விகாராதிபதியின் இறுதிச்சடங்கும் சர்ச்சையும்..!! (கட்டுரை)

Read Time:14 Minute, 14 Second

யாழ்ப்பாணம்- ஆரியகுளத்தில் உள்ள நாகவிகாரையின் விகாராதிபதியின் மரணம், சர்ச்சை ஒன்றுடன் முடிந்து போயிருக்கிறது.

விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்கு, யாழ்ப்பாணம், கோட்டைக்கு அருகில் உள்ள முற்றவெளி மைதானம் தெரிவு செய்யப்பட்டதும், அதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுமே, இந்தச் சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கின்றன.

விகாராதிபதியின் இறுதிச்சடகுக்கான ஏற்பாடுகளை இராணுவத்தினரே மேற்கொண்டதும், அதன்போது உரிய விதிமுறைகளை அவர்கள் பின்பற்றாமையும்தான் இந்தச் சிக்கலுக்கான அடிப்படைக் காரணம்.

தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான நிலம் என்பதால், அவர்களின் அனுமதியைப் பெற்றால்போதும் என்ற நிலையில் இராணுவமும் அரசாங்கமும் நடந்து கொண்டது.

சடலங்களை எரிப்பது தொடர்பாக, உள்ளூராட்சி சபைகள் கொண்டிருக்கின்ற கட்டுப்பாடுகள், சட்டங்களை அவர்கள் கருத்தில் கொள்ளவுமில்லை; அவற்றை மதித்துச் செயற்படவுமில்லை.

தமிழாராய்ச்சி மாநாட்டின்போது, படுகொலை செய்யப்பட்ட ஒன்பது தமிழர்களின் நினைவிடம், கோட்டை முனியப்பர் ஆலயம் ஆகியவற்றுக்கு அருகில், விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, வடக்கில் எதிர்ப்புக் குரல்கள் எழுப்பப்பட்டன.

இதைச் சட்டமீறல் என்றும், பண்பாட்டுக்கு எதிரானது என்றும், சுற்றாடலை மாசுபடுத்தும் செயல் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதன் ஒரு கட்டமாக, 12 சட்டத்தரணிகள், விகாராதிபதியின் உடலை முற்றவெளி மைதானத்தில் தகனம் செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி, யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் அவசர மனுவொன்றைத் தாக்கல் செய்தனர்.

சுற்றாடல் பாதிப்பைக் காரணம் காட்டியும், அனுமதியின்றியும் இந்தத் தகனக் கிரியைகள் நடத்தப்படுவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீண்ட விவாதங்களின் போது, விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டால், சமூகக் குழப்பம் ஏற்படும் என்று பொலிஸார் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, நீதிவான் அனுமதி அளிக்க, முற்றவெளி மைதானத்தில், விகாராதிபதியின் உடல் தகன நிகழ்வு இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்வில், வடக்கு மாகாண முதலமைச்சரோ, அல்லது எந்தவொரு தமிழ் அரசியல்வாதிகளோ பங்கேற்கவில்லை.

இந்தநிலையில், “விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் எதிர்ப்புத் தெரிவித்தனர்; இதுதானா நல்லிணக்கம்”? என்று, கடந்த புதன்கிழமை, கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், கேள்வி எழுப்பியிருந்தார் பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர்.

அதுபோலவே, “நாகவிகாரை விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டமைக்காக, தமிழ் மக்களும் இந்து மக்களும் வெட்கப்பட வேண்டும்” என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்திருந்தது.

“தமிழ்த் தலைவர்களின் இறுதி நிகழ்வுகளையோ நினைவு நிகழ்வுகளையோ கொழும்பில் நடத்துவதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், யாழ்ப்பாணத்தில் நடத்தப்போனால் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது” என்றும், ஹெல உறுமய விசனம் வெளியிட்டுள்ளது.

