வரப்போவது பெண் வேட்பாளர்களா, ‘டம்மிகளா’?..!! (கட்டுரை)
மாகாண சபைகளிலும் உள்ளூராட்சி மன்றங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காகவும் உறுதி செய்வதற்காகவும் அண்மையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் முற்போக்கானவையாகும். இருந்தபோதிலும், அவற்றை நிறைவேற்றுவது, இந்நாட்டு அரசியல் கட்சிகளுக்குப் பெரும் பிரச்சினையாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
கட்சிகள் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும், எந்த இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக இருந்தாலும், அவற்றுக்குப் பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது பெரும் சவாலாகவே இருக்கின்றது.
எனினும், இந்தப் பிரச்சினை சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்கே மிகவும் சவாலானதாக இருக்கிறது. அவற்றிலும் குறிப்பாக, முஸ்லிம் கட்சிகளுக்கும் அடுத்ததாக மலையகக் கட்சிகளுக்கும் கலாசார காரணங்களினால், இச்சட்டங்கள் நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு, ஆரம்பத்தில் கடினமாக இருக்கும்.
பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காகவும் உறுதி செய்வதற்காகவும் இரண்டு சட்டங்கள், அண்மையில் நிறைவேற்றப்பட்டன. மாகாண சபைகள் தேர்தல்கள் (திருத்த) சட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (திருத்த) சட்டம் ஆகியன அந்த இரண்டு சட்டங்களுமாகும்.
அவற்றின் பிரகாரம், சகல அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தத்தமது வேட்பு மனுப் பத்திரங்களில் உள்ளடக்கப்படும் வேட்பாளர்களில், குறைந்த பட்சம் 25 சதவீதம் பெண்களைக் கொண்டிருக்க வேண்டும்.
சாதாரணமாக, எந்தவொரு கட்சியும் எந்தவொரு தேர்தலின் போதும் மிகச் சில பெண்களையே வேட்பாளர்களாக நியமிக்கின்றன. முஸ்லிம் கட்சிகள் பெண் வேட்பாளர்களைத் தேர்தல்களில் நிறுத்துவதே இல்லை என்று கூறுமளவுக்கு, அக்கட்சிகளின் வேட்பாளர்களில் பெண்கள் குறைவாகவே இருப்பர்.
அக்கட்சிகளின் தலைவர்கள், பெண் வேட்பாளர்களை நிறுத்த விரும்பாமைதான் இதற்குக் காரணம் என்று கூற முடியாது. பிரதான காரணம், அந்தத் தேவை இருந்தாலும், பெண் வேட்பாளர்களைத் தேடிக் கொள்ள முடியாமையே ஆகும்.
அந்தவகையில், சகல அரசியல் கட்சிகளும் பெரும் சவாலை எதிர்நோக்கி இருப்பதை விளங்கிக் கொள்ளலாம். இந்தப் பிரச்சினையால்,வேட்புமனுப் பத்திரங்களைத் தயாரிக்கும்போது, அரசியல் கட்சிகள் பல தந்திரங்களைக் கையாண்டு சட்டத்தையும் சட்டத்தின் நோக்கத்தையும் ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாகும்.
ஆயினும், பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காகவும் உறுதி செய்வதற்காகவும் அண்மையில் இரண்டு சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட போது, எந்தவோர் அரசியல் கட்சிப் பிரதிநிதியும் அவற்றை எதிர்க்கவில்லை.
மாகாண சபைகள் தேர்தல்கள் (திருத்த) சட்டத்தினால் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திப் போடப்படுவதன் காரணமாக, கூட்டு எதிரணி உள்ளிட்ட சில கட்சிகள் அதை எதிர்த்த போதிலும், எவரும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதை எதிர்க்கவில்லை.
சிலவேளை, தம்மை மற்றவர்கள் பழைமைவாதிகள் என்றோ, அடிப்படைவாதிகள் என்றோ கருதலாம் என நினைத்துச் சிலர், இச்சட்டங்களை எதிர்க்காதிருந்திருக்கலாம். உண்மையிலேயே, இச்சட்டங்கள் முற்போக்கானவை எனப் பொதுவாகக் கருதப்படுவதனால், அவற்றைச் சிலர் எதிர்க்காதிருந்திருக்கலாம்.
