வட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்..!! (கட்டுரை)

Read Time:14 Minute, 12 Second

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த வாரம் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய அரசியலில் என்றைக்கும் இல்லாதளவுக்கு அடிதடி, மிரட்டல், ஆள் பிடித்தல், சாதி- மத அடையாள அரசியல் காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன.தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை மாதம் இருக்கின்ற நிலையில், இன்னும் என்னென்ன அடாவடிக் காட்சிகளைப் பார்க்க வேண்டியிருக்குமோ என்கிற அச்சம் எழுகின்றது.

தேர்தல் அரசியல் எப்போதுமே வெற்றியைப் பிரதானமாகக் கொண்டதுதான். எனினும், வெற்றியை அடைவதற்கான வழிமுறைகள் சார்ந்து அடிப்படைத் தார்மீகத்தைக் கட்சிகளும், வேட்பாளர்களும் அனுசரித்து நடக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. அதுவே, ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்தையும் தேர்தல் வெற்றிகளுக்கு அப்பாலும் அரசியல் இலக்குகள் சார்ந்த உரையாடலைத் தெளிவாக வைத்துக் கொள்ளவும் உதவும்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான கடந்த எட்டு ஆண்டுகளில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு பெரும்பாலும் நம்பிக்கையீனங்களினாலேயே நிரம்பியிருக்கின்றது. அவ்வப்போது, நம்பிக்கை மேகங்கள் சூழ்ந்தாலும் அவை, விரைவாகவே விலகிச் சென்றிருக்கின்றன.

பெரும்மழையொன்றைப் பருகும் தாகத்தோடு தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு இருக்கின்ற நிலையில், அந்தத் தாகத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலோ, வேறு எந்தத் தரப்பினாலோ இன்னும் தீர்க்க முடியவில்லை. கடந்த காலத்தில் கூட்டமைப்பு பெற்று வந்த தேர்தல் வெற்றிகள் என்பது, பெரும் தாகத்துக்கான சிறுதூறல்கள் மாத்திரமே.

அப்படிப்பட்ட நிலையில், பெரும் தாகத்தைத் தீர்ப்பது யார் என்கிற கேள்வி,பதில்கள் ஏதுமின்றி தொடர்கின்றது. இப்படிப்பட்ட நிலையில்தான், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வந்திருக்கின்றது.

2015 பொதுத் தேர்தல் வரையில் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களைத் தேடுவதே பல கட்சிகளுக்கு சிரமமாக இருந்து வந்தது.ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்த நிலை ஓரளவுக்கு மாறியிருக்கின்றது. அதிக வேட்பாளர்களைக் கோரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில், தேர்தல் புறக்கணிப்பு என்கிற கோசங்களைத் தாண்டி, பல கட்சிகளும் போட்டியிடும் சூழல் உருவாகியிருக்கின்றது.

அதுமாத்திரமின்றி,வட்டார முறைமை அடிப்படையாகக் கொண்டு, கிராமமாக ஒன்றிணைந்து சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கியிருக்கின்றன. இது,கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்புகளை அவ்வளவுக்கு பறித்துவிடாது என்கிற போதிலும், ஒரு வகையிலான அழுத்தத்தை எதிர்காலத்தில்உருவாக்கும். அது, அவசியமான ஒன்றாகவே கருதப்பட வேண்டும். ஏனெனில், ஏக நிலை அரசியல் என்பது கேள்விகளுக்கு அப்பாலானதாகமாறும் போது, அது, அந்தக் கட்சியை மாத்திரமல்ல, அரசியலின் ஆதாரமான மக்களையும் தோல்வியின் பக்கத்துக்கு இழுத்துச் சென்றுவிடும்.

முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர், 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நோக்கியே தமிழ் மக்கள் குறிப்பிட்டளவு திரண்டனர். அந்தத் திரட்சியின் அடுத்த கட்டத்தை, 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தல் பிரதிபலித்தது. அதுதான், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் தொடர்ந்தது. ஆனால், இம்முறை உள்ளூராட்சித் தேர்தல் என்பது ‘வட்டாரம்’என்கிற அடிப்படையில் மக்களின் முன்னால் வந்திருக்கின்றது.

