உள்ளூராட்சித் தேர்தல் ‘பலப்பரீட்சை’..!! (கட்டுரை)

Read Time:14 Minute, 3 Second

2018 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் நடக்கப்போகும், உள்ளூராட்சித் தேர்தலை எல்லா கட்சிகளுமே ஒரு பலப்பரீட்சையாகத் தான் பார்க்கின்றன. வடக்கு, கிழக்கில் மாத்திரமன்றி தெற்கிலும் கூட அதேநிலைதான்.

இந்த உள்ளூராட்சித் தேர்தல் பல்வேறு கட்சிகளுக்கும் கூட்டணிகளுக்கும் பலத்த சோதனையையும் கூட ஏற்படுத்தியிருக்கிறது.

நேரடித் தெரிவு மற்றும் விகிதாசாரத் தெரிவு முறை என்பன, இணைந்த கலப்பு முறையில் நடைபெறும் முதலாவது தேர்தல்.

புதிய தேர்தல் முறையின் சாதக பாதகங்களை அனுபவபூர்வமாக அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் இதன் மூலம்தான் கிடைக்கப் போகிறது.

ஒரு தேர்தல் முறையில் பல்வேறு சாதக, பாதகங்கள் இருக்கும். புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தும்போது, அதன் சாதகங்களை உணரக்கூடிய அளவுக்கு, அதிலுள்ள பாதகமான விடயங்கள் தெரியவருவதில்லை.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதும், அது மக்கள் நேரடியாகவே வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பை அளிக்கும் என்றும், கூடுதலான மக்களின் ஆதரவைப் பெற்றவர்களே தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், காலப்போக்கில்தான் அதன் பாதகமாக அம்சங்கள் வெளிப்பட ஆரம்பித்தன. ஒரே கட்சிக்குள்ளேயே விருப்பு வாக்குகளுக்கான மோதல்கள் வெடித்தன. விருப்பு வாக்குகளுக்காகக் கொலையும் செய்யும் அளவுக்கு நிலைமைகள் காணப்பட்டன.

அதுபோலவே, வட்டார முறை ஒழிக்கப்பட்டு, விருப்பு வாக்கு முறையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள், தமக்கான பொறுப்பை நிறைவேற்றவில்லை. தட்டிக் கழிக்கும் நிலையும் காணப்பட்டது.

இதனால்தான், புதிய தேர்தல் முறையில் மீண்டும் பொறுப்புக்கூறும் வட்டார முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், விருப்பு வாக்கு முறையும் ஒழிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தப் புதிய தேர்தல் முறை பற்றி இன்னமும் மக்களுக்கு சரியாக அறிவூட்டப்படவில்லை. அரசியல் கட்சிகளுக்கே இன்னமும் தேர்தல் நடைமுறைகள், தெரிவு முறைகள் பற்றிய சரியான புரிதல் இல்லை. என்றாலும், எல்லா அரசியல் கட்சிகளுமே போட்டிக்குத் தயாராகியிருக்கின்றன.

இந்தத் தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகள் என்ன என்பது, தேர்தல் முடிந்த பின்னர் தான் தெரியவரும்.

எனினும், இப்போதே அரசியல் கட்சிகளின் கூட்டமைப்புகளுக்குள் இந்தத் தேர்தல்முறை விரிசல்களை ஏற்படுத்தி விட்டது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் கூட்டணியாகப் போட்டியிடுவது பலத்தைக் கொடுத்தது. ஆனால், கலப்புத் தேர்தல் முறை, கூட்டமைப்புகளின் இருப்புக்குச் சவாலாக மாறியிருக்கிறது.

ஜனாதிபதி, நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட கட்சிகள் எல்லாமே இப்போது உடைந்து போயிருக்கின்றன.

ஐ.தே.க கூட்டணியிலும் சரி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டணியிலும் சரி, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக் கூட்டணியிலும் சரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் சரி எல்லாக் கூட்டமைப்புகளிலும் இந்தத் தேர்தல் முறையில், ஆசனப்பங்கீடு பிரச்சினைகளைத் தோற்றுவித்திருக்கிறது.

