திருத்தப்பட வேண்டிய தவறுகள்..!! (கட்டுரை)
இலங்கைத் தீவில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களில் கூடுதலானவர்கள், வட மாகாணத்தைச் சேர்ந்தவர்களே என்று சனத்தொகை, புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களே கடுமையான வறுமைச் சூழலுக்குள் சிக்கியுள்ளன. அதிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் 18.2 சதவீதமான மக்கள், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய இது ஓர் அபாய அறிவிப்பே.
சனத்தொகை, புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் இந்த மதிப்பீட்டுத் தகவலுக்கு முன்பே, இந்தப் பத்தியாளர் உள்படப் பலரும் செய்திகள், ஆய்வறிக்கைகள், பத்திகள், நேர்காணல்கள், கட்டுரைகள் மூலமாக, இந்த எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறார்கள்.
ஆனாலும் இதை, அரசாங்கமும் சரி, வட மாகாண சபையும் சரி, மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோரும் சரி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் சரி, புலம்பெயர்ந்தோர் சமூகத்தின் அமைப்புகளும் சரி, சர்வதேச சமூகமும் சரி, தமிழ்க் கட்சிகளும் சரி கவனத்தில் கொள்ளவில்லை.
பதிலாக, இந்த நிலையைக் கவனியாமல் உதாசீனப்படுத்தியுள்ளன. அவற்றின் விளைவே இந்த அபாயச் சுட்டியாகும்.
உண்மையில், யுத்தத்துக்குப் பிறகு, இந்தப் பிரதேச மக்களின் முன்னேற்றத்தை முன்னுதாரணப்படுத்தியிருக்க வேண்டியது இவர்கள் அனைவருடைய பொறுப்பாகும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மாவட்டங்கள் என்ற வகையில், இந்த அபாய நிலைமைகள் குறித்துத் தனியாகக் கவனமெடுத்து, வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இதைச் செய்யாமல், இவை ‘பொய்யுரைக்கும்’ அரசியலையே செய்தன; இன்னும் அதையே செய்தும் கொண்டிருக்கின்றன.
ஆகவே, இன்றைய இந்த அவல நிலைக்கு, இவர்கள் அனைவருமே, கூட்டுப்பொறுப்பு ஏற்க வேண்டும்; இவர்களே வெட்கப்படவும் துக்கப்படவும் வேண்டும். ஆனால், எந்தவிதமான வெட்கமும் துக்கமும் கூச்சமும் இவர்களுக்குக் கிடையாது. இந்தப் புள்ளி விவரங்களின் உள்ளேயிருக்கும் அவலத்தை இலகுவாகக் கடந்து போகவே இவர்கள் முயற்சிக்கிறார்கள்.
மீள்குடியேற்றம், மீள்நிர்மாணம் அல்லது புனரமைப்பு, துரிதஅபிவிருத்தி போன்றன இந்தப் பிரதேசங்களுக்கெனத் தனியாகவும் விசேடமாகவும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
சர்வதேச சமூகத்துக்குக் கணக்குக் காட்டுவதற்கென, மஹிந்த அரசாங்கத்திலும் மைத்திரி – ரணில் கூட்டரசாங்கத்திலும் ‘மீள்குடியேற்ற அமைச்சு’, ‘புனர்வாழ்வு அமைச்சு’ என்ற இரண்டு அமைச்சுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இவை இரண்டுமே, போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் மீள்நிலைப்படுத்தியிருக்க வேண்டியவை. இந்தப் பிரதேசங்களையும் இங்குள்ள மக்களையும் நாட்டின் ஏனைய மக்களுக்கும் ஏனைய பிரதேசங்களுக்கும் சமமாக வளர்த்தெடுத்திருக்க வேண்டும். ஏனென்றால், யுத்தப் பாதிப்புகளை ஈடுசெய்வதற்கான, யுத்தத்துக்குப் பிந்திய அமைச்சுகளே இவை. அதாவது, யுத்தத்தின் பின்னரான காலத்துக்கான பிரத்தியேக அமைச்சுகள் ஆகும்.
