புதிய நிதி அமைச்சர்கள் வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்றுமா பாதீடு?..!! (கட்டுரை)
வருடாந்த வரவு செலவுத் திட்டம், வெற்றிகரமான அரசாங்கத்தின் அடித்தளங்களுள் ஒன்றாகும். வரவு செலவு அறிக்கைகள் வெறுமனே கணக்கு அறிக்கைகள் மாத்திரமல்ல. அவை, அரசாங்கம் தனது எண்ணங்களை அறிவிப்பதும் விளைவுகளின்மீதான எதிர்பார்ப்புகளை நிர்ணயிப்பதுமான திட்டமிடல் மற்றும் ஆட்சி அறிக்கைகளாகும். இலங்கைப் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்கள் நடைமுறையில், மதிப்பளிக்கப்படாத எதிர்ப்பார்ப்புகளை வழங்கிய கடந்த கால வரலாற்றைக் கொண்டுள்ளன. வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளுக்கும் உண்மையான செலவினத்துக்கும் இடையிலான பெரும் வேறுபாடுகள் வரவு செலவுத் திட்ட நடைமுறையின் உதவாத நம்பிக்கை மற்றும் ஏமாற்றுவித்தை பற்றிய கவலையைத் தோற்றுவிக்கின்றன.
“வரவு செலவுத் திட்டத்துக்காக யார் இரத்தம் சிந்துகிறார்கள்?” மற்றும் “விவசாயம், பாதுகாப்பு ஆகியவை வரவு செலவுத் திட்டங்கள் கொள்கைகளில் கூறப்படாத முன்னுரிமைகளை வெளிப்படுத்துகின்றன” என்ற தலைப்புகளில், 2014 ஆம் ஆண்டில் ‘வெரிட்டே றிசேச்’சினால் வெளியிடப்பட்ட முன்னைய அறிக்கைகள், 2010 ஆம் ஆண்டுக்கும் 2014 ஆம் ஆண்டுக்குமிடையில் வரவு செலவுத் திட்டத்தில், வாக்குறுதி அளிக்கப்பட்டவற்றுக்கும் நிறைவேற்றப்பட்டவற்றுக்கும் இைடயில் நிலவிய பெரும் இடைவெளியை வெளிச்சமிட்டுக் காட்டின. தற்போதைய ஆய்வு, சமூக சேவைகள் மற்றும் கிராமிய பொருளாதாரம் ஆகியவற்றின் மீதான அண்மைக்கால வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளைப் பகுப்பாய்வு செய்கிறது. பொதுவாக, இவ்வாய்வு மூன்று அவதானிப்புகளை மேற்கொள்கிறது.
(1) வாக்குறுதிகள் தேர்தல் ஆண்டுகளில் சிறப்பாக நிறைவேற்றப்படுகின்றன:
சமூக செலவினம் மீதான வரவு செலவுத் திட்டக் கடப்பாடுகள், தேர்தல் ஆண்டுகளில் கூடுதலாக மதிக்கப்படும், ஏனைய ஆண்டுகளில் அவை மீறப்படும். இது, ‘ஏமாற்று வித்தை’ என்ற கவலையை நிரூபிக்கின்றது. செலவினங்கள் மீதான வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுவது அமுலாக்கத்தை உறுதிப்படுத்துவதில் உள்ள பிரச்சினை என்பதைவிட, வேண்டுமென்றே செய்யப்படுகிறதென்பதை எடுத்துக்காட்டுகிறது.
(2) வரவு செலவுத் திட்டம் யதார்த்தமற்ற வாக்குறுதிகளை வழங்குகிறது:
வரவு செலவுத் திட்டங்கள் யதார்த்தபூர்வமான திட்டம் இன்றி, பெரும் (நிதி)ஒதுக்கீட்டு ரீதியான வாக்குறுதிகளை அள்ளி வழங்குகின்றன.
இது, தோல்வியுறுவதற்கு அல்லது அறிவிக்கப்படும் கடப்பாடுகள் என்ற வகையில் உதவாத நம்பிக்கையை வழங்கத் திட்டமிடும் அணுகுமுறையொன்றை எடுத்துக்காட்டுகிறது.
