம்கள் சார்பாக நின்று பொதுவெளியில் பேசவில்லை என்பதை மக்கள் அவதானித்து வந்தனர். அந்த நேரத்திலேயே அவர் மஹிந்தவை ஆதரித்தார்.
இவ்விரு நிலைப்பாடுகளையும் அதாவுல்லா எடுத்தமையால் கடந்த பொதுத் தேர்தலில் அதாவுல்லாவால் வெற்றிபெற முடியாமல் போனது. மக்கள் காங்கிரஸ் கட்சி, அம்பாறைக்குள் நுழைந்தமையும் இதற்கு இன்னுமொரு காரணம் எனலாம்.
ஆனால், அதாவுல்லா சற்று நின்று நிதானித்து இயங்கத் தொடங்கினார். பிரதிநிதித்துவ அரசியலில் இல்லாத போதிலும், செயற்பாட்டு அரசியலை கடந்த இரு வருடங்களில் அவர் முன்கொண்டு சென்றிருக்கின்றார். ‘சுதந்திர கிழக்கு’ என்ற ஒரு கோசத்தின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிராக அவர் நடாத்திய கூட்டங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
“ரணில் விக்கிரமசிங்க சாரதியாக இருக்கும் வரைக்கும் ஐ.தே.க எனும் பஸ்ஸில் நான் பயணிக்க மாட்டேன்” என்று மறைந்த மு.கா ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் சொன்ன விடயத்தை அடிக்கடி ஞாபகப்படுத்தி வரும் தே.கா தலைவர், ஒருசில காலம் ரணில் ஆட்சியில் பிரதி கல்வியமைச்சராக பதவி வகித்தார். என்றாலும் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக தேசிய காங்கிரஸின் அரசியல் என்பது சுதந்திரக்கட்சி சார்பானதாகவே சென்று கொண்டிருக்கின்றது.
மொத்தமாக 15 சபைகளில் போட்டியிடும் தேசிய காங்கிரஸ், ஐந்து சபைகளில் சு.கவின் கை சின்னத்தில் தமது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. ஏனைய 10 உள்ளூராட்சி மன்றங்களில் தமது குதிரைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது.
கடந்த ஒன்றரை வருடத்திலான தேசிய காங்கிரஸின் செயற்பாடுகளை பார்த்த மக்கள், கடந்த தேர்தல் தோல்விக்குப் பிறகு அதாவுல்லா சில பாடங்களைப் படித்திருப்பது போலவும் சில விடயங்களில் பட்டுத் தேறியிருப்பதாகவும் கருதினார்கள்.
அதன்படி அக்கட்சி இம்முறை சு.கவுடன் எவ்விதத்திலும் கூட்டுச் சேரமாட்டாது என்றும் அதற்கு மாறாக இரண்டு விதமான வியூகங்களை வகுக்கலாம் என்றும் ஊகங்கள் வெளியாகியிருந்தன.
முதலாவது வியூகம், தேசிய காங்கிரஸ், முஸ்லிம் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கூட்டமைப்பில் அங்கம் வகிப்பது தனக்குப் பல பாதகங்களைக் கொண்டு வருவதுடன் கட்சியின் அடையாளத்தையும் சிதைவடையச் செய்துவிடும் என்று அவர் நினைத்திருக்கக் கூடும். இந்தப் பின்னணியில் அவர் முஸ்லிம் கூட்டமைப்புக்குள் இணையவில்லை.
மறுபுறத்தில், சுதந்திரக் கட்சியுடனும் அதன் அப்போதைய தலைவரான மஹிந்தவுடனும் கொண்டிருந்த கூட்டுறவே தேசிய காங்கிரஸ் தலைவரின் அண்மைக்கால அரசியல் பின்னடைவுக்குக் காரணமாகியது என்ற அடிப்படையிலும், மைத்திரிபால சிறிசேனவுடனும் பெரிய நல்லெண்ண உறவுகள் இருக்காது என்ற அனுமானத்திலும் இம்முறை தேர்தல் பந்தயத்தில் தேசிய காங்கிரஸ் தனித்தே தனது குதிரையை ஓடவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், ஐ.தே.கட்சி முஸ்லிம் காங்கிரஸுக்கும் மக்கள் காங்கிரஸுக்கும் விடுத்த வேண்டுகோளைப் போல, சுதந்திரக்கட்சி தேசிய காங்கிரஸுக்கு விடுத்த வேண்டுகோளை அக்கட்சி ஏற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் எந்த வேறுபாடுகளும் இல்லை. தேசிய காங்கிரஸின் இத்தீர்மானம் தொடர்பில் சாதக – பாதக அபிப்பிராயங்கள் மக்கள் களரியில் முன்வைக்கப்படுகின்றன.