ஆனால், இந்த இரண்டு அமைச்சுகளும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மையமாக வைத்து இயங்குவதற்குப் பதிலாக, கொழும்பை மையமாகக் கொண்டு, வழமையான அமைச்சுகளைப் போலவே இயங்கின. மக்களுக்குச் சேவை செய்வதற்குப் பதிலாக, அரச உயர்மட்டத்துக்கு இனிப்பாகச் செயற்படவே இந்த அமைச்சுகள் முயற்சித்தன. இன்னும் இதுதான் நிலைமை.
இவற்றின் தோல்வியும் தவறான நடவடிக்கைகளுமே இந்த மாவட்டங்களின் வறுமைக்கும் வளர்ச்சியற்ற நிலைக்கும் காரணமாகும்.
போரினால் அழிவடைந்த நாடுகளை அல்லது பிரதேசங்களை மீள்நிலைப்படுத்தி, அபிவிருத்தி செய்த பாடங்கள், உலகமெங்கும் தாராளமாகவே உண்டு. இதற்கு அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அமைப்புகளையும் புத்திஜீவிகளையும் செயற்பாட்டாளுமைகளையும் இணைத்து மீளமைப்புக் குழுவும் அபிவிருத்திக் குழுவும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவேயில்லை. இதற்கான பொறுப்பு, முற்று முழுதாகவே, அரசாங்கத்துக்கும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட அதிகார வர்க்கத்தினருக்கும் உண்டு.
வடக்கு மாகாணசபை இந்தப் பழியிலிருந்து தப்பிவிட முடியாது. மக்கள் பட்டினியில் கிடந்து வாடுகிறார்கள். பிள்ளைகள் படிக்க வழியில்லாமல் அவதிப்படுகிறார்கள். மாகாணசபை உறுப்பினர்கள் ‘தீர்மானத்திருவிழா’ நடத்துகிறார்கள்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் முற்று முழுதாகவே யுத்தத்தால் பாதிக்கப்பட்டவை. அரச நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்கு வெளியே நீண்டகாலமாக இருந்தவை. இவற்றைப் புலிகளே நிர்வகித்து வந்தனர்.
புலிகளுடைய நிர்வாகத்தில் மக்களுக்குப் போதிய வசதிகளோ, தொடர்பாடலோ, போக்குவரத்து வாய்ப்புகளோ, மின்சாரம் போன்ற வசதிகள் இல்லாதிருந்தாலும் இந்தளவுக்கு மக்களின் நிலை மோசமடையவில்லை. அப்போது அனைவருக்குமான வேலை வாய்ப்புகள் பால், வயது வேறுபாடின்றித் தாராளமாக இருந்தன. புலிகள் அவற்றை உருவாக்கியிருந்தனர்.
காடு வளர்ப்பு, வணிக நிறுவனங்கள், ஓட்டுத் தொழிற்சாலை, உப்பளம் போன்ற உற்பத்திகளை மேற்கொள்ளும் தொழில் மையங்கள், மிகப்பெரிய அரிசி ஆலைகள், மிகப்பெரியளவிலான வேளாண்மை, விவசாயச்செய்கை மற்றும் பண்ணைத் திட்டங்கள், தவிர நிர்வாக மையங்கள், வங்கி, காவற்றுறை, மருத்துவ சேவை என விரிவடைந்திருந்த கட்டமைப்பில் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கான வேலை வாய்ப்புகள் தாராளமாகக் கிடைத்தன. அன்று வேலையற்றவர்கள் எனப் புலிகளின் பிரதேசத்தில் யாருமே இருந்ததில்லை.
இது புலிகளின் நிர்வாகச் சிறப்பு எனலாம். இதற்குக் காரணம் அவர்களுடைய மனதில் மக்களைப் பற்றிய, சமூகம் பற்றிய அக்கறை இருந்தமையேயாகும்.
வருமானம் குறைவாக இருந்தாலும், பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தாலும் வறுமைச் சுட்டி வளராமல் இருந்தது. மிக மோசமான பொருளாதாரத் தடை, கடுமையான யுத்தச் சூழல் என வாழ்க்கையே மிக மிகச் சவாலாக இருந்தபோது கூட, இப்போதுள்ள அளவுக்கு இந்த மாவட்டங்களில் வறுமை தாக்கவில்லை. அப்போது (2005 ஆம் ஆண்டில்) கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் வறுமை நிலை 12.7 சதவீதமாகக் காணப்பட்டது என இதே சனத்தொகை, புள்ளிவிவரவியல் திணைக்களம் கூறுகிறது.
யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள இன்றைய நிலையில், மக்கள் இன்னும் இயல்புநிலையை எட்டவில்லை; வறுமையைத் தாண்டவில்லை. மீள்நிலையை எட்டமுடியாமலுள்ளனர் என்றால், இதற்கான பொறுப்பு சகலருக்கும் உரியதல்லவா?
முதலில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கெனக் ‘கிள்ளித் தெளித்த உதவி’களுக்குப் பதிலாக, அவர்களுடைய இழப்புகள் மதிப்பிடப்பட்டு, அதற்கான நட்ட ஈடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் எனத் தனியாகச் செய்திருக்க வேண்டும்.
மக்களின் இழப்புகள் பல வகையானவை. சொத்திழப்பு, உடமை இழப்பு, உடலுறுப்பு இழப்பு, உயிரிழப்பு எனப் பல வகைப்படும்.
தேடிய தேட்டமும் உருவாக்கிய தொழிற்றுறையும் இயற்கை வளங்களும் சிதைக்கப்பட்ட ஒரு வாழ் களத்தின் இழப்பு, முழுமையான இழப்பாகும். இவற்றை மீளமைப்புச் செய்தால்தான், அங்கே மீளவும் மக்கள் தங்களுடைய தொழிற்றுறையையும் வாழ்வாதாரத்தையும் வலுவாக்கக் கூடியதாக இருந்திருக்கும்.
ஆனால், அப்படியான உருவாக்கங்கள் நடக்கவில்லை. இதைக்குறித்து நமது சமூக, அரசியல் ஆய்வாளப் பெருந்தகைகளும் கவனிக்கவில்லை. அவர்களுடைய கவனமெல்லாம் வேறு திசைகளிலேயே இருந்தன. இன்னும் அப்படித்தான் உள்ளன.
இதேவேளை, இந்தப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு என்பது, முழு நாட்டுக்குமான பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நடந்ததே தவிர, போரினால் பாதிப்படைந்த பிரதேசத்துக்கு எனத்தனியாக, பிரத்தியேகமாக, முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை.
வீட்டுத்திட்டம், இலவச மின்னிணைப்பு, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான வாழ்வாதார உதவிகள் போன்றவை ஒரு குறிப்பிட்ட காலம், சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதெல்லாம் இந்த மக்களை, மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியதே தவிர, இவர்களுக்கான ஆறுதலைக் கொடுக்கவில்லை.
மறுவளமாக, சொத்தை இழந்த மக்களுக்கு இழப்பீடோ, நட்டஈடோ வழங்கப்படவில்லை. ஆகவே, மூலதனமில்லாத மக்களாக இந்த மக்கள் தொடர்ந்தும் காணப்பட்டனர். இதனால் மூலதனத்தைப் பெறுவதற்கு வங்கிகளையும் லீசிங் கொம்பனிகளையும் நாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இது இவர்களை மேலும்மேலும் கடனாளிகளாக்கியது. வறுமையிலிருந்து மீள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டமைக்கு இதுவே முக்கியமான காரணம்.
இவ்வாறே உடலுறுப்பை இழந்தவர்களின் நிலையும். உடலுறுப்பை இழந்தவர்களால் முறையாக உற்பத்தியில் ஈடுபட முடியாது; எல்லா வேலைகளையும் செய்ய முடியாது.
வடக்கு, கிழக்கில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு மேல், உடலுறுப்புகளை இழந்த நிலையில் உள்ளனர். இவர்களின் குடும்பங்கள், சரியான பொருளாதாரத்தை ஈட்டமுடியாத நிலையில் சிக்கியுள்ளன.
இன்னொரு தொகுதியினர், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு, எழுந்து நடமாடவே முடியாத, படுக்கை நிலையில் உள்ளவர்கள். அல்லது இரண்டு காலும் இல்லாதவர்கள்; இரண்டு கையும் இல்லாதவர்கள்; இரண்டு கண்ணும் பாதிக்கப்பட்டவர்கள், எனச் சுயாதீனமாகச் செயற்பட முடியாதவர்கள்.
