வறுமையில் சிக்கித் தவிக்கும் வடக்கு, கிழக்கு..!! (கட்டுரை)
இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஐந்து மாவட்டங்களே, ஒக்டோபர் மாத இறுதியில் வெளியிடப்பட்டுள்ள விவரங்களின் பிரகாரம், நாட்டின் வறுமை நிலையில் “முன்னிலை” வகிக்கின்றன.
இந்நிலை தொடர்பாக, வடக்கு, கிழக்குக்கு அண்டையில் விஜயம் செய்த, இலங்கை மத்திய வங்கியின் வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர். சிறிபத்மநாதன் கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படும் ஐந்து மாவட்டங்கள் முன்னிலை பெற்று கொடிய வறுமை மாவட்டங்களாக இனங்காணப்பட்டிருக்கும் விடயம், அனைவரதும் கரிசனைக்கு உள்வாங்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலப் பகுதியில் நடைபெற்ற ஆயுதபோரில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் கொடிய மன உளைச்சல்களையும் பெரும் பொருளாதார இழப்புகளையும் சந்தித்துள்ளனர்.
ஆனாலும், அதிகப்படியாக அழிவுகளை எதிர்கொண்டு, இன்னமும் மீள முடியாமல், இந்த மாவட்டங்கள் திணறுவதையே புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
நுண் நிதி கடன்களிலிருந்து மீள முடியாத நிலை
2009 ஆம் ஆண்டு மே மாதம், ஆயுதப் போர் மௌனிக்கப்பட்டு, அதன்பின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகள், மீள்குடியமர்வுக்கு அன்றைய மஹிந்த அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டது. அந்தக் காலப் பகுதிகளில், மக்கள் தமது வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து, ஏதிலிகளான நிலையில் காணப்பட்டனர்.
அவர்கள் தங்கள் வாழ்வை மீள ஆரம்பிக்க, குறிப்பிட்ட அளவிலான நிதி ஆதாரம் தேவைப்பட்டது. இந்நிலையில், அன்றைய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிதி உதவிகள், அவர்களது தேவைகளை அல்லது கேள்விகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக அமையவில்லை.
அவ்வேளையில், தெற்கை மையமாகக் கொண்ட பல நிதி நிறுவனங்கள், வடக்கு, கிழக்கு நோக்கிப் படை எடுத்தன. அந்த மாகாணங்களைத் தங்களது கடன் முற்றுகைக்குள் ஆக்கிரமித்தன என்று கூடக் கூறலாம்.
அத்கைய நிதி நிறுவனங்கள் பல்வேறு வகையிலான கடன்களை மக்களுக்கு வழங்கினார்கள். உயர்ந்த சதவீத வட்டிக் கொடுப்பனவு மற்றும் கடன்களை மீள செலுத்தும் தன்மை என்பவற்றைப் பொருட்படுத்தாது பலர் கடன்களைப் பெற்றனர். நிதி நிறுவனங்களும் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டன.
பெண்களைக் குழுக்களாக்கி, அவர்களை இலக்கு வைத்து, பல கடன்களை வழங்கின. இவ்வாறான நிலை இன்று, பலரைத் தற்கொலை வரை கொண்டு சென்று விட்டுள்ளது. தாங்கள், தமது உடலை வருத்தி, அவ்வாறான நிறுவனங்களுக்கு மறைமுகமாக உழைத்துக் (அடித்துக்) கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் எனப் பலர் இன்று உணர்ந்திருக்கின்றனர்.
‘கடன் இல்லா கஞ்சி, கால் வயிறு என்றாலும் அது அமிர்தம்’ என்பார்கள். ஆனாலும், இவர்கள் ஒரு கடனை அடைக்க, பிறிதொரு கடன் பெறுகின்றனர் அல்லது நகைகளை அடைவு வைத்துக் கடன்களையும் கட்டுப்பணத்தையும் கட்டி வருகின்றனர். இவர்கள், கடன்களிலிருந்து மீள முடியாமல், அந்தக் கடன் நஞ்சு வட்டத்துக்குள்ளேயே சு(உ)ழன்று கொண்டிருக்கும் ஒரு பரிதாப நிலையில் காணப்படுகின்றனர்.
தொழில் வாய்ப்புகளும் தொழிற்சாலைகளும்
நாட்டில் ஓடுகளின் கேள்விகளை நிவர்த்தி செய்வதற்காக, 1968ஆம் ஆண்டு முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. போருக்கு முன்னரான காலப்பகுதியில், பலருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல வேலைவாய்ப்புகளை இந்தத் தொழிற்சாலை வழங்கியிருந்தது.
தற்போது மக்களின் சுகாதார நலன் கருதி, வீடுகளுக்குக் கூரைத் தகடுகளைக் காட்டிலும், ஓடுகளைப் பயன்படுத்துவது விரும்பத்தக்கது என வலியுறுத்தப்படுகின்றது. இவ்வாறான சூழலில், எதிர்வரும் காலங்களில் ஓட்டுக்கான கேள்வி அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
ஆனால் மறுபுறத்தே, தற்போது கூட, அந்தத் தொழிற்சாலையை மீளஇயங்க வைப்பதற்கான எவ்வித செயற்பாடுகளும் முன்முயற்சிகளும் முன்னெடுக்கப்படவில்லை. தொழிற்சாலை அமைந்துள்ள 13 ஏக்கர் காணி பற்றைக் காடாக காட்சி அளிக்கின்றது. ஆகவே, தொழிற்சாலையை விரைவாக இயங்க வைக்க வேண்டியது மிகமிக அவசியமாக உள்ளது.
