அரிசி ஏற்றுமதிக்குத் தடை: இந்தியாவுக்கு அமெரிக்கா கண்டனம்
அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை செய்துள்ளதை அமெரிக்கா கடுமையாகக் குறை கூறியுள்ளது. அரிசி உள்ளிட்ட உணவுதானிய பொருள்கள் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்க உயர் அதிகாரி கிறிஸ்டோபர் பாடில்லா கூறியுள்ளார். உணவுப் பொருள்களின் விலை உயர்ந்ததை அடுத்து விலையை குறைக்கவும் உணவுக் கையிருப்பை உறுதி செய்யவும் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சாதா ரக அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டது. அதேசமயம் கோதுமை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இது தவிர மேலும் சில உணவுப் பொருள்களின் ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு பொருள் விலை உயர்வு மற்றும் உணவுத் தட்டுப்பாடு விஷயத்தில் நாங்கள் உரிய கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால் உணவுப் பொருள் ஏற்றுமதிக்கு இந்தியா தொடர்ந்து தடையை நீடித்து வந்தால் அது அண்டை நாடுகளில் கடும் உணவுத் தட்டுப்பாட்டை உண்டாக்கி விலை உயர்வுக்கு வழி வகுக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். ஏற்றுமதிக்குத் தடை விதிப்பது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று அவர் கூறினார். வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்ய இரு பெரும் நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும் ஏற்றுமதி தடைகளை நீக்க வேண்டும். ஏற்றுமதியால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் விலை மேலும் அதிகரிக்கும் என்று கிறிஸ்டோபர் கூறினார். உலக அளவில் நிலவும் உணவுத் தட்டுப்பாட்டை போக்க இந்தியா கை கொடுக்க வேண்டும். பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது. இந்தியா அரிசி உற்பத்தியில் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கோதுமை உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும் மக்காச்சோள உற்பத்தியில் 7-வது இடத்தில் உள்ளது.
அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்று அமெரிக்கா மட்டுமின்றி வேறு பல நாடுகளும் கோரிக்கைவிடுத்துள்ளன. ஏற்றுமதிக்கான தடை நீண்ட நாள்கள் நீடிக்காது உள்நாட்டில் விலை குறைந்தால் தடை நீக்கப்படும் என்று இந்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் கூறினார்.
தற்போது உலக அளவில் நிலவும் உணவுத் தட்டுப்பாடுக்கு இந்தியாவும் சீனாவுமே காரணம் என்று அமெரிக்கா ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியால் அந்நாட்டு மக்கள் அதிகம் சாப்பிடுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் கூறினார்.
இப்போது ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. ஏற்றுமதி தடையை நீக்கினால் இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதோடு விலையும் உயரும் அபாயம் உள்ளது. தேர்தல் நடக்க உள்ள ஆண்டில் பெட்ரோல் விலை உயர்வை அடுத்து உணவுப் பொருள்களின் விலை உயர்வு மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating