11 ராணுவ வீரர்கள் பலியான விவகாரம்: அமெரிக்க தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம்
அமெரிக்க விமான தாக்குதலில் 11 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியான விவகாரத்தால், இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. ஆனால் விமான தாக்குதலை அமெரிக்கா நியாயப்படுத்தி உள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவுடன் பாகிஸ்தான் கை கோர்த்தது. அதிலிருந்து இரு நாடுகளுக்கிடையே நல்ல நட்புறவு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம், ஆப்கானிஸ்தான் எல்லையோர பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்தபடி, ஆப்கானிஸ்தானில் ரோந்து சென்று கொண்டிருந்த அமெரிக்க படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த தீவிரவாதிகளை வேட்டையாட அமெரிக்க விமானங்கள் அணிவகுத்துச் சென்றன. மொக்மண்ட் என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவ சோதனை சாவடி அருகே தீவிரவாதிகள் மறைந்து இருந்தனர். அவர்களை குறிவைத்து நடந்த தாக்குதலில், சோதனைச்சாவடியில் இருந்த 11 துணை ராணுவ படையினர் பலியானார்கள். இவர்களில் ஒருவர் அதிகாரி ஆவார். 9 பேர் காயம் அடைந்தனர். 40 ராணுவ வீரர்களை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவம், பாகிஸ்தானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் ïசுப் கிலானி பாராளுமன்றத்தில் பேசுகையில், `இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். நாட்டின் இறையாண்மையையும், கண்ணியத்தையும் கட்டிக் காக்கக்கூடிய நிலையை எடுப்போம்’ என்று கூறினார்.
பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இது கோழைத்தனமான தாக்குதல் என்றார். பாகிஸ்தான்-அமெரிக்க ஒத்துழைப்பின் அடித்தளத்தையே தகர்த்து விட்டதாக அவர் கூறினார். அமெரிக்க தாக்குதலில் 10 பழங்குடியின மக்கள் இறந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தூதரிடம் கண்டிப்பு
இதை தொடர்ந்து நேற்று இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதர் அன்னே பேட்டர்சனை பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் சல்மான் பஷிர் நேரில் வருமாறு அழைத்தார். அதை ஏற்று வெளியுறவு அலுவலகத்துக்கு சென்ற அன்னே பேட்டர்சன்னுக்கு சல்மான் பஷிர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து, அமெரிக்காவும் விட்டுக்கொடுக்காமல் களத்தில் இறங்கி உள்ளது. தாக்குதலை நியாயப்படுத்தி, அமெரிக்க ராணுவ தலைமையகமான `பென்டகன்’-ன் செய்தித்தொடர்பாளர் ஜியோப் மோரல் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
தற்காப்பு நடவடிக்கை
தற்போதைய நிலையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, அமெரிக்க படைகளின் செயல் சட்டப்பூர்வமானதுதான். ஆப்கானிஸ்தான் பகுதியில் செயல்பட்ட அமெரிக்க படைகள் மீது பாகிஸ்தானில் இருந்தபடி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். எனவே, தற்காப்பு நடவடிக்கையாக அவர்கள் மீது விமான தாக்குதல் நடத்த வேண்டியதாகி விட்டது. அங்கு என்ன நடந்தது என்பதை அறிய பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஒத்துழைப்போம். இந்த தாக்குதலால், பாகிஸ்தானுடனான உறவு பாதிக்கப்படாது என்று நம்புகிறோம். ஏனென்றால் தீவிரவாதிகளை ஒழிக்க இந்த உறவு முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, நேற்றுமுன்தினம் இத்தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை வருத்தம் தெரிவித்து இருந்தது. ஆனால் அமெரிக்க தூதருக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்ததால், அமெரிக்காவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளின் உறவில் விரிசல் விழுந்துள்ளது.
Average Rating