புலிகள் இயக்கத்தின் லண்டன் நிதி சேகரிப்பாளர் கொழும்பில் கைது

Read Time:6 Minute, 37 Second

புலிகள் இயக்கத்திற்காக நீண்டகாலமாக இங்கிலாந்து, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் பெருந்தொகையான நிதி உதவிகளைச் சேகரித்தவரும் போலிக் “கிறடிற் காட்’களைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான பணத்தைச் சூறையாடி புலிகள் இயக்கத்துக்கு வழங்கிவருபவரும் எனக் கருதப்படும் பிரபல புலிகள் இயக்க நிதிப் பொறுப்பாளர் ஒருவரைக் கடந்த 14 ஆம் திகதி பம்பலப்பிட்டியில் வைத்து விசேட பொலிஸ் நடவடிக்கைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்தப் புலிகள் இயக்கப் பிரமுகர் பல வருடங்களாக இவ்வாறு போலிக் “கிறடிற் காட்’ களைப் பயன்படுத்தி சுமார் 500 கோடி ரூபாக்கு மேற்பட்ட பணத்தைச் சூறையாடியுள்ளார் என விசேட பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. மேலும், இவ்வாறு சூறையாடிய பணத்தை வெளிநாட்டு, உள்நாட்டு வங்கிகளில் தனது பெயரில் இட்டு வைத்துள்ளார் எனவும் இதற்கான வைப்புச் சிட்டைகள் மற்றும் வங்கிப் பத்திரங்களும் அவரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் விசேட பொலிஸ் விசாரணைக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய விடயம் யாதெனில் இவரை விசேட பொலிஸ் குழுவினர் பம்பலப்பிட்டியில் வைத்துக் கைது செய்தவேளையில் அவர் ரூபா ஒரு கோடி பணத்தை இலஞ்சமாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குக் கொடுத்து தப்பிக்கொள்ள முயன்றதே ஆகும். ஆயினும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமை தவறாது அவரைக் கைது செய்துள்ளனர்.

மேலும், இந்தப் புலிகள் இயக்க நிதிப் பிரிவுப் பிரமுகர் பற்றி விசேட பொலிஸ் குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப இவருடைய பெயர் ஆனந்தன் எனவும் இவர் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. இவர் நீண்டகாலமாக இங்கிலாந்து, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் தங்கியிருந்து புலிகள் இயக்கத்துக்காகக் கோடிக்கணக்கில் நிதி சேகரித்து வழங்கியுள்ளார். மேலும், இவர் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பெருந்தொகையில் பணம் இட்டிருக்கும் வெளிநாட்டவர்கள், உள்நாட்டவர்களின் வங்கிக் கணக்குகளின் இரகசிய இலக்கங்களைப் பயன்படுத்தி போலி “கிறடிற் காட்’ களைத் தயார் செய்து இங்குள்ள சுப்பர்மார்க்கெட்டுகள் மற்றும் வங்கிகள், வர்த்தக நிலையங்களிலிருந்து கோடிக்கணக்கில் பணத்தையும் விலை உயர்ந்த பொருட்களையும் பெற்றுள்ளார்.

இவரைப்பற்றி விசேட பொலிஸ் நடவடிக்கைக் குழுவினருக்கு தெரிவிக்கப்பட்ட இரகசிய தகவல்களைத் தொடர்ந்தே பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவரைக் கைது செய்யமுடிந்துள்ளது. இவ்வாறு இவர் பதினைந்து இலட்சத்துக்கு நகைகள் வாங்குவதற்கு குறிப்பிட்ட சுப்பர் மார்க்கெட் பகுதிக்கு வந்துகொண்டிருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் இதைத் தொடர்ந்து நகைகள் வாங்குவதற்காக இவர் பம்பலப்பிட்டியிலுள்ள குறிப்பிட்ட சுப்பர் மார்க்கெட் நிலையத்துக்கு வந்து சேர்ந்த வேளையில் அங்கு வைத்து விசேட பொலிஸ் குழுவினர் அவரைக் கைது செய்ததாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ள தகவல்களுக்கேற்ப இந்தப் புலிகள் இயக்க நிதித் தொடர்புப் பிரமுகர் இவ்வாறு போலிக் கிறடிற் காட் பணமோசடி, இங்கிலாந்து முதலாக வெளிநாடுகளில் சேகரிக்கும் நிதி உதவிகள் என்பவற்றில் சுமார் 60 வீதமான தொகையை புலிகள் இயக்கத்துக்கு வழங்கி வந்துள்ளதாகவும் மீதி சுமார் 40 வீதமான பணத்தை அவரும் அவருடைய கூட்டாளும் பயன்படுத்திவந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு இவருடைய நிதி மோசடிச் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட ஏனைய புலிகள் இயக்க நபர்கள் இங்கிலாந்தில் இருப்பதாகவும் இவரைக் கைது செய்ததைத் தொடர்ந்து அவரிடமிருந்து பொலிஸ் குழுவினர் கைப்பற்றிய கையடக்கத் தொலைபேசி மூலம் அவர் அவ்வாறு இங்கிலாந்திலுள்ள புலிகள் இயக்கத்தினருடன் தொடர்புகொண்ட தொலைபேசி இலக்க விபரங்களைப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்டுபிடித்திருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புலிகள் இயக்கச் சந்தேகநபர் போலி கிறடிற் காட்கள் அச்சடித்தது மற்றும் புலிகள் இயக்கத்துடனான நிதித் தொடர்புகள் சம்பந்தமான மேலதிக இரகசியங்களை அறிந்துகொள்வதற்காக இவரை விசேட பொலிஸ் நடவடிக்கை பிரிவினர் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒபாமாவுக்கு அல்கோர் ஆதரவு
Next post ஐரோப்பா மற்றும் சர்வதேச நாடுகளில் “புலிகளின் குரல்” வானொலி ஒலிபரப்ப தடை!