பயங்கரவாத அமைப்பை தற்காலிகமாக மட்டுமே தோற்கடிக்க முடியும்

Read Time:8 Minute, 49 Second

பயங்கரவாதத்துக்கும் இனப் பிரச்சினைக்கும் யுத்தம்தான் ஒரே ஒரு தீர்வல்ல என்று கூறுபவர்களை தேசத்துரோகிகள் என்று எதிர்த்தரப்புகள் கூறுகின்றன. அவ்வாறே யுத்தத்தை விரும்புபவர்கள் தேசபக்தியாளர்கள் என்று கருதப்படுகிறார்கள். இவ்வாறான நிலை தெற்கில் மட்டுமன்றி வடக்கிலும் சமூகங்கள் மத்தியில் புலிகள் இயக்கத்தினரால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயுதப் போராட்டத்துக்கு அதாவது யுத்தத்துக்கு எதிராக பேசிவந்த பேசுகின்ற புத்திஜீவிகளை புலிகள் இயக்கத்தினர் கொலை செய்கின்றனர். அவ்வாறே ஊடகவியலாளர்களையும் கொலை செய்துள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் நீண்டகாலமாகவே தெற்கில் சமூகங்களிடையே நடைபெற்றுவந்துள்ளன. யுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை குறிப்பிட்ட சாரார் யுத்தம்தான் தீர்வு என்று கூறி யுத்தத்தின் மூலம் தமது வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள். யுத்தத்திற்கு எதிரானவர்களும் சமாதானமான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்று கூறுபவர்களும் மேற்படி யுத்தத் தரப்பினரால் தேசத்துரோகிகள் என முத்திரை குத்தப்படுகிறார்கள். இவ்வாறான கருத்துகளை சமூகங்களிடையே பரப்புவதற்கு நல்ல சிந்தனைகள் கொண்ட ஊடகவியலாளர்கள் கூட துணை போய் அவர்களுடன் சேர்ந்துகொண்டுள்ளனர். இந்த சமூக, அரசியல் பின்னணியில்தான் இன்று அனைத்துச் சமூகங்களும் பிரச்சினைகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

அண்மைக் காலங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்கு அடிப்படையான காரணமாக உள்ளது என்னவெனில் யுத்த நடவடிக்கைகளிலும் யுத்த தீர்விலும் மட்டும் சமூகங்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகும். புலிகள் இயக்கம் இந்தத் தவறான நம்பிக்கையை கொண்டுள்ளதுபோலவே தெற்கு சமூகங்களும் இந்த தவறைச் செய்கின்றன. இதன் இறுதியான பிரதிபலனாகக் காணக்கூடியதாக உள்ளது என்னவெனில் பிரச்சினைகளுக்கான தீர்வை யுத்தம் மூலமே அடையமுடியும் என யுத்தத்திலீடுபட்டுள்ள இரண்டு தரப்புகளும் உறுதியான நம்பிக்கையை உருவாக்கியுள்ளமையே ஆகும்.

இந்தப் பாதையிலேயே போக வேண்டும் என்று கூறிக்கொண்டு சமூகத்தையும் சம்பந்தப்பட்ட தரப்புகளையும் தூண்டிவிடும் குழுவினரையும் நாம் மறந்துவிடக்கூடாது. இவ்வாறு தெற்குப் பகுதியிலுள்ள குறிப்பிட்ட சமூகங்களும் சில பௌத்த பிக்குகள் குழுவினரும் செயற்படுகிறார்கள் என்பதைக் கூறத்தான் வேண்டும். சமாதானத்திற்கான செய்திகளையும் செயற்பாடுகளையும் கொண்டு செல்வதற்கு இவ்வாறான செயற்பாட்டாளர்கள் அனுமதிப்பதில்லை. இவ்வாறே தீவிர அரசியற் கொள்கைகளைக் கொண்ட கடும்போக்குக் கட்சிகளும் இவ்வாறு சமூகங்களிடையே யுத்த நம்பிக்கையையும் கருத்துகளையும் தூண்டி விடுவதையும் காண முடிகிறது. யுத்தத்தில் நாட்டமுள்ளவர்களும் யுத்தம் மூலம் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுமான மக்களிடையேதான மேற்படி யுத்த நம்பிக்கைகளும் கருத்துகளும் மேற்படி தரப்பினரால் தூண்டப்படுகிறது என்று நிதர்சனமாகக் கூற முடியும்.

