புளொட் மத்தியகுழு உறுப்பினர் பாருக் கடத்தலில் மாட்டிக்கொண்டு பூசிமெழுகும் புலிகள்
கடந்த வருடம் 12.12.2005 அன்று புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் சின்னத்தம்பி கணேசலிங்கம் (பாருக்) வவுனியாவிலிருந்து புலிகளால் கடத்திச்செல்லப்பட்டார். அவரது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு வாகனங்கள் புளொட் அமைப்பினரின் உதவியுடன் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் தமது கட்சியின் மத்திய குழு உறுப்பினரை கடத்தியது புலிகள் தான் என அடித்துக் கூறினார். பாருக் மக்களுடன் பழகிய முறையாலும், மக்கள் மத்தியிலேயே வாழ்ந்து அந்த மக்களுக்காக உண்மையாக சேவையாற்றியவர் என்பதாலும் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வவுனியா திருநாவற்குளம் பகுதி மக்கள் ஊர்வலமாக வைரவபுளியங்குளத்தில் உள்ள யுத்தநிறுத்த கண்காணிப்புக்குழு அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவினரிடம் பாருக்கை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரும் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
பாருக் புலிகளால் கடத்தப்பட்டுள்ளார் என்பதற்கான ஆதாரங்களை ஒரளவிற்கு பெற்றுக்கொண்ட யுத்தநிறுத்த கண்காணிப்புக்குழுவினர் என்றுமில்லாதவாறு யுத்தநிறுத்த கண்காணிப்புக்குழுவினர் கிளிநொச்சி சென்று அவரது விடுதலை குறித்து புலிகளுடன் பேசினர். ஆனாலும் அவர் விடுவிக்கப்படவில்லை.
இத்தனை ஆரவாரங்களுக்கும் மத்தியில் அமசடக்காக இருந்த புலிகள் தங்களது பினாமி இணையத் தளங்கள் மூலம் இப்போது பாருக் புளொட் அமைப்பின் தலைவருடன் முரண்பட்டுக் கொண்டு தானாகவே வன்னிக்கு வந்திருக்கிறார் என்று ஒரு கதையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். அவர் அங்கு மனைவியுடன் இயல்பு வாழ்வில் ஈடுபட்டுள்ளார் என்று காட்சியும் கானமும் பாணியில் ஒரு கதையையும் சோடித்து சொல்லி இருக்கிறார்கள்.
வன்னியில் சந்தைக்கு போய் காய்கறி வாங்கி வந்து இயல்பாக குடும்பம் நடாத்தும் பாருக்கும் அவரது மனைவியும் அவர்களது குழந்தைகளான சிம்சுபன் (9வயது) சண்முகியை (வயது 7) பரிதவிக்க விட்டு சென்றதேன் என்ற கேள்வியை பலரும் கேட்டிருக்கிறார்கள்.
பாருக்கை விடுதலை செய்யக் கோரி போராடிய மக்களிடம் பாருக் உயிருடன் இருக்கிறார் அவர் எங்களுடன் வந்து இணைந்திருக்கிறார் என்ற உண்மையை புலிகள் அப்போதே ஏன் சொல்லவில்லை என்பது பாருக்கை விடுதலை செய்யக் கோரி நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவரின் கேள்வியாகும்.
மனைவியிடம் கூட தனது முடிவை சொல்லாமல் போன பாருக் மனைவியும் உறவினர்களும் எங்களையும் அழைத்துக் கொண்டு (ஊர்மக்கள்) ஊர்வலம் போராட்டம் என்று போனபோது புலிகளுடன் விரும்பிச் சென்ற பாருக் ஏன் அந்த ஊர்வலத்தை தடுத்து நிறுத்த முயலவில்லை என்பது ஊர்வலத்தில் கலந்து கொண்ட மற்றொருவரின் வாதம்.
பாருக் புளொட் அமைப்பின் ஏனைய உறுப்பினர்கள் போன்று புளொட் அமைப்பின் அலுவலகத்தில் தங்கியிருந்தவரில்லை. அவர் தனது குடும்பத்தினருடன் மக்கள் மத்தியில் இருந்து கொண்டு தனது விருப்பப்படி வேலைகளில் ஈடுபட்டிருந்தவர். சுதந்திரமாக செயற்பட்டவர். எனவே அவர் புளொட் அமைப்புடன் முரண்பட்டுக் கொண்டு வன்னி செல்ல வேண்டிய எந்த தேவையும் இல்லை என்கிறார் வவுனியாவில் வசிக்கும் புளொட் அமைப்பின் ஆதரவாளர்.
இவை எதற்குமே புலிகளின் சப்பைக்கட்டில் பதில் இல்லை. அவித்த மீன் கடலுக்குள் போய்விட்டது என்று புலிகள் சொன்னாலும் ஆமாம், ஆமாம் என்று அதனை பிரச்சாரப்படுத்துபவர்கள் இருக்கும் வரை இதுதான் நிலை. (நன்றி:- www.eprlf.net)
Average Rating