குண்டுத் தாக்குதல்களுக்கு மலையக நகரங்களை குறிவைக்கும் புலிகள்
அண்மைக்காலமாக மத்திய மாகாணப் பிரதேசங்களில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த குழுவினர்கள் கைது செய்யப்படுவது வெடிகுண்டுப் பொருட்கள் , ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது மற்றும் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்படுதல் மற்றும் புலிகள் இயக்க சந்தேக நபர்களின் நடமாட்டங்கள் போன்ற சம்பவங்களின் அடிப்படையில் பார்க்கும் போது புலிகள் இயக்கம் அதன் பயங்கரவாதத் தாக்குதல்களை மத்தியமாகாணத்தின் பிரதான நகரப்பகுதிகளிலிருந்தும் நடத்துவதற்குத் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. இவ்வாறு மத்தியமாகாணத்தில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளின் தொடர்ச்சியாக கடந்த 11 ஆம் திகதி புதன்கிழமை நுவரெலியா பிரதேசத்தில் வெலிமட வீதியை அண்டிய மாகஸ்தோட்டவத்தைப் பகுதியில் அதிசக்தி வாய்ந்த ரி.என்.ரி.மற்றும் சீ 4 வகைவெடி குண்டுப் பொருட்களும் ஆயுதங்களும் பெருந்தொகையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் மத்திய மலையகத்தைச் சேர்ந்த கேந்திரப்பகுதி ஒன்றில் பெரும் அழிவை ஏற்படுத்தும் பாரிய குண்டுத்தாக்குதல் மற்றும் சூட்டுத் தாக்குதல்களை மேற்கொள்ளும் நோக்கத்துடனேயே இவ்வாறு இவற்றை மத்திய மாகாணப் பகுதிக்கு எடுத்து வந்துள்ளதாகவும் பயங்கரவாதத் தடுப்பு புலனாய்வுப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட குறித்த வெடிகுண்டுப் பொருட்கள் பற்றித் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களில் இவ்வாறு 316 கிலோகிராம் நிறையான வெடிகுண்டு இரசாயனப் பொருட்கள் குறித்த மாகஸ் தோட்டவத்தைப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் அவற்றை புலனாய்வு அதிகாரிகள் சோதனையிட்டதில் அவற்றில் 300 கிலோ நிறையான ரி.என்.ரி.வகை அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டு இரசாயனங்கள் எனவும் மீதி 16 கிலோவும் சி.4 வகை வெடிகுண்டு இரசாயனங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்துடன் ரி.56 வகைத் துப்பாக்கிகளும் துப்பாக்கிக் குண்டுகளும் மற்றும் வேறுவகையான துப்பாக்கிகளும் குறித்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு பெருந்தொகையில் பெரும் அழிவு சக்தி வாய்ந்த வெடிகுண்டுப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு உதவிய தகவல்களை புலனாய்வுப் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கச் சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணைகளிலிருந்தே பெற்றுக் கொண்டுள்ளனர். அண்மையில், கொழும்பில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொள்வதற்காக மத்திய மலையகப் பகுதியிலிருந்து தற்கொலைக் குண்டுக் கவசங்களை கொழும்புக்குக் கடத்த முயன்ற இரண்டு புலிகள் இயக்கச் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்து தற்கொலைக் கவசங்களையும் கைப்பற்றியிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நகுலன் எனப்படும் மதகுரு ஒருவரும் மற்றும் துரைசாமி முரளிதரன் எனப்படும் நபருமாவர். தொடர்ந்து இவர்களிடம் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் மேற்படி வெடிகுண்டுப் பொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் ஆயுததாரிகளால் மாகஸ்தோட்டவத்தையில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது பற்றிய தகவல்களைக் கூறியுள்ளனர்.
உடனடியாகச் செயற்பட்ட புலனாய்வுப் பிரிவுப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த நிலையத்தைச் சுற்றிவளைத்து மேற்படி பொருட்களை மீட்டுள்ளனர் .
மேற்படி கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தினர் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து மேலும் தெரியவந்துள்ள தகவல்களுக்கேற்ப கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுப் பொருட்களை கொழும்பில் முக்கியமான பொருளாதார மையம் ஒன்றைத் தாக்கி அழிக்கும் நோக்கத்துடனேயே அங்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில், மேற்படி பெருந்தொகை வெடிகுண்டுப் பொருட்களையும் குண்டுத் தாக்குதலுக்காக வாகனம் ஒன்றில் பொருத்துவதற்கும் அந்த வாகனத்தை கொழும்புக்கு எடுத்துச் செல்வதற்கும் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பது பற்றிய தகவல்கள் விசாரணைகளிலிருந்து பெறப்பட்டுள்ளன. இவ்வாறு இந்த வெடிகுண்டுப் பொருட்களையும் துப்பாக்கிகள், ஆயுதங்களையும் கடந்த 11 ஆம் திகதி கொழும்புக்கு வாகனத்தில் கொண்டு செல்ல பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனர் என பயங்கரவாதத் தடுப்பு பிரிவு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேற்படி கைது செய்யப்பட்ட மதகுரு மற்றும் நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது பெறப்பட்ட தகவல்களைக் கொண்டே முன்னரும் நுவரெலியா கந்தப்பளைப் பகுதியில் புலிகள் இயக்கத்தினரால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை வெடிகுண்டுப் பொருட்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
கொழும்பு நோக்கிய ஏனைய போக்குவரத்துப் பாதைகளிலும் பிரதேசங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டும் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுமிருப்பதால் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் கொழும்பில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக வெடிகுண்டுப் பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை பெரும்பாலும் மத்திய மாகாணப் பிரதேசங்கள் ஊடாகவே கொண்டு வருவதாக பயங்கரவாத புலனாய்வுத் தடுப்புப் பிரிவினரும் ஏனைய பாதுகாப்புப் பிரிவினரும் தெரிவிக்கின்றனர். அத்துடன், தாக்குதல்களுக்கான பொருட்களை ஏனைய பிரதேசங்களில் பதுக்கி வைத்திருப்பதிலும் பார்க்க நுவரெலியா போன்ற மத்திய மாகாண நகரங்களை அண்டிய பகுதிகளிலேயே புலிகள் இயக்கத்தினர் பதுக்கி வைப்பதாகப் பாதுகாப்புத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating