எதிர்பார்ப்பை நசுக்கியதா நல்லாட்சி?..!! (கட்டுரை)

Read Time:23 Minute, 43 Second

இலங்கை வரலாற்றில், சிறுபான்மை மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மறக்க முடியாத, கறை படிந்த வரலாற்றைக் கொண்டவையாகும்.

‘வரலாறு திரும்புகிறது’ என்ற சொற்றொடரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், வரலாற்றின் பொற்காலங்கள் ஒரு போதும் திரும்புவதில்லை. என்றாலும், மோசமான நிகழ்வுகள் அவ்வப்போது திரும்பத்தான் செய்கின்றன.

அந்த வகையில், இலங்கையின் சிறுபான்மையினர் மீது மேற்கொள்ளப்படும் பாகுபாடுகளும் தாக்குதல்களும், மீள இடம்பெறுவதில்லை என்று கூறப்படுகின்ற போதிலும், அண்மைக் காலமாக, முஸ்லிம்களை குறிவைக்கும் வன்முறைகள், வேறு கதை சொல்கின்றன.

முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில், அளுத்கம, பேருவளை சம்பவங்கள், அநேகமானோரின் மனதில் இன்னும் காணப்படுகின்றன. எனினும், வரலாற்றில், பல இடங்களில் இவ்வாறான சம்பவங்கள் நிறையவே இடம்பெற்றுள்ளன என்பது சிலருக்குத் தெரிந்தும், மறந்துபோன உண்மைகளாகும்.

இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைச் சம்பவங்களில் பெரும்பாலானவை, சில்லறையான சம்பவங்களைப் பின்னணியாகவும் காரணமாகவும் கொண்டிருப்பதைக் காணலாம்.

இந்நிலையில், கடந்த வௌ்ளிக்கிழமை (17) மாலை, காலி பிரதேசத்தில் கிந்தோட்டை – விதானகம, சபுகம பிரதேசங்களில் உள்ள இரு இனப் பிரிவினர்களுக்கு இடையிலான கலவரமொன்று இடம்பெற்றது. சாதாரணமான ஒரு விபத்துச் சம்பவத்திலிருந்து இந்தக் கலவரம் ஏற்பட்டுள்ளது என்று கூறினால், எம்மில் பலர் இதை நம்பாமல் கூட போகலாம்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலி, கிந்தோட்ட, ஹப்புகொட பகுதியில், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, பெண் ஒருவரை மோதிக் காயத்தை ஏற்படுத்தியுள்ளார். இதையடுத்து, அப்பிரதேசத்திலுள்ளவர்கள், குறித்த மோட்டார் சைக்கிளில் வந்தவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவமே, கடந்த சில தினங்களாக, சிறுசிறு சம்பவங்களாக இடம்பெற்று வந்து, வௌ்ளிக்கிழமையன்று பெரும் மோதலாக உருவெடுத்துள்ளது. பின்னர், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவின் தலையீட்டின் கீழ், வௌ்ளிக்கிழமை நண்பகல் முதல், விசேட அதிரடிப் படைப் பிரிவினரின் பாதுகாப்பு, அப்பிரதேசத்துக்கு வழங்கப்பட்டு, பின்னர் அவர்களின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது.

இதையடுத்தே, கிந்தோட்டைப் பிரதேசத்துக்கு வெளி இடங்களிலிருந்து அழைத்துவரப்பட்ட கும்பலொன்று, அன்றிரவு (17) வர்த்தக நிலையங்கள், வீடுகள், பள்ளிவாசல்கள் என்பவற்றின் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தது.

இவ்வாறான தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தமை, இது முதற்தடவையல்ல; வரலாற்றைப் பின்னோக்கிச் சென்று பார்த்தோமேயானால், 2001ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற மாவனல்லை இனக்கலவரம், இலங்கையின் முஸ்லிம்கள் மத்தியில் நீங்காத வடுக்களாக உள்ளன. அன்றைய நாள், கறுப்பு மே தினமான அடையாளப்படுத்தப்படுகின்றது.

