கணினியில் அதிக நேரம் பணிபுரிகிறீர்களா?..!!
கணினிமயமாகிவிட்ட உலகில், தற்போது பலரும் கணினியில் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.
கணினி மூலம் துரிதமாகவும் சிறப்பாகவும் பல வேலைகளைச் செய்ய முடிகிறது. அதேநேரத்தில், எந்த ஒன்றுக்கும் பக்கவிளைவு உண்டல்லவா? அப்படி, தொடர்ந்து கணினியை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் பக்கவிளைவு, பார்வைத்திறனில் ஏற்படும் பாதிப்பு. தினமும் அதிகநேரம் கணினியைப் பயன்படுத்தக்கூடிய 85 சதவீதம் பேருக்கு பார்வை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
கணினியால் ஏற்படும் பார்வைத்திறன் பாதிப்புக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ என்று பெயர். கணினி யுகத்தில் மனிதன் சந்திக்குப் பிரச்சினை இது. சரி, இந்த ‘கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ பற்றியும், அந்தப் பாதிப்பைத் தவிர்ப்பது பற்றியும் இப்போது அறிந்துகொள்வோம்…
கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோமின் முதல்நிலை அறிகுறி, கண்களில் வலி ஏற்படுவதாகும். பின்னர், பார்வை மங்குவது, கண்கள் உலர்வது, தலைவலி போன்றவை எட்டிப் பார்க்கும். நமக்கு ஏற்படும் கழுத்துவலிக்கும், முதுகுவலிக்கும், கணினியின் முன் நீண்டநேரம் அமர்ந்து கண்களை பயன்படுத்துவதற்கும் தொடர்பு இருக்கிறது.
கணினிப் பயன்பாடு பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான காரணம், நாம் சாதாரணமாக பார்க்கும்போது அடிக்கடி கண் சிமிட்டுவோம். அது கண்ணின் ஈரத்தன்மையைப் பாதுகாக்கிறது. ஆனால் கணினித் திரையை உற்று நோக்கியபடி இருக்கும்போது கண் சிமிட்டுவது இயல்பாகவே குறைந்துவிடுகிறது.
நாம் சாதாரணமாக ஒரு நிமிடத்துக்கு 16 முறை கண் சிமிட்டுகிறோம் என்றால், கணினியின் முன் அமர்ந்து வேலை செய்யும்போது 5 அல்லது 6 முறையே சிமிட்டுகிறோம். இதனால், கண்கள் உலர்ந்து போதல், கண்களில் அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் பிரச்சினை வராமல் தடுக்க முதலில் கணினித் திரையை சற்று கீழ்நோக்கித் தாழ்வாக வைக்க வேண்டும். கணினித் திரையின் நடுப்பகுதி, நம் கண்களின் நேர் பார்வையில் இருந்து சற்றுக் கீழாக இருக்க வேண்டும். நேருக்கு நேர் கண்களில் படக் கூடாது.
கணினி உள்ள இடங்கள் பொதுவாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். ஏ.சி. அறையில் காற்றில் ஈரப்பதம் குறைவாகவே இருக்கும். இந்நிலையில், கணினியில் வேலை செய்யும்போது கண்களைச் சிமிட்டுவது சில சமயங்களில் சிரமமாகிவிடும். அப்போது சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு இமைகளுக்குள் விழிகளை சுழற்ற வேண்டும்.
கணினித் திரை வெளிப்படுத்தும் ஒளியைக் கட்டுப்படுத்தும் கண்ணாடிகளை கணினியில் வேலை செய்யும்போது அணிய வேண்டும். கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பவர்களும் இதைப் பயன்படுத்த வேண்டும்.
சாதாரணமாக, 40 வயதுக்கு மேல் வெள்ளெழுத்து என்று கூறப்படும் குறைபாடு வரக்கூடும். அவர்கள் அதற்காக அணியும் கண்ணாடி லென்ஸ், கணினித் திரை வெளிப்படுத்தும் ஒளியைக் கட்டுப்படுத்துவதாக அமைய வேண்டும்.
கணினித் திரை தட்டையாக இருப்பது நல்லது. மானிட்டரின் வெண் திரையில் கருப்பு நிற எழுத்து, உருவங்கள் கண் பார்வைக்கு நல்லது. சாதாரணமாக உங்களால் பார்க்க முடியும் எழுத்தை விட 3 மடங்கு பெரிய எழுத்தைத்தான் கணினி திரையில் நீங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும்.
கணினித் திரையின் பிரகாசம் கண்களை உறுத்தும் வகையில் இருக்கக்கூடாது. மானிட்டரில் இருந்து கண்கள் குறைந்தபட்சம் 20 அங்குல தூரம் தாண்டி இருக்க வேண்டும்.
கண் இமைகளை தேவையான அளவுக்கு சிமிட்டாத போது கண்களில் உள்ள தசைகள் இறுக்கம் அடைந்து விடுகின்றன. அதனால் கண்களில் வலி ஏற்பட்டுவிடுகிறது. எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்களுக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக கணினியை விட்டு எழுந்து சிறிதுதூரம் நடந்துவிட்டு வர வேண்டும்.
தலைக்குமேல் இருந்துவரும் ஒளியோ, ஜன்னலில் இருந்துவரும் ஒளியோ உங்கள் கண்களில் நேரடியாகப் படக்கூடாது. அப்படி ஒருவேளை பட்டால் அதை உடனே மறைக்க வேண்டும். உங்களுக்கு தொல்லை ஏற்படுத்தும் மின் விளக்குகளை அணைத்துவிடலாம்.
அவ்வப்போது கணினித் திரையில் இருந்து பார்வையை விலக்கி, சற்றுத் தொலைவில் உள்ள ஒரு பொருளைக் கவனிக்க வேண்டும். முடிந்தால், வெள்ளரித் துண்டுகள், குளிர்ந்த தண்ணீரில் நனைத்த துணியால் கண்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம்.
‘சுவர் இருந்தால்தான் சித்திரம்’ என்பதைப் போல, கண் பார்வைத்திறன் நன்றாக இருந்தால்தான் கணினியில் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற முடியும். கணினியில் பணிபுரியும் அனைவரும் இதை மனதில்கொள்ள வேண்டும்.
Average Rating