வாக்காளருக்கு அபராதம் அவசியம்..!! (கட்டுரை)
முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியரி ஜீ.எல்.பீரிஸ் தவிசாளராக இருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இயங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, வேட்பாளராக நிறுத்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு, பின்னர் அந்த வாய்ப்பு வழங்கப்படாத ஒருவர், விம்மி அழும் காட்சியை, கடந்த வாரம் தொலைக்காட்சியில் காணக் கூடியதாக இருந்தது.
அதேபோல், தமது கட்சி, தமக்குத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்காததை எதிர்த்து, ‘சத்தியாக்கிரகம்’ செய்ய முற்பட்ட ஒரு பெண்ணை வாக்கு மூலம் பெறுவதற்கென, பொலிஸார் அழைத்துச் செல்லும் காட்சியும் மற்றொரு செய்தியின் போது காணக்கூடியதாக இருந்தது.
வேட்பாளராக ஆசைப்பட்டு, ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்றைப் பற்றிய செய்தியொன்றும் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. அந்த நபரது பெயர், ஒரு கட்சியின் வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாம். ஆனால், அவரது பெயர் பட்டியலில் இருக்கவில்லையாம். இதனால் அவர் வெகுவாகப் பதற்றமடைந்துள்ளார். ஆனால், பின்னர் அவரது பெயர், பட்டியலில் சேர்க்கப்பட்டதாம். ஆயினும், முன்னர் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக மாரடைப்பு எற்பட்டதனால் அவர் இறந்துவிட்டதாகச் செய்திகள் கூறின.
ஒரு கட்சியினால் தயாரிக்கப்பட்ட வேட்புமனுப் பத்திரத்தை, அதேகட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர், பலாத்காரமாகப் பறித்துச் சென்றதாக மற்றொரு செய்தி கூறியது. அதுபோன்ற மற்றொரு சம்பவத்தின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேசத் தலைவர் ஒருவர், தமது கட்சியின் வேட்பு மனுப் பத்திரமொன்றைப் பறித்துக் கொண்டு செல்ல முற்பட்ட போதும், மற்றவர்கள் அதைத் தடுத்துள்ளனர்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம், 10 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலோடு சம்பந்தப்பட்ட இது போன்ற பல சம்பவங்கள் பற்றிய செய்திகள், கடந்த வாரம் ஊடகங்கள் மூலம் தெரியவந்தன.
வேட்பாளர்களாக ஆசைப்பட்டவர்கள், இவ்வாறு அரசியல் கட்சிகளினால் ஏமாற்றப்பட்ட சம்பவங்கள் மட்டுமன்றி, தெற்கிலும் வடக்கிலும் கூட்டணிகளை அமைக்க முற்பட்ட அரசியல் கட்சிகளிடையில், வேட்பாளர் பட்டியல்களில் இட ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட பல சர்ச்சைகள் தொடர்பான செய்திகளையும் ஊடகங்கள் வெளியிட்டு இருந்தன.
தெற்கில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மனோ கணேசனின் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இடையில் கொழும்பு மாநகர சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலைத் தயாரிப்பதில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, தமிழ் முற்போக்குக் கூட்டணி அம்மாநகர சபைக்குத் தனியாகப் போட்டியிடுகிறது.
அதேபோல், வடக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியோடு இட ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக, தர்மலிங்கம் சித்தார்த னின் தலைமையிலான புளோட் எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தேர்தல் பிரசாரப் பணிகளில் இருந்து ஒதுங்கியிருக்கத் தீர்மனித்ததாக ஒரு செய்தி கூறியிருந்தது.
இந்த இட ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சைகள், பல முக்கிய அரசியல் புள்ளிகள் தமது கட்சியை விட்டு, வேறு கட்சிகளுக்குத் தாவவும் காரணமாக அமைந்துள்ளன.
மக்கள் ஐக்கிய முன்னணியின் உறுப்பினரும் ஒன்றிணைந்த எதிரணியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிறியானி விஜேவிக்கிரம, தமது ஆதரவாளர்களுக்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் வேட்பு மனுக்களில் இடம் கிடைக்கவில்லை என்று கூறி, ஒன்றிணைந்த எதிரணியிலிருந்து விலகி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து, இன்று இராஜாங்க அமைச்சராக இருக்கிறார்.
