இரட்டை இலையும் ஆர்.கே நகர் இடைத் தேர்தலும்..!! (கட்டுரை)
இரட்டை இலைக்கும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கும் ஏழாம்பொருத்தமாக இருக்கிறது.
சென்ற முறை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில் முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னம், இப்போது ஆர்.கே நகர் தேர்தல் அறிவிப்புக்கு முதல் நாள் விடுவிக்கப்பட்டுள்ளது.
டிசெம்பர் 21 ஆம் திகதி நடக்கும் இடைத் தேர்தல் அறிவிப்புக்கு முதல் நாள் கொடுக்கப்பட்டுள்ள இந்த இரட்டை இலைச் சின்னம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.கவுக்குத் தமிழக அரசியலில் ஒரு முக்கியத்துவத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.
போட்டி போட்டுக் கொண்டு களத்தில் நின்ற டி.டி.வி தினகரன் அணிக்கும், எடப்பாடி அணிக்கும் இடையிலான போட்டியில் முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அணி உண்மையான அ.தி.மு.க என்ற அங்கிகாரத்தை இந்தியத் தேர்தல் ஆணையகத்திடமிருந்து பெற்றிருக்கிறது. ‘செத்துப் பிழைத்தவண்டா’ என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளுக்கு முழு இலக்கணமாக இப்போது இரட்டை இலை வந்திருக்கிறது.
மாநில அளவில் உள்ள ஒரு கட்சிக்கு, தேர்தல் ஆணையகம், இரண்டாவது முறையாக இரட்டை இலைச் சின்னத்தைத் திருப்பிக் கொடுத்திருப்பது வரலாறு. 1987 இல் எம்.ஜி.ஆர் மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க பிளவுபட்டு, அப்போது இரட்டை இலை மீட்கப்பட்டு, மீண்டும் ஒன்றிணைந்த அ.தி.மு.கவினால் இரட்டை இலை சின்னம் ஜெயலலிதாவால் மீட்கப்பட்டது.
இப்போது 2016 இல் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க மூன்று அணிகளாகப் பிளவுபட்டு, இரண்டு அணிகள் மட்டும் இணைந்து, இப்போது தேர்தல் ஆணையகத்திடம் இருந்து இரட்டை இலைச் சின்னத்தை பெற்றிருக்கின்றன.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நினைவுப் பரிசாக அ.தி.மு.கவுக்கு இரட்டை இலைச் சின்னம் மீண்டும் கிடைத்திருக்கிறது. ‘இது நீதிக்கு கிடைத்த வெற்றி’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். ஆனால் ‘தேர்தல் ஆணையகம் நடுநிலை தவறி விட்டது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறோம்’ என்று சின்னத்துக்கான போட்டியில் தோல்வியடைந்த டி.டி.வி தினகரன் கூறியிருக்கிறார்.
இரட்டை இலை சின்னத்தில் தேர்தல் ஆணையகத்தின் நடுநிலைமை பற்றிக் கேள்வி எழுப்பப்படுவது ஏன் என்பது தனிக்கதையாக இருக்கிறது. சட்டமன்ற கட்சி, நாடாளுமன்றக் கட்சி, பொதுக்குழு ஆகியவற்றில் எந்த அணிக்கு அதிக உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அந்த அணிதான் உண்மையான கட்சியாகக் கருதப்படும்.
இப்படித்தான் தேர்தல் ஆணையகம், காலம் காலமாக முடிவு செய்து வந்திருக்கிறது. ஏன் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் கூட அப்படித்தான் அமைந்திருக்கின்றன. ஆனால், கடந்த முறை இரட்டை இலைச் சின்னத்துக்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் அணி, தேர்தல் ஆணையகத்துக்கு மனுக் கொடுத்தபோது, இப்போது டி.டி.வி தினகரனுக்கு இருப்பதையும் விடக் குறைவான ஆதரவைத்தான் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பொதுக்குழுவிலும் வைத்திருந்தது.
அந்தநேரத்தில், இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் ஆதரவைப் போல் சசிகலா தலைமையிலான அ.தி.மு.க அணிக்கு இருந்தது. எடப்பாடி அணிக்கு 111 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது என்றால், அன்றைக்கு சசிகலாவுக்கு 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது.
ஆனால், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கு முன்பு ‘தஸ்தாவேசுகளைப் படித்துப் பார்க்க நேரமில்லை’ என்று கூறி, தேர்தல் ஆணையகம் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது. ஆகவே, அன்று தேர்தல் ஆணையகம் எடுத்த முடிவு ‘ தஸ்தாவேசுகளைப் படித்துப் பார்க்க நேரம் தேவை’ என்றால், இன்று தேர்தல் ஆணையகம் எடுத்துள்ள முடிவு ‘உச்சநீதிமன்றத் தீர்ப்பின்’ அடிப்படையிலானது.
83 பக்கங்கள் கொண்டு தேர்தல் ஆணையகத்தின் தீர்ப்பு, அ.தி.மு.கவுக்குள் உள்ள அணிகளுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்து வைத்திருக்கிறது. இனி இரட்டை இலைக்கான போட்டி உச்சநீதிமன்றத்திலும் நடைபெறவிருக்கும் ஆர். கே நகர் சட்டமன்ற இடைத் தேர்தலிலும் களை கட்டும். இதற்கு முன்னோடியாக குடியரசுத் தலைவரிடமே தினகரன் அணி தேர்தல் ஆணையகத்தின் மீது புகார் கொடுத்து விட்டது.
புதிதாகப் பெற்றுள்ள ‘இரட்டை இலை’ வெற்றி பெறுமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. சின்னம் கிடைத்தது அ.தி.மு.கக்கு ஓர் உந்துசக்தி என்றாலும், மக்களிடம் செல்வாக்கு இருக்கிறதா என்பதுதான் மில்லியன் டொலர் கேள்வி.