இதைவிட, யுத்தத்தால் உளநிலைப் பாதிப்புக்குள்ளாகியவர்கள். இவர்களின் தொகை சுமார் 2,075 என வடக்கு, கிழக்கில் உள்ள மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது கடுமையான உளப்பாதிப்புக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை. இதைவிட அரைநிலைப் பாதிப்புக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 8,000 க்கு மேல். இந்தக் கணக்கு மருத்துவ உதவியைப் பெற்றுக்கொண்டிருப்பவர்களுடையது மட்டுமே.
தவிர, உயிரிழப்புக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 60, 000க்கும் மேல். இந்தக் குடும்பங்களுக்கெல்லாம் எட்டு ஆண்டுகளாகியும் நட்டஈடு வழங்கப்படவில்லை. இது நியாயமே இல்லாத விடயம்.
நட்டஈட்டை வழங்குவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யாதிருப்பது, இது குறித்த கவனத்தை எடுக்காதிருப்பது, நிச்சயமாக அரசாங்கத்தையும் தமிழ் அரசியல் தரப்பையும் சேர்ந்ததே. உண்மையில், இது தவறு என்பதற்கு அப்பால், குற்றமாகும்.
ஏன் இந்த நிலைமைகள் குறித்து யாரும் சிந்திக்கவில்லை?
யுத்தத்துக்குப் பிறகு, வரவு செலவுத்திட்டங்கள் எட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு வரவு செலவுத் திட்டத்தில் கூட, இத்தகைய நிலைமைகள், தேவைகள் குறித்து ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கூட, வாய் திறந்து பேசவில்லை. எல்லோரும் இதயமும் வாயும் மூளையும் இல்லாத மக்கள் பிரதிநிதிகளாகி விட்டனர்.
வடக்கு, கிழக்கு மாகாணசபைகள் கூட, இந்த விடயத்தில் அக்கறைப்பட்டதில்லை. வறுமைநிலை அதிகரிப்பு, தனியே மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மட்டும்தான் என்றில்லை. வடக்கு, கிழக்கிலுள்ள பல மாவட்டங்களிலும் உண்டு.
மட்டக்களப்பில் படுவான்கரை, வாகரை போன்ற பிரதேசங்கள், அம்பாறை மாவட்டத்தில் பெரும்பாலான தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள், திருகோணமலையில் தம்பலகாமம், திரியாய், தென்னமரவாடி போன்றவை எல்லாமே வறுமைக்கோட்டினால் தீண்டப்பட்டவையே.
இந்த இடங்களுக்குச் சென்று, மக்களின் வாழ்நிலையைப் பற்றி, எந்த மக்கள் பிரதிநிதி ஆராய்ந்துள்ளார்? இதைப்போல, தன்னார்வ அமைப்புகள்கூட, இந்த விடயத்தில் பெரிய அக்கறைகளைக் காட்டியதில்லை.
பல்கலைக்கழகங்களின் சமூகவியல்துறை, பொருளியல்துறை, விவசாயத்துறை போன்றவையும் இதுகுறித்து அக்கறைப்பட்டதில்லை. எனவே, இந்தப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள், ஒதுக்கப்பட்டவர்களாக, பாராமுகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு, நெல்லை மாவட்டத்தில் ஒரு குடும்பம், ‘கந்து’ வட்டிக் கொடுமை காரணமாகத் தீயில் எரிந்து மரணமடைந்திருந்தது. அதற்கான இரக்கத்தைப் பலருடைய பதிவுகளில் பார்த்தேன்.
தமிழ்நாட்டிலுள்ள குடும்பங்கள் மட்டும் சிதையேறவில்லை. வடக்கு, கிழக்கிலும் அதைப்போன்ற சிதையேற்றங்களும் சிலுவையேற்றங்களும் தினமும் நடந்து கொண்டேயிருக்கின்றன. தற்கொலை, பட்டினிச் சாவு என்ற செய்தி வந்த பிறகுதான், களஆய்வும் நடவடிக்கையும் என்றால், அதைவிடக் கேவலம் வேறொன்றும் இருக்க முடியாது.