குறிப்பாகத் தலைவரின் சொந்த ஊரான அக்கரைப்பற்று மாநகர சபைக்கான வேட்பாளர் நியமனம், இன்னுமொரு வேட்பாளர், சந்தேகத்தின் பெயரில் அண்மையில் கைதாகி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை ஆகிய இரு விடயங்கள் முக்கியமான பேசுபொருள்களாக இருக்கின்றன.
இது தொடர்பாகக் கட்சித் தலைவர் அதாவுல்லா, பகிரங்கமாகவே விளக்கமளிக்கத் தொடங்கியிருக்கின்ற சூழலில், தேசிய காங்கிரஸின் ஊர் கடந்த, பரந்துபட்ட அரசியலில், இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூற முடியாதுள்ளது.
தேசிய காங்கிரஸின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டமும் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வும் சில தினங்களுக்கு முன்னர் அக்கரைப்பற்றில் நடைபெற்றது.
அண்மைக்காலமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி, ‘டயஸ்போரா’ எனப்படும் புலம்பெயர் சக்திகள், நோர்வே, யஹூதி நஸறாக்கள் ஆகியவை தொடர்பாகப் பேசிவரும் அதாவுல்லா, இக்கூட்டத்திலும் அதுபற்றி பிரஸ்தாபித்தார்.
அத்துடன் முஸ்லிம் கூட்டமைப்பில் தன்னை இணைக்க முற்பட்டதும் ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம் என்று குறிப்பிட்டார். ஆனால், ஐ.தே.க அவ்வாறான ஒரு திட்டத்தை கொண்டிருக்கலாம் என்றாலும் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்களுக்கு அப்படியான ஒரு நிகழ்ச்சிநிரல் இருந்ததாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம், சில மாதங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட பாலமுனைப் பிரகடனத்தை மீள வலியுறுத்தியிருந்ததுடன், மக்களிடம் அப்பிரகடனத்துக்கு அங்கிகாரம் கோரும் சந்தர்ப்பமாக இத்தேர்தலை தே.கா.க கருதுவதையும் உணர்த்தியது.
‘நம்மைப் பிளவுபடுத்தித் தங்களுக்குச் சாதகமான நிலைமைகளை உருவாக்கும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளே இதற்குப் பின்னால் இருக்கின்றன’ என்று தே.கா விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை விஞ்ஞாபனத்தின் ஒரு பிரிவாக முன்வைத்துள்ள இக்கட்சி, அரசமைப்பு மறுசீரமைப்புக் குறித்தும் பிரஸ்தாபித்துள்ளது.
இவ்வாறாக களத்தில் குதித்துள்ள தேசிய காங்கிரஸுக்கு இம்முறை உள்ளூராட்சி சபை தேர்தலில் மு.காவுக்கு (ஐ.தே.கட்சிக்கு) மேலதிகமாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் களமிறங்கியிருக்கின்ற மக்கள் காங்கிரஸும் சில வட்டாரங்களில் ந.தே.முன்னணியும் சவாலாக இருக்கலாம் என்பதே இன்றைய களநிலைவரமாகும்.
நின்று நிதானித்து, ஆற அமர யோசித்து, புதிய வியூகங்களோடு பயணித்த எல்லா அரசியல் நகர்வுகளும் ஏதோவோர் அடிப்படையில் வெற்றியடைந்திருக்கின்றன.
அவ்வாறு நின்று நிதானித்து, மீள்பரிசீலனை செய்வதற்கான அவகாசத்தை அதாவுல்லாவுக்குக் காலம் வழங்கியிருந்தது. ஆனால் அவரது வியூகங்கள் கடந்தகாலத் தவறுகளைச் சரிசெய்திருக்கின்றனவா என்பதை தேர்தல் முடிவுகளின் ஊடாகவே அறிந்து கொள்ள முடியும்.
Average Rating