அதேபோல, காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை போன்ற தொழிற்சாலைகளை மீள இயக்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எவையேனும் இதுவரை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.
மேலும், போருக்கு பின்னர், இம் மாவட்டங்களில் பல கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் கணிசமானவை தென் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்தகாரர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்கள் அப்பணிகளில் ஈடுபடுத்துவதற்கென, தங்கள் பகுதிகளிலிருந்தே பணியாளர்களை அழைத்து வருவதால், உள்ளூர் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.
இந்த மாவட்டங்களில் உள்ளவர்களின் ஜீவனோபாயத் தொழிலாக விவசாயம், வேளாண்மை, மீன்பிடி, கால்நடை வளர்ப்பு ஆகியவை உள்ளன. மேலும், இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற பால், நெல், கடல் உணவுகள் அப்படியே மாவட்டங்களை விட்டு வெளியே செல்கின்றன.
மாறாக, அங்கேயே தொழிற்சாலைகளை நிறுவி, பாலை மூலப் பொருளாகக் கொண்டு பல முடிவுப் பொருட்களை உற்பத்திசெய்து சந்தைக்கு விநியோகிப்பதன் மூலம் பல ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
அது போலவே, பெரிய அளவிலான அரிசி ஆலைகள் மற்றும் கடல் உணவு பதனிடும் தொழிற்சாலைகளை உருவாக்கி, வேலை வாய்ப்புகளைப் பெருக்க வேண்டிய கடப்பாடு நிறையவே உண்டு. முன்னர் இயங்கிய தொழிற்சாலைகளே உறங்கிக் கொண்டு இருக்கையில் புதிய தொழிற்சாலைகள் விழிக்குமா?
மேலும், படையினர் வேளாண்மை செய்கையில் ஈடுபடுவதும் அவற்றைச் சந்தைப்படுத்துதலிலும் ஈடுபடுவது, சராசரி பொது மக்கள் வாழ்வில், பல வழிகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
வடக்கு, கிழக்கு கடல் வளத்தை கொள்ளையடிக்கும் தென்பகுதி மீனவர்கள்
கடந்த செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் கிழக்கு கப்பலடிப் பகுதியில், கரைவலைத் தொழிலில் ஈடுபட்ட தென் பகுதி மீனவர்களுக்கு சுமார் 5,000 கிலோ கிராம் பாரை மீன்கள் அகப்பட்டுள்ளன.
அவர்கள் முள்ளிவாய்க்காலில் நான்கு வாடிகளை அமைத்து அங்கு தங்கித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் இதற்கு உழவு இயந்திரம் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. குறித்த தினத்தில் பிடிபட்ட மீன்களை, அவர்கள் ஐந்துக்கும் மேற்பட்ட குளிரூட்டி வாகனங்களில் கொழும்புக்கு அனுப்பி, ஒரு நாளிலேயே இலட்சாதிபதிள் ஆகிவிட்டார்கள்.
இதைவிட, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் எங்கும் பல நூற்றுக் கணக்கான தென்பகுதி மீனவக் குடும்பங்கள் குடியேறி விட்டார்கள்; குடியேற்றப்பட்டு விட்டார்கள். குடியேறியவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில், நல்லாட்சி அரசாங்கம் அவர்களுக்கு வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, பக்கபலமாக இருந்து வருகின்றது.
போர் நடைபெற்ற காலங்களில், வடக்கு மற்றும் கிழக்கு கடலில் அவ்வப்போது சண்டைகள் மூளும். அப்பாவி தமிழ் மீனவர்கள் பலர், கடற்தொழிலின்போது, கடற்சண்டைகளுக்கு நடுவில்சிக்கி, கடல் அன்னையின் மடியுடன் சங்கமித்தும் உள்ளனர்.
இந்த மாட்டங்களைப் பூர்வீகமாகக் கொண்ட, போரில் கடுமையாகவும் முழுமையாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள், தமது பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியாமல் தினம் தினம் தவிர்க்கின்றனர்.
ஆனால், இன்று நிலைமையோ, போரின் வாசமே சற்றும் அறியாத, குண்டுகளின் வெடி ஓசை கேட்டிராத, ஏனைய தென்பகுதி பெரும்பான்மை இன மீனவர்கள், இங்கு சட்ட விரோதமாகக் குடியேறி, நாளாந்தம் இலட்சங்களில் சம்பாதிக்கின்றனர்.