இச்சம்பவமும் பெரும்பான்மை இனத்தவர்களின் ஒரு பகுதியினரால் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட கொடூர, வன்முறைச் சம்பவமே என்று, பலராலும் கருதப்படுகின்றது. ஒரு சிகரெட்டுக்காக முழு நகரத்தையும் கொளுத்தி, தமது வன்முறைவெறியைத் தீர்த்த சம்பவமாக, மாவனெல்லைச் சம்பவம் வரலாற்றில் இடம்பெறுகின்றது.

அதேபோல், பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் அடாவடித்தனமான வார்த்தைகளின் விளைவாக பேருவளை, அளுத்கம நகரம் தீப்பற்றி எரிந்தது. முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் தர்கா நகரில், காடையர் கூட்டம் ஒன்று கல்வீசித் தாக்கியதை அடுத்து, கலவரம் வெடித்துக் கிளம்பியது.

இவ்வாறு, முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டதெனப் பலராலும் கூறப்படும் சம்பவங்கள் எண்ணிலடங்காதவை. இத்தகைய சம்பவங்கள், இலங்கையை மாத்திரமல்லாது சர்வதேசத்தின் பார்வையையும் இழுத்துள்ளன.

கிந்தோட்டைச் சம்பவம் இடம்பெற்று சில நாட்களுக்குள்ளேயே, நேற்று (20) அதிகாலை, வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த கடைகள், இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் வடக்கில் உள்ள சிறுபான்மையினர், ஆதாரம் இல்லாத அளவுக்குக் கொல்லப்பட்டனர் என்பது, அனைவரால் கூறப்படும் கருத்து. யுத்தம் முடிவடைந்து, சுதந்திரமாக வாழக்கூடிய இத்தருணத்திலும், கண்மூடித்தனமான முறையில், சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன என்பதை, தினசரி பத்திரிகைகளிலும் ஏனைய ஊடகங்களிலும் பார்க்கும் போது, சாதாரண ஒருவராலேயே புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. ஆதாரம் இருந்தும், இதுவரை சம்பந்தப்பட்டோரைக் கைது செய்வதிலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலும் அரசாங்கம் கண்மூடித்தனமாகவே செயற்பட்டு வருகின்றது என, சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

சில நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் இடம்பெற்று வருகின்ற வன்முறைகள் குறைவாகவும் விளைவுகள் குறைவாகவும் காணப்படுகின்றபோதும், அது, எதற்காக ஏற்படுகின்றன என்ற காரணத்தை ஆராய்ந்து பார்த்தால், சில்லறை காரணமாகவே தெரியவருகிறது.

இலங்கையில் வளர்ந்து வந்த வன்முறை வரலாறு என்பது, முஸ்லிம்களுக்கு எதிராகத்தான் முதலில் தொடங்கியிருந்தது. 1915ஆம் ஆண்டில், அப்போதைய கொலனித்துவ பிரித்தானிய ஆட்சிக்கு எதிராகப் பொங்கி எழ வேண்டிய பெரும்பான்மைச் சமூகத்தின் கோபம், அதன் முழு வலிமையையும் சமூக, பொருளாதார கலாசார தளத்தில் வசதியாக மடைமாற்றிக் கொண்டு, சிறுபான்மையினரை, முஸ்லிம்களை, தமது பொது எதிரியாகக் கண்டது என்பது, இலங்கை இனவாதம் காரணமாக இரத்தம் சிந்திய அவலத்தின் தொடக்கமாகும்.

இலங்கையின் முஸ்லிம்கள் மீதான பெரும்பான்மையினத்தவரின் காழ்ப்புணர்வு என்பது, வர்த்தகப் போட்டியில் ஆரம்பித்தது. இதன் உடனடி விளைவில் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்றால், இதில் சம அளவு தமிழ் வர்த்தகர் மீதும் மையம் கொண்டதன் இரத்த விளைவுகளை, 1983ஆம் ஆண்டு ஜூலைக் கலவரங்கள் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை செல்கிறது.

இப்படிக் காணப்படும் மோசமானதொரு வரலாற்றின் தொடர்ச்சியே, தற்போது நடைபெறும் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு வித்திட்டவையாகும்.