தமிழரசுக் கட்சி இட ஒதுக்கீடு விடயத்தில், தமக்கு நீதி வழங்கவில்லை என்று கூறி, டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியோடு சேர முற்பட்டமை தெரிந்ததே. பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலையிட்டு, டெலோ தலைவர்களை ஒருவாறு சமாளித்து, அக்கட்சியை மீண்டும் கூட்டமைப்பில் சேர்த்துக் கொண்டார்.
பொதுஜன முன்னணி விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணிக்கு, போதிய இட ஒதுக்கீடு வழங்காவிட்டால், தேசிய சுதந்திர முன்னணி தனியாகப் போட்டியிட வேண்டும் என்று வாதாடிய திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகர, தேசிய சுதந்திர முன்னிணியிலிருந்து நீக்கப்பட்டார். அவரும் ஜனாதிபதி மைத்திரிபாலவைத் தேடிச் சென்று, ஸ்ரீ ல.சு.கவில் இணைந்து கொண்டார்.
இந்தத் தேர்தல் மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் ஆகிய மக்கள் பிரதிநிதித்துவ சபைகளில், மிகவும் கீழ் மட்ட சபைகளுக்கான தேர்தலாக இருந்த போதிலும், அரசியல்வாதிகள் தமக்கோ அல்லது தமது ஆதரவாளர்களுக்கோ அந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதில், எவ்வளவு அக்கறையோடு இருக்கிறார்கள் என்பதையே இந்தச் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
தேர்தல் பிரசார வேலைகள் தீவிரமடையும் போது, சிலவேளை தேர்தலோடு சம்பந்தப்பட்ட கொலைகளைப் பற்றிய செய்திகளும் எம்மை வந்தடையலாம். தமக்கோ அல்லது தமது நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கோ போட்டியிடும் வாய்ப்பை பெற்றுக் கொள்ள அரசியல்வாதிகள் ஏன் இவ்வாறு உக்கிர போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள்?
தமது பிரதேச மக்களுக்குச் சேவை செய்வதற்கான, தமது ஆர்வத்தினாலேயே தாம் போட்டியிட இவ்வளவு ஆர்வமாக இருக்கிறோம் என அரசியல்வாதிகள் இதற்குப் பதிலாக் கூறலாம். ஆனால், உண்மை அதுவல்ல என்பது உலகமே அறிந்த விடயம். மக்களுக்கு அல்ல; தமக்கும் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் சேவை செய்து கொள்ளவே அவர்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை அறியாத சிறுபிள்ளையும் நாட்டில் இல்லை.
“ஒரு மாநகர சபை உறுப்பினருக்காவது 20,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதில்லை” என அண்மையில் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதமொன்றின் போது, ‘கோப்’ எனப்படும், நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி கூறினார். இது, ஒரு கூலித் தொழிலாளர் கூட விரும்பாத சம்பளமாகும். ஒரு கட்டடத் தொழிலாளியும் நாளொன்றுக்கு சுமார் 1,500 ரூபாய் சம்பளம் பெறுகிறார்.
அவ்வாறு இருக்க, 20,000 ரூபாயாவது சம்பளம் கிடைக்காத உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கான, பிரசார வேலைகளின் போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பல இலட்சக் கணக்கான பணத்தை ஏன் செலவழிக்கிறார்கள் என்பதை எவரும் பெரிதாக ஆராய்ந்துதான் அறிந்து கொள்ள வேண்டும் என்றில்லை.
அவர்கள் அந்தச் சபைகளுக்குத் தெரிவு செய்யப்படும் போதும், அவர்களது பதவிக் காலம் முடிவடையும் போதும், அவர்களது வாழ்க்கைத் தரத்தைச் சற்று மேலோட்டமாகப் பார்த்தாலேயே மிக எளிதாக அதற்கான விடையைக் கண்டறிய முடியும்.
மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களைத் தவிர்ந்த, ஏனைய உள்ளூராட்சி சபை உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் அந்தச் சபைகளுக்குத் தெரிவு செய்யப்படும் போது, தமக்கென சைக்கிள் ஒன்றாவது இல்லாமல் இருந்தாலும், அவர்களது பதவிக் காலம் முடிவடையும் போது, அனேகமாக காரொன்றின் உரிமையாளராகவாவது இருப்பார்.
அச்சபைகளின் ஆளும் கட்சிகளுக்குத் தெரிவாகி, தவிசாளர், பிரதித் தவிசாளர் பதவிகளைப் பெற்றவர்கள், அதைவிட முன்னேறி, லொரிகள், பக்ஹோ இயந்திரங்கள் போன்றவற்றுக்கு உரிமையாளர்களா கின்றனர்.
இது மக்கள் அறியாத இரகசியம் அல்ல. விசித்திரமான விடயம் என்னவென்றால், மக்களுக்கு இது தெரியும் என்பது, அரசியல்வாதிகளுக்கும் தெரியும். அவ்வாறு இருந்தும் அவர்கள் மக்கள் முன் சென்று மக்களுக்காகத் தாம் செய்யும் தியாகங்கள் மற்றும் அர்ப்பணங்களைப் பற்றியும் தமது கட்சிகளின் ‘உன்னத’ கொள்கைகளைப் பற்றியும் பிதற்றுவார்கள்.
ஆனால், சந்தர்ப்பம் வரும் போது, ‘கொள்கைகளை’த் தூக்கியெறிந்துவிட்டு, வேறு கட்சிகளுக்குத் தாவிவிடுவார்கள். இதுதான் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் காணக்கூடிய உண்மை யான அரசியலாகும்.
இது, நாடாளுமன்ற மட்டத்திலும் நடைபெறுகிறது. அமைச்சுப் பதவிக்காக கட்சி தாவியவர்கள் எத்தனை பேர்? அமைச்சுப் பதவிக்காக புதிய கட்சிகளை அமைத்தவர்கள் எத்தனை பேர்? தேசியப் பட்டியல் எம்.பி பதவி கிடைக்கவில்லை என்பதற்காகப் புதிய கட்சிகளை ஆரம்பித்தவர்களும் இருக்கிறார்கள். அதே காரணத்துக்காகக் கட்சி தாவியவர்களும் இருக்கிறார்கள். பணத்தைப் பெற்றுக் கொண்டு கட்சி தாவியவர்கள் தான் எத்தனை பேர்?
வாக்காளர்களிலும் பெரும்பாலானவர்கள் அதற்குப் பொருத்தமான முறையில்தான் நடந்து கொள்கிறார்கள். அவர்களும் தொழில்கள் போன்ற சலுகைகளுக்காக கட்சி மாறக் கூடியவர்களே. ஏன் என்று தெரியாவிட்டாலும் தமது கட்சி அல்லது தமது அபிமான வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் வாக்களிக்கிறார்கள்.
அதாவது, அவர்கள் வெற்றி பெறும் அணியில் இருக்க விரும்புகிறார்கள். அந்தக் கட்சி அல்லது வேட்பாளர் ஊழலில் ஈடுபடுவது அவர்களுக்கு ஒரு பிரச்சினையல்ல. அவ்வாறான குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அதன் விவரங்கள் தமக்குத் தெரியாவிட்டாலும் அவர்களும் தலைவர்களோடு சேர்ந்து மறுத்துக் கொண்டே இருப்பார்கள்.
ஊடகங்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் தலைவர்கள் ஜனநாயகம், ஊழல் ஒழிப்பு மற்றும் நல்லாட்சி என்றெல்லாம் தேர்தலைப் பற்றி பெரிதாக தத்துவம் பேசினாலும் இதுதான் நடைமுறையில் அரசியலாக இருக்கிறது.
வடக்கிலோ அல்லது தெற்கிலோ அல்லது கிழக்கிலோ எந்தவொரு கட்சியிடமும் நாட்டின் அபிவிருத்தி அல்லது பிரதேச அபிவிருத்தி, ஊழல் ஒழிப்பு, இனப்பிரச்சினைக்கான தீர்வு ஆகியவற்றைப் பற்றிய எந்தவொரு திட்டமோ அல்லது தந்திரோபாயமோ இல்லை.
