வாங்க வைக்கும் வண்ணங்களும்.. எண்ணங்களும்..!!
பெண்களுக்கு உடலை பற்றிய விழிப்புணர்வும், ஆடை தேர்வு பற்றிய அடிப்படை அறிவும் அவசியம் தேவை
‘ஷாப்பிங்’ ஆர்வம் இளம்பெண்களிடம் அதிகரித்து வருகிறது. அவர்கள் வாங்க விரும்பும் பொருட்கள் பெரும்பாலும் வண்ணங்கள் நிறைந்ததாக இருக்கின்றன. அந்த வண்ணங்களை நோக்கி அவர்கள் எண்ணங்கள் சென்று, அவர்களுக்குள் ஷாப்பிங் ஆர்வத்தை தூண்டுகின்றன. இளம் பெண்கள் வண்ணங்கள் மீது மோகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால் தாங்கள் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் உச்சி முதல் பாதம் வரை வண்ணமயமாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள்.
பெண்களின் வண்ணங்கள், எண்ணங்கள் கலந்த கலவையாக உடைகள் இருக்கின்றன. பெரும்பாலான பெண்கள் உடை தேர்வில் தான் தங்கள் வண்ணமயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகிறார்கள்.
பெரும்பாலான டீன்ஏஜ் பெண்கள் உடைகளை தேர்ந்தெடுக்கும்போது அவர்களது மனதில் நடிகைகளும் வந்து போகிறார்கள். தங்களுக்கு பிடித்தமான நட்சத்திரங்கள் அணியும் உடைகளை போன்று தேர்ந்தெடுத்து உடுத்தி மகிழ விரும்புகிறார்கள். அந்த ஆடைகள் அவர்களின் தோற்றத்திற்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒருசில ஆடைகள் பார்க்க அழகாக இருக்கும். ஆனால் அணிந்து கொள்ள சவுகரியமாக இருக்காது. அல்லது அவர்களின் தோற்றத்திற்கு எடுப்பாக இருக்காது. உடுத்தும் உடை பேஷனாக மட்டுமின்றி, உடல் அமைப்பிற்கு ஏற்றதாகவும், அதே நேரம் பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும் என்பது முக்கியம். உடலுக்கு இதமான, மென்மையான, சவுகரியமான உடைகளை தேர்ந் தெடுத்து அணியவேண்டும். அது வண்ணங்கள் நிறைந்ததாகவும் இருக்கவேண்டும். அந்த வண்ணங்கள் அவர்களது எண்ணங்களை பிரதிபலிப்பதாக அமையும்.
டீன் ஏஜ் பெண்கள் ஷாப்பிங் செல்லும்போது, அவர்களது ஆடை விருப்பத்தை உணர்ந்துகொண்ட பெரியவர்கள் யாராவது உடனிருப்பது அவசியம். அவர்கள் அழகிய டிசைனையும், பிடித்த வண்ணத்தையும்தான் கருத்தில் கொள்வார்கள். அது அவர்களுக்கு பொருத்தமானதா? என்பதை கண்டறிய இன்னொருவரின் உதவி தேவைப்படுகிறது.
பெரும்பாலான டீன் ஏஜ் பெண்கள் சினிமாவில் நடிகைகள் உடுத்தும் உடைகளால் கவரப்படுகிறார்கள். சினிமா வேறு, வெளிஉலகம் வேறு என்பதை அவர்கள் தெள்ளத்தெளிவாக உணர்ந்துகொள்ளவேண்டும். வெளியே நாம் அணியும் உடை என்பது மரியாதைக்குரியது. நாம் அணியும் விதத்தை பொருத்துதான் நமக்கு மரியாதை கிடைக்கும். லோஹிப், லோநெக், அல்ட்ரா மாடர்ன் ஸ்கர்ட் போன்றவை சினிமாவிற்குதான் சாத்தியப்படும். ஆடையின் அளவை ரொம்பவும் குறைத்து விடக்கூடாது.
இப்பொழுதெல்லாம் ஜிகினா, சம்கி, மணிகள், முத்துக்கள் போன்ற பல அலங்கார பொருட்கள் உடையில் கோர்க்கப்பட்டு டிசைன் செய்யப்படுகிறது. அந்த வகை உடைகள் ஏதேனும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு பொருத்தமாக இருக்கும். பொது நிகழ்ச்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இந்த வகை உடைகள் அணிந்திருந்தால் பார்க்க அழகாக இருக்கும். ஆனால் எல்லா இடங்களுக்கும் இந்த வகை உடைகள் பொருத்தமாக இருக்காது. அதனால் நிகழ்ச்சிகளுக்கு ஏற்றபடியும், இடத்திற்கு ஏற்றபடியும் உடைகள் அணியத் தெரிந்துகொள்ளவேண்டும். அப்படி அணிவது பெண்களின் எதிர்காலத்திற்கும், கலாசாரத்திற்கும் நன்மை யளிக்கும்.
நேர்காணல், கல்லூரி கருத்தரங்கு போன்றவற்றில் பங்கேற்கும்போது வெண்மை கலந்த, இள நிறம் கொண்ட உடைகள் நல்லது. அது அவர்கள் மீது நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கும். பொதுவாகவே வெண்மையான உடை மிக நேர்த்தியாக இருக்கும். அதற்கென்று ஈர்ப்பு சக்தி உண்டு.
அங்கங்களை தூக்கிக்காட்டுவது போன்ற இறுக்கமான உடைகள் அணிவது எப்போதும் நல்லதல்ல. அது தவறான அபிப்பிராயம்கொள்ள காரணமாகிவிடக் கூடும். சரியான உடையை தேர்ந்தெடுக்கவோ, அணியவோ தெரியாதவர் என்ற எண்ணத்தையும் தோற்றுவித்துவிடும். இறுக்கமாக உடை அணிந்தால் உடலில் காற்று புகாது. அதனால் சரும வியாதிகளும் உருவாகும். ரத்த ஓட்டமும் பாதிக்கும். அதனால் வளரும் பருவத்தினரின் உடல் வளர்ச்சியும் பாதிப்புக்குள்ளாகும். ஆகவே வளரும் பருவத்தினர் சரியான அளவிலான உடைகளை தேர்ந்தெடுத்து அணியவேண்டும்.
இப்போது வண்ணங்களையும், வடிவங்களையும் எதிர்பார்க்கும் பெண்கள் டிசர்ட்களை விரும்புகிறார்கள். அவைகளை அணிவது வசதியானது. நல்ல காற்றோட்டமாகவும், வியர்வையை உறிஞ்சக் கூடியதாகவும், உடலுக்கு சவுகரியமாகவும் இருக்கும். பெண்கள் உடற்பயிற்சி, யோகாசனம், நடைப்பயிற்சி, ஜாக்கிங் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளவும் டிசர்ட் வசதியாக இருக்கும்.
அதனை வாங்கும்போது அதில் உள்ள வாசகங்களை படித்து, அர்த்தங்களை உணர்ந்து வாங்க வேண்டும். தவறான அர்த்தம் கொண்டவைகளையும், அடுத்தவர்களை வெறுப்பேற்றும் விதத்திலான வாசகங்களை கொண்டவைகளையும் வாங்கி அணிந்துவிடக்கூடாது. இப்போது பல நிறுவனங்கள் ஸ்போர்ட் டிசர்ட், லேடீஸ் டிசர்ட்களை வடிவமைத்து விற்பனை செய்கிறது. அவை அணிவதற்கு வசதியாக இருக்கும்.
பெண்கள் தங்கள் உடல் அமைப்பு எப்படி இருக்கிறது என்பதை முதலில் தெளிவாக உணர்ந்துகொள்ளவேண்டும். உடல் அமைப்பை பற்றிய தெளிவு இருந்தால் மட்டுமே சரியான உடையை தேர்ந் தெடுக்க முடியும். மற்றவர்களின் உடலுக்கு பொருத்தமாக இருக்கும் உடைகள் உங்கள் உடலுக்கும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள்.
வயிறு, இடுப்பு அளவு அதிகமாக இருப்பவர்கள், தொப்பை பிரச்சினை உடையவர்கள் தளர்வான உடையை தேர்ந்தெடுப்பதே பொருத்தமாக இருக்கும். கைகள் இரண்டும் அழகுடன் இருந்தால் மட்டுமே ஸ்லீவ் லெஸ் அணிய வேண்டும். குண்டான உடல்வாகு கொண்ட பெண்கள் ஸ்லீவ் லெஸ் உடை அணிவது மற்றவர்களின் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும். உடையை தேர்வு செய்யும் போது நிறத்தை கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம். ஷோகேஸ் பொம்மை அணிந்திருக்கும் உடை அழகாக இருக்கிறது என்பதற்காக அதனை தேர்ந்தெடுக்க நினைப்பது சரியானதாக இருக்காது.
அதன் உயரம், நிறம், அளவு இதெல்லாம் உங்களுக்கு பொருத்தமாக இருக்காது. கொஞ்சம் மாநிறம், கருப்பு என்றால் அதற்கேற்ற இளம் வண்ணங்களை தேர்வு செய்யுங்கள். சிவப்பு நிறம் என்றால் எல்லா வண்ணமும் பொருந்தும். உடல் வடிவமும் முக்கியம். உயரமாக இருப்பவர்களுக்கு பொருந்தும் டிசைன் குள்ளமாக இருப்பவர்களுக்கு பொருந்தாது. உடலுக்கேற்ற டிசைன்களை தேர்வு செய்வதும் முக்கியம். எல்லா டிசைனும் பார்க்க அழகாக இருக்கும். அது முக்கியமல்ல. அணிபவர்களுக்கு அது அழகு தரவேண்டும் என்பதே முக்கியம்.
இறுக்கமான பேண்ட் அணிவதையும் பெண்கள் தவிர்க்கவேண்டும். அது தொடைகளை ரணமாக்கிவிடும். இதனால் நரம்பு, கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கிறது.
நீண்ட காதணிகள், பெரிய வளையல்கள் அணிவது பேஷனாக இருக்கலாம். ஆனால் அது காதிற்கு ஆபத்தானது. நாளடைவில் காது மடலை இழுத்து தொங்கவைத்துவிடும். காது வலிக்கவும் செய்யும். சட்டென்று உடையுடனோ மற்ற பொருட்களிலோ மாட்டி சிக்கிக்கொள்ளவும் செய்யும்.
நீங்கள் வாங்கும் பொருட்கள் வண்ணங்கள் நிறைந்ததாகவும், உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதாகவும், சவுகரியமானதாகவும் அமையவேண்டும் என்றால் உங்களுக்கு உங்கள் உடலை பற்றிய விழிப்புணர்வும், ஆடை தேர்வு பற்றிய அடிப்படை அறிவும் அவசியம் தேவை.
Average Rating