“ஒரு சாதாரண விபத்தால் இவ்வளவு பெரிய கலவரம் அவசியம் தானா?” என்பது, எம்மில் பலரதும் கேள்வியாக எழுகிறது. இனக் கலவரம் ஏற்படுத்துவதற்கு அவசியம் ஏதும் இல்லை என்று எம்மில் பலருக்குத் தோன்றலாம். இது, சிறுபான்மை இனத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட வேண்டும் என்ற வெறியின் பின்னணிச் சம்பவம் மட்டுமே. பழி தீர்ப்புக்காக அல்லது நீண்ட காலமாக முஸ்லிம்கள் மீது பெரும்பான்மை இனத்தவர்களுக்கு இருக்கும் இனவெறியின் உச்சக்கட்ட செயற்பாடா என்றும் சந்தேகிக்கத் தோன்றுகின்றது.

கிந்தோட்ட பிரதேசத்தில் வௌ்ளிக்கிழமை இரவு கேட்ட வெடிச் சத்தத்தையடுத்து, அப்பகுதி அல்லோல கல்லோலப்பட்டு காடையர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இச்சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அப்பகுதியில் கடும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ஊரடங்கு சட்டமும் அமுல்படுத்தப்பட்டது. அத்தருணத்தில் அப்பிரதேசம் மயான பூமியாகவே காணப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் 19 பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெறச் சொற்ப நேரத்துக்கு முன்னர், அதாவது மாலை 4 மணியளவில் விசேட அதிரடிப்படையின் சம்பவ இடத்தை விட்டு அகன்றதன் பின்னர், இரவு 7.30 மணியளவில் இத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இத்தாக்குதல் சம்பவங்களை வழிநடத்தியவர், பௌத்த மதத்தலைவர் எனத் தெரியவந்துள்ளது. விபத்துச் சம்பவத்தின் போது தாக்குதலுக்குள்ளான இளைஞனின் பகுதியில் உள்ள பிக்கு ஒருவரே, தனது விகாரைக்கு அப்பகுதி மக்களை வருமாறு அழைப்பு விடுத்து, அப்பகுதி மக்களை (கிந்தோட்ட) தாக்க வேண்டும் எனக் கூறியதாக அறியமுடிகின்றது.

சிறுபான்மை இனத்தவர்கள் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்படும் வன்முறைகளின் பின்னணியில் மதத்தலைவர்கள் காணப்படுவது ஒன்றும், இது முதற்தடவை கிடையாது.

இதன்போது, 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன; கடைகள், வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன் தீ வைத்து எரிக்கப்பட்டுமுள்ளது. பின்னர் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதையடுத்து, இராணுவத்தினர் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சம்பவம் இடம்பெற்றதன் பின்னர், அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த செய்திகளும் வெளிவந்தவண்ணமுள்ளன. ஒவ்வொரு வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னரும் அரசியல்வாதிகள் நேரில் வந்து பார்த்து, நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி வழங்கிவிட்டுச் செல்கின்றனர்.

ஆனால், அவ்வாக்குறுதிகள் வெறும் வாய்ப் பேச்சாகவே காணப்படுகின்றன. அரசாங்கம் என்ற ரீதியில் வழங்கப்படும் உறுதிமொழிகளும் சட்ட நடவடிக்கைகளும் இறுக்கமாக இருந்தால் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படும்.

இந்தப் பிரச்சினைக்குள் ஆரம்பத்திலேயே பொலிஸாரின் தலையீடு இருந்திருந்தால் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், வானொலி செவ்வியொன்றில் குறிப்பிட்டிருந்தார். இவரது கருத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே உள்ளது.

இவ்வாறான விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கிறது என்றால், அது தொடர்பில் அவசியம் பொலிஸாருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரிந்திருந்தால், அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த வன்முறைச் சம்பவங்கள் நிகழாமல் தடுத்திருக்க முடியும்.

