எப்போது விழித்துக் கொள்ளும் அரசாங்கம்?..!! (கட்டுரை)

Read Time:16 Minute, 15 Second

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இரு தலைவர்களின் கீழ், இவ்வரசாங்கம் உருவாக்கப்பட்டபோது காணப்பட்ட அதிகரித்த எதிர்பார்ப்புகளை, இவ்வரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பது உண்மையானது, அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அண்மைக்காலத்தில் இவ்வரசாங்கத்துக்கு எழுந்துள்ள சர்ச்சைகளும் நெருக்கடிகளும், அரசாங்கத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குட்படுத்தியிருக்கின்றன என்று கூறினால், அதைத் தவறென்று கூறமுடியாது.

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த இந்நெருக்கடி, இன்று (09) தீரலாம் என்று, பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கப்பல் வருவது தாமதமாகுமாயின், நாளை வரை, இப்பிரச்சினை இழுபட வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஒரு வாரத்துக்குப் பெற்றோல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கிடைப்பதென்பது, எப்படி இந்தளவுக்குப் பிரச்சினையாக முடியும்?

அதிலும் குறிப்பாக, இந்தியன் ஒயில் கம்பனி (ஐ.ஓ.சி) நிறுவனத்துக்கு, இலங்கைச் சந்தையில் ஆகக்கூடியது 20 சதவீதமான சந்தைக் கட்டுப்பாடு தான் இருக்கிறது எனக் கூறப்படுகிறது. இதை, பெற்றோலிய ஊழியர்களின் சங்கம் தெரிவிக்கிறது. ஆனால், தமக்கு 16 சதவீதமான கட்டுப்பாடு தான் இருப்பதாக, அந்நிறுவனம் கூறுகிறது. சில அமைச்சர்களோ, அது வெறுமனே 14 சதவீதம் என்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும், மிகக்குறைவான அளவையே, அந்நிறுவனம் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது.

அப்படியாயின், அந்நிறுவனத்தின் ஒரு தொகுதிப் பெற்றோல் வரத்து நிராகரிக்கப்பட்டால், எப்படி இந்தளவுக்கு நெருக்கடி ஏற்பட முடியும்? இக்கேள்வி, சாதாரண மக்களுக்கு மாத்திரமன்றி, அமைச்சர்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் காணப்படுகிறது என்பதை, அவர்களின் கருத்துகள் மூலமாகவும் அறிக்கைகள் மூலமாகவும் பார்க்க முடிகிறது.

பலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, பொது உணர்வுக்குத் தென்படுகின்ற காரணமாக, பெற்றோல் தட்டுப்பாடு வரப்போகிறது என்ற செய்தி, மக்களுக்குப் பரவியது; அதனால் அவர்கள், வழக்கத்தை விட அதிகமானளவு பெற்றோலைச் சேகரிக்க முயன்றனர்; இதனால் செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டது.

உண்மை இதுவென்றால் – அப்படித்தான் அமைச்சர்கள் கூறுகின்றனர் – யதார்த்தத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்க்காமை, யாருடைய தவறு? “பெற்றோல் பிரச்சினை என்பது ஏற்படாது, பதற்றப்பட வேண்டாம்” என்று, மக்களை நம்ப வைத்திருக்க வேண்டியது, யாருடைய பொறுப்பு?

“நாங்கள் சொல்வதை மக்கள் நம்புகிறார்கள் இல்லை” என அரசாங்கம் கூறுமாயின், “மக்களின் நம்பிக்கையை நாம் இழந்துவிட்டோம்” என்று அவர்கள் சொல்வதற்குச் சமனானது. மக்களை நம்பவைக்க வேண்டியது, மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் கொண்டுள்ள அரசாங்கத்துக்கு இலகுவான செயலாக இருக்க வேண்டுமல்லவா? ஆனால், அரசாங்கத்தால் அதைச் செய்ய முடியவில்லை.

