ரஜினி மன்றத்தில் 50 லட்சம் பேர் இணைந்தனர்…!!
நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய கட்சி அறிவிப்பும், அவரது அரசியல் பிரவேசமும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினி தொடங்க உள்ள புதிய கட்சியின் பெயர் கொடி என்ன? என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தான் தொடங்க இருக்கும் கட்சியில் சேர நினைப்பவர்கள் மாற்றத்தை விரும்புபவர்கள் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்த ரஜினி அதற்காக புதிய இணையதள முகவரி ஒன்றையும் அறிவித்தார். ஷ்ஷ்ஷ்.க்ஷீணீழீவீஸீவீனீணீஸீபீக்ஷீணீனீ.ஷீக்ஷீரீ என்கிற முகவரி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இதன் மூலமாக பொதுமக்கள் ரஜினி மன்றத்தில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்து பதிவு செய்து வருகிறார்கள். இதுவரையில் 50 லட்சம் பேர் இணையதளம் மூலமாக ரஜினி மன்றத்தில் இணைந்துள்ளனர்.
இப்படி பலதரப்பட்ட மக்களும் ரஜினி மன்றத்தில் போட்டி போட்டு இணைந்து வரும் நிலையில், ரஜினி பெயரில் போலியான இணையதள முகவரிகளும் வலம் வரத் தொடங்கி உள்ளன.
செல்போனில் பிளே ஸ்டோரில் சென்று ரஜினி மன்றத்துக்காக செயலியை பதிவிறக்கம் செய்து அதில் தங்களை இணைத்துக் கொள்ள பலர் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இதனை பற்றி அறிந்திராத கிராமப்புற மக்களுக்கும் ரசிகர்கள் அதுபற்றி எடுத்துக் கூறி அவர்களையும் மன்றத்தில் இணைத்து வருகிறார்கள். இந்த நிலையில், இணையதளங்களில் ரஜினி பெயரில் 4 இணையதளங்கள் உலா வருகின்றன. ரஜினி மன்றம், தலைவர் மன்றம், ரஜினி மந்திரம், கெஸ் தமிழ்நாடு ஆகிய 4 முகவரிகள் வருகின்றன. இதில் ரஜினி மன்றம் மட்டுமே ரஜினியால் அங்கீகரிக்கப்பட்டதாகும். மற்ற 3 முகவரிகளும் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் ரசிகர்கள் மத்தியில் குழப்பமும் நிலவுகிறது.
செல்போன் பயன்பாட்டில் மாபெரும் புரட்சி ஏற்பட்டுள்ள போதிலும், செல்போன் செயலிகளை பதிவு செய்து அதனை எல்லோரும் எளிதாக பயன்படுத்துவதில்லை. குறிப்பாக நகரப் பகுதிகளில் உள்ள படித்தவர்கள் கூட சில நேரங்களில் மொபைல் செயலிகளை பயன்படுத்து வதில் சிரமம் இருப்பதாக கூறி வருகிறார்கள்.
அதே நேரத்தில் கிராமப் புறங்களில் உள்ள பாமர மக்கள் இப்போதும் செல்போனை பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தும் நிலைதான் உள்ளது. அவர்களுக்கு ‘மொபைல் செயலி’களை அவ்வளவு எளிதாக தெளிவு படுத்த முடியாது. இணையதளம் வழியாக உறுப்பினர்களை சேர்ப்பதில் இதுபோன்ற சிரமங்கள் இருப்பதாக ரசிகர்கள் பலர் கூறுகிறார்கள்.
இதனால் விண்ணப்ப படிவங்களை மக்களிடம் நேரில் கொடுத்து பூர்த்தி செய்து அதன் மூலம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று தலைமை மன்றத்தில் முறையிடப் போவதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி சென்னையில் உள்ள ரசிகர்மன்ற மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, பூர்த்தி செய்து கொடுக்கக் கூடிய விண்ணப்ப படிவங்களை கொடுத்தால் வெளிப் படையாக மன்றத்தில் மக்களை சேர்க்க முடியும் என்பதை தலைமையிடம் எடுத்துச் சொல்லி அவர்களின் ஒப்புதலோடு அது போன்ற உறுப்பினர் சேர்க்கையிலும் விரைவில் தீவிரம் காட்டுவோம் என்று தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 22 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட ரஜினி மன்றங்கள் உள்ளன. 30 ஆயிரம் மன்றங்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளன. இந்த மன்றங்கள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு பெயர்களில் ரசிகர்களால் தொடங்கப்பட்டதாகும்.
மதுரையில் மக்கள் தலைவன் ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்றம் என்ற பெயரில் 1977-ல் முதல் மன்றம் தொடங்கப்பட்டது. இதன் பின்னர் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் முழுவதும் 1400 மன்றங்கள் தொடங்கப் பட்டு செயல்பட்டு வருகிறது. இதே போல ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான மன்றங்கள் உள்ளன. இந்த மன்றங்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரே குடைக்குள் கொண்டு வரவும் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
Average Rating