ஆனால், அதைப் பொலிஸார் செய்யவில்லை. வன்முறை முற்றிவெடித்ததன் பின்னரே பொலிஸார் வந்துள்ளனர். அதனால் எந்த பிரயோசனமும் இல்லை. இதற்கான ​​முழுப்பொறுப்பையும் பொலிஸாரே ஏற்க வேண்டும் என்று மக்கள் கோபத்துடன் கூறுவதில் காணப்படும் நியாயப்பாட்டையும் ஏற்க வேண்டித் தான் உள்ளது. பொலிஸாரின் அஜாக்கிரதையான செயற்பாட்டின் விளைவாகவே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள முக்கிய அரசியல்வாதி ஒருவர், அப்பகுதியில் உள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டு சம்பவத்தைப் பற்றி விசாரிக்கும்போதுதான், அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றதை அவர் அறிந்தாரெனத் தெரிவிக்கப்படுகின்றது. இதுதான் உயர் பொலிஸ் அதிகாரியின் வினைத்திறனான செயற்பாடா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

பொலிஸாரின் முன்னிலையிலேயே வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அது உண்மையாக இருந்தால் பொலிஸாருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறான சம்பவங்கள் கடந்த மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி காலத்திலும் இடம்பெற்றது யாவரும் அறிந்த விடயமே. இருந்தாலும் இதை நிறுத்துவதற்காகவே இந்த மாபெரும் அரசியல் மாற்றம், சிறுபான்மை மக்களால் ஏற்படுத்தப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தான் இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டது. ஆனால் விடிவு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

இனவாதிகளுக்குச் சட்டத்தை கையில் ஏந்துவதற்கு இந்த அரசாங்கம் சந்தர்ப்பத்தை வழங்கிக்கொண்டுவந்தால், அனைவரும் எதிர்பார்க்கும் சாந்தி, சமாதானம் என்பவற்றை எதிர்பார்க்க முடியாது. அவை எல்லாம் வெறும் கானல்நீராகவும் வாய்ப் பேச்சாகவும் மட்டுமே இருக்கும். இது குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கவனம் செலுத்த வேண்டும்.

தொடர்ந்து அரங்கேறிவரும் இவ்வாறான சம்பவங்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள், அமைதியையும் சகஜவாழ்க்கையையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் இத்தகைய சம்பவங்களைக் கவனத்தில் கொள்ளவில்லையா, அல்லது சமாதானத்தையும் சட்டம் ஒழுங்​கையும் அமுல்படுத்துவதில் அக்கறையற்றிருக்கின்றார்களா என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

என்ன நடக்கிறது என்று பார்த்தால் எமக்கே குழப்பாக உள்ளது. இதை தடுத்திருக்க முடியும் என இந்த அரசாங்கத்தை உருவாக்கியவர்களே கூறி, இந்த அரசாங்கத்தைக் குறை கூறுகிறார்கள். இது தொடர்பில் பொலிஸார் சரியான புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் இச்சம்பவத்தை நிச்சயம் தடுத்திருந்திருக்கலாம். என்றால், என்ன பிரச்சினை? விரும்பியே இவ்வாறான சம்பவங்கள் உருவாக்கப்படுகின்றனவா? ஏதாவது ஒரு நோக்கத்துக்காக அல்லது ஏதாவது ஒரு திசைதிருப்பலுக்காக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா? அல்லது மனதில் இருக்கும் வன்மத்தைப் போக்குவதற்காக, நேரடியாகச் சொல்வதற்கு தைரியம் இல்லாமல் துவேசத்தால் நடத்தப்படுகின்றனவா? இந்த மாதிரியான பல கேள்விகள், எமது மனதில் உள்ளன. இதற்கு விடை என்று கிடைக்கும் என்பதும் கேள்விக்குறியே.

ஆனால், எமக்கான நோய்களாக இருக்கட்டும், மனிதர்களுக்கிடையிலான பிரச்சினைகளாக இருக்கட்டும், “வருமுன் காப்பது” என்பது தான், மிகவும் உசிதமான முறையாகும். ஒவ்வொரு முறையும் வன்முறை இடம்பெற்ற பின்னர், அது தொடர்பாக ஆராய்வது என்பது, எவ்விதத்திலும் சிறப்பான செயற்பாடாக இருக்க முடியாது. எனவே, இப்படியான வன்முறைகள் தொடர்ந்தும் ஏற்படுகின்றமைக்கு என்ன காரணம் என்பதைப் பற்றி ஆராய்வது அவசியமானது.