இலங்கைத் தீவின், மொத்தக் கடல் வளத்தில் ஏறத்தாள மூன்றில் இரண்டு பகுதி, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு உடையதாக அமைந்து உள்ளது. 1983 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலங்களில், நாட்டினுடைய மொத்த கடல் சார்ந்த உணவுத் தேவையின் கணிசமான தேவையை, இந்த இரு மாகாணங்களும் பூர்த்தி செய்திருந்தன என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டியதாகும்.
அவ்வாறான வலுவையும் வளத்தையும் கொண்டிருந்த சமூகம், இன்று வறுமையில் முன்னணி வகிப்பது துயரத்திலும் துயரம்.
யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில், யுத்தம் இவர்களது வளமான வாழ்வுக்குத் தடையாகக் காணப்பட்டது. யுத்தம் முடிந்த பின்னராவது அதற்கு விடை கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
பெருவாரியான நில அபகரிப்பு
உதாரணமாக, முருகேசு என்பவருக்கு கேப்பாபுலவில் இரு ஏக்கர் தென்னம் தோட்டம் இருக்கின்றது எனவும் அதில் நூறு தென்னை மரங்கள் இருக்கின்றன எனவும் எடுத்துக் கொள்வோம். சராசரியாக ஒரு மரத்திலிருந்து ஒரு நாளில் ஒரு தேங்காய் வந்தாலும் நூறு தேங்காய்களை அவர் நாளாந்தம் பெறுவார்.
தற்போதைய விலைகளின் பிரகாரம் ஒரு தேங்காய் சராசரி 70 ரூபாய் வீதம் விற்றாலும் ஒரு நாள் அவரது ஆகக் குறைந்த வருமானம் ஏழு ஆயிரம் ரூபாய்.
ஆனால், தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் பல ஆயிரம் ஏக்கர் மக்களது காணிகள், படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆதலால், அவரது வருவாய் தடைப்படுகின்றது. அதைவிட வேளாண்மைக் காணிகள், நீர்நிலைகள் (குளங்கள்) எனப் பலதும் படையினரின் ஆக்கிரமிப்புக்குள் அகப்பட்டுள்ளன.
பெரும் போர் மற்றும் தொடர்ச்சியான பொருளாதார் தடைகள் நிலவிய கால கட்டத்தில் கூட, ஓரளவு தன்னிறைவுடன் காணப்பட்ட இந்த மாவட்டங்கள், போர் முடிவுற்றதாகக் கூறப்படும் இந்நாட்களில், வறுமையில் வாடுவது ஏற்க முடியாத விடயம். இவ்வாறாக வறுமைக்கான வலுவான காரணங்கள், இம்மாவட்டங்களில் வட்டம் அடித்துக் கொண்டு இருக்கின்றன.
ஆகவே, போருக்குப் பின்னதாக, அரசாங்கத்தால் அங்கு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தனது இலக்கை அடையவில்லை; அவர்களது வறுமையை அடித்து விரட்டவில்லை; வளமாக வாழ வழி சமைக்கவில்லை. நீடித்த நிலைபேறான அபிவிருத்திப் பெறுபேற்றை ஏற்படுத்த முடியாமல் போய் விட்டது.
ஏனெனில், போரால் முற்றிலும் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள், விருப்பங்கள், அபிலாஷைகள் இனம் காணப்படாமல், அவை பூர்த்தி செய்யப்படாமல், எவ்வாறு உண்மையான அபிவிருத்தியை அடைவது?
இந்நிலையில், ‘வளம் மிக்க இலங்கை 2025’ என்கிற கொள்கைத் திட்ட முன்மொழிவு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அந்த இலக்கை எட்டுவதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களது பின்னடைவு இயைந்து கொடுக்குமா, அல்லது முரண்டு பிடிக்குமா?
இழந்த உயிர்களைத் தவிர, அனைத்தையும் மீளவழங்குவோம் என சூளுரைத்தார்கள் முன்னாள் ஆட்சியாளர்கள். நல்லாட்சி நடப்பதாகக் கூறுகின்றார்கள் இந்நாள் ஆட்சியாளர்கள். ஆனால், தமிழ் மக்களோ தங்களது கண்ணீரை அடைகாக்கும் பரிதாப நிலையே, எட்டு வருடங்களாக நீடிக்கின்றது.
வடக்கு, கிழக்கு வாழ் மக்கள், வாழ்வு பொருளாதார வறுமைக்குள் மட்டும் சிறைப்பிடிக்கப்படவில்லை. அரசியல் வறுமை, ஆட்சியில் வறுமை, மகிழ்ச்சியில் வறுமை; ஆதலால் அவர்களது மீட்சியிலும் வறுமை என வறுமைப் பட்டியல் தொடர்ந்து நீள்கின்றது.
1948 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை மாறி மாறி நாட்டை ஆண்ட சிங்கள ஆட்சியாளர்களது அரசியல் வறுமையே இம்மக்களின் அனைத்து வறுமைக்கும் பிரதான காரணமாகும்.
கொழும்பு அரசாங்கத்தின் உளப்பாங்கில் நேர்மையான மாற்றங்கள் தோற்றம் பெற்றால், மட்டுமே இவர்களது வறுமை ஒழியும். இல்லையேல் வறுமையும் வெறுமையும் தொடர்ந்து நீடிக்கும்.
Average Rating