குஜராத் இறுதி சுற்று: பா.ஜ.கவுக்கு காங்கிரஸ் கொடுத்த குஜராத் கௌரவம்..!! (கட்டுரை)

Read Time:12 Minute, 47 Second

அனல் பறக்கும் பிரசாரத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், இரு கட்டங்களாக நடைபெறும் தேர்தல், இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்கிறது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தால், 22 ஆண்டு கால பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு, குஜராத்தில் மிகப்பெரிய சவாலாக அமைந்து விட்டது. தேர்தல் கணிப்புகள் காங்கிரஸுக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ‘குரல்வளையைப் பிடிக்கும்’ அளவுக்கு சரிக்குச்சமானமான போட்டி என்றாலும், பா.ஜ.க தரப்பில், பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று விடலாம் என்றே இன்னும் கருதப்படுகிறது.

“நாங்கள் நல்லாட்சி தந்திருக்கிறோம். எங்களுக்கு எதிரான மனநிலை குஜராத் வாக்காளர்களிடத்தில் இல்லை” என்று குஜராத், பா.ஜ.க முதலமைச்சர் ரூபவாகினி பேட்டியளித்தாலும், குஜராத் பா.ஜ.கவினர் மனத்துக்குள் ‘தேர்தல் வெற்றி’ என்பது மனப் போராட்டமாகவே இருக்கிறது.

டிசெம்பர் 18 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் வெளிவர வேண்டிய கட்டத்தில் இருக்கும் குஜராத் தேர்தல் பிரசாரத்துக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில், இரு உணர்ச்சிபூர்வமான முழக்கங்களை பா.ஜ.கவுக்குக் கொடுக்கப்பட்டு விட்டது என்றே தெரிகிறது.

அயோத்தி, இராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இந்த வழக்கை 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு விசாரிக்கலாம். இப்போது விசாரிப்பது பா.ஜ.கவுக்குத் தேர்தல் ஆதாயத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்” என்று வாதிட்டார்.

உச்சநீதிமன்றம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், இதை ஒரு பிரசார ஆயுதமாகக் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க கையில் கொடுத்து விட்டது. அதை, முன் வைத்து பிரதமர் நரேந்திரமோடியும் “அயோத்தியில் கோவில் கட்டுவதற்கும் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்” என்று கேள்வி எழுப்பியதோடு மட்டுமின்றி, “இராமர் கோவில் பிரச்சினையை மேலும் இழுத்தடிக்க, காங்கிரஸ் கட்சி விரும்புகிறது” என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.

பா.ஜ.க அகில இந்தியத் தலைவர் அமித்ஷாவும் “இராமர் கோயில் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி தன் கருத்தைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். மோடி- அமித்ஷா’ ஆகியோரின் இந்த அதிரடிப் பிரசாரம், கடைசிச் சுற்றில் காங்கிரஸ் கட்சியைத் திக்குமுக்காட வைத்து விட்டது.

இதற்கு முன்பு, குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து, 2002 இல் நடைபெற்ற தேர்தலில், ‘இந்துத்துவாமொடல்’ பிரசாரத்தை முன் வைத்து பா.ஜ.க வெற்றி பெற்றது.
அந்தப் பாணியிலான, இந்துத்துவா பிரசாரத்துக்கான விதையை உச்சநீதிமன்றத்தில் உள்ள அயோத்தி வழக்கு மூலமாக, காங்கிரஸ் கட்சி, பா.ஜ.கவுக்குக் கொடுத்து விட்டது.

“இராமர் கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு அளித்தாலும் காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளும்” என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தாலும் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுவதற்கு முன்பு, பா.ஜ.கவுக்கு ஒரு புதிய தேர்தல் பிரசார யுக்தியை, காங்கிரஸ் கட்சி கொடுத்திருக்க வேண்டியதில்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

மூத்த வழக்கறிஞரான கபில் சிபலை, காங்கிரஸ் கட்சியால் முறைத்துக் கொள்ள இயலாமல், இராமர் கோவில் பிரச்சினையிலும் தீர்மானமான கருத்துச் சொல்ல முடியாமல் ஒரு திடீர் தேக்க நிலைமை காங்கிரஸுக்கு ஏற்பட்டு விட்டது.

இதைச் சமாளித்து முடிப்பதற்குள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மணி சங்கர் அய்யர், ‘பிரதமர் மீது தொடுத்த விமர்சனம்’ தரம் தாழ்ந்தது என்ற குற்றச்சாட்டு தீப்பொறி போல் உருவாகி விட்டது.

“மண்ணின் மைந்தரான பிரதமரை விமர்சித்ததன் மூலம், குஜராத்தின் கௌரவத்தை அவமதித்து விட்டார் மணி சங்கர் அய்யர்” என்று ஒரு புறம் பிரசாரம் சூடுபிடிக்க, இன்னொரு புறம், ‘இந்திரா காந்தியே குஜராத்தை அவமதித்தார்’ என்று பிரதமர் நரேந்திரமோடி தாக்குதலைத் தொடுத்துள்ளார்.

2002 தேர்தலுக்குப் பிறகு, ‘குஜராத் கௌரவம்’ என்ற பிரசாரத்தை, இந்த முறை பா.ஜ.க பயன்படுத்தாமல் இருந்தது. “மாநிலத்தின் வளர்ச்சிக்கு நான் பொறுப்பு” என்று பிரதமரே உத்தரவாதம் அளித்தும், காங்கிரஸை விமர்சித்து மட்டுமே பிரசாரம் செய்து கொண்டிருந்த பிரதமர் மோடி, குஜராத் கௌரவத்தைக் கையிலெடுத்துள்ளார்.