எந்தவொரு கட்சிக்குள்ளும் இவற்றைப் பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெறுவதில்லை. சிலவேளை மக்கள் விடுதலை முன்னணிக்குள் அல்லது முன்னணி சோஷலிசக் கட்சிக்குள் அது போன்ற கலந்துரையாடல்கள் இடம்பெறலாம்.
வடக்கில், புலிகள் இந்தப் பிரச்சினைகளை ஆராய்ந்திருக்கலாம். அது தவிர, எந்தவொரு கட்சிக்குள்ளும் அவ்வாறான விடயங்கள் ஆராயப்படுவதாக ஒருபோதும் நாம் கேட்டதில்லை.
பொதுவாகக் கட்சிகளின் மத்திய குழு, அரசியல் குழு, மாவட்டக் குழு ஆகியவை கூடியபோது, தேர்தல்களில் எவ்வாறு வெற்றி பெறலாம், ஏனைய கட்சிகளை எவ்வாறு வீழ்த்தலாம், கட்சிக்காக எவ்வாறு எங்கிருந்து பணம் திரட்டலாம் என்பதைப் போன்ற விடயங்கள்தான் ஆராயப்படுகின்றன.
எனவே, தற்போதைய தேர்தல் மேடைகளிலும் அபிவிருத்தி பற்றிய கட்சிகளின் கொள்கைகள் அலசப்படுவதில்லை. ஆனால், அரசியல்வாதிகளின் ஊழல்களைப் பற்றி அவற்றில் அலசப்படலாம். ஏனெனில், அந்த விடயம் தற்போது அரசியல் அரங்கில் பிரதான பேசுபொருளாகியுள்ளது.
அதாவது, அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும் என்பதற்குப் பதிலாக, என்ன செய்யக் கூடாது என்பதே அரசியல் மேடைகளில் பேசுபொருளாகியுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதாக இருந்தால், மக்கள் அரசியல்வாதிகளிடம், ‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ என்று கோரும் நிலையே உருவாகியுள்ளது.
இந்த நிலையில், புதிய தேர்தல் முறையின் கீழ் புதிய சர்ச்சையொன்றும் உருவாகி வருகிறது. புதிய கலப்புத் தேர்தல் முறைப்படி உள்ளூராட்சி மன்றங்களின் தனித்தனி தொகுதிகளுக்காக அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
எனவே முன்னரை விட, குறிப்பிட்ட வேட்பாளர்கள் வாக்காளர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறுகிறார்கள். எனவே, கட்சி எதுவாக இருந்தாலும் தொகுதியில் போட்டியிடும் சிறந்த வேட்பாளரைத் தெரிவு செய்ய வேண்டும் என்று சிலர் வாதிடுகிறார்கள்.
அண்மையில், நடைபெற்ற தொலைக்காட்சி விவாதமொன்றின் போதும் இந்த விடயம் அலசப்பட்டது. “கட்சியைப் பொருட்படுத்தாது, வேட்பாளர்களின் தகைமையை அறிந்து அவர்களில் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும்” என ஐ.தே.கவைச் சேர்ந்த பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா அப்போது கூறினார்.
ஆனால், அதனை எதிர்த்த மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி, “இல்லை, கட்சி தான் முக்கியம்; கட்சி தான் வேட்பாளரை வழிநடத்துகிறது” என்று வாதிட்டார்.
இதே சர்ச்சை, வடக்கிலும் சில தினங்களுக்கு முன்னர் ஒலித்தது. “கட்சி எதுவானாலும் சிறந்த வேட்பாளரைப் பார்த்து, மக்கள் வாக்களிக்க வேண்டும்” என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூற, அதனை மறுத்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், “கட்சியைப் பார்த்துத்தான் வாக்களிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
தேர்தல் கண்காணிப்புக் குழுவான ‘பவ்ரல்’ எனப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டிஆராச்சியும் “கட்சி எதுவானாலும் வேட்பாளரே முக்கியம்” எனக் கூறியிருந்தார்.