சமூக இணையத்தளங்களைச் சேர்ந்தவர்கள், இந்நெருக்கடி தொடர்பாக வெவ்வேறு கருத்துகளைக் கூறுகின்றனர். ஊடகவியலாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கும் போது, “புதிய அரசமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடைபெற்று, அது தோல்வியடையுமாயின், அது இதனால் (பெற்றோல் நெருக்கடி) தான் என்பதை ஞாபகப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்” என்றார். பெற்றோல் நெருக்கடிக்கும் சர்வஜன வாக்கெடுப்புக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி, உங்களுக்கு எழ முடியும்.

ஆனால், இந்த நெருக்கடி, கார்களையும் சொகுசு வாகனங்களையும் கொண்டுள்ளவர்களை மாத்திரம் பாதித்திருக்கவில்லை. முச்சக்கரவண்டி மூலம் பிழைப்பு நடத்தும் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர்களைப் பாதித்திருக்கிறது; முச்சக்கர வண்டிகளை வாடகைக்குப் பெற்று ஓடும் மத்திய வர்க்க, வறுமையானவர்களைப் பாதித்திருக்கிறது; மோட்டார் சைக்கிளில் செல்பவர்களைப் பாதித்திருக்கிறது. அனைவருமே, அரசாங்கத்தின் மீது கடும் கோபத்துடன் காணப்படுகின்றனர் என்பதை மறுக்க முடியாது.

அதேபோல், இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ள ஒன்றிணைந்த எதிரணி உட்பட எதிர்த்தரப்புகள், “இவ்வரசாங்கத்துக்குச் செயற்றிறன் இல்லை” என நிறுவ முயல்கின்றன. இவ்வரசாங்கத்தால், அடிப்படையான பிரச்சினையைக் கூடத் தீர்க்க முடியாது என்பதை, மக்களின் மனங்களில் விதைக்க முயல்கின்றன. இதன்மூலம், அவ்வெதிர்த்தரப்புகள் பலமடைகின்றன; இது இறுதியில், அரசாங்கம் செய்ய முயலும் அனைத்தையும் எதிர்க்கும் மனநிலையை, மக்களுக்கு ஏற்படுத்தக்கூடும்.

ஆகவேதான், ஒன்றிணைந்த எதிரணி போன்ற, அதிகாரத்துக்காக எதையும் செய்யவும் சொல்லவும் தயாராக இருக்கின்ற குழுக்களுக்கு இடம்வழங்காமல், அவர்களைத் தோற்கடிப்பதென்பது, அரசாங்கத்தின் பொறுப்பல்லவா?

இப்பிரச்சினைகளுக்கெல்லாம் மகுடம் வைப்பதுபோல, கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சம்பவங்கள் – சிலர் அவற்றைக் கேலிக்கூத்துகள் என வர்ணிக்கக்கூடும் – மாறியிருந்தன. பெற்றோலை, வாகனங்களில் மாத்திரம் வழங்குமாறும், கொள்கலன்களிலும் போத்தல்களிலும் வழங்க வேண்டாமெனவும், பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சால், சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அன்று காலையில் வெளியிடப்பட்ட இச்சுற்றறிக்கையை, அமைச்சின் செயலாளர் விடுத்திருந்தார்.

இச்சுற்றறிக்கை நடைமுறைப்படுத்தப்படும் போது, நடுவீதியில் பெற்றோலின்றி நின்ற வாகனத்துக்கு, எவ்வாறு பெற்றோலைப் பெறுவது? வீட்டில் பெற்றோலின்றி நிற்கும் வாகனத்துக்காக, பெற்றோலை எவ்வாறு பெறுவது? இந்தக் கேள்விகள் தான், வாகன சாரதிகளால் எழுப்பப்பட்டன. கடுமையான எதிர்ப்பு, இத்திட்டத்துக்கு முன்வைக்கப்பட்டது.
அன்று மாலையே, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இச்சுற்றறிக்கையை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். அதாவது, காலையில் செயலாளரால் விடுக்கப்பட்ட சுற்றறிக்கை, அன்று மாலையில், அமைச்சரால் வாபஸ் பெறப்பட்டது. இது, இந்தப் பெற்றோல் பிரச்சினையை, அரசாங்கம் எவ்வாறு கையாண்டது என்பதற்கான, மிகச்சிறந்த உதாரணமாக அமைந்தது.

