நாய் கடித்ததால் அவதிப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டி
“பட்ட காலிலே படும்” என்று தமிழில் ஒரு முதுமொழி உண்டு. “துன்பங்கள் துரத்திக் கொண்டு வரும் தனியாக வருவதில்லை” என்றும் ஒரு பழமொழி சொல்லப்படுவதுண்டு. இந்த பழமொழிகளுக்கு ஏற்ப தொடர்ந்து துயரமான அனுபவத்தை நடிகை ஷில்பா ஷெட்டி சமீபத்தில் அனுபவித்து மிகவும் வேதனைப்பட்டு இருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் அவர் துபாய்க்கு சென்று இருந்தார். அப்போது அங்கு அவருக்கு நெஞ்சு எரிச்சலும், இருமலும், ஜலதோஷமும் கடுமையாக வாட்டி வதைத்தன. இதனால் பெரும் சிரமத்துக்கு உள்ளானார். “என் வாழ்க்கையில் மிக மோசமான 4 நாட்கள் அவை. துபாயில் நான் பட்ட அவஸ்தையை சொல்லி மாளாது. அந்த அளவுக்கு நான் பெரும் சிரமத்துக்கு உள்ளானேன்” என்று அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். இதற்கு மேல், அவர் நாய் கடித்து அதனால் அவதிப்பட்ட அனுபவத்தையும் மனம் திறந்து சொல்லி உள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:- “எல்லாவற்றையும் விட மோசமான அனுபவம் கடந்த வாரம் நான் திருப்பதி சென்றிருந்த போது ஏற்பட்டதுதான். திருப்பதியில் என் தோழியின் மாளிகையில் தங்கி இருந்தேன். அங்கு அவரது செல்ல நாய் என்னை கடித்து விட்டது.
மருந்து மாத்திரைகள்
நல்ல வேளையாக அது வீட்டு நாய் என்பதால் பயம் ஒன்றும் இல்லை என்று எனது டாக்டர் கூறி என்னை ஆறுதல் படுத்தினார். வெறி நாய்கடி ஊசி போட வேண்டியது இல்லை. நோய் தடுப்பு (ஆன்ட்டி பயாட்டிக்) மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் போதும் என்று அவர் கூறியதால் மாத்திரைகள் மட்டும் சாப்பிட்டு குணமானேன்.
அந்த நாய் என்னை மோசமாக, கடுமையாக ஒன்றும் கடிக்க வில்லை. அது ஒரு ஆண் நாய். அதன் நகங்கள் கொஞ்சம் அதிகமாகவே என் கால்களைப் பதம்பார்த்து விட்டிருந்தன.
தொடர்ந்த துயரம்
நாய்க்கடிக்கும், நெஞ்சு எரிச்சலுக்கும் 2 விதமான நோய் எதிர்ப்பு மருந்து-மாத்திரைகள் சாப்பிட்டது எனக்கு கொஞ்சம் அதிகமாகவே துன்பத்தை உண்டாக்கி விட்டன. வீரியமான மாத்திரைகள் சாப்பிட்டதன் காரணமாக எனது வயிற்றில் கோளாறு ஏற்பட்டது. இதனால் நான் மிகவும் பலவீனப்பட்டேன்.
இதனால் துபாயில் இருந்து நான் இந்தியா திரும்பிய போது, விமான நிலையத்தில் நடக்க முடியாமல், சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டேன்.
தயிர் சாதம் மட்டும்
என் வயிற்றை சரிக்கட்ட, கடந்த சில நாட்களாக நான் தயிர் சாதம் மட்டும் சாப்பிட்டு வருகிறேன். கடந்த வாரம் சரியாக சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டேன். சாப்பாட்டை தொட்டாலே ஒரு வித வெறுப்பு வந்து தூக்கி எறிய வேண்டிய உணர்வு உண்டானது.
சீக்கிரம் எனக்கு குணமாக வில்லை என்றால் `எண்டாஸ்கோபி’ செய்ய வேண்டும் என்று எனது டாக்டர் கூறினார். நல்ல வேளையாக சரியாகி விட்டது. ஆனாலும் தொடர்ந்து வந்த இந்த துயரத்தால் எனது எடையில் 2 கிலோ குறைந்து விட்டது. இப்போது நன்றாக இருக்கிறேன்.” இவ்வாறு நடிகை ஷில்பா ஷெட்டி வேதனையுடன் தனது பேட்டியில் கூறினார்.
Average Rating