தலையணைகள் சொல்லும் ரகசியங்கள்..!!
தலையணைகள் இப்போது தலையாய வேலைகள் பலவற்றை செய்துகொண்டிருக்கின்றன. படுக்கையறையில் தூங்குவதற்காக பயன்பட்ட அவைகள் இப்போது சாய்வதற்கும், உடலை சவுகரியமாக வைத்துக்கொள்ள பலவிதங்களிலும் தேவைப்படுகின்றன. வேலைசெய்து அலுத்துக் களைத்துப்போகிறவர்கள், அப்பாடா என்று தலையணையில் சாய்ந்துதான் நிம்மதி பெருமூச்சுவிடுகிறார்கள். உடலை மட்டுமல்ல, மனதையும் தலையணைகள் ‘ரிலாக்ஸ்’ ஆக்குகின்றன.
தலையணையில் தலைசாய்த்து உடலை நேர்வாக்கில் வைத்துப் படுக்கும்போது உடல் ரிலாக்ஸாகும். அந்த ரிலாக்ஸ் நேரத்தில் எதை கேட்டாலும் அது வேகமாக மூளைக்குச் செல்லும். நன்றாக மூளையில் பதிந்துவிடவும் செய்யும். அதனால்தான் குழந்தைகளை தூங்கச்செய்யும்போது கருத்தாழமிக்க கதைகளை அவர்களுக்கு சொல்வார்கள்.
ஆண்களைப் பொறுத்தவரையில் திருமணத்திற்கு பிறகு தலையணையின் பங்கு பலவிதமாக பேசப்படும் சூழ்நிலை உருவாகி விடுகிறது. திருமணமாகிவிட்டால் தலையணையோடு சேர்ந்து மனைவியும் இருப்பாள். கணவர் நிம்மதியாக தலையணையில் தலை சாய்த்திருக்கும்போது, மனைவி தனக்கு சாதகமான விஷயங்களை எல்லாம் அவரது காதுகளில் போட்டுவைத்துவிடுவாளாம். அதனால்தான் மனைவி சொற்படி நடக்கும் ஆண்களைப் பார்த்து ‘தலையணை மந்திரம் வேலை செய்யத் தொடங்கிவிட்டது’ என்று சொல்வார்கள்.
அதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் நிம்மதியான, முறையான உறக்கத்திற்கு தலையணை அவசியம். தலையணை தலைக்கு மட்டுமல்ல, உடலின் பல பாகங்களுக்கும் உத்வேகம் தருகிறது. முதுகு, கழுத்து, வயிறு, கால், கை என எல்லாவற்றிற்கும் இதம் வழங்கி நன்றாக தூங்குவதற்கு துணைபுரிகிறது.
எல்லோருக்கும் ஒரே மாதிரி தலையணை ஒத்துவராது. அவரவர் உடலுக்கு ஏற்ப, வசதியானதை தேர்வு செய்யவேண்டும். இரவில் வெகுநேரம் தூக்கம் வராதவர்கள், தங்கள் தலையணை அமைப்பு சரியாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். சரியான தலையணையை வைத்து படுத்தால்தான் தூக்கம் வரும். மறுநாளுக்கு தேவையான புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
பெரும்பாலான வீடுகளில் நோயாளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் அதற்காக ஏதாவது மாத்திரைகளை சாப்பிட்டு விட்டுதான் தூங்குகிறார்கள். சாப்பிடும் மாத்திரைகள் பலவும், நாம் தூங்கும்போதுதான் வேலை செய்கிறது. மருந்தின் முழு பலனை அடைய நல்ல ஓய்வும், தூக்கமும் அவசியம். அதற்கு தலையணை மிகவும் அவசியம்.
சரியான தலையணையை தேர்ந்தெடுத்தால் மட்டும் போதாது. அதை பயன்படுத்தி சரியாக படுக்கவும் வேண்டும்.
சரியாக படுப்பது எப்படி தெரியுமா?
* நேராக முதுகுத் தண்டு தரையில் அல்லது கட்டிலில் படும்படி படுக்கவேண்டும்.
* படுக்கையில் தலையின் பின்புறமும், முதுகெலும்பும் ஒரே நேர்கோட்டில் இருக்கவேண்டும்.
* அதிக உயரம் இல்லாத தலையணையை பயன்படுத்துங்கள். தூக்கத்தில் தலையணை நழுவி விடக்கூடாது.
* ஒருக்களித்து படுக்கும் வழக்கமிருந்தால் காது, தோள்பட்டைக்கு அழுத்தம் ஏற்படாத அளவுக்கு மென்மையான தலையணையை பயன்படுத்தி படுக்கவேண்டும்.
* கைகால், வலி உள்ளவர்கள் மென்மையற்ற, படுக்கும்போது உள்ளே அழுத்தம் ஏற்பட்டு குழிவிழாத தலையணையை வைத்து படுக்கவேண்டும். அப்போதுதான் ரத்தஓட்டம் அதிகரித்து வலிக்கு இதமாக இருக்கும்.
* மிக மென்மையான இறகு போன்ற தலையணைகள், உடலின் அழுத்தத்திற்கேற்ப செயல்பட்டு உடலை மென்மையாக வைத்திருக்கும் ‘மெமரி போம்’ தலையணைகள் தூக்கத்தில் உருண்டு படுக்கும்போது ஏற்படும் அழுத்தத்திற்கேற்ப மாறும் வடிவமைப்பைக் கொண்டது.
குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்காகவும் தனித்துவமான தலையணைகள் தயாரிக்கப்படுகின்றன. அவை அழகு, மென்மை, வண்ணமயமானவை. அவைகளில் மிக்கி மவுஸ், சின்ட்ரெல்லா படங்களும், இயற்கை காட்சிகளும், வளர்ப்பு பிராணிகளும், வண்ணத்துப்பூச்சிகளும் வரையப்பட்டிருக்கும். குழந்தைகளுக்கான தலையணைகளை வாங்கும்போது, அவர்களையே தேர்ந்தெடுக்கச் செய்யவேண்டும்.
உடலுக்கு குளிர்ச்சியை தரும் பிரம்பு நார் தலையணை, அக்குப்பிரஷர் தலையணைகளும் இருக்கின்றன. வலிகளால் அவஸ்தைப்படுகிறவர்கள், அதற்கு ஏற்ற தலையணைகளை தேர்ந்தெடுக்கவேண்டும். ஏற்கனவே வாங்கியது சவுகரியமாக அமையாவிட்டால், அதை ஒதுக்கிவிட்டு சவுகரியமானதை தேர்வு செய்துகொள்ளவேண்டும்.
வீட்டில் நமக்கு ஏற்ற தலையணையை தேர்வு செய்து பயன்படுத்துவோம். ஆனால் ஓட்டல்களில் தங்கும்போது அவர்கள் தரும் ஒரே மாதிரியான தலையணைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டியதிருக்கும். அது சிலருக்கு அசவுகரியத்தை ஏற் படுத்தும். அதை போக்குவதற்காக வெளிநாடுகளில் உள்ள சில ஓட்டல்களில் வாடிக்கையாளர்களிடம் நிறைய தலையணைகளை காட்டுகிறார்கள். படுத்துப்பார்த்து, இதமானவற்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படி கூறுகிறார்கள். வெகுநேரம் சாய்ந்து கொண்டு படிக்க, கால்வலி, முதுகு வலிக்கு முட்டுக்கொடுக்க என்று தனித்தனி தலையணை வைத்திருக்கிறார்கள். ஓட்டலில் தங்க பெற்றோரோடு வரும் குழந்தைகளிடமும் விதவிதமான தலையணைகளை கொடுத்து, பிடித்ததை எடுத்துக்கொள்ளும்படி சொல்கிறார்கள்.
கர்ப்பிணிகளுக்காகவும், கைக் குழந்தைகளை பராமரிக்கும் தாய்மார்களுக்கும் தனித்தனியாக தலையணைகள் வடிவமைக்கப்படுகின்றன. பெண்கள் எப்போதும் மென்மையான தலையணைகளைத்தான் விரும்புகிறார்கள். அதிலும் இலவம் பஞ்சு தலையணைகளே அவர்களை கவர்கிறது.
கேரளாவில் விதவிதமான ‘ஸ்பா’ தலையணைகள் கிடைக்கும். அங்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக நிறைய வெளிநாட்டு பயணிகள் வருகிறார்கள். அவர்கள் விடுதிகளில் தங்குகிறார்கள். அவர்களின் வசதிக்கேற்ப தலையணைகளை உருவாக்கி வழங்குகிறார்கள். அது அவர்கள் உடல் நலத்திற்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டதாகும்.
Average Rating