புதிய அரசமைப்பை ஆதரிப்போர் கொல்லப்பட வேண்டுமா?..!! (கட்டுரை)
தமிழ் மக்களுக்கு சலுகை வழங்க முற்படுவோர், கொல்லப்பட வேண்டும் என்ற மனோநிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள், பொதுவான ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனரா என்ற சந்தேகம் எழுகிறது.
இது, கடந்த ஒரு மாத காலத்தில் அவர்கள் வெளியிட்ட கருத்துகளாலும்
அக்கருத்துகளுக்கான அவர்களின் ஆதரவாலும் தெரியவருகிறது.
உத்தேச புதிய அரசமைப்பை வரைவதற்காக நாடாளுமன்றம், அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்டு, அதன் கீழ் நியமிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவினால் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கை விடயத்தில், மஹிந்தவின் அணியினர் வெளியிட்டு வரும் கருத்துகள் மூலமே, அவர்களது இந்த கொலைகார மனோபாவம் வெளிவரத் தொடங்கியிருக்கிறது.
அவர்களில், முன்னாள் வீடமைப்புத்துறை அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச, நாடாளுமன்றத்தின் மீது குண்டெறிய வேண்டும் எனத் தெரிவித்திருந்த கருத்தை, நாம் கடந்த வாரம் அலசினோம்.
ஆனால், அவரது கூற்றை அடுத்து, அதற்கு ஆதரவாக, மஹிந்த அணியிலுள்ளவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள், ஒருவித வெறுப்பைத்தான் அரசியல் நாகரிகம் தெரிந்த எவர் மனதிலும் ஊட்டுகின்றன. ஏனெனில், அவை கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளாமல், கருத்துகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுகின்றன.
முதலாவதாக விமல் வீரவன்சவின் கட்சியின் பிரதித் தலைவரான ஜயந்த சமரவீர தான், தமது தலைவiரின் குண்டு எறியும் உரைக்கு எதிர்ப்பு கிளம்பிய போது, அவரைப் பாதுகாக்க முன்வந்தார்.
அதற்காக அவர், வீரவன்சவின் கருத்தை ஆமோதித்து, ஒரு கூட்டத்தில் உரையாற்றியிருந்தார். ஆனால் அவர், விமலைப் போலன்றி, வார்த்தைகளை அளந்தே பேசியிருந்தார்.
விமல், “நாடாளுமன்றத்தின் மீது குண்டெறிய வேண்டும்” என்று கூறினாலும், ஜயந்த சமரவீர, சட்ட சிக்கலில் மாட்டிக் கொள்ளாதவாறு, “நாடாளுமன்றத்தின் மீது குண்டுகள் விழ வேண்டும்” என்றுதான் கூறினார்.
அதையடுத்து, மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் ஊடகத்துறை அமைச்சராக இருந்த கெஹெலிய ரம்புக்வெலவும், மஹிந்த அணியின் கண்டி மாவட்டத் தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலும் அமுனுகமவும், வீரவன்ச கூறியதை ஆமோதித்துக் கூட்டங்களில் உரையாற்றியிருந்தனர்.
கெஹெலிய, “தற்போது விவாதிக்கப்பட்டு வரும் இடைக்கால அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, புதிதாக அரசமைப்பொன்று நிறைவேற்றப்பட்டால், நாடாளுமன்றத்தின் மீது ஒரு குண்டல்ல, நூறு குண்டுகளை எறிய வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
விமல் வீரவன்சவின் கூற்று, மிகப் பாரதூரமானது என இவர்களுக்குத் தெரியும். ஆனால், தாமும் அதையே கூறி, தமது சகாவின் கூற்றின் பாரதூரத்தன்மையைக் குறைக்கவே, அவர்கள் முயற்சி செய்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
ஆனால், விமலின் கூற்றும் அதை ஆதரிப்போரின் கூற்றுகளும், உத்தேச புதிய அரசமைப்பை எதிர்ப்பவர்கள் மத்தியில் இருக்கும் விவேக சிந்தனையற்றவர்களை, உண்மையிலேயே நாடாளுமன்றத்தின் மீது குண்டெறியத் தூண்டுகின்றன.
