வேலைக்கு செல்லும் மகளிருக்கான உடல்நலக் கையேடு..!!
தலைவலி, முதுகுவலி போன்ற சாதாரண உடல் உபாதைகள் தொடங்கி மனநலம் சார்ந்த பிரச்னைகள், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகிய தீவிர நோய்கள் வரை பணிக்குச் செல்லும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் பலர், தங்களுக்கு ஒரு நோயின் அறிகுறி ஏற்பட்ட பின்னர்கூட, நேரமின்மை அல்லது அலுவலகப் பணிச்சுமை காரணமாக மருத்துவரிடம் செல்வதில்லை. ஆனால், என்னதான் பரபரப்பான வாழ்க்கை முறை என்றாலும், பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டியது மிகவும் அவசியம்.
* வேலைக்குச் செல்லத் தொடங்கும் ஆரம்பகாலத்தில், உணவைப் பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிடப் பழகுவது நல்லது. இதை, `ஸ்ப்ளிட் – மீல் ப்ளான்’ (Split-meal plan) என்று கூறுவோம். காலையில் இட்லி, தோசை போன்ற உணவுகள், 11 மணியளவில் பழரசங்கள் அல்லது பழங்கள் சாப்பிடுவது, மதியம் கொஞ்சம் சாதம், நிறைய காய்கறிகள், மாலை நேரத்தில் சுண்டல் போன்ற ஸ்நாக்ஸ், இரவு உணவாக வரகு, சாமை உணவுகளைச் சாப்பிடலாம்.
* இன்று பெரும்பாலான பெண்கள் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், தொடர்ந்து அப்படி ஒரே பொசிஷனில் அமர்வது நல்லதல்ல. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து ஐந்து நிமிடங்களுக்கு நடந்துவிட்டு வரலாம். இது உடலை உற்சாகமாக வைத்திருக்கும்.
* தினமும் அரைமணி நேரம் யோகா அல்லது தியானம் செய்வது நல்லது.
* இரவு நேரம் ஷிஃப்ட் முறையில் வேலை பார்க்கும் பெண்கள், விழித்திருப்பதற்காக அடிக்கடி காபி, டீ அருந்துவார்கள். இதனால், உடல் எடை கூடுவதற்கு வாய்ப்புண்டு என்பதால் இவற்றைத் தவிர்க்கவும்.
* ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் மூன்று கிலோமீட்டர் அல்லது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இது கட்டாயம் நடக்க வேண்டிய தூரம். தவிர, குறைந்த தூரமுள்ள இடங்களுக்கு டூ வீலர் பயன்படுத்தாமல், நடந்தே செல்வது அல்லது சைக்கிளில் செல்வது எனப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளலாம்.
* நைட் ஷிஃப்ட் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு, அவர்களின் வேலை நேரம், மொத்த ‘பயலாஜிக்கல் நேரத்தை’யும் மாற்றும்போது மாதவிடாய்ப் பிரச்சனை ஏற்படலாம். உடற்பயிற்சி, சத்தான உணவுகள் மூலம் இதை ஓரளவு சீராக்க முடியும்.
* சில பெண்களுக்குத் தொடர்ச்சியாகக் கணினித் திரையைப் பார்த்துக்கொண்டிருப்பது கண் எரிச்சலைத் தரும். இதைத் தவிர்க்க, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கணினியின் ஒளி உமிழும் திரையில் இருந்து கண்களை விலக்கி, உள்ளங்கைகளால் கண்களை மூடி, அந்தச் சில நிமிட அடர் இருட்டின் மூலம் அவற்றுக்கு ஓய்வு கொடுக்கலாம்.
* அலுவலகத்தில் கர்ப்பிணிகள் நீண்ட நேரம் கால்களைத் தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தால், கால்கள் லேசாக வீங்கும். டீ டைம், ஸ்நாக்ஸ் பிரேக் போன்ற நேரங்களில் சிறிது நேரம், சிறிது தூரம் நடந்துவிட்டு வந்தாலே சரியாகிவிடும்.
* கர்ப்பிணிகள் சிலருக்கு எந்த மாதம் வரை வேலையைத் தொடரலாம் என்ற குழப்பம் வரும். இது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்தும் மாறுபடும். வேலை செய்யும்போது உடலில் பெரிதாகச் சிரமங்கள், அசௌகரியங்களை எதிர்கொள்ளவில்லை எனில் ஒன்பதாவது மாதம்வரைகூட வேலைக்குச் செல்லலாம்.
* வேலைக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் மற்றுமொரு முக்கியப் பிரச்சனை, முதுகுவலி. அலுவலகத்தில் அமரும்போதும் டூ வீலர் ஓட்டும்போதும் முதுகுப்பகுதி, நேராக இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும். நடப்பதும் தேவைப்பட்டால் மசாஜ் செய்துகொள்வதும் முதுகுவலிக்குத் தீர்வு தரும்.
* பெண்களுக்கு ஏற்படும் தலைவலிக்கு, மாதவிடாய் காலம், மன அழுத்தம், சரியாகச் சாப்பிடாதது எனப் பல காரணங்கள் இருக்கும். உரிய மருத்துவ ஆலோசனையுடன் அந்தக் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை எடுக்கவும்.
Average Rating