நிலைக்குமா சங்கரி – சுரேஷ் கூட்டணி..!! (கட்டுரை)
எழுபது வயதைக் கடந்த வயோதிபர்களுக்கு, நகரசபைத் தலைவர் பதவியை வழங்க நாம் தயார் இல்லை”- இது வவுனியா நகரசபைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து,
ஈ.பி.ஆர்.எல்.எப் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் நிகழ்த்திய உரையின் போது கூறிய முக்கியமான ஒரு விடயம்.
வயோதிபர்களுக்குத் தலைவர் பதவியை வழங்க முடியாது என்ற சிவசக்தி ஆனந்தனின் இந்த நிலைப்பாடு, அவர் சார்ந்த கட்சியின் நிலைப்பாடாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆனால், இது தனியே வவுனியா நகரசபைக்கு மாத்திரம் பொருத்தமான கருத்தா அல்லது, ஒட்டுமொத்த அரசியலிலும் இந்தக் கொள்கையை
ஈ.பி.ஆர்.எல்.எப் கடைப்பிடிக்கிறதா என்ற வினாவுக்கான தெளிவுபடுத்தல் இன்னமும் இல்லை.
ஏனென்றால், ஈ.பி.ஆர்.எல்.எப் இந்தத் தேர்தலில் அமைத்திருக்கின்ற கூட்டணிக்குத் தலைமை தாங்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி ஒன்றும் 70 வயதுக்கு உட்பட்டவர் அல்ல.
சம்பந்தன் இன்று அமர்ந்துள்ள ஆசனம் தனக்கே உரியது என்று உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கும் முதியவரான ஆனந்தசங்கரியை, ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறது.
சம்பந்தனை வன்மையாக எதிர்க்கும் தலைவர் என்பதால், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோதாவில், சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த முடிவை எடுத்தாரா அல்லது பொது அரங்கில் விமர்சிக்கப்படுவது போன்று, புறச் சக்திகளின் அறிவுறுத்தலுக்கமைய அந்த முடிவை எடுத்தாரா என்ற சந்தேகம் அரசியல் பரப்பில் இன்னமும் நீடிக்கிறது.
முதலமைச்சர் விக்னேஸ்வரனை மாற்றுத் தலைமைக்குக் கொண்டு வருவதற்கான முழுமையான முயற்சிகளிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஈடுபட்டிருந்தது உலகறிந்த உண்மை.
அவ்வாறான முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கூட இளைஞர் அல்ல. எழுபதைக் கடந்த வயோதிபரான அவரது மாற்றுத் தலைமையை ஏற்கத் துணிந்த
ஈ.பி.ஆர்.எல்.எப், தான், வவுனியா நகரசபைக்கு 70 வயதைக் கடந்த முதியவர்களைத் தலைவராக நியமிக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறது.
அதேவேளை, தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து ஈ.பி.ஆர்.எல்.எப் அமைத்துள்ள கூட்டணிக்கு, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தியே இம்முறை மூன்று கூட்டமைப்புகள் போட்டியிடுகின்றன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு அடுத்தது, கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசியப் பேரவை.
இந்த மூன்று கூட்டமைப்புகளில், மக்களின் ஆதரவுடன் பலம் பெறப் போவது எது, என்பதுதான் கேள்வியாக உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனியான பாதையில் பயணிக்கிறது. அதற்கு எதிரான மாற்று அணி எது என்பதை, இந்தத் தேர்தல் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணி, தமதே என்று தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு கூறுகிறது. தம்முடன் கஜேந்திரகுமார் உள்ளிட்டவர்கள் வந்து இணைய வேண்டும்; இணைந்து கொள்வார்கள் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் கூறிக் கொள்கிறார்கள்.
ஆனால், தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றில் இருந்து இப்போது தமிழ்த் தேசியப் பேரவை என்ற புதிய பெயருடன் அறிமுகமாகியுள்ள தமது கூட்டமைப்புத்தான் மாற்று அணி என்று கஜேந்திரகுமார் தரப்புக் கூறுகிறது.
தமது கொள்கை, தமிழ் மக்கள் பேரவையின் கொள்கையுடன் ஒத்துப் போவதால், அத்தகைய கொள்கையுடன் இணங்கிப் போகிறவர்கள் தம்முடன் இணைய வேண்டும் என்பது அவர்களின் வாதம்.
இந்த நிலையில் எந்தத் தரப்பு கூட்டமைப்புக்கான உண்மையான போட்டியாளராக இருக்கப் போகிறது? என்பது தான் கேள்விக்குரிய விடயமாக உள்ளது.
எப்படியாவது ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்குள் கஜேந்திரகுமார் தரப்பைக் கொண்டு வந்து விட வேண்டும் என்பது சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஆவல்.
ஆனால், ஆனந்தசங்கரியின் தலைமையை ஏற்றுக் கொள்வதற்கோ, அந்த அணியுடன் இணைந்து கொள்வதற்கோ கஜேந்திரகுமார் தரப்புத் தயாராக இல்லை.
முன்னதாக ஒரு கட்டத்தில், ஆனந்தசங்கரி இந்தக் கூட்டணியின் தலைமைப் பதவியில் இருந்து ஒதுங்கிக் கொள்வார் என்று தனக்குக் கூறப்பட்டதாகவும், ஆனால் கூட்டணியை அறிவிக்கும் நிகழ்வில் அவர் முன்னிலை பெற்றிருந்தார் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருந்தார்.
ஆனந்தசங்கரியை முன்னிலைப்படுத்தியே தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் எல்லா நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதுதான் கஜேந்திரகுமாரை இந்தக் கூட்டணியில் இருந்து ஒதுங்கியிருக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
எல்லோரும் ஒற்றுமையாக வந்தால் கட்சியைக் கொடுத்து விட்டு தான் ஒதுங்கிக் கொள்ளத் தயார் என்று பின்னர் ஆனந்தசங்கரி கூறியிருந்தார் என்றாலும், அவரே, தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்காமல் சாகமாட்டேன் என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆக, ஆனந்தசங்கரி தனது இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்பது தெளிவாகியுள்ளது. அவரது தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, இந்தத் தேர்தலுக்குப் பின்னரும் நீடிக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, ஆனந்தசங்கரியின் தலைமையையும் அவரது கொள்கையையும் ஏற்றுக் கொண்டு ஏனைய கட்சிகள், தரப்புகள், தனிநபர்கள் அவருடன் இணையத் தயங்குகின்றனர்.
உதாரணத்துக்கு, வவுனியாவில் நடந்த கூட்டம் ஒன்றில், உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அடுத்த மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் விக்னேஸ்வரன், உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார் என்றும், டெலோவும், புளொட்டும் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் கடைசி சந்தர்ப்பம் இதுவே என்றும் கூறியிருந்தார்.
உடனடியாகவே முதலமைச்சர், மாகாண சபைத் தேர்தல் தொடர்பாகத் தான் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அறிவித்திருந்தார். அது, சிவசக்தி ஆனந்தனின் கூற்றுக்கான எதிர்வினைதான்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இப்போது பின்னணி ஆதரவைக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற புலம்பெயர் சமூகத்தின் ஒரு பகுதியும், உதயசூரியன் கூட்டணியை ஆதரிக்கத் தயாராகவில்லை.
இத்தகையதொரு நிலையில், இதற்கு மேல் இந்தக் கூட்டணியை விரிவுபடுத்த முடியாது. எனவே, உள்ளூராட்சித் தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெறத் தவறினால், இந்தக் கூட்டணியால் நிலைக்க முடியாது.
அதுபோலவே, இந்தக் கூட்டணியில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பாக ஆனந்தசங்கரிக்கு வருத்தம் உள்ளதாகவும் கூடத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஆனந்தசங்கரியின் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலிழக்கும் நிலையை அடைந்திருந்தபோது தான், ஈ.பி.ஆர்.எல்.எப் உடனான கூட்டணி அமைந்தது.
அது ஒருவகையில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு சாதகமாக இருந்தாலும், தமது கட்சியை ஈ.பி.ஆர்.எல்.எப் விழுங்குவதை ஆனந்தசங்கரியால் பொறுக்க முடியுமா என்ற கேள்வி உள்ளது.
அடுத்து, இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு வெற்றிபெறாது போனால், ஈ.பி.ஆர்.எல்.எப் கூட மாற்று அணி ஒன்றைத் தேடும் முயற்சியில் இறங்கலாம்.
கஜேந்திரகுமாரின் சைக்கிள் சின்னத்தை, தேர்தல்களில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த சின்னம் என்று கூறிய ஒதுங்கிச் சென்றது ஈ.பி.ஆர்.எல்.எப். அப்படியான நிலையில் இந்தத் தேர்தலில் தோல்விகாணும் நிலை ஏற்பட்டால், தமிழர் விடுதலைக் கூட்டணியை விட்டு அணி மாறவும் தயங்காது. அல்லது ஆனந்தசங்கரியை ஓரம்கட்டி விட்டு, கஜேந்திரகுமாரை இந்த அணிக்குக் கொண்டு வந்து பலப்படுத்தும் வேலையைத் தொடங்க முனையலாம்.
தமிழ்த் தேசிய கோசத்துடன் களமிறங்கியுள்ள தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான சிறிடெலோவின் சார்பிலான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் சிறிடெலோ கட்சியின் சார்பில் இந்த அணியில் போட்டியிடுகின்றனர். ஆனால், அவர்களை போட்டியில் நிறுத்தியிருப்பது ஆனந்தசங்கரி.
தமிழரசுக் கட்சியுடன் முரண்டு பிடித்துக் கொண்டு, டெலோ வெளியேறி இந்தக் கூட்டணியில் இணைய முயன்ற போது, சிறிடெலோதான் அதற்குத் தடையாக இருந்தது.
கூட்டமைப்புக்கு எதிரான கோசங்கள் மாத்திரமே, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பை வெற்றிபெற வைத்து விடாது. வேட்பாளர்கள், மற்றும், அந்தந்த இடங்களின் பிரச்சினைகள், அவற்றுக்காக முன்வைக்கப்படும் தீர்வுகளும் கூட இந்த உள்ளூராட்சித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், அத்தகையதோர் ஆக்கபூர்வமான வழிமுறைகளில் பிரசாரங்கள் முன்வைக்கப்படுமா என்பது சந்தேகம்தான்.
தமிழ்த் தேசியக் கோசத்துடன் களமிறங்கியுள்ள எல்லாக் கட்சிகளுக்குமே, இது அக்கினிப் பரீட்சைதான். மக்களின் ஆதரவைத் தக்கவைக்க முடியுமா, பெற்றுக் கொள்ள முடியுமா என்பதைத் தீர்மானிக்கப் போகும் தேர்தல் இது.
Average Rating