பெண்களுக்கு மவுசு நிறைந்த ‘பேஷன்’ உலகம்..!!
பேஷன் உலகம் ஒவ்வொரு ஆண்டும் புதுமைகளை சந்தித்து வருகிறது. கூடவே அதில் புதுமையை புகுத்தும் பாணியும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 2017-ம் ஆண்டில் இளம் பெண்களை கவரும் விதத்தில் வித்தியாசமான ஆடை வடிவமைப்புகள் அணிவகுத்தன. அதிலும் பாலிவுட் நட்சத்திரங்கள் உடுத்திய உடைகள் பேஷன் உலகின் டிரெண்டாக பரவியது. ராணுவ வீரர்கள் அணியும் நிறத்திலான உடைகள் இளம் பெண்களின் விருப்ப தேர்வுகளுள் ஒன்றாக மாறியது. ‘ஹேமோபிளாக் பேஷன்’ எனப்படும் அந்த ஆடைகள் ராணுவ சீருடைகளின் பச்சை நிற சாயல்களில் மட்டுமின்றி மாறுபட்ட நிறங்களிலும், டிசைன்களிலும் மிளிர்ந்தன. தரைகளில் தவழும் வகையிலான ‘பிளோர் ஸ்வீபிங் கவுன்’ ஆடைகளை பாலிவுட் நட்சத்திரங்கள் சினிமா நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்வதை வழக்கமாக்கிக்கொண்டார்கள். அவை இளம் பெண்களின் கவனத்தை ஈர்த்து அந்த ஆடைகள் மீதான மோகத்தை அதிகப்படுத்தியது.
புடவை உடுத்தும் ஆர்வத்தை இளம் பெண்களிடம் அதிகப்படுத்தும் நோக்கில் ‘சாரீஸ் கவுன்’ ஆடை வடிவமைப்பு அமைந்தது. அதிலும் டீன் ஏஜ் பெண்கள் விரும்பி அணியும் ‘பிராக்’ ரக ஆடைகளில் புடவையைப்போல் நேர்த்தியான வேலைப்பாடுகள் இடம்பெற்றன. புடவையின் முந்தானையிலும் அழகிய அடுக்குகள் இடம்பிடித்தன. அந்த முந்தானையும் இடுப்பு பகுதியில் இருந்து சுருள் சுருள் அடுக்குகளாக அழகிய நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. சிரமமின்றி புடவை உடுத்துவதற்கு ஏதுவாக அமைந்திருக்கும் அந்த ஆடை ரகத்திற்கு இளம் பெண்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. சோனம் கபூர் உள்ளிட்ட திரை உலக பிரபலங்களும் இந்த வகை ஆடைகளை உடுத்துவதற்கு ஆர்வம் காட்டினார்கள்.
புடவைக்கு பொருத்தமான ஜாக்கெட்டுகளும் 2017-ம் ஆண்டு புதுமையாக அணிவகுத்து வந்தன. அதில் குறிப்பிடத்தக்கது, ‘ஹை நெக் பிளவுஸ்கள்’. முன்பக்க, பின்பக்க கழுத்தை சூழ்ந்தவாறு டிசைன் செய்யப்பட்டிருக்கும் இந்த ஜாக்கெட்டுகள், பழமையான பேஷன்தான். அதில் சில மாறுபாடுகளை புகுத்தி புது பேஷன் டிரெண்டாக உருவாக்கி இருந்தார்கள். காலர் இல்லாமல் ஆண்கள் அணியும் சட்டை போலவே அமைந்திருக்கும் இந்த ஜாக்கெட்டுகள் 2017-ம் ஆண்டின் புதிய பேஷனாக அவதாரம் எடுத்தது. ஆங்காங்கே அழகிய வேலைப்பாடுகள் இடம்பிடிக்கும் இந்த ஜாக்கெட்டுகளின் டிசைன்கள் இணையதளங் களிலும் பெரும் வரவேற்பை பெற்றன.