இருப்பினும், குண்டெறிய வேண்டும் என்ற அந்தக் கூற்றையடுத்து விமல், அதைப் பற்றிச் சற்று அடக்கமாகப் பேசுவதையும் அவதானிக்க முடிகிறது. சிலவேளை, ‘தாம் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொண்டுவிட்டோமோ’ என அவர் நினைக்கிறார் போலும்.
எனவேதான், அவரது இந்த உரையை விமர்சிப்போரை, அவர் தமது வழமையான ஆக்ரோஷமான பாணியில் தாக்காமல் இருக்கிறார்.
வீரவன்சவின் இந்த உரையை அடுத்து, மஹிந்தவின் அணியினர் வெளியிட்டு வரும் அதுபோன்ற கருத்துகளைப் பார்க்கும்போது, வன்முறை மனோபாவம் அவர்களிடையே பரவுகிறதா? இல்லாவிட்டால் அதுதான் அவர்களின் சுபாவமா என்று கேட்கத் தோன்றுகிறது.
ஜயந்த சமரவீர, கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் திலும் அமுனுகமவை அடுத்து,“ நந்திக் கடற்கரையில் தமது படைப்பிரிவு தான் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கொன்றது” என்று மார்தட்டிக் கொள்ளும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, புதிய அரசமைப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்டு, ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது, “நாட்டைப் பிளவுபடுத்த முற்படுவோரைச் சுட்டுக் கொல்ல வேண்டும்” என்றார்.
புதிய அரசமைப்பினால் நாடு பிளவுபடும் என்ற கருத்தையே மஹிந்த அணியினர் கூறி வருகின்றனர். எனவே, புதிய அரசமைப்புக்கான ஆலோசனைகளை ஆதரிப்போரையே கொலை செய்ய வேண்டும் என அவர் கூறுகிறார் என்பது தெளிவாகிறது.
கொலைக்கு மக்களை தூண்டும் தமது கூற்றை, நியாயப்படுத்தும்முகமாக அவர், 1988-89 ஆம் ஆண்டுகளில், மக்கள் விடுதலை முன்னிணியினர், ‘தேசபக்த மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் நடத்திய கிளர்ச்சியின்போது, தமது எதிரிகளைக் கொலை செய்ததை நினைவூட்டுகிறார்.
‘துரோகிகளுக்கான ஒரே தண்டனை மரணம்’ என்பதே மக்கள் விடுதலை முன்னணியின் அக்காலக் கொள்கையாக இருந்ததாகவும் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள், முழங்காலுக்கு மேல் உயர்த்தாமலே, மயானங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி உத்தரவிட்டு இருந்ததாகவும், அதுவே தற்காலத்தில் நாட்டைப் பிரிக்க முற்படுவோருக்கான தண்டனையாக இருக்க வேண்டும் எனவும் கமால் குணரத்ன அக்கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார்.
அவர், இந்தக் கொடூர உரையை நிகழ்த்தும் போது, கூட்டத்தில் இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். ஏனெனில், அது மஹிந்த அணியினரின் தற்போதைய மனோபாவத்தைக் குறிப்பதாகத் தெரிகிறது.
மஹிந்த அணியின் மற்றொரு ‘தேசபக்தரான’ முன்னாள் கடற்படை அதிகாரியும் முன்னாள் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டளைத் தளபதியுமான சரத் வீரசேகரவும், இதேபோல் “நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிப்போருக்கு, மரண தண்டனை வழங்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
அதேவேளை, தற்போது மஹிந்த அணியுடன் நெருக்கமாக இருக்கும், எல்லே குணவன்ச தேரரும், “நாட்டைப் பிரிக்க முயற்சிப்போருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
முன்னாள், குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அப்துல் சத்தாரும், மஹிந்தவின் தீவிர ஆதரவாளர். அவர், ஒக்டோபர் 22 ஆம் திகதி, ‘ஞாயிறு லங்காதீப’ பத்திரிகைக்குப் பேட்டியொன்றை வழங்கியிருந்தார்.
அதில் அவர், “பிரபாகரன் தமது எதிரிகளுக்குச் செய்ததைப் போல், இந்தச் சந்தர்ப்பத்தில், முஸ்லிம் தலைவர்களைத் தூக்கிலிட வேண்டும்” என்றும் “முஸ்லிம்களும் புலிகள் தேடியதைப் போன்ற தீர்வொன்றை நோக்கி நகர்வது இயல்பானது. ஆனால், அது சிங்களவர்களைக் கொலை செய்ய அல்ல; முஸ்லிம் தலைவர்களின் தலைவிதியை நிர்ணயிக்க” என்றும் அந்தப் பேட்டியின்போது, கூறியிருக்கிறார்.
குறிப்பிட்ட ஓர் அரசியல் குழு மட்டும், அதாவது, மஹிந்த அணியினர் மட்டும், இவ்வாறு கொலைகளை ஊக்குவித்து வருவது, சற்று வித்தியாசமாகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலைமையாகவும் இருக்கிறது.
அதிலும் முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால், மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அவரது அணியின் எந்தவொரு முக்கியஸ்தரோ, இதுவரை தமது அணியினர், இவ்வாறு கொலைகளை ஊக்குவித்துக் கருத்து வெளியிடுவதையிட்டு, குறைந்தபட்சம் கவலையையாவது தெரிவிக்கவில்லை.
அதாவது, மஹிந்தவும் அவரது அணியின் சகலரும், இந்தக் கொலைகாரப் போக்கை ஆதரிக்கிறார்கள் என்பதே இதன் வெளிப்பாடாகும். அதனால்தான், கமால் குணரத்ன உரையாற்றும் போது, சபையில் இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
சாதாரண காலத்தில், இவர்கள் இவ்வாறு மாற்றுக் கருத்துகளைக் கொண்டவர்களைக் கொலை செய்ய வேண்டும் எனக் கூறுவதாக இருந்தால், போர் நடைபெற்ற காலத்தில், வடக்கிலும் கிழக்கிலும் என்ன நடந்திருக்கும் என, நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அதனால்தான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நியாயமான காரணங்களுகக்காகவோ, அல்லது அதிகார ஆசையை அடிப்படையாகக் கொண்ட தமது அரசியல் நிகழ்ச்சி நிரலின் காரணமாகவோ, ஒருவர் தற்போதைய அரசமைப்பு சீர்திருத்தப் பணிகளைப் பொதுவாகவோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையையோ, எதிர்க்கவும் விமர்சிக்கவும் உரிமை இருக்கிறது.
காரணமின்றி எதையும் விமர்சிக்கத் தார்மிக உரிமை இல்லாவிட்டாலும், சட்ட ரீதியாக உரிமை இருக்கிறது. ஆனால், போர்க் களமில்லாத இடத்தில், கருத்துகளுக்கு எதிராகக் கொலைகளைத் தூண்டவும் ஊக்குவிக்கவும் எவருக்கும் சட்ட ரீதியான உரிமையோ அல்லது தார்மிக உரிமையோ இல்லை. கருத்துகளைக் கருத்துகளால்தான் சந்திக்க வேண்டும். அது தான் அறிவுபூர்வமான அணுகுமுறையாகும்.
அப்துல் சத்தாரை தவிர்ந்த மேலே குறிப்பிடப்பட்டவர்கள் அனைவரும், நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறியே கொலைகளை தூண்டுகிறார்கள்.
அதிகாரப் பரவலாக்கலையும் சமஷ்டி முறையையுமே அவர்கள் நாட்டைப் பிளவுபடுத்தும் வழிமுறைகளாகக் காண்கிறார்கள். ஆனால், இந்த நாட்டில், சகல அரசியல் கட்சிகளும் அதிகாரப் பரவலாக்கல் முறையைக் கொண்டு வரவோ அல்லது அதை நடத்திச் செல்லவோ பங்களிப்புச் செய்துள்ளார்கள் என்பதை மக்கள் மறந்துவிடவில்லை.
அதேபோல், இலங்கையின் அதிகாரப் பரவலாக்கல் வடிவமான மாகாண சபை முறையை இரத்துச் செய்ய, எந்தவொரு கட்சியும் இப்போது கோருவதில்லை என்பதையும் மக்கள் மறந்துவிடவில்லை.
