அம்மண அரசியல்..!! (கட்டுரை)

Read Time:15 Minute, 2 Second

தேர்தல் அரசியல் அம்மணமானது; மற்றவரை அம்மணமாக்குவது. தமிழ்த் தேசிய அரசியலும் தேர்தல்களைப் பிரதானமாக முன்னிறுத்திய அநேக தருணங்களில் அதனையே பிரதிபலித்து வந்திருக்கின்றது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிறுத்தித் திறந்துள்ள தற்போதைய அரங்கிலும், அம்மணமாக்கும் ஆட்டமும் அம்மணமாகும் ஆட்டமும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளருக்கான போட்டி கடந்த சில நாட்களாக நீடித்து வந்தது.

இறுதியில், வடக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த இமானுவேல் ஆர்னோல்ட், கூட்டமைப்பின் (தமிழரசுக் கட்சி) சார்பில் மேயர் வேட்பாளராகத் தெரிவாகியிருக்கின்றார்.

உட்கட்சி இழுபறிகளைத் தற்காலிகமாகத் தவிர்ப்பதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமை, மேயர் வேட்பாளராக யாரையும் இதுவரை அறிவிக்கவில்லை என்று ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தாலும், ஆர்னோல்டே மேயர் வேட்பாளர் என்பது பட்டாவர்த்தனமானது.

கூட்டமைப்புக்குள் மேயர் வேட்பாளருக்கான போட்டியில் ஈடுபட்டிருந்தவர்களில் சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியர் ஒருவரும் அடக்கம். அவருக்கான வாய்ப்பை வழங்குவது தொடர்பில் இரா.சம்பந்தன் ஆர்வம் கொண்டிருந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனும், என்.சரவணபவனும் அதற்கு ஆதரவை வழங்கவில்லை என்று கூறப்படுகின்றது.

சுமந்திரனுக்குத் தன்னுடைய தலைமையை ஏற்று நடக்கும் இரண்டாம் மட்டத் தலைவர்களைப் பலப்படுத்த வேண்டும் என்கிற நிலையில், ஆர்னோட்டினை மேயர் வேட்பாளராக முன்னிறுத்துவது அவசியமானது.

யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் பத்திரிகைகளை நடத்தும் சரவணபவனுக்கோ (தனிப்பட்ட மற்றும்) தொழில் அடையாளம் சார் போட்டியில், தமிழரசுக் கட்சிக்குள்ளோ, கூட்டமைப்புக்குள்ளோ இன்னொருவர் வருவதை அவர் விரும்பவில்லை. அதன் காரணமாகவும் அந்த சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியருக்கான வாய்ப்பு இப்போதும் மறுக்கப்பட்டிருக்கின்றது.

முன்னொரு தடவை, வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவதாக கூட்டமைப்பின் தலைமையினால் வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையிலும் அந்தச் சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியர் அலைக்கழிக்கப்பட்டிருக்கின்றார். அதனை, தற்போதைய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அந்த சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியர் ஆரம்பித்த பத்திரிகையின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு பேசும் போதும் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்தச் சூழலைப் பற்றிக் கொண்டு, ஏற்கெனவே சிதைந்துபோன நம்பிக்கைகளை மீளக் கட்டியெழுப்பும் செயற்திட்டமொன்றை சில தரப்புகள் முன்னெடுப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

அதாவது, யாழ். மாநகர சபைக்கான மேயருக்கான போட்டியில், கூட்டமைப்புக்கு எதிரான பொது எதிரணியொன்றை அமைத்து, அதற்குப் பிரபலமான வேட்பாளரை நிறுத்துவதனூடு புதிய கூட்டணிகளுக்கான அச்சாரத்தை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்று அந்தத் தரப்புகள் நம்புகின்றன.

அதற்கான ஆரம்பக் கட்டப் பேச்சுவார்த்தைகள், அந்தச் சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியரை முன்னிறுத்தி நிகழ்ந்துமிருக்கின்றன. அதற்காக, வீ.ஆனந்தசங்கரி, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு (உதயசூரியன் சின்னத்தில் வரும் அணி) மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை (சைக்கிள் சின்னத்தில் வரும் முன்னணி) உள்ளிட்ட தரப்புகளுக்கு இடையில் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆனாலும், இந்தப் பொது எதிரணிக்கான அச்சாரத்துக்குள்ளும் மேயர் வேட்பாளராக அந்தப் பத்திரிகை ஆசிரியரை முன்னிறுத்துவது தொடர்பில் அதிருப்திகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்னோர் இளம் வேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பிலும் பேசப்பட்டிருக்கின்றது.

