கர்ப்ப கால அழகு சார்ந்த பிரச்னைகளும் – தீர்வுகளும்..!!
கர்ப்ப காலத்தில் முகம் முழுக்க கரும்புள்ளிகள் தோன்றுவது, முடி உதிர்வது, சருமம் வறண்டு போவது என புற அழகு சார்ந்த பிரச்னைகளும் சகஜம். அழகு விஷயத்தில் அக்கறை காட்டும் பெண்களுக்கு இவை கவலையைத் தரலாம். இந்த அழகு பிரச்னைகளுக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் உண்டாகிற ஹார்மோன் மாற்றங்களால் கொழுப்புக் கட்டிகள் வருவதுண்டு. ஹார்மோன் அதிகம் சுரப்பதால் சீபம் என்கிற எண்ணெய் பசைச் சுரப்பிகள் தூண்டப்பட்டு எண்ணெய் பசையும் அதிகரிக்கும். எல்லோருடைய சரும அமைப்பும் ஒரே மாதிரியான தன்மை கொண்டதல்ல. எனவே எல்லோருக்கும் கர்ப்ப காலத்தில் பருக்கள் வரும் என்று அர்த்தமில்லை. கர்ப்ப காலத்தில் திடீரென கிளம்புகிற பருக்கள், தற்காலிக மானவையே. வந்த வேகத்தில் மறைந்து விடும் என்பதால் கவலை வேண்டாம். மருத்துவரைப் பார்த்து, அலர்ஜி ஏற்படுத்தாத கிரீம் ஏதேனும் உபயோகிக்கலாம்.
கர்ப்ப காலத்தில் மெலனினை தூண்டும் ஹார்மோன்கள் அதிகமாகச் சுரப்பதால் நிறமாற்றங்கள் உண்டாவது இயல்பு. ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனும் அதிகமாகச் சுரக்கும். முகமும் அழகாகும். கூடவே திருஷ்டி பொட்டு மாதிரி ஆங்காங்கே மங்கும் வரும். இந்தப் பிரச்னையை கர்ப்ப கால முகமூடி என்றுகூட சொல்வதுண்டு. மற்ற பிரச்னைகளைப் போலவே இதுவும் பிரசவமானதும் தானாக மறைந்து விடும். சிலர் இந்த மங்கைப் பார்த்ததும் பயந்து பியூட்டி பார்லர் போய் கெமிக்கல் பீலிங் போன்ற சிகிச்சைகளை செய்வதுண்டு. அவையெல்லாம் மிக ஆபத்தானவை.
எல்லா கர்ப்பிணிகளும் சந்திக்கிற பிரச்சனை வயிறு, மார்பகங்கள், தொடைகள் என உடல் முழுவதும் அரிப்பும், கோடுகளும் வருவது. மடிப்புத் தசைகள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கு அரிப்பும் இருக்கும். தவிர கர்ப்ப காலத்தில் பெண்களின் எடை அதிகரிப்பதாலும் அரிப்பு பிரச்சனை இருக்கும். அரிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளை சுத்தமாகவும் வியர்வையோ, ஈரமோ இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பதன் மூலமு கொப்புளங்கள் உருவாவதைத் தவிர்க்கலாம்.
நைலான் உள்ளாடை மற்றும் உடைகளைத் தவிர்த்து காட்டன் உடைகளை அணிவது சிறந்தது.கர்ப்ப காலத்தில் வயிற்றில் கோடுகள் தோன்றுவதும் இயல்பானதுதான். சருமம் விரிவடைவதே காரணம். சில பெண்களுக்கு பிரசவமானதும் இது ஓரளவு மறைந்துவிடும். ஒருசிலருக்கு நிரந்தரமாகத் தங்கி விடுவதும் உண்டு. வரிகளை மறைக்க இப்போது கிரீம்கள், லோஷன்கள் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உபயோகிக்கலாம்.
கர்ப்ப காலத்தில் திடீரென கூந்தல் வளர்ச்சி அதிகரிப்பது எல்லா கர்ப்பிணிகளுக்கும் நடப்பதுதான். வளரும் நிலையில் உள்ள முடிகள் எல்லாம் ஹார்மோன்களின் தூண்டுதல் காரணமாக வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரும். பிரசவமானதும் நீங்கள் பயப்படும் அளவுக்கு முடி உதிர்வு அதிகமாகும். இந்த இரண்டுமே தற்காலிகமானவைதான் என்பதால் கலக்கம் வேண்டாம். பிரசவத்துக்குப் பிறகு ஒருவரது உடல் இயல்பு நிலைக்குத் திரும்பியதும் முடி உதிர்வும், வளர்ச்சியும் சீராகும்.
கர்ப்ப காலத்தில் கால் நரம்புகள் சுருண்டும், நீல நிறத்திலும் காட்சியளிக்கும். இதை வெரிக்கோஸ் வெயின்ஸ் என்கிறோம். இது சிலருக்குப் பரம்பரையாகத் தொடரும். குழந்தையின் தலைப்பகுதி பெரிதாகும் போது திரவங்கள் அதிகமாவதால் நாளங்கள் சுருங்க ஆரம்பிக்கும். இதனால் அங்கு ரத்தத் தேக்கம் உண்டாகி வீக்கத்தைக் கொடுக்கும்.
இந்த நாளங்கள் சருமத்தின் மேற்பகுதியில் இருப்பதால் நீலநிறமாகக் காணப்படும். கால் வலியும் அதிகமாக இருக்கும். நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்ப்பது, கால்களை உயரத்தில் வைத்தபடி ஓய்வெடுப்பது போன்றவை இதமளிக்கும்.பிரசவத்துக்குப் பிறகு இந்தப் பிரச்சனை சரியாகிவிடும். ஒருவேளை பிறகும் தொடர்ந்தால் ரத்த நாள நரம்பு சிகிச்சை நிபுணரைப் பார்த்து சிகிச்சை மேற்கொள்ளலாம்.
Average Rating