ஆயினும், அவை நிறைவேற்றப்படும் போதும், அவற்றை அமுலாக்கும்போதும் பெரும் சவாலாகிவிடும் என்பதும், சில பகுதிகளில் இது சாத்திமேயில்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
இந்தப் பிரச்சினை அவ்வாறு சவாலாகிவிடுவதற்குப் பெண்கள், ஆண்களை விட, சமூக ரீதியில் பின்நிற்பதுதான் ஒரே காரணம் எனக் கூற முடியாது. பெண்களுக்குள்ளேயே அவ்வாறானதொரு நிலைமை இருப்பது உண்மையாயினும், பெண்கள் அரசியலில் பிரவேசிப்பதைத் தடுக்கும் சமூக, பொருளாதார, சமய மற்றும் கலாசார நம்பிக்கைகளும் முறைமைகளும் இருப்பது, இந்த நிலைமைக்குக் காரணங்களாகும்.
இந்நாட்டுப் பொருளாதாரத்துக்குப் பெண்கள் வழங்கும் பங்களிப்பைக் கவனத்தில் கொள்ளும்போது, பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பொருத்தமற்ற அளவில், குறைவாக இருப்பது தெளிவாகிறது.
இந்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணியைச் சம்பாதிப்பவர்களில் பெண்களே முதலிடத்தில் இருப்பதாகச் ‘சட்டம் மற்றும் சமூகம் பற்றிய நிறுவனம்’ தனது அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு, வெளிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில், பணிப் பெண்களாகக் கடமையாற்றுவோர் சம்பாதித்த வெளிநாட்டுச் செலாவணியின் தொகை 600 கோடி டொலர் என அந்நிறுவனம் கூறுகிறது.
இது இலங்கை நாணயத்தின் பெறுமதியின்படி, சுமார் 90,000 கோடி ரூபாய்கும் அதிகமாகும். ஆடை உற்பத்தி, தேயிலை, இறப்பர் மற்றும் இறப்பரினாலான பொருட்கள் உற்பத்தி ஆகியன அடுத்த படியான வெளிநாட்டுச் செலாவணியை தேடிக் கொடுக்கும் தொழில்களாகும். இந்த உற்பத்தித் துறைகளிலும், பிரதானமாகவும் கூடுதலாகவும் பெண்களே கடமையாற்றுகிறார்கள்.
இந்நாட்டின் சனத்தொகையுடன், பெண்களின் அரசியல் பங்களிப்பை ஒப்பிட்டுப் பார்க்கும் போதும், அண்மையில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் தேர்தல்கள் (திருத்த) சட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (திருத்த) சட்டம் ஆகியவற்றினால், பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி முற்போக்கானது என்றே கருதப்படுகிறது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 52 சதவீதமானோர் பெண்களாவர்.
உலகில் முதலாவது பெண் பிரதமரைத் தோற்றுவித்த நாடும் இலங்கையே. சிறிமாவோ பண்டாரநாயக்கவே 1960 ஆம் ஆண்டில், உலகில் முதலாவது பெண் பிரதமரானார். ஆயினும், இலங்கையில் நாடாளுமன்றம் உட்பட, எந்தவொரு மக்கள் பிரதிநிதிகள் சபையிலும் பெண்களின் விகிதாசாரம் 6.5க்கு மேல் அதிகரிக்கவில்லை.
விகிதாசாரத்திலும் எண்ணிக்கையிலும் மிகவும் அதிகமான பெண் பிரதிநிதித்துவம் இதுவரை நாடாளுமன்றத்தில் மட்டுமே காணப்பட்டுள்ளது. மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அவ்வளவு பலம்வாய்ந்த ஆளுமையுள்ளவர்கள் அவசியமாக இல்லாவிட்டாலும், அவற்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே இருந்து வந்துள்ளது. இதுவரை, நாடாளுமன்றத்துக்குச் சென்ற பெண் உறுப்பினர்களோ அல்லது ஆண் உறுப்பினர்களோ பலமான ஆளுமையுள்ளவர்கள் என்பது அதன் அர்த்தமல்ல.