பேக்ஸ் பர் ஜாக்கெட்டுகளும் வித்தியாசமான வடிவமைப்பு முறையில் ஜொலிக்கின்றன. அவை குளிர்காலத்தில் அணிவதற்கு ஏற்ற வகையிலான துணிகளில் நெய்யப்படுகின்றன. பார்ப்பதற்கு கம்பளி உடைகளின் சாயலில் பிரதிபலிக்கும் அவை அடர்நிறங்களின் கலவையாகவே அமைந்திருக்கின்றன. விலங்குகளின் ரோமங்களை போல ஆடைகள் ஜொலிக்கின்றன. ஜாக்கெட் மட்டுமின்றி ஆடைகளும் குளிர்காலங்களில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்கும் வகையில் வடிமைக்கப் படுகின்றன.
‘செகியூன்ஸ்’ என்ற பேஷன் டிரெண்ட் உலகம் முழுவதும் பரவலாக நடைமுறையில் இருக்கிறது. அதுவும் இந்த ஆண்டு இந்திய பேஷனில் இடம்பிடித்தது. இளம் பெண்களை கவரும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த ஆடை ரகத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘ப்ராக்’ போன்று நீளமாக காட்சியளிக்கும் இந்த ஆடையும் நேர்த்தியான வடிவமைப்பை கொண்டது. குறிப்பாக தளர்வாக அல்லாமல் கச்சிதமாக உடலமைப்புக்கு பொருந்தும் வகையில் அமைந்திருக்கிறது.
‘கோல்டு சோல்டர் டாப்’ ஆடை ரகமும் 2017-ம் ஆண்டு பிரபலமானது. இது பனியன் போன்று தோள்பட்டையை சூழ்ந்திருக்கும் டிசைன் ஆடை. ஒருசில ரகங்களின் கைப் பகுதி மாறுபட்ட டிசைன்களை கொண்டிருக்கின்றன. எந்தவகையான உடல்வாகுக்கும் பொருந்தும் வகையில் அமைந்திருப்பது அதன் சிறப்பம்சம். ‘போஹோ சிக் பேஷனுக்கும்’ 2017-ம் ஆண்டில் வரவேற்பு கிடைத்தது. கால்களில் அணியும் ஷூதான் இந்த பேஷன் ஆடைக்கு புது வடிவம் ஏற்படுத்தி கொடுக்கிறது. ஷூக்களின் உயரம் மூட்டு பகுதிவரை நீள்கிறது. பழங்குடியின மக்கள் உடுத்தும் ஆடைகளின் சாயலும் இந்த டிசைன்களுடன் ஒத்திருக்கிறது. தலைக்கு அணியும் தொப்பியும், கால்களில் அணியும் நீளமான ஷூவும் இந்த பேஷன் ஆடைக்கு புதுமை சேர்க்கிறது.
இளசுகளை கவரும் மற்றொரு பேஷன் ரகம், ‘லாங்லைன் ஸ்ரூங்’. இதுவும் பழமையுடன் புதுமை கலந்த 2017-ம் ஆண்டின் பேஷன் வடிவமைப்பு. ஆண்களை போலவே பெண்களும் ‘கோட்-சூட்’ ஆடையில் உலா வரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஆண்களை போலவே பேண்ட் – சட்டை அணிந்து அதன் மேல் சுடிதார் போன்று பெண்கள் சவுகரியமாக அணியும் வகையில் தயாரித்திருந்தார்கள். கோடை காலம்தான் இந்த ஆடைகளை உடுத்துவதற்கு ஏற்றது.
பேஷன் ஆடை ரகங்களை போலவே பேஷன் படிப்பின் மீதும் இளையதலைமுறையினரிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. நிறைய இளம் பெண்கள் பட்டப்படிப்பை முடித்திருந்தாலும் பகுதி நேரமாக பேஷன் படிப்பையும் படிக்கிறார்கள். கடந்த சில ஆண்டு களாக பேஷன் படிப்புகளை தேர்ந்தெடுப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. 2018-ம் ஆண்டில் பேஷன் படிப்புக்கான மவுசு மேலும் கூடும் என்பது பேஷன் டிசைனர்களின் கருத்தாக இருக்கிறது.
Average Rating