வட்டார முறையில் தெரிவுகள் இடம்பெறுவதால், ஒரே வட்டாரத்தில் செல்வாக்குப் பெற்ற இரண்டு கட்சிகளுக்கிடையில் விட்டுக்கொடுப்புகளை ஏற்படுத்துவது முதல் பிரச்சினை.

கூட்டணியில் உள்ள வெவ்வேறு கட்சிகளின் செல்வாக்குடைய நபர்கள், ஒரே வட்டாரத்துக்காக முரண்டு பிடிப்பது அடுத்த பிரச்சினை.

இப்படி இந்தத் தேர்தல் முறையினால் கூட்டமைப்புகளில் உள்ள கட்சிகளிடையே வேட்பாளர்களை நிறுத்துவதில் கணிசமான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் பல கட்சிகள் தமது வழக்கமான கூட்டமைப்புகளை விட்டு ஒதுங்கி, தனித்துப் போட்டியிடும் நிலைக்கு வந்திருக்கின்றன.

அதேவேளை, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கும் இந்தத் தேர்தலை, எல்லாக் கட்சிகளுமே தம்மைச் சுயபரிசோதனைக்கு உள்ளாக்கும் களமாக எடுத்துக் கொள்கின்றன.

மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில், தனது பலத்தைக் கணிக்க முனைகிறார். தனது பலத்தை வெளிப்படுத்த ஆர்வத்துடன் இருக்கிறார்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், ஆட்சியைப் பிடிப்பதற்கான முதல் படியாக அவர் இதைக் கருதுகிறார். அதனால், எப்படியாவது உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி விடும் கனவு அவருக்கு இருக்கிறது.

உள்ளூராட்சி சபைகளைக் கைக்குள் வைத்திருந்தால், இலகுவாக ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ளலாம் என்பது அவரது இலக்கு.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டு ஒதுங்கித் தனியாகத் தனது பலத்தை வெளிக்காட்டவதற்காக அவர் கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது.

ஆனாலும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவரது சகோதரர்களே, பலமாக மாத்திரமன்றி பலவீனமாகவும் இருக்கின்றனர் என்பதே உண்மை.

மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தமைக்கு கோட்டாபயராஜபக்ஷவும், பசில் ராஜபக்ஷவுமே காரணம் என்ற விமர்சனங்கள், அவர்களின் தரப்பில் இருந்தே எழுந்தன. தானே தோல்விக்குக் காரணம் என்று, பசில் ராஜபக்ஷ ஒரு சமயம் ஒப்புக்கொண்டும் இருந்தார்.

சிறிது காலம் மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து ஒதுங்கியிருந்த பசில் ராஜபக்ஷ, மீண்டும் அரசியலில் இறங்கி, மஹிந்தவை அரியணை ஏற்றுவதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியை உருவாக்கினார்.

அதனைப் பலப்படுத்திய அவரே, இப்போது ஒன்றிணைந்த எதிரணியினரை அதனுடன் இணைப்பதற்குப் பெரும் பிரச்சினையை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

பசில் ராஜபக்ஷவின் அணுகுமுறையினால் ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள கட்சிகளுக்கு பலத்த அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவுகளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிதான், அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறது.

ஒன்றிணைந்த எதிரணியில் அதிருப்தியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பக்கம் சாயத் தொடங்கியிருக்கிறார்கள். இது மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்குப் பாதகமான விடயமே.

தேர்தல்களின் போது, இத்தகைய கட்சித் தாவல்கள் இடம்பெறுவது வழக்கம்தான். பலர் வெல்லும் அணியின் பக்கம் போவார்கள்; சிலர் தோற்கும் அணியின் பக்கமும் போவார்கள். யாருமே தெரிந்து கொண்டு அதைச் செய்வதில்லை.

இப்போது நடக்கின்ற அணிமாற்றங்களும் கூட, யாருக்கு வெற்றி என்று கணிக்க முடியாத நிலையில்தான் நடந்து கொண்டிருக்கின்றன.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமது கை சின்னம் மற்றும் கட்சியின் பெயர், கொள்கைகளை மாத்திரம் நம்பி களத்தில் இறங்குகிறது.