விகிதாசார ரீதியாக, நாடாளுமன்றத்தில் ஆகக் கூடுதலான பெண் பிரதிநிதித்துவம், 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின் தெரிவாகிய, தேசிய அரச பேரவையிலேயே இருந்துள்ளது.
1972 ஆம் ஆண்டு, நிறைவேற்றப்பட்ட முதலாவது குடியரசு அரசமைப்பின் படி, நாடாளுமன்றம், தேசிய அரச பேரவையாக அழைக்கப்பட்டது. அதற்கான, முதலாவதும் இறுதியானதுமான தேர்தலே 1977 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்தத் தேர்தலின்போது 11 பெண் உறுப்பினர்கள் தெரிவானார்கள்.
அதைவிடக் கூடுதலான பெண் உறுப்பினர்கள், பின்னர் நடைபெற்ற பல தேர்தல்களின் போது, நாடாளுமன்றத்துக்கு தெரிவாகிய போதும், 1978 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இரண்டாவது குடியரசு அரசமைப்பின்படி, நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை, 168 இல் இருந்து 225 ஆக அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, நாடாளுமன்றத்தில் பெண்களின் விகிதாசாரம் குறைந்துவிட்டது.
இரண்டாவது குடியரசு அரசமைப்பின்படி, முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் 1989 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது 13 பெண் உறுப்பினர்கள் தெரிவானார்கள். ஆயினும் பெண் உறுப்பினர்களின் விகிதாசாரம் 5.7 ஆகக் குறைந்தே காணப்பட்டது. அதையடுத்து 2000 ஆவது ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தவிர்ந்த 2004, 2010 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் போதும் 13 பெண் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்கள்.
பெண்களின் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை, மாகாண சபைகளின் நிலைமை இதைவிட மோசமானதாகும். உள்ளூராட்சி மன்றங்களின் நிலைமை அதையும் விட மோசமானதாகும்.
அந்த நிலையிலேயே அவற்றின் பெண் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதத்துக்கு மேல் அதிகரிப்பதற்காகச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
நோக்கங்கள் எவ்வளவு முற்போக்கானதாக இருந்தாலும், செயற்படுத்துவது எவ்வளவு கஷ்டமானது என்பது அதன் மூலம் தெரிகிறது.
இலங்கைப் பிராந்தியத்தில், பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ‘பப்ரல்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும், ‘சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் அமைப்பு’க் கூறியுள்ளது. இந்த அமைப்பின், நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டி ஆரச்சியை மேற்கோள்காட்டி, சட்டம் மற்றும் சமூகம் பற்றிய நிறுவனம் தனது மேற்படி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
‘பிராந்தியத்தில் இலங்கையிலேயே மிகவும் குறைந்த பெண் பிரதிநிதித்துவம் காணப்படுகிறது. மாகாண மட்டத்தில் அது மூன்று சதவீதத்துக்கும் குறைவாக உள்ளதோடு, தேசிய மட்டத்தில் சுமார் ஐந்து சதவீதமாகும். ஜனநாயகத்தைப் பொறுத்தவரை, இன்னமும் புதிய நாடான ஆப்கானிஸ்தானிலும் சுமார் 28- 30 சதவீதப் பெண் பிரதிநிதித்துவம் காணப்படுகிறது. இந்தியாவில் தேசிய மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அவ்வளவாக இல்லாவிட்டாலும், மாநில மட்டத்தில் ஆர்வத்துடனான பங்களிப்பைக் காண முடிகிறது’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாகாண சபைகளிலும் உள்ளூராட்சி மன்றங்களிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காகவும் உறுதி செய்வதற்காகவும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், முழு நாட்டுக்கும் சட்டமியற்றும் சபையான நாடாளுமன்றத்தில், பெண் பிரதிநிதித்துவம் தொடர்பாகச் சட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பாக இவ்வாறான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்தபோதிலும் அவற்றை நடைமுறைப்படுத்த இன்னமும் நாட்டுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
பெப்ரவரி மாதம் நடைபெறுவதாகக் கூறப்படும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போதே, அவற்றில் ஒரு சட்டம் பரீட்சித்துப் பார்க்கப்படப் போகிறது.