இவை அவரவரது சூழலுக்குப் பொருத்தமான வகையில் முன்வைக்கும் வாதங்கள். மத்திய வங்கி பிணைமுறிப் பிரச்சினையினால் பெரேராவுக்கு கட்சியை தூக்கிப் பிடிக்க முடியாது போல் தெரிகிறது. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஒருபோதும் இலக்காகாத மக்கள் விடுதலை முன்னணிக்கு கட்சியை தூக்கிப் பிடிக்க முடியும். இந்தத் தேர்தலின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ அல்லது அதன் போட்டிக் கட்சியாக உள்ள தமிழர் விடுதலை கூட்டணிக்கோ ஆதரவாகப் பேச முடியாத நிலையில் உள்ள விக்னேஸ்வரன் கட்சி அல்ல, வேட்பாளரே முக்கியம் என்கிறார். சுமந்திரன் கட்சிக்காக வாதாடக் கூடிய நிலையில் உள்ளார்.
இதேவேளை, கொள்கை, நேர்மை என்பவற்றை விட, எப்படியோ தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றதொரு நிலைக்கு எல்லோரும் தள்ளப்பட்டுள்ளனர். அதில் ஓர் உத்தியாகத்தான் பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா மற்றும் அமைச்சர் சந்திம வீரக்கொடி போன்றோர்கள் மத்திய அரசாங்கத்தில் அதிகாரத்தில் உள்ள கட்சிக்கு வாக்களித்தால் தான் உள்ளுராட்சி சபைகள் ஏதாவது மக்களுக்கு செய்யலாம் என்று வாதாடுகின்றனர். இவர்கள் இப்போது எதிர்க்கட்சியில் இருந்தால் இவ்வாறு வாதிட மாட்டார்கள்.
இந்த வாதம் ஒரு வகையில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறும் உள்ளூராட்சி சபைகளுக்கு மத்திய அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளுக்காக நிதி வழங்காது என்று மிரட்டுவதற்குச் சமமாகும். இது எவ்வகையிலும் நல்லாட்சி அல்ல. இவ்வாறு மக்களை முறையாக வழிகாட்டக் கட்சிகள் தவறும் போது, மக்கள் திருடர்களையும் மோசடிக் காரர்களையும் தொடர்ந்தும் தெரிவு செய்வதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
இந்தநிலையில்தான், தேர்தல்களின்போது குறைந்த வாக்காளர்கள் வாக்களித்தால் வாக்களிக்காதவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் போல் அபராதம் விதிக்க வேண்டும் எனப் பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம். முஹம்மது கூறியிருக்கிறார். அரசாங்கம் பெரும் தொகை பணத்தைச் செலவிட்டு சகல வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில் ஒழுங்குகளை மேற்கொள்ளும் போது, குறைந்த வாக்காளர்கள் வாக்களித்தால் பெரும் தொகைப் பணம் வீணாக விரயமாகிறது என அவர் வாதிடுகிறார்.
அவ்வாறு குறைந்த வாக்களர்கள் வாக்களிக்கும் நிலை உண்மையிலேயே ஏற்பட்டு இருந்தால் வாக்காளர்கள் அரசியலில் விரக்தியடைந்து இருப்பதையே அது எடுத்துக் காட்டுகிறது.
பதவிக்கு வருவோர் வாக்குறுதிகளை நிறைவேற்றாமையும் திருடர்களும் குண்டர்களும் பதவிக்கு வருவதும் அந்த விரக்திக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் மக்களே அவர்களைத் தெரிவு செய்கிறார்கள். அதன் பின்னர், அவர்களே விரக்தியடைகிறார்கள். பின்னர் வாக்களிக்கத் தயங்குகிறார்கள். அவர்களே இந்த நிலைக்கு காரணமாகும் குற்றவாளிகள்.
எனவே, ஒரு வகையில் வாக்களிப்புக் குறைவாக இருந்தால் வாக்காளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்ற பிரதி தேர்தல் ஆணையாளரின் ஆலோசனையிலும் நியாயம் இல்லாமல் இல்லை.
Average Rating