‘ஏழு பிள்ளை நல்ல தங்காள்’ கதையைப் பற்றிப் பலரும் அறிந்திருப்பீர்கள். தன்னுடைய பிள்ளைகளை வளர்க்க முடியாத நிலையில், பிள்ளைகளின் பசிக்கு உணவைக் கொடுக்க முடியாத அந்தத் தாய், அத்தனை பிள்ளைகளையும் கிணற்றில் தூக்கிப் போட்டு விட்டுத் தானும் குதித்துத் தற்கொலை செய்து கொள்ளும் கதை அது.
ஏறக்குறைய அந்த நிலையில்தான் வன்னிக் கிராமங்கள் பலவற்றிலுள்ள மக்களின் நிலை உள்ளது. லீசிங் கொம்பனிகளில் கடன் வாங்கியவர்கள் அதைக் கட்டமுடியாமல் தற்கொலை செய்த சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அண்மையில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்திருந்த மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி கூட, லீசிங் கொம்பனிகளின் அட்டகாசத்தையும் மக்களின் வறுமை நிலையையும் குறித்துத் தன்னுடைய கவலைகளை வெளியிட்டிருந்தார்.
இவ்வாறு, இந்த மக்களின் வாழ்க்கை நிலை, பல வழிகளிலும் மிகமிக மோசமாகவே உள்ளது. இதற்குப் பிரதான காரணம், அரசியல் தீர்வைப்பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் தமிழ் அரசியலாளர்களின் பொறுப்பின்மையாகும். இது அரசியலைச் சரியாகப் புரிந்து கொள்ளாத குருட்டுத்தனம்; சமூக அக்கறையற்ற இதயங்களின் வெளிப்பாடு; மக்களைப் பற்றிச் சிந்திக்காதவர்களின் தவறு.
இந்தப் பொறுப்பின்மையின் காரணத்தினால்தான் இங்கே தொழில் மையங்கள் உருவாக்கப்படவில்லை; வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. இந்த மக்களின் வாழ்நிலையை எப்படி மேம்படுத்துவது என்று சிந்திக்கப்படவில்லை.
இந்த எட்டு ஆண்டுகளில் ஏதாவது ஒரு கட்சி, இந்த அபாயநிலைமை குறித்து, எப்போதாவது சிந்தித்ததோ, கலந்துரையாடியதோ அக்கறையை வெளிப்படுத்தியதோ உண்டா? இல்லையே!
ஏற்கெனவே, இந்தப் பிரதேசங்களில் இருந்த உப்பளம், ஓட்டுத்தொழிற்சாலை, இரசாயனத் தொழிற்சாலை, சீமெந்துக் கூட்டுத்தாபனம், அலுமினியப் பொருட்கள் உற்பத்தி நிறுவனம், சவர்க்காரத் தொழில், தோல் உற்பத்தி மையங்கள், ஆடை உற்பத்தியகங்கள், கண்ணாடி, ஆணி, வாளி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என எதுவுமே மீளியக்கம் பெறவில்லை. புதிய தொழிற்சாலைகளும் உருவாக்கப்படவில்லை.
இந்த நிலையில், எவ்வாறு மக்களுக்கு வேலை வாய்ப்புகளும் வருமானமும் கிடைக்கும்
?
விடுதலை என்பது அனைத்தையும் உள்ளடக்கியதே. மக்கள் பசியிலும் பட்டினியிலும் வாடிக்கொண்டிருக்கும்போது, ஏனையவற்றைப் பற்றிய அக்கறைகள் இல்லாமல் போய்விடும். இதனால்தான் ‘பசி வந்தால் பத்தும் பறந்து போய் விடும்’ என்று முன்னோர் சொன்னார்கள்.
இதை மனங்கொண்டே, விடுதலைப் புலிகள் உட்பட, அனைத்து விடுதலை இயக்கங்களும் அரசியல் தீர்வைப் பற்றிய பேச்சுகளில், இயல்பு நிலை உருவாக்கத்தையும் மக்கள் முன்னேற்றத்தையும் பேச்சுமேசைகளின் முன்நிபந்தனையாக முன்வைத்தன. இதற்குக் காரணம், இவை அனைத்தும் மக்களை மனதார நேசித்ததே. இன்றைய அரசியல், இத்தகைய பண்பைக் கொள்ள வேண்டும். அதுவே முழுமையான விடுதலையைத் தரும்.
Average Rating