ஆனால், கூட்டு எதிரணியோ மஹிந்த ராஜபக்ஷ என்ற ‘இமேஜை’ மாத்திரம் வைத்துக் கொண்டும், அரசாங்கத்துக்கு எதிரான கொள்கையை வைத்துக் கொண்டும் தான் களமிறங்குகிறது.

இந்த இரண்டு தரப்புகளுடன் ஐ.தே.க என்ற வலுவான எதிர்கட்சியும் இருக்கிறது.
அரசாங்கத்தில் உள்ள கட்சியாக ஐ.தே.க இருப்பது, அதற்கு ஒரு வகையில் சாதகம். எனினும், அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி அலை என்பது ஐ.தே.கவுக்கு பாதகமே.

ஐ.தே.கவைப் பொறுத்தவரையில், ஒன்றிணைந்த எதிரணியைக் போல, பெரியளவில் கூட்டணியை அமைத்திருக்கிறது என்று கூற முடியாது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலையும் அவ்வாறே உள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஒன்றிணைந்த எதிரணி தான் பலமான கூட்டணியைக் கொண்ட தரப்பாக விளங்குகிறது. வெறும் கூட்டணி மாத்திரம், தேர்தலில் கைகொடுக்குமா என்பது கேள்வி.

2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகத் தோற்றுவிக்கப்பட்ட அலை இன்னமும் தொடர்கிறதா என்பதை இந்தத் தேர்தல் வெளிப்படுத்தும்.
அதேவேளை, வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட கடுமையான சவால்களுக்கு மத்தியில் தான் கூட்டணி அமைத்திருக்கிறது.

கூட்டமைப்பில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் வெளியேறி, தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் டெலோ வெளியேறப் போவதாகவும் அறிவித்தது. புளொட் ஒதுங்கப் போவதாகவும் கூறியது.

எனினும், இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட நிலையில், கூட்டமைப்புக் கட்சிகள் மூன்றும் ஒன்றிணைந்து போட்டியிடுவதாக அறிவித்திருக்கின்றன.

இருந்தாலும், வெற்றிபெறும் உள்ளூராட்சி சபைகளில், எவ்வாறு ஆட்சியமைக்கப் போகின்றன என்பதில் சிக்கல்கள் நீடிக்கவே செய்யும். ஏனென்றால், நடைமுறை ரீதியான பிரச்சினைகள் தேர்தலுக்குப் பின்னரே தெரியவரும்.

அதைவிட, இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது கூட்டமைப்புக்கு முக்கியமானது. கூட்டமைப்பின் தற்போதைய அணுகுமுறைக்கான மக்களின் ஆதரவைத் தீர்மானிக்கும் தேர்தலாக இது இருக்கிறது.

கூட்டமைப்புக்கு எதிரான அணிகள் சரியாக ஒன்றிணையாதது, கூட்டமைப்புக்குச் சாதகமான விடயம் என்றாலும், முன்னரைப் போல கூட்டமைப்பினால் இலகுவாக வெற்றியைத் தட்டிச் செல்ல முடியாது.

இதுபோன்றே, இந்தத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள எல்லாக் கட்சிகளுக்குமே இது சவாலான களம் தான். அரசியலில் நிலைத்திருப்பதற்காக பல கட்சிகள் இந்தத் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ளப் போகின்ற அதேவேளை, இன்னும் சில கட்சிகள் அடுத்து நடக்கும் தேர்தலுக்கான பலத்தைச் சோதிக்கவும் போகின்றன.

இந்தத் தேர்தல் முடிவுகள் தான், அடுத்தடுத்த தேர்தல்களுக்கான கூட்டணிகளை உறுதிப்படுத்தும். இறுக்கமான நிலையில் இருந்தவர்களையும் தளர்வடையச் செய்யும். இன்னும் பலரை வலுவடையச் செய்யவும் கூடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொங்கலுக்கு ரிலீஸாகும் 6 படங்கள்..!!
Next post வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும்: மனம்திறந்த பிரபாஸ்..!!