அரசாங்கத்தின் செயற்பாட்டில் அல்லது நோக்கத்தில், மோசமான நோக்கங்கள் இருக்கின்றன போன்று தெரியவில்லை. விடுக்கப்பட்ட சுற்றறிக்கை, மக்கள், பெற்றோலை வாங்கி, தேவையற்ற விதத்தில் சேமித்து வைப்பதைத் தடுப்பதற்காக, இது மேற்கொள்ளப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், அதன் மறுபக்கம் பற்றி ஆராயாமலேயே இது விடுக்கப்பட்டது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. மேலே, வாகன சாரதிகளால் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் பற்றி, முன்னரே எதிர்வுகூறி, அவற்றுக்கேற்ற பரிகாரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

உதாரணமாக, யுத்த காலத்தில், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில், எரிபொருள் தட்டுப்பாடு நிலவியது. அப்போது, குடும்பப் பதிவு அட்டைக்கு என, குறித்தளவு மண்ணெண்ணெய் வழங்கப்படும். அதேபோன்று, வாகனப் பதிவுக்கோ அல்லது வேறு ஏதாவது ஒன்றுக்கோ, குறித்த அளவு பெற்றோல் மாத்திரமே வழங்கப்பட முடியும் என்ற திட்டத்தைக் கொண்டுவந்திருக்கலாம். அப்படிச் சிந்திக்கும் போது, ஏற்கெனவே ஒரு வாகனம் எரிபொருள் பெற்றுவிட்டது என்பதை எவ்வாறு அடையாளங்காண்பது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டியதும் அவசியமானது. அதற்கான விடையைக் கண்டுபிடிப்பது, கடினமானது என்பது யதார்த்தம். இது, சிக்கலான பிரச்சினை என்பது தெளிவானது. அதனால் தான், “கொள்கலன்களின் பெற்றோல் இல்லை” என்ற “எளிமையான தீர்வு”, இதற்குரிய தீர்வு கிடையாது.

இச்சுற்றறிக்கை விடயமொன்றும், முதற்தடவை கிடையாது. அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட ஏராளமான முன்மொழிவுகள், பின்வாங்கப்பட்ட வரலாற்றை, தொடர்ச்சியாகப் பார்த்து வருகிறோம். வீதிப் போக்குவரத்து விதி மீறல்களுக்கு 25,000 ரூபாய் தண்டம் என்ற அறிவிப்பு; இலங்கை துறைமுக நகரத் திட்டத்தை இல்லாது செய்யப் போவதாக வழங்கிய தேர்தல் வாக்குறுதி; சைட்டம் தொடர்பில் தொடர்ச்சியாக வழங்கிய வாக்குறுதிகள்; இலங்கை குற்றவியல் சட்டத்தில் மேற்கொள்வதற்குத் திட்டமிட்ட திருத்தங்கள்; பெறுமதிசேர் வரியிலும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியிலும் மேற்கொண்ட திருத்தங்கள் என, ஒரு முடிவை எடுத்துவிட்டு, பின்னர் அவற்றில் பின்வாங்கிய ஏராளமான சந்தர்ப்பங்களை, நாங்கள் கண்டுவந்திருக்கிறோம்.