நாட்டில் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தத்தமது ஆட்சிக் காலத்தில் பகிரங்கமாகவே சமஷ்டி முறையை அறிமுகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
ஆளும் கட்சி, அதிகாரப் பரவலாக்கல் முறையை அறிமுகப்படுத்தவோ அல்லது பலப்படுத்தவோ அல்லது சமஷ்டி முறையை அறிமுகப்படுத்தவோ நடவடிக்கை எடுத்த சகல சந்தரப்பத்திலும், அப்போதைய எதிர்க் கட்சி, அதை நாட்டைப் பிளவுபடுத்த மேற்கொள்ளும் முயற்சியாகவே விமர்சித்துள்ளது.
நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிப்பது கொலைசெய்யப்பட வேண்டிய குற்றம் என்றால், ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் இருந்த எதிர்க் கட்சிகள், ஆளும் கட்சித் தலைவர்களைக் கொலை செய்திருக்க வேண்டும்.
ஆனால், மாறாக அவர்கள் தாம் பதவிக்கு வந்த போது, தாமும் அதிகாரப் பரவலாக்கல் முறையை அமுல்படுத்தவும் சமஷ்டி முறையை ஏற்படுத்தவுமே நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுதான், இந்நாட்டு அரசியல்வாதிகளின் தேசப் பற்றின் இலட்சணமாக இருந்து வந்துள்ளது. நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிப்பது என்ற குற்றச்சாட்டு, வெறும் அரசியல் வார்த்தை ஜாலம் என்பது அதன் மூலம் தெரிகிறது.
சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது, 1995 ஆம் ஆண்டு, இனப் பிரச்சினையை தீர்ப்பதற்காக சில ஆலோசனைகளை அவர் முன்வைத்தார். ‘பக்கேஜ்’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட அந்தத் தீர்வுத் திட்டத்தின் மூலம், இலங்கை, ஓற்றையாட்சி முறைமை உள்ள நாடாகக் குறிப்பிடப்படவில்லை.
‘பிராந்தியங்களின் ஒன்றியம்’ என்றே குறிப்பிடப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவராகவிருந்த, கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் உதவியுடன், அப்போதைய அரசமைப்புத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அதை வரைந்தார்.
இதனை, நாட்டை பிளவுபடுத்தும் திட்டமாகவே ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னிணியும் வர்ணித்தன. ஒற்றை ஆட்சி என்பதற்குப் பதிலாக, நாட்டைப் பிராந்தியங்களின் ஒன்றியமாகக் குறிப்பிட்ட அந்தத் திட்டத்தை வகுத்த அரசாங்கத்திலேயே, மஹிந்த ராஜபக்ஷ உட்படத் தற்போதைய கூட்டு எதிரணியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இருந்தனர்.
இந்தத் திட்டத்தை, தாம் ஏற்றுக் கொண்டு இருக்கலாம் என, புலிகளில் ஆலோசகர் கலாநிதி அன்டன் பாலசிங்கம், 2003 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் வைத்து கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பின்னர், சந்திரிகாவின் அரசாங்கம், புதிய அரசமைப்பொன்றை வரைவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமித்தது. பேராசிரியர் பீரிஸ், அதன் தலைவராகவும் இருந்தார்.
அந்தக் குழுவில், ஓர் இணக்கப்பாடு ஏற்படாத நிலையில், அரசாங்கம் அக்குழுவில் சமர்ப்பித்த தமது ஆலோசனைகளை 1997ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அதுவும் பீரிஸினாலேயே வரையப்பட்டது. அதிலும், இலங்கை பிராந்தியங்களின் ஒன்றியமாகவே குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையும் நாட்டைப் பிளவுபடுத்தும் திட்டமாக ஐ.தே.க குறிப்பிட்டது.
பின்னர், இந்த இரண்டு ஆவணங்களையும் அடிப்படையாகக் கொண்டு, புதிய அரசமைப்பொன்றைத் தயாரித்த ஜனாதிபதி சந்திரிகா, அதைத் 2003 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதிலும், இலங்கை பிராந்தியங்களின் ஒன்றியமாகவே குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை ஒரு சமஷ்டி அரசமைப்பாக, சந்திரிகா பகிரங்கமாகவே குறிப்பிட்டார். அதனால், நாடு பிளவுபடும் எனக் கூறிய ஐ.தே.க உறுப்பினர்கள், அதன் பிரதிகளை நாடாளுமன்றத்துக்குள்ளேயே தீயிட்டுக் கொழுத்தினர்.