நிறைவேற்றப்பட்டு இருக்கும் இந்த இரண்டு சட்டங்களும், மிகவும் சிக்கலானவையாகவே தென்படுகின்றன. எனவே, தேர்தல்கள் ஆணைக்குழுவும் தமது அதிகாரிகளுக்கு, இப்போது அதைப் பற்றிய விளக்கத்தையும் பயிற்சியையும் வழங்கி வருகிறது. ஒரு முறையாவது, அச்சட்டங்களில் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னரே மக்கள் அவற்றைப் பற்றிய தெளிவைப் பெறுவர்.
இச்சட்டங்களின் பிரகாரம், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் முன்னர் போலல்லாது, இரண்டு வேட்பு மனுப் பத்திரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இனிமேல், மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல்கள், தொகுதிவாரி மற்றும் விகிதாசாரத் தேர்தல் முறைகளின் கலப்பு முறையொன்றின் கீழ் நடைபெறுவதே அதற்குக் காரணமாகும்.
முதலாவது வேட்பு மனுப் பத்திரத்தில், தொகுதி வாரியாகப் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் உள்ளடக்கப்படும். இரண்டாவது வேட்பு மனுப் பத்திரத்தில், ஒவ்வொரு கட்சியும் விகிதாசார ரீதியாகப் போட்டியிட்டு இருந்தால், பெறும் ஆசனங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக நியமிக்கப்படப் போகும் வேட்பாளர்களின் பெயர்கள் உள்ளடக்கப்படும்.
முதலாவது, வேட்புமனுப் பத்திரத்தில் உள்ள பெயர்களில், 10 சதவீதம் பெண்களின் பெயர்களாக இருப்பது கட்டாயமாகும். இரண்டாவது பட்டியலில் உள்ள பெயர்களில் 50 சதவீதம் பெண்களின் பெயர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் வேட்பு மனுப் பத்திரங்கள் நிராகரிக்கப்படும்.
இந்தப் பட்டியல்களைத் தயாரிப்பது தொடர்பாகப் பெண் வேட்பாளர்களைத் தேடிக் கொள்வதில், மிகவும் கஷ்டத்தை எதிர்நோக்கக் கூடும் என ஊகிக்கப்படும் முஸ்லிம் கட்சிகள் சிலவற்றின் தலைவர்களிடம் நாம் வினவினோம். “தொகுதிவாரிப் பட்டியலுக்கு, பெண்களைத் தேடுவதே மிகவும் கடினமாகும்” என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
“ஏனெனில், இந்த வேட்பாளர்கள் வெற்றி பெறவே வேண்டும் என்ற நோக்கில்தான் ஒவ்வொரு கட்சியும் அவர்களைத் தேர்தலில் நிறுத்த வேண்டும். எனவே, அவர்கள் வெற்றி பெறும் ஆற்றலும், தெரிவு செய்யப்பட்டால் மக்கள் சம்பந்தப்பட்ட சபையின் உறுப்பினராகச் செயற்படும் ஆற்றலும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஏற்கெனவே பல்வேறு மக்கள் பிரதிநிதித்துவ சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட ஆண், பெண் உறுப்பினர்கள், திறமையானவர்கள் என்று இதனால் அர்த்தமாகாது.
தற்போதைய விகிதாசாரத் தேர்தல் முறையின்படி நிறுத்தப்படும் குறிப்பிட்ட ஒரு வேட்பாளர், அவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், முக்கிய தலைவர்களாக இல்லாவிட்டால் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் எந்தவொரு கட்சிக்கும் இல்லை.
எண்ணிக்கையில் கூடுதலான வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்றே சகல கட்சிகளும் எதிர்பார்க்கும். எனவே, ஒரு கட்சியின் வேட்பாளர்களுக்கு வேண்டுமென்றால், தமது கட்சியைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு வேட்பாளரைப் புறக்கணித்து, அவரைத் தோல்வியுறச் செய்யலாம்.