அரசாங்கத்திடமிருந்து பல்வேறு சலுகைகளையும் இலாபங்களையும் எதிர்பார்த்திருக்கும் தரப்பினர்களிடையேயும் மேற்படி யுத்தத் தீர்வுக்கான செயற்பாடுகள் நிகழ முடியும். இவ்வாறான மேற்படி சந்தர்ப்பங்கள் எல்லாம் சமூகங்களுடன் சம்பந்தப்படாதவை அல்ல. எனவே, மேலே கூறப்பட்டவைபோல் இறுதித் தீர்வும் பிரதிபலனும் யுத்தத்தின் மூலமே பெறப்பட வேண்டும் என்ற கருத்துகளும் நம்பிக்கைகளும் சமூகங்களிடையே பரவும் சூழ்நிலைகள் அதிகரித்துச் சென்றுள்ளன. பிரபாகரனின் அமைப்பில் தமிழ் இளைஞர், யுவதிகள் ஏன் சேர்ந்துகொள்கிறார்கள். தற்கொலைக் குண்டுதாரிகளாக உருவாவதற்கு அவர்கள் ஏன் விரும்புகிறார்கள்? இந்த விடயங்கள் சம்பந்தமாக விமர்சிக்கவோ அல்லது ஆராய்ந்து பார்க்கவோ வேண்டிய தேவையோ எண்ணமோ யாருக்கும் கிடையாது. பயங்கரவாத அமைப்பு ஒன்றை யுத்தத்தால் தோற்கடிக்க முடியாது. ஆனால், தற்காலிகமாக அதனைத் தோல்வியடையச் செய்ய முடியும். பயங்கரவாத இயக்கம் தோன்றுவதற்குக் காரணம் என்ன என்பது பற்றியும் பயங்கரவாத இயக்கத்தில் அவர்களைச் சேரத்தூண்டும் தவறுகள் தொடர்ந்தும் இந்த சமூகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறதா என்பது பற்றியும் ஆராயும் போக்கோ அல்லது சிந்திக்கும் நிலையே சமூகங்களிடையே இல்லை.

இதுவரையில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டபோதும் அவர்களின் செயற்பாடுகள் முன்புபோலவே நடைபெறுவதும் வழமை மாதிரியே அவர்கள் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதும் மேற்கூறிய காரணங்களாலேயே தொடர்ந்து நிகழ்கின்றன. உலகில் எந்தவொரு நாட்டிலும் யுத்தம் மூலம் சாதிக்கப்பட்டிருப்பது பயங்கரவாத இயக்கத்தை பலவீனமடையச் செய்திருப்பது மட்டுமே. ஆனால், இறுதியாக உருவாக்கப்பட வேண்டிய சுமுகநிலை என்னவெனில் பயங்கரவாதிகள் அல்லாத நிலைக்கு அவர்களைக் கொண்டுவருவதே ஆகும். பயங்கரவாதிகள் ஆயினும் அவர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையான தோற்றப்பாடு மறக்கப்பட்டுவிட்டது. பயங்கரவாதி பிறப்பிலேயே பயங்கரவாதி என்ற கருத்து சமூகங்களிடையே பரப்பப்பட்டுள்ளன.

தற்போதுள்ள புத்திஜீவிகள் பொறுப்பாகச் செய்யவேண்டிய அவசர காரியமாக இருக்கவேண்டியது யாதெனில், மேற்படி சமூக அரசியல் நிலை பற்றியும் இதன் மூலம் சமூகங்களுக்கு ஏற்படும் அழிவுகள் பற்றியும் சமூகங்களிடையே பூரண விளக்கமும் தெளிவும் ஏற்படும் வகையில் திட்டமிட்டுச் செயற்படவேண்டியதாகும். இந்த சமூகப் பொறுப்புகளை சிங்கள இனத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும். அவ்வாறே தமிழ் இனத்தைச் சேர்ந்த புத்திஜீவிகளும் இந்தப் பொறுப்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் செயற்பாடுகளில் ஒன்றுபட்டு ஈடுபடவேண்டும்.

லங்காதீப விமசும பகுதி ஜயவர்தனபுர பல்கலைக்கழக சமூகவியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் மயூர சமரக்கோன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அணுஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் இந்தியாவுக்கு இழப்பு என்கிறது அமெரிக்கா
Next post முஷாரப்புக்கு எதிராக 10 அம்ச குற்றப்பத்திரிகை – நவாஸ் ஷெரீப்பின் கட்சி தயாரிப்பு