இது, விகிதாசாரப் பிரதிநிதித்துவம் செலுத்தும் ஆளுமையின் அளவைக் குறிப்பிட்டளவு குறைத்துள்ளதுடன், மக்களுடனான நேரடி அரசியல் என்பது தேர்தல் காலங்களில் மாத்திரம் நிகழ முடியாதது. மாறாக,ஒவ்வொரு கட்டத்திலும் நிகழ வேண்டியது என்கிற நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. அது, அடிமட்டத்திலிருந்து ஆரோக்கியமான அரசியலைக் கட்டமைக்கவும், வளர்த்தெடுக்கவும் உதவும்.

அத்தோடு, கொள்கை சார் வாக்களிப்பு, ஒற்றுமையின் ஒருங்கிணைவு என்கிற கோசங்களோடு, கிராமங்களின் அபிவிருத்தி என்கிற விடயத்தையும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முதன்மையாகக் கொள்ள வைத்திருக்கின்றது.

அது, முப்பது ஆண்டுகால யுத்தத்துக்குள்ளும்,சுனாமி போன்ற பேரழிவுக்குள்ளும் சிக்கிய வடக்கு- கிழக்குக்கு மிகவும் அவசியமானது. அதனால், அரசியல் என்பது உணர்வூட்டும் பேச்சுகள் சார்ந்தது மாத்திரமல்ல, நிர்வாகத்திறன், மக்களுடனான தொடர்பாடல், பிரச்சினைகளைக் கையாளும் வல்லமை உள்ளிட்ட விடயங்கள் சார்ந்தும், அரசியல்வாதிகளை அடிமட்டத்திலிருந்து உருவாக்குவதற்கு உதவும். அந்த வகையில், அந்தக் கட்டங்களை நோக்கி அரசியல் கட்சிகள் அனைத்தையும் இழுத்து வந்து சேர்க்கும். மக்களை மந்தைகளாக நினைக்கும் மேல் மட்ட அரசியல் குறிப்பிட்டளவு ஆட்டங்காணும்.

ஆனால், இன்னொரு பக்கம், மதவாத- சாதிய பாகுபாடுள்ள வன்ம அரசியலை உள்ளூராட்சித் தேர்தல் பரபரப்புகள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன. தமிழ்த் தேசிய அரசியல் என்கிற அடையாளம் பொதுவாக இருந்த போதிலும், அவ்வப்போது, சாதிய பாகுபாடுள்ள வன்மஅரசியல் தலைகாட்டியே வந்திருக்கின்றது.

அதற்கு எந்தக் கட்சியும் விதிவிலக்காக இருந்தது இல்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழகத்தில் சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராக பெரியாரின் கொள்கைகளோடு வந்த திராவிட முன்னேற்றக் கழகமோ, அதிலிருந்து பிரிந்து வந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமோ தேர்தல்களின் போது, தொகுதிகளில் எந்தச் சாதியினர் அதிகமுள்ளார்கள் என்கிற அடிப்படைகளை முன்னிறுத்தி வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் அரசியலே இருக்கின்றது. அப்படியான சூழலொன்றைத் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பும் மீளவும் உக்கிரமாகப் பதிவு செய்துவிடுமோ என்கிற அச்சம் எழுகின்றது.

குறிப்பாக, யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளரை முன்னிறுத்திய இவ்வாறான உரையாடல்கள் அனைத்துக் கட்சிகளுக்குள்ளும் நிகழ்ந்திருக்கின்றன. வாக்குச் சேகரிக்கும் கட்டங்களிலும் அந்த விடயம் இப்போது குறிப்பிட்டளவு முன்வைக்கப்பட்டு வருகின்றது.அதன்காரணமாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, குறிப்பாக தமிழரசுக் கட்சி தன்னுடைய மேயர் வேட்பாளர் இம்மானுவேல் ஆர்னோல்ட் என்று கூறுவதிலிருந்து பின்நிற்பதாகவும் தெரிகின்றது.

இன்னொரு பக்கம், கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள், கூட்டமைப்பின் மேயர் வேட்பாளரின் மத- சாதிய அடையாளங்களை மறைமுகமாக அடையாளப்படுத்திக் கொண்டு, இன்னொரு வகையிலான ஆதிக்க அடையாள அரசியலை முன்னெடுக்க முனைகின்றன. அதன்போக்கிலேயே பிரசாரங்களையும் செய்கின்றன.