விகாராதிபதியின் உடல் தகன சர்ச்சை அரசியல் நோக்கிலும், இனவாத நோக்கிலும் திருப்பி விடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில், வடக்கு மாகாண முதலமைச்சரோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் போன்றவர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்களும்தான், இந்த விவகாரம் பற்றி, அதிகளவில் குரல் எழுப்பியிருந்தார்கள். சட்ட நடவடிக்கைகளின் பின்னணியிலும் இருந்தார்கள்.

தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், இதுபோன்ற விடயங்கள் முன்னிலைப்படுத்தப்படுவதும், பூதாகாரப்படுத்தப்படுவதும் வழக்கம்தான். அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் காலத்தில் ‘பேனைப் பெருச்சாளியாக்கும் வல்லமை’ எப்படியோ கிடைத்து விடுகிறது.

விகாராதிபதியின் உடல் தகன விவகாரத்திலும் அவ்வாறுதான் நடந்ததா என்ற கேள்வி உள்ளது.

விகாராதிபதியின் உடல் தகனம் நடந்த இடம், பொதுமக்கள் நடமாடுகின்ற ஆலயம், நினைவிடம் என்பன உள்ள, திறந்த வெளியான ஒரு பகுதி என்பதும், அங்கு உடலைத் தகனம் செய்வதால் சுற்றாடலுக்குத் தீங்கு ஏற்படும் என்பதும் சந்தேகமில்லை.

சிங்கள மக்களைப் பொறுத்தவரையில், முக்கிய பிரமுகர்களின் உடல்கள் பொதுஇடங்களில் தகனம் செய்யப்படுவது வழக்கம். அது அவர்களுக்குப் புதிய விடயமல்ல. இதற்கு அண்மைய உதாரணம், கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதியாக இருந்து மறைந்த மாதுளுவாவே சோபித தேரரின் இறுதிச்சடங்குகள் நாடாளுமன்ற மைதானத்தில்தான் நடந்தன.

ஆனால், சடலங்களைப் பொது இடங்களில் தகனம் செய்யும் வழக்கம், தமிழ் மக்களிடம் அரிதாகும். அதற்காக அத்தகைய வழக்கம் தமிழர்களிடம் முழுமையாக இல்லை என்று யாரும் வாதிட முடியாது.

1987ஆம் ஆண்டு பலாலியில் சயனைட் அருந்தி மரணமான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 விடுதலைப் புலிகளின் உடல்கள், வல்வெட்டித்துறை, தீருவில் வெளியில்தான் ஒன்றாகத் தகனம் செய்யப்பட்டன. தகனம் நடந்த இடத்துக்கு அருகே குடியிருப்புகள் இருந்தன; ஆலயமும் இருந்தது. இதுபோன்ற பல எடுத்துக் காட்டுகள் உள்ளதால், தமிழர் தரப்பு வீண் வீம்புக்காக போய் முட்டிக் கொள்ளக் கூடாது.

விகாராதிபதியின் உடல் தகனம் நடந்த இடத்தில், அதாவது யாழ். முற்றவெளியில்தான் தந்தை செல்வாவின் இறுதிச்சடங்கு நடந்தது என்றும், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் தகனம் இடம்பெற்றது என்றும் ஜாதிக ஹெல உறுமய நினைவுபடுத்தியிருப்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

சில விதிவிலக்கான நிகழ்வுகள் நடந்திருப்பது உண்மையே என்றாலும், அதனை வைத்துத் தொடர்ந்து, தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

ஆலயத்தின் புனிதம் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குறித்துமான கரிசனைகள், முன்பை விட இப்போது அதிகரித்துள்ளன.

முன்னைய காலங்களில் ஆலயங்களில் மிருகபலி அனுமதிக்கப்பட்டது. இப்போது அப்படியில்லை. நீதிமன்றம் தடை செய்திருக்கிறது.

எனவே, முன்னைய உதாரணங்களைக் காட்டி, விகாராதிபதியின் உடலை முற்றவெளியில் தகனம் செய்வதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்புவது அபத்தமானது.