கடந்த காலங்களில் சின்னத்தின் அடிப்படையில் மட்டுமே வெற்றி அமைந்ததில்லை. தி.மு.கவின் உதய சூரியன் சின்னம், மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்தது என்றாலும், அந்தக் கட்சியின் மீது மக்களுக்கு கோபம் இருக்கும் போது, அக்கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது.
1977, 1991, 2001, 2011, 2016 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களை உதாரணமாகச் சொல்லலாம். அதேபோல் அ.தி.மு.கவும் 1996, 2006 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது. இரு கட்சிகளுமே இந்தச் சின்னத்தில் போட்டியிட்டு, கட்டுப்பணத்தைக் கூட இழந்திருக்கின்றன.
ஆகவே, தேர்தல் வெற்றிக்கு சின்னம் மட்டுமே ஒரு காரணமாக அமைந்து விட முடியாது. அந்தக் கட்சியின் ஆட்சி மீது மக்களுக்கு கோபம் இருந்தால், தோல்வியில் முடிகிறது; வரவேற்பு இருந்தால் வெற்றியில் முடிகிறது.
அந்த வகையில், தேர்தல் ஆணையகத்தில் கிடைத்த இரட்டை இலைச் சின்னத்தின் பலத்தை, இப்போது ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் அ.தி.மு.க இருக்கிறது.
டிசெம்பர் 21 ஆம் திகதி, தேர்தல் நடைபெறவுள்ள ஆர். கே நகர் தொகுதியைப் பொறுத்தமட்டில், ஜெயலலிதா ஏற்கெனவே வெற்றி பெற்ற தொகுதியாகும். சென்ற முறை டி.டி.வி தினகரன் போட்டியிட்ட காரணத்தால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்தத் தொகுதியில் தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டின் அடிப்படையில், சமீபத்தில் தேர்தல் ஆணையகம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்களை நீக்கியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் அதிக போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டது இங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.
போலி வாக்காளர்கள் என்பவர்களில் இறந்தவர்கள், வேறு தொகுதியில் குடியிருப்போர் உள்ளிட்ட பல இரகத்தினர் அடங்குவர். 40 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம் அ.தி.மு.கவின் வெற்றிக்கு ஆர்.கே நகரில் பெரிய சோதனையாக இருக்கும் என்றாலும், ஆளுங்கட்சியாக இருப்பதால் இடைத்தேர்தல் வெற்றிக்காக எல்லா திசையிலும் அ.தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள் பாடுபடலாம்.
எதிர்க்கட்சிகளின் சார்பில் தி.மு.க மட்டும் களத்தில் நிற்குமா அல்லது வேறு கட்சிகளும் போட்டியிடுமா என்பது போகப் போகத்தான் தெளிவு பிறக்கும். இன்றைய திகதியில்
அ.தி.மு.கவுக்கும் தி.மு.கவுக்கும் இடையில் ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் கடும் போட்டி காத்திருக்கிறது.
இரட்டை இலை மீட்பு, வரப்போகும் இடைத் தேர்தல் முடிவுகள் எல்லாம் இப்போது இருக்கும் அ.தி.மு.க அரசாங்கத்தின் ஆயுளுக்கு ‘கால நீட்டிப்பை’ வழங்குவது ஒரு புறமிருக்க, பாரதீய ஜனதாக் கட்சியின் எதிர்காலக் கூட்டணிக்கு ‘ஒன்றுபட்ட அ.தி.மு.க’ ஒன்று கிடைத்திருக்கிறது என்ற சிந்தனை டெல்லி பா.ஜ.க தலைவர்களுக்கு, குறிப்பாக இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்படலாம்.
தினகரன் ஆர்.கே நகர்த் தேர்தலில் போட்டியிட்டால் களம் இன்னும் சூடு பறக்கும் என்றே தெரிகிறது. தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி ஒருபுறம் என்றால் பா.ஜ.கவுக்கு ஒரு கூட்டணிக் கட்சி அ.தி.மு.க என்ற நிலைதான் தற்போது உள்ளது.
‘இரட்டை இலை’ சின்னம் திரும்ப கிடைத்தது ‘பா.ஜ.கவின் அருட்கடாட்சம்’ என்றே அ.தி.மு.கவில் உள்ள தலைவர்கள் எண்ணுகிறார்கள். ஆகவே, இரட்டை இலைச் சின்னத்தின் பலம் தேர்தல் வெற்றியில் நிரூபிக்கப்பட வேண்டும் என்பதே அ.தி.மு.க முன்பு உள்ள சவால்.
அதேநேரத்தில் கட்சிக்குத் தேவையான சின்னத்தை ஒதுக்குவதில் உதவி செய்த பா.ஜ.க, அ.தி.மு.க ஆட்சிக்கு இனிமேலும் உதவி செய்யுமா என்ற மிக முக்கியமான கேள்வி எழுந்திருக்கிறது. ஏனென்றால், முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவு, பா.ஜ.கவின் செல்வாக்குக்குப் பெரிய சிக்கலை ஏற்படுத்தி வருகிறது என்பதை டெல்லி பா.ஜ.கவுக்கு தமிழகத்தில் உள்ள தலைவர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.
தமிழக ஆளுநரே கூட, முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அரசாங்கத்துக்கு ‘நிபந்தனையற்ற’ ஆதரவை வழங்க தயாராக இல்லை. ஆகவே, சின்னம் மீட்கப்பட்டாலும், ஆர்.கே நகர் தேர்தலில் ஆளுங்கட்சி செல்வாக்கைப் பயன்படுத்தி வெற்றி பெற்றாலும் அ.தி.மு.க ஆட்சிக்கு சவால்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.
Average Rating