அந்த மூன்று, ஆவணங்களும் அன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டு இருந்தால், மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட, இன்றைய கூட்டு எதிரணியின் பெரும்பாலானவர்கள், அவற்றை ஆதரித்து வாக்களித்து இருப்பார்கள். ஆனால், அந்த மூன்று ஆவணங்களையும் தயாரித்தவர்களும் அதை ஆதரித்தவர்களும் மஹிந்த அணியின் தற்போதைய கருத்துப்படி கொலை செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
2001 ஆம் ஆண்டு, பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், 2002 ஆம் ஆண்டு புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டு சமாதான பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்தது.
அப்பேச்சுவார்த்தைகளின் மூன்றாவது சுற்று, 2002 ஆம் ஆண்டு நவம்பர் – டிசெம்பர் மாதங்களில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்றபோது, சமஷ்டி அமைப்பொன்றின் கீழ், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென இரு சாராரும் இணக்கம் கண்டனர்.
அதைச் சந்திரிகாவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் எவரும் எதிர்க்கவில்லை. மாறாக, சந்திரிகா சமஷ்டி ஆட்சி முறையை ஆதரித்து ஓர் அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அப்போது, அந்த ஒஸ்லோ உடன்பாட்டை எதிர்த்து, நாட்டில் எங்கும் ஓர் ஆர்ப்பாட்டமோ அல்லது ஒரு ‘போஸ்டரோ’ காணப்படவில்லை.
அந்த உடன்பாட்டைடுத்து, புலிகள் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிக் கொண்ட போது, ஸ்ரீ ல.சு.க மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கவலை தெரிவித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தன.
இவ்வாறு, புலிகளுடன் சமஷ்டி உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டவர்களும் அதை ஆதரித்தவர்களும் அதை எதிர்க்காதவர்களும் கூட்டு எதிரணியின் தற்போதைய கண்ணோட்டத்தில் கொல்லப்பட்டு இருக்க வேண்டும் அல்லவா?
பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிய புலிகள், மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க நிபந்தனையாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தமது இடைக்கால நிர்வாகத் திட்டத்தை, 2003 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைத்தனர்.
தனியான தேர்தல் ஆணையாளர் ஒருவர், தனியான கணக்காய்வாளர் நாயகம் ஒருவர், தனியான நீதித்துறை மற்றும் தனியான வரவு செலவுத் திட்டமொன்று அடங்கிய அந்தத் திட்டமானது, உண்மையிலேயே தனி நாடொன்றுக்கான திட்டமொன்றாகவே இருந்தது.
ஆனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் பேராசிரியர் பீரிஸின் தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவும் அதன் அடிப்படையிலும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகின. அந்தளவுக்கு அரசாங்கம் கீழிறங்கி வந்தது. அதுவும், மஹிந்த அணியின் தற்போதைய கண்ணோட்டத்தில் கொல்லப்பட வேண்டிய விடயம்.
இவை அனைத்திலும் மஹிந்த அணியின் தற்போதைய தலைவர்களில் ஒருவரான ஜீ.எல். பீரிஸ் சம்பந்தப்பட்டு இருந்தமை கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும். அதன் பின்னர், பதவிக்கு வந்த மஹிந்த, பிரதமராகவிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசாங்கத்தின் காலத்தில், புலிகள், சுனாமி நிவாரணத்துக்கென ஒரு திட்டத்தை முன்வைத்தனர்.
அதுவும் ஏறத்தாழ, புலிகளுக்கு வடக்கு, கிழக்கு நிர்வாகத்தைக் கையளிப்பதாகவே இருந்தது. அதை அந்த அரசாங்கம் ஏற்றுக் கொண்டு, புலிகளுடன் ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொண்டது. தற்போதைய, மஹிந்த அணியின் கண்ணோட்டத்தின்படி, அன்று நடவடிக்கை எடுத்திருந்தால், அன்று மஹிந்தவுக்கு என்ன நடந்திருக்கும் என்பது சொல்லாமலே புரியும்.
Average Rating