தமிழ்த் தேசிய அரசியலுக்குள் அக முரண்பாடுகளும் சீர் செய்யப்பட வேண்டிய சாதிய- மதவாத அடையாள அரசியலும் நீறுபூத்த நெருப்பாகத் தொடர்ந்தே வந்திருக்கின்றது.
அப்படியான நிலையில், உள்ளூராட்சித் தேர்தல் அதனை மீளவும் பகிரங்கமாக இப்போதுவெளிப்படுத்தி இருக்கின்றது. அதன் அடுத்த கட்டம், மாகாண சபைத் தேர்தலின் போது அரங்கேறும் சூழல் உருவாகும். இது,சீர்செய்யப்படாவிடின், தேர்தல் அரசியலின் போக்கில் இன்னும் இன்னும் பெருப்பிக்கப்பட்டு ‘தமிழ்த் தேசியம்’ என்கிற பொது அடையாளத்தின்மீது பெரும் கறை தீட்டப்படும். இம்முறை எந்த வட்டாரத்தில் எந்தச் சாதியினர் அதிகமாக இருக்கின்றார்கள் என்கிற அடிப்படைகளை முன்னிறுத்தி வேட்பாளர்களைத் தேடிய, தெரிவு செய்த அனைத்துக் கட்சிகளும் இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விமர்சனம் தமிழ்த் தேசிய அரசியலில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்குமானது.

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பௌத்த சிங்கள மேலாதிக்கம் இந்த நாட்டில் நீடிக்கும் வரையில், தமிழ்த் தேசிய அடையாள அரசியலும் நீடித்தே தீரும். ஆனால், தமிழ்த் தேசிய அடையாள நீடிப்பு என்பது, வெறுமனே பௌத்த சிங்கள மேலாதிக்க அரசியலை எதிர்ப்பதற்கான ஒன்றாகக் கருதாமல், தமிழ் மக்களிடையே உள்ள சாதிய- மதவாத சிந்தனைகளை அகற்றம் செய்வதாகவும் இருக்க வேண்டும்.

அதுதான், சமூக ரீதியில் சமத்துவத்துடனும், நம்பிக்கையுடனும் பயணிக்க வைக்கும். மாறாக, குறுகிய விடயங்களுக்காக தேவையற்ற ரீதியில் சாதிய- மதவாத அடையாளங்களை முன்னிறுத்திக் கொண்டு மலினப்படுவது என்பது தொடர் தோல்விகளை மக்கள் மீது சுமத்திவிடும்.

இன்னொரு வகையில், சாதிய- மதவாத அடையாள அரசியலை அகற்றுவது என்பது, பின்தங்கியுள்ள மக்களை முன்னோக்கி அழைத்துவருவதைத் தவிர்ப்பதாக, யாரும் அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது.

தமிழ்த் தேசிய அரசியலையும், அதுசார் போராட்டங்களையும் அனைத்துத் தரப்பு மக்களும் அதிக அர்ப்பணிப்புக்களை வழங்கி பாதுகாத்து வந்திருக்கின்றார்கள். அப்படிப்பட்ட நிலையில், தேர்தல் வெற்றியை முன்வைத்த குறுகிய அரசியலும், பதவி மோகமும் தமிழ் மக்களை நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்த நிலைகளுக்கு இழுத்துச் செல்வதை அனுமதிக்கமுடியாது.

அதனைப், புரிந்து கொண்டு உண்மையானஅரசியலை முன்னெடுப்பதும், அதனை நோக்கி மக்களை அழைத்து வருவதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியப் பேரவை உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளினதும் பொறுப்பாகும்.

“இல்லை, நாங்கள் சாதிய- மதவாத அடையாள அரசியலை முன்னெடுக்கவில்லை” என்று குற்றச்சாட்டுகளை புறந்தள்ளுவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட கட்சிகளும், அதன் தலைமைகளும் தேர்தல் பிரசாரக் காட்சிகளைச் சற்று அவதானித்துக் கொள்ளுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த புதுமுக நடிகைகள்..!!
Next post குடிக்கலாமா? வேண்டாமா? மது பாட்டிலை வைத்து முடிவு செய்யாமல் தவித்த வரலட்சுமி..!!