மொத்தத்தில் பா.ஜ.க எதிர்பார்த்த ‘இந்துத்துவா’, ‘குஜராத் கௌரவம்’ என்ற இரு பிரசார யுக்திகளும் புதிய பிரசார ஆயுதமாக, மீண்டும் இந்த 2017 குஜராத் தேர்தலில் களமிறக்கியிருப்பது, காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு சிக்கலை தோற்றுவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

குஜராத் மக்களிடத்தில், சரிந்து இருந்த காங்கிரஸ் செல்வாக்கு உயர்ந்து இருந்தது. உயர்ந்து இருந்த பா.ஜ.கவின் செல்வாக்கு, சரிந்து கொண்டிருந்தது. ஆனால், காங்கிரஸின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் இன்னொரு மூத்த தலைவர் மணி சங்கர் அய்யரும் செய்த ‘புண்ணியம்’, பா.ஜ.கவுக்குள் கள நிலைவரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம், காங்கிரஸ் கட்சிக்கே வந்து விட்டது.

அதனால்தான், கபில் சிபலின் கருத்திலிருந்து காங்கிரஸ் விலகி கொண்டது. “மணி சங்கர் அய்யரின் கருத்து தவறு. தனிப்பட்ட முறையில் பிரதமரை விமர்சனம் செய்ததற்கு, அவர் பிரதமரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று ராகுல் காந்தி விரும்பினார். மணி சங்கர் அய்யர் வருத்தம் தெரிவித்த பிறகும், அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி. தேர்தல் முடிவுகளில் மணி சங்கர் அய்யரின் விமர்சனம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் கட்சி, தீர்மானமாக நம்புகிறது என்பதையே இது எதிரொலிக்கிறது.

“குஜராத் மொடல் தோல்வியடைந்து விட்டது”, “குஜராத் மாநிலத்தில் சமுதாயத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ள ஒரு சதவீத மக்கள்தான் 22 ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியில் பயனடைந்துள்ளார்கள்”, “விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள் என்று அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்” என்றெல்லாம் தாக்குதலைத் தொடுத்து ராகுல் காந்தி ஒரு நூதன பிரசாரத்தைத் தொடங்கினார். அதுதான் ‘22 கேள்விகள் அடங்கிய பிரசாரம்’.

இது ராகுல் காந்தியின் புதிய யுக்தி என்று சொல்ல முடியாது. ஏற்கெனவே போபர்ஸ் ஊழல் வெடித்த போது, மூத்த வழக்கறிஞரான ராம்ஜேத்மலானி, அன்று பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கு தினமும் ஐந்து கேள்விகளை எழுப்பி, காங்கிரஸைத் திக்கு முக்காட வைத்தார்.

ஆகவே, ராகுல் காந்தியின் 22 கேள்வி பிரசாரம், ஏற்கெனவே ராம்ஜேத்மலானி கடைப்பிடித்த பிரசார யுக்திதான். ராகுல் காந்தியின் இந்தப் பிரசாரம், குஜராத் மக்களிடம் எடுபட்டது. பா.ஜ.கவும் இந்தப் பிரசாரத்துக்குப் பதில் சொல்ல முடியாமல்த் திணறியது. ஆனால், அந்த ராகுல் பிரசாரத்தை இப்போது பா.ஜ.கவுக்கு கிடைத்துள்ள ‘இந்துத்துவா’, ‘குஜராத் கௌரவம்’ என்ற யுக்தி திசை திருப்பி விட்டது என்பதே மணி சங்கர் அய்யர் மீதான காங்கிரஸின் நடவடிக்கையில் தெரிய வந்திருக்கிறது.

குஜராத் மக்கள் மத்தியில் இரு கட்சிகளுக்கும் உள்ள ஆதரவைப் பொறுத்தமட்டில், இதுவரை வெளிவந்துள்ள தேர்தல் கணிப்பு முடிவுகள், காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கெனவே இருந்த செல்வாக்கை விட, அதிகமாகவே காட்டியிருக்கின்றன.

ஆளுங்கட்சியாக இருப்பதால், பா.ஜ.க மிக நெருக்கமான சதவீதத்தில் காங்கிரஸ் கட்சியை மிஞ்சுவதாகத் தேர்தல் கணிப்பு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தேர்தல் கணிப்புகள் எடுப்பதில் கைதேர்ந்தவரான யோகேந்திரயாதவ், “பா.ஜ.க, குஜராத்தில் படு தோல்வியடையும்” என்று ஒரு தேர்தல் கணிப்பு முடிவை மேற்கோள் காட்டிக் கருத்து வெளியிட்டுள்ளார்.

இப்படியொரு சாதகமான சூழ்நிலையில் சென்று கொண்டிருந்த காங்கிரஸின் குஜராத் தேர்தல் பயணம், இப்போது ‘குஜராத் கௌரவத்துக்குள்’ வந்து திணறித் தேங்கி நிற்கிறது.

கடைசிச் சுற்றில் கோட்டை விட்ட காங்கிரஸின் யுக்தியை, பா.ஜ.க சாதகமாக்கிக் கொள்ளும் வகையில், பிரதமர் நரேந்திரமோடியின் பிரசாரம் மிகக் கடுமையாக இருக்கிறது. குஜராத் தேர்தலில் இப்போது காங்கிரஸ் கட்சி ‘கேட்ச் 22’ சூழலில் மாட்டிக் கொண்டு தவிக்கிறது. ‘வெற்றி’ என்பது பா.ஜ.கவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் ‘பூவா, தலையா’ என்று போட்டுப் பார்க்கும் நிலை, இறுதிச் சுற்றுக்கு வந்து விட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நிவின் பாலி..!!
Next post தமிழ் சினிமா சிறப்பாக வளர்ந்து இருக்கிறது: பிரியங்கா..!!