தமிழ்த் தேசிய அரசியல் என்பது கொள்கைக் கூட்டணி என்கிற விடயத்தைப் பிரதானமாக முன்னிறுத்தி உரையாடி வந்திருக்கின்றது. ஆனால், அதற்கான அர்ப்பணிப்பு மற்றும் அடைவுக்கான வழிகள் தொடர்பில் ஆக்கபூர்வமான முயற்சிகள் கடந்த எட்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனவா என்றால் இல்லை என்கிற ஏமாற்றமான பதிலே கிடைக்கும். எனினும், கொள்கைக் கூட்டணி என்கிற விடயம் ஊடகக் கவர்ச்சி (உண்மையில் சமூக ஊடகக் கவர்ச்சி என்பதே தற்போதைக்கு சரி) பெற்றதாகவே இருந்து வந்திருக்கின்றது.

புதிய கூட்டுகளுக்கான பேச்சுகளின் ஆரம்பத்தின் போதும், முறிவின் (முடிவின்) போதும் இந்த விடயமே அதிகமாகவே பேசப்படும். எழுபது ஆண்டுகளைத் தாண்டிவிட்ட தமிழ்த் தேசிய அரசியல் என்பது அடிப்படையில் கொள்கை சார்பிலானதுதான். அதனை, கட்சிகள் நம்புகின்றனவோ இல்லையோ தமிழ் மக்கள் பெருவாரியாக நம்புகின்றார்கள்.

அதன்பெயரில்தான், ஆயுத வழிப் போராட்டம் உள்ளிட்ட அனைத்து வகைப் போராட்டங்களும் பேரெழிச்சியோடு முன்னெடுக்கப்பட்டும் வந்திருக்கின்றன.

ஆனால், மக்கள் தாங்கி நிற்கின்ற கொள்கை சார் அரசியல் என்பது, மக்களை அலைக்கழிப்பதற்கானது என்கிற அர்த்தத்தின் போக்கிலானது அல்ல. அது, மீட்சிகளைக் கோருவது. அந்த மீட்சிகளுக்கான வழிமுறைகளை நோக்கிய பயணத்தின் பக்கத்தில் யார் பயணிக்கின்றார்களோ அவர்களோடு பயணிக்கவே மக்கள் விரும்புகின்றார்கள். ஆனால், 2009க்குப் பின்னரான நிலை என்பது, மக்களைத் தற்காக்கும் உணர்வு நிலையின் பக்கத்திலும் தள்ளியிருக்கின்றது.

அதாவது, நடுக்கடலில் உயிருக்காகப் போராடும் ஒருவருக்கு மிதவையொன்றின் பற்றுதலுக்கு (தேவைக்கு) ஒப்பானது. இங்கு, உயிர் என்பது கொள்கையாகவும் மிதவை என்பது தற்காக்கும் அரசியலாகவும் கொள்ள வேண்டியது. பல்லாயிரம் கடல் மைல்களுக்கு அப்பால், தத்தளிக்கும் ஒருவரை மீட்பதற்கு மிதவை மாத்திரம் போதாது என்பதுவும், எவ்வளவுதான் நீந்தினாலும் அவரது கைகளும் கால்களும் வலுவிழப்பதற்கு முன்னால், அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் அவசியமானவை.

இல்லையென்றால், தற்காக்கும் அரசியல் மாத்திரமல்ல, உயிராகவே இருக்கின்ற கொள்கை சார் அரசியலும் கடலோடு கலந்து போகும். தமிழ்த் தேசிய அரசியலின் தற்போதைய நிலை அதுதான்.

இப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் என்பது மிதவை அரசியலுக்கு பக்கத்தில் வருவது. அது, ஒட்டுமொத்தமான தற்காப்பு அரசியலும் அல்ல.

சிதைவடைந்து போகும் மிதவைக்கு ஒப்பான தற்காப்பு அரசியல். அந்த இடத்தைப் பலப்படுத்துவதும், கொள்கை சார் அரசியலை இறுதி வரை காப்பாற்றுவதும் கரை சேர்ப்பதும், சிதைவடையாத மிதவைகளை கடலில் தள்ளி, அந்த மிதவைகளைப் பற்றியிருப்பவர்களை மீட்பதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

அதற்கான வெளி என்பது கடந்த சில ஆண்டுகளாக எந்தவித அடைவுகளும் இன்றி அப்படியே இருக்கின்றது என்பதுதான் இங்குள்ள பிரச்சினை. கூட்டமைப்பைச் சிதைவடைந்து கொண்டிருக்கும் மிதவை என்று அடையாளப்படுத்தத் தொடங்கி, எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

ஐயோ, மிதவை சிதைவடைகின்றது உயிர்போகப் போகின்றது என்கிற கூச்சல் ஒருசில மணித்துளிகளுக்கு சரியானது. ஆனால், அது நாட்கள், மாதங்கள், வருடங்கள் சார்ந்தும் நீடித்திருப்பது என்பது, தத்தளிக்கும் உயிரின் மீதான உண்மையான அக்கறை சார்ந்ததா என்கிற கேள்வியை எழுப்ப வைக்கின்றது.