இந்த விடயம் சரியானமுறையில் அணுகப்படாததே இந்தளவு சிக்கலுக்கும் காரணம்.
சடலங்களைத் தகனம் செய்வதற்கு, அந்தந்த உள்ளூராட்சி சபையின் அனுமதியைப் பெற வேண்டும். யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்கு, யாழ். மாநகரசபையின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். அந்த அனுமதி பெறப்படவில்லை என்பது முதல் சிக்கல்.

அதேவேளை, யாழ். மாநகரசபையின் அனுமதியின்றி விகாராதிபதியின் உடல் தகன நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டபோது, அதனை மாநகரசபையே தடுத்திருக்கலாம். அல்லது வேறோர் இடத்தில் நடத்துவதற்கு ஒழுங்கு செய்திருக்கலாம்.

இந்த விடயத்தில், வடக்கின் உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தைக் கையில் வைத்துள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அமைதி காத்தது தவறு என்று கூறியிருக்கிறார் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா.

விகாராதிபதியின் உடல் தகன விவகாரத்தில் பெரும் சர்ச்சைகள் எழுந்த போதும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் இதில் தலையீடு செய்யவோ கருத்துகள் எதையும் வெளியிடவோ இல்லை.

அதுபோலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர்களும் அடங்கியே இருந்தனர். ஏனென்றால், இந்தச் சர்ச்சையை வலுப்படுத்துவது, நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும் என்றும், விமர்சனங்களை ஏற்படுத்தும் என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அது உண்மையான விடயமும் கூட மக்கள் நடமாடும் இடத்தில், விகாராதிபதியின் சடலத்தை எரிப்பது சுகாதாரக் கேடு என்று வரிந்து கட்டிய தமிழ் அரசியல்வாதிகள் எவருமே, யாழ். குடாநாட்டில் பொதுமக்கள் குடியிருப்புகளின் மத்தியில் உள்ள மயானங்களை அகற்றக் கோரி நடத்தப்படும் போராட்டங்களை எட்டியும் பார்க்காதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், தமிழ் மக்களும் அரசியல் பிரமுகர்களும், இந்த விடயத்தில் குரல் எழுப்பியமைக்கு வெறுமனே அரசியல் இலாபம் தேடும் முயற்சிகள் மாத்திரம்தான் காரணம் என்று கூறமுடியாது.

அதற்கும் அப்பால், பௌத்த சிங்கள மயமாக்கல் குறித்த அச்சமும் இருக்கிறது.
வடக்கில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் பௌத்த சிங்கள மயமாக்கலும், சிங்களக் குடியேற்றங்களும், பௌத்த விகாரைகளின் எழுச்சியும் தமிழ் மக்களைக் கவலையும் அச்சமும் கொள்ள வைத்திருக்கிறது.

யாழ். முற்றவெளியில் விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்தால், அந்த இடத்தில், பௌத்த நினைவுச் சின்னம் எழுப்பப்படுமோ, விகாரை கட்டப்படுமோ என்ற அச்சமும் தமிழர்கள் பலரிடம் உள்ளது.

அந்த அச்சமும் கூட, விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்ற குரல்கள் வலுப்பெறக் காரணம் என்பதை மறுக்க முடியாது.

விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்ய எதிர்க்கும் தமிழர்கள் என்று குற்றம்சாட்டும் போது, அதற்கான சூழல் எவ்வாறு உருவானது என்பதையும் சிங்கள அரசியல் தலைவர்கள் சற்றேனும் திரும்பிப் பார்க்க வேண்டும்.

நல்லிணக்க முயற்சிகள் என்பது, தனியே விட்டுக் கொடுப்பது மாத்திரமன்றி, முட்டிக் கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்வதும்தான்.

அந்தவகையில், விகாராதிபதியின் உடல் தகன விடயத்தைச் சர்ச்சையாக்கியவர்கள் குற்றவாளிகள் என்றால், சர்ச்சை உருவாகாத வகையில் செயற்படத் தவறியவர்களும் கூட குற்றவாளிகள்தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள் – பிரியங்கா சோப்ரா..!!
Next post எனக்கு ஆதரவு தெரிவிக்க அநாகரீகமாக நடக்க வேண்டாம்: மம்முட்டி..!!