யுத்தம் நடைபெறும் காலத்தில், தமிழ் மக்களே, கடும்போக்குவாதிகளின் இலக்குகளாக இருந்தனர். தற்போது யுத்தம் முடிவடைந்த பின்னர், முஸ்லிம்கள் இலக்குவைக்கப்படுகின்றனர் என்ற பார்வை ஏற்பட்டுள்ளது. ஆகவே, இலக்குவைப்பதற்கென்று ஏதாவது ஓர் இனப்பிரிவினர் தேவைப்படுகின்றனர் என்று, ஒரு பகுதியினர் எண்ணுவதற்கான காரணம் என்ன?

இப்படியான மோசமான செயற்பாடுகளை, பொது பல செனா, இராவண பலய போன்ற ஒரு சில அமைப்புகள் மீதும், ஒன்றிணைந்த எதிரணி போன்ற, கடும்போக்குவாதத்தை ஊக்குவிக்கும் அரசியல் பிரிவுகள் மீதும் சுமத்திவிட்டு, இலகுவாகப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள முடியும். ஆனால், கடும்போக்கு அமைப்புகள், மக்களிடத்தில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதைக் கண்டறிவது அவசியமானது.

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில், மஹிந்த ராஜபக்‌ஷவாலும் அவரது சகோதரரும் அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்தவருமான கோட்டாபய ராஜபக்‌ஷ அவரோடு இணைந்தவர்களாலும் தான், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களும் வன்முறைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இப்போது யார் மீது குற்றஞ்சாட்டுவது?

ஆகவே, மஹிந்த ராஜபக்‌ஷவோ அல்லது கோட்டாபய ராஜபக்‌ஷவோ, இதில் பிரச்சினை கிடையாது. மாறாக, ஏற்கெனவே காணப்படும் நோயின் குணங்குறிகளாகத் தான் அவர்கள் காணப்பட்டனர். நோய்க்கான குணங்குறிகளை இல்லாது செய்வதென்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட அதிகம் முக்கியமாக, நோயைக் குணப்படுத்தல் காணப்படுகிறது.

அந்த நோயைக் குணப்படுத்தும் நம்பிக்கையில் தான், மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க என்ற, இணை வைத்தியர்களை, சிறுபான்மையின மக்கள் தேர்ந்தெடுத்தனர். பொருளாதாரப் பிரச்சினைகள், நம்பிக்கையிழப்புகள் எல்லாம் ஒருபக்கமாக இருக்க, மக்களின் இருப்பையே கேள்விக்குட்படுத்தும் பாரிய பிரச்சினைகளையாவது, அவர்கள் குணப்படுத்த வேண்டும் என்பது தான், எதிர்பார்ப்பாக உள்ளது.

அந்த எதிர்பார்ப்பை, அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இது, அரசாங்கம் என்ற வகையில் அதன் பொறுப்பு என்பது ஒருபக்கமாக இருக்க, உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் ரீதியாகவும், அரசாங்கத்துக்கு முக்கியமானது.

கடும்போக்கு வாக்காளர்களின் வாக்காளர்களை நம்பி, தேர்தலில் களமிறங்குவதற்கு அரசாங்கம் திட்டமிடுமாயின், வேறு தூரத்துக்குச் செல்லவில்லை. 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல்களில், அரசாங்கத்தின் தலைவரான ஜனாதிபதியும், அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இவ்வரசாங்க உறுப்பினர்களும் எப்படி வென்றார்கள் என்பதை நினைத்துக் கொண்டாலே போதுமானது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சினிமாவில் கெட்ட அனுபவத்தை சந்தித்தது இல்லை: சன்னி லியோன்..!!
Next post ஜீவாவிற்கு கீ கொடுக்கும் கவுதம் மேனன்..!!