தமிழ்த் தேசிய அரசியலின் தற்போதைய நிலை அதனை மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டிருக்கின்றது.

தமிழ் மக்கள் பேரவை ஒருங்கிணைக்க நினைத்த தேர்தல் கூட்டணி சிதைவடைந்து போயிருந்த நிலையில், இப்போது, யாழ். மாநகர மேயர் வேட்பாளர் என்கிற விடயத்தை முன்வைத்துப் பொது எதிரணிக்கான காட்சி ஒன்று எழுதப்படுகின்றது. இந்தக் காட்சியை, வரும் மாகாண சபைத் தேர்தலுக்கான ஒரு ஒத்திகையாகவும் கொள்ள முடியும். இந்த ஒத்திகை, ஒழுங்கான இணக்கப்பாடுகளுடன் நிகழ்த்தப்பட்டால், அது தமிழ்த் தேசிய அரசியலுக்குள் கொஞ்சமாகவேனும் ஆரோக்கிய அரசியலுக்கான கட்டத்தை உருவாக்கும்.

இல்லையென்றால், கூட்டமைப்பு எப்போதுமே விரும்பி ஏற்கும் பலமற்ற எதிரணியொன்றின் கட்டங்களை வைத்துக் கொள்வதை இறுதி செய்வதாக அமையும்.

கூட்டமைப்புக்கு எதிராகப் பலமான எதிரணியொன்று உருவாகும் சந்தர்ப்பங்களை கூட்டமைப்பின் தலையீடுகள் பெரிதாக ஏதுமின்றியே காற்றில் கலக்க விட்ட தருணமொன்றில், நின்று இந்தத் தேர்தல் காட்சிகளைப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

தமிழ்த் தேசிய அரசியலில் நம்பிக்கையான அமுக்க குழுக்களாகத் தங்களை முன்னிறுத்த பல தரப்புக்களும் விரும்பின.

ஆனால், அந்தத் தரப்புகள் அடிமட்ட மக்களோடு, அதாவது கொள்கைகளை சுமக்கின்ற மக்களோடு உரையாடுவதற்குப் பதிலாக ஊடகங்களோடும் தமக்கிடையிலும் உரையாடிக் களைத்தன.

உரையாடல்கள் என்பது நல்வழிதான். அரசியலுக்கு அரசியமான ஒன்று. ஆனால், அந்த உரையாடல்களை யாரோடு நிகழ்த்துகின்றோம் என்பதுவும் அந்த உரையாடல்களில் எவ்வளவு உண்மையிருக்கின்றது என்பதுமே மக்களை நோக்கியச் செல்வதற்கான வழி.

மாறாக, உரையாடல்களை மேல் மட்டத்தில் மாத்திரம் நிகழ்த்துவதோடு அரசியல் வசப்பட்டுவிடும், அமுக்கக் குழுக்களாக உருமாறிவிடுவோம் என்பது அபத்தமானது.அதனை உணராத தரப்புகளும் சேர்ந்துதான் கொள்கை சார் அரசியலை நடுக்கடலில் தத்தளிக்க விட்டிருக்கின்றன. இந்தக் கட்டங்கள் எல்லாமும் அந்தத் தரப்புகளையும் அம்மணமாக்கிக் கொண்டிருக்கின்றன.

தமிழ் மக்கள் இவ்வளவு சோதனைகளுக்குப் பின்னரும் தங்களை அம்மணமாக்காத அரசியலுக்காகவும் அதன்வழி உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவுமே போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்தப் போராட்டத்தைப் பலப்படுத்துவதும், வழிப்படுத்துவதுமே உண்மையான அரசியலாகும். மாறாக, மக்களை முன்னிறுத்திக் கொண்டு சுயநல அரசியலும், அதிகாரப் போட்டியும் மேலெழுவது என்பது தமிழ் மக்களின் சாபக்கேடு.

அதனை, அரசியல்வாதிகள் மாத்திரமல்ல, புத்தஜீவிகளும் செயற்பாட்டாளர்களும் ஆய்வாளர்களும் ஊடகங்களும் மேற்கொள்ளாது இருக்க வேண்டும்.

ஏனெனில், அரசியலில் இறுதி வெற்றி என்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டும். அதற்கான வாசல்களைத்தான் இன்று வரை யாருமே திறக்கிறார்கள் இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கமலை அடுத்து ரஜினி தலைப்பை கைப்பற்றிய சிபிராஜ்..!!
Next post தானா சேர்ந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த கார்த்திக்..!!