சட்டவிரோதமாக பொருட்கள் ஏற்றுமதி: இந்திய தொழில் அதிபருக்கு 35 மாதம் ஜெயில்; ரூ.24 லட்சம் அபராதம், அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு
அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்த அமெரிக்க இந்திய தொழில் அதிபருக்கு 35 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.24 லட்சம் அபராதமும் விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. அமெரிக்காவில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி தொழில் செய்து வருபவர் பார்த்தசாரதி சுதர்சன் (வயது 47). இவர் சிர்ரஸ் எலெக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தின் கிளைகள், அமெரிக்காவில் சிம்ப்ஸ்சன்வில்லே, தெற்கு கரோலினா மற்றும் சிங்கப்பூர், பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ளன. இவர் கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரை, சட்டவிரோதமாக எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ததாக அமெரிக்க போலீசார் கைது செய்தனர். இந்தியாவில் பாலிஸ்டிக் ஏவுகணை, விண்வெளி செலுத்து வாகனம், போர் விமானம் ஆகியவற்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ஆகிய இந்திய அரசு நிறுவனங்களுக்கு மேற்கண்ட காலகட்டத்தில், அமெரிக்காவில் இருந்து ஏவுகணை தொழில்நுட்ப கருவிகளை கொள்முதல் செய்து அனுப்பி வைத்துள்ளார். இப்பொருட்கள் சிங்கப்பூர் மூலமாக இந்தியாவுக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டன.
இவற்றை ராணுவம் சார்ந்த வெளிநாட்டு அரசு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்காவில் தடை உள்ளது. மேலும் இப்பொருட்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்க வர்த்தக துறையிடம் லைசென்சு பெற வேண்டும். ஆனால் இந்த விதிமுறைகளை பின்பற்றாமல், இந்தியாவில் உள்ள சாதாரண கம்பெனிகளுக்கு அனுப்புவதாக கூறி, போலி ஆவணங்கள் மூலம் அனுப்பி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், இந்தியாவில் கட்டப்பட்டு வரும் `தேஜாஸ்’ என்ற போர் விமானங்களுக்காக, கடந்த 2004 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் 500 மைக்ரோபிராசசர்ஸ் என்ற கருவிகளை கொள்முதல் செய்து அனுப்பி வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதற்கும் அவர் லைசென்சு பெறவில்லை.
வெளிநாட்டு ஏஜெண்டு
இதுதொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுதர்சன் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை, வாஷிங்டனில் உள்ள மாவட்ட கோர்ட்டில் நீதிபதி ரிக்கர்டோ உர்பினா முன்பு நடந்து வந்தது. சர்வதேச பொருளாதார அதிகார சட்டம், ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டம் ஆகியவற்றை மீறியதாகவும், வெளிநாட்டு அரசுக்கு சட்டவிரோத ஏஜெண்டாக செயல்பட்டதாகவும் அவர் மீது 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவற்றில் ஒரு குற்றச்சாட்டை மட்டும் சுதர்சன் ஒப்புக்கொண்டார். இதனால் மற்ற குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.
சுதர்சனுக்கு 4 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்குமாறு அரசு வக்கீல்கள் வாதாடினர். ஆனால் சுதர்சனின் வக்கீல் ரீட் வெய்ங்கர்டன், சுதர்சன் ஏற்கனவே ஜெயிலில் இருந்த 15 மாத காலத்தை மட்டும் தண்டனை காலமாக அறிவித்து, அவரை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். சுதர்சன் ஏற்றுமதி செய்த பொருட்கள், குறைந்த தொழில்நுட்பம் கொண்ட பொருட்கள் என்றும், அவர் தேச பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கவில்லை என்றும் வாதாடினார். சுதர்சன் ஏற்றுமதி செய்த பொருட்களின் மதிப்பு ரூ.18 கோடி அல்ல, ரூ.10 கோடிதான் என்று அவர் கூறியதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
உருக்கமான கோரிக்கை
தீர்ப்பு அறிவிப்பதற்கு முன்பாக, சுதர்சன் நீதிபதியிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். நன்றாக வாழ்வதற்கும், தனது குழந்தைகளுக்கு நல்ல படிப்பு அளிப்பதற்கும்தான் அமெரிக்கா வந்ததாக அவர் கூறினார். எனவே, தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழ தன்னை அனுமதிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
எதற்காக தடை செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்தீர்கள்? என்று அவரை பார்த்து நீதிபதி கேட்டார். அதற்கு சுதர்சன், தனக்கு சட்டத்தை பற்றி தெரியாது என்று கூறினார். இந்த பதில் நீதிபதிக்கு திருப்தி அளிக்கவில்லை.
35 மாத ஜெயில்
சுதர்சனுக்கு 35 மாத ஜெயில் தண்டனையும், 60 ஆயிரம் டாலர் (ரூ.24 லட்சம்) அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். சட்டத்தை மீறியதாகவும், அணுஆயுத தொழில்நுட்பம், தவறானவர்களின் கையில் சிக்கும் ஆபத்தை உண்டாக்கியதாகவும் சுதர்சன் மீது நீதிபதி குற்றம் சாட்டினார்.
சுதர்சன் ஏற்கனவே 15 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார். எனவே, அவர் இன்னும் 20 மாதங்கள் சிறையில் இருந்தால் போதும் என்றும் நீதிபதி கூறினார்.
Average Rating