மேலே கூறப்பட்ட பல கொள்கை ஏற்பாடுகள் மீது, ஒருவருக்கு ஏற்புடைமை இருக்கலாம், இல்லாமலிருக்கலாம். ஆனால், மேலே குறிப்பிட்டவற்றில் எவையும், மோசமான எண்ணங்களை மனதிற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட அல்லது மேற்கொள்ளப்பட முனையப்பட்ட திருத்தங்கள்/மாற்றங்கள் கிடையாது. உறுதியுடைய அரசாங்கமாக இருந்தால், மேலே குறிப்பிட்டவற்றைச் சிந்தித்தே முடிவெடுத்திருந்தால், அம்முடிவுகளில் உறுதியாக இருந்திருக்க வேண்டும்.

மாறாக, எப்போதெல்லாம் அழுத்தங்கள் வழங்கப்படுகின்றனவோ, அப்போதெல்லாம் அவ்வழுத்தங்களுக்கெல்லாம் அடிபணிவதென்பது, ஆரோக்கியமான நிலைப்பாடு கிடையாது. இது, தலைமைத்துவத்தில் காணப்படும் பலவீனத்தைக் காட்டுகிறது. அதேபோல், தங்களுடைய திட்டங்கள் பற்றிய விவரங்களையும் தகவல்களையும், மக்களிடத்தில் ஒழுங்காகக் கொண்டு சேர்க்காத, மக்கள் தொடர்பாடலில் காணப்படும் பிரச்சினையாகவும் இருக்கிறது.

பெற்றோல் விவகாரத்தில், முடிவெடுத்தலில் எந்தளவுக்குப் பலவீனம் காணப்பட்டதோடு, அதைவிட அதிகமாக, மக்கள் தொடர்பாடலில் பலவீனம் காணப்பட்டது. பிரச்சினை தலைக்கு மேல் வந்த பின்னர், சமாளிப்பதில் ஈடுபடுவது என்பது, நெருக்கடிநிலை முகாமைத்துவம் கிடையாது. அது, நெருக்கடிநிலை முகாமைத்துவத்தில் ஓர் அங்கமே. நெருக்கடிநிலை முகாமைத்துவத்தின் முக்கிய அம்சமாக, பிரச்சினையை வரவிடாமல் தடுப்பதுவும், பிரச்சினை வந்த பின்னர் ஆரம்பத்திலேயே அதை முடிப்பதுவும் காணப்படுகின்றன.

பெற்றோலிய ஊழியர்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போகிறார்கள் என்று, குறுஞ்செய்தி மூலமாகப் பொய்யான தகவல்கள் அனுப்பப்பட்டன என, அரசாங்கம் இப்போது சொல்கிறது. அவ்வாறெறென்றால், அவ்வாறான குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்ட உடனேயே, அவற்றை நிறுத்துவதற்கு, என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? அவ்வாறான குறுஞ்செய்திகளை, மக்கள் நம்பாமலிருப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

எல்லாமே உச்சநிலையை அடைந்த பின்னர், விசாரணை செய்யப் போவதாகவும் ஆணைக்குழு அமைக்கப் போவதாகவும் அறிவிப்பது, சரியான நடைமுறை கிடையாது. அதனால், பலனும் கிட்டப் போவதில்லை. இதை, எந்தளவுக்கு விரைவாக இந்த அரசாங்கம் உணர்கிறதோ, அந்தளவுக்கு நல்லதாக அமையும்.

நாட்டின் நீண்டகால அரசியல் என்பதுவும் முன்னேற்றம் என்பதுவும் எந்தளவுக்கு முக்கியமானவையோ, அவற்றைவிட அரசாங்கத்துக்கு, விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை வெல்வது அவசியமானது. அதைப் புரிந்துகொண்டு நடக்கத் தவறினால் என்ன நடக்குமென்பது, அரசாங்கத்துக் தெரியாமலிருக்க வாய்ப்புகளில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நவம்பர் 24-ந்தேதி நமீதாவுக்கு திருமணம்..!! (வீடியோ)
Next post 19 வயது மாணவி இசையில் உருவாகி இருக்கும் ஆண்டனி..!!