விருப்பு வாக்குகளுக்கான போட்டியினால் இது பரவலாக நடைபெறுகிறது. கடந்த பொதுத் தேர்தலின்போது, கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரோசி சேனாநாயக்கவுக்கு, அதுவே நடந்தது என்று கூறப்படுகிறது.
ஆனால், தொகுதி வாரித் தேர்தலின் போது, குறிப்பிட்ட தொகுதியொன்றுக்கு போட்டியிடும் ஒரு கட்சியின் வேட்பாளர் தோல்வியடைந்தால், கட்சிக்கும் ஒரு தொகுதி குறைந்துவிடும். அந்தத் தொகுதியில் பெறப்படும் குறைந்த வாக்குகளின் காரணமாக, இரண்டாவது பட்டியல் மூலம், ஓர் உறுப்பினரைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் இல்லாமல் போகலாம்.
இலங்கையின் வரலாற்றில் இதுவரை, இரண்டு முஸ்லிம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தெரிவாகியுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியின் அன்ஜான் உம்மாவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவி பேரியல் அஷ்ரபுமே அவர்களாவர்.
மாகாண சபைகளில் அன்ஜான் உம்மா மட்டுமே இருந்தார். உள்ளூராட்சி மன்றங்களில் 1952 ஆம் ஆண்டு, கொழும்பு பிரதி மேயராகவிருந்த ஆயிஷா ரவூபும் காத்தான்குடி பிரதேச சபையில் சல்மா ஹம்ஸாவும் மட்டுமே இருந்துள்ளனர்.
மலையகக் கட்சிகளின் மூலம், இதுவரை ஒரே ஒரு பெண் மட்டுமே மக்கள் பிரதிநிதிகள் சபைகளில் அங்கம் வகித்துள்ளார். மத்திய மாகாண சபைக்குத் தெரிவான அனுஷா சிவராஜா அந்த உறுப்பினராவார். வடக்கு கிழக்கிலிருந்தும் ரங்கநாயகி பத்மநாதன், விஜயகலா மகேஷ்வரன், அனந்தி சசிதரன் போன்ற ஒரு சிலர் மட்டுமே மக்கள் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர்.
இது தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் எதிர்நோக்கப் போகும் பிரச்சினையின் அளவைக் கோடிட்டுக் காட்டுகிறது. சிங்களப் பெண்களும் மிகக் குறைவாகவே இதுவரை மக்கள் பிரதிநிதிகளாக இருந்தபோதிலும், அவர்களுக்கு அதற்கான கலாசார ரீதியான தடைகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன.
“முஸ்லிம்களுக்கே இந்த விடயத்தில், கலாசார பிரச்சினைகள் கூடுதலான தடையாக அமையும். அதற்கு மேலதிகமாக, இலங்கையின் அரசியல் கலாசாரத்துக்கும் அவர்கள் தாக்குப் பிடிப்பது கஷ்டமாக இருக்கும்” என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம். அமீன் கூறுகிறார்.
எனினும், “நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சி, காத்தான்குடி பிரதேச சபைக்குப் பலமானதோர் மகளிர் அணியைப் போட்டியில் நிறுத்தவுள்ளது” என்று அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மத் கூறுகிறார்.
“நாட்டில் சகல கட்சிகளும் பெயரளவிலான ‘டம்மி’ பெண் வேட்பாளர்களையே நிறுத்தும்” என முஸ்லிம் கூட்டமைப்பின் முக்கியஸ்தரான ஹசன் அலி கூறுகிறார்.
அனேகமாக, அதுவே நடக்கக் கூடியதாகத் தெரிகிறது. இது சம்பந்தப்பட்ட சட்டங்களின் நோக்கத்தையே முறியடிப்பதாக அமையும். ஆனால், சட்டம் தொடர்ந்து இருக்கப் போகிறது. எனவே, காலப் போக்கில், சகல சமூகங்களில் இருந்தும் பலமான பெண் அரசியல்வாதிகள் உருவாகவும் கூடும்.
Average Rating