(3) பொதுமக்கள் விழிப்புணர்வு நலன் முக்கியம்:
மொத்தத்தில், வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்படும் வாக்குறுதிகள் மீறப்படுமிடத்து பொதுமக்களினால் உடனடியாக அவதானிக்கப்படக்கூடிய, கண்கூடான நேரடி மாற்றங்கள் அல்லது வழங்கல் சிறப்பாக நிறைவேற்றப்படுகிறது.
2015க்குப் பின்னர், தேர்லுக்குப் பின்னர் மீறப்பட்ட வாக்குறுதிகள்
ஐந்து துறைகளான கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, நலனோம்புகை (உதாரணமாக ஓய்வூதியம், சமுர்த்தி பயன்கள்) மற்றும் சமூக சேவைகள் (உதாரணமாக கழிவு அகற்றல், அனர்த்த முகாமைத்துவ சேவைகள்) ஆகியவற்றை உள்ளடக்கும் சமூக சேவைகள் மீதான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளையும் உண்மையான செலவினத்தையும் இந்த ஆய்வு பகுப்பாய்வு செய்கிறது.
மேலும், இன்னொரு முக்கிய துறையின்மீதும் இந்த ஆய்வு கவனம் செலுத்துகின்றது. கிராமிய பொருளாதாரத்துக்கும் நீண்டகால வறுமை ஒழிப்புக்கும் முக்கியமாகக் காணப்படுவது விவசாயமும் நீர்ப்பாசனமும் ஆகும்.
உண்மையான செலவினம், வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டை மிஞ்சிய அல்லது அவற்றுக்குக் குறைவாக இருந்த வீதம் 2016 இல், நலனோம்புகை தவிர்ந்த ஏனைய எல்லாத் துறைகளிலும், உண்மையான செலவினம் 2015 இல் வரவு செலவுத் திட்டத்தில், ஒதுக்கீடு செய்யப்பட்டததைவிட, மிகக் குறைவாகவே இருந்தது. பல துறைகளிலும் 20 சதவீதத்துக்கும் குறைவாக, சிலவற்றில் 30 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது. இதற்கு மாறாக, ஜனவரியில் ஒன்றும் ஓகஸ்டில் ஒன்றுமாக இரண்டு தேர்தல்கள் நடைபெற்ற 2015 இல், பெறுபேறுகள் வேறு விதமாக இருந்தன. 2015 ஜனவரியில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தோடு ஒப்பிடுகையில், அதிகரித்த கடப்பாடுகளைக் கண்ணுற்ற மூன்று துறைகள் இருந்தன. கல்வி, நலனோம்புகை மற்றும் விவசாயமும் நீரப்பாசனமும் ஆகும். இங்கு உண்மையான செலவினம் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுத் தொகையை விஞ்சிச் சென்றது.
யதார்த்தமற்ற வாக்குறுதிகள் மூலம் உதவா நம்பிக்கை (வழங்கல்) தோல்வியடையத் திட்டமிடுதல்
2015 நொவம்பரில், ‘2016 வரவு செலவுத் திட்டத்தில் கல்வியும் சுகாதாரமும்: பெரும் வாக்குறுதிகள் ஆட்சிக்கு நல்லசகுனமாக அமையவில்லை’ என்ற தலைப்பிலான ‘வெரிட்டே ஆய்வு’, வரவு செலவுத் திட்ட கடப்பாடுகள் யதார்த்தமற்றவை என்றும் அரசாங்கம், தான் மதித்துக் காப்பாற்றக்கூடிய வாக்குறுதிகளை முன்மொழியவில்லை என்றும் எச்சரிக்கை செய்தது. தற்போது கிடைக்கக்கூடியதாகவுள்ள உண்மைச் செலவினத் தரவுகள், அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்ட எதிர்வு கூறலை உறுதிப்படுத்துகின்றன.
(மூலம்: மத்திய வங்கி ஆண்டறிக்கை -2016 இடைக்கால தரவு)
அரசாங்க வரவு செலவுத்திட்டம், அதன் 2015 ஆம் ஆண்டின் உண்மையான செலவினத்துக்கு மேலாக 2016 இல் ஒவ்வொரு துறைக்குமான பெயரளவு செலவினத்தை எவ்வளவு அதிகரிக்க வாக்குறுதியளித்தது என்பதை உரு- 2 காட்டுவதோடு, 2015 ஆம் ஆண்டுடன் 2016 இன் உண்மைச் செலவினத்தை ஒப்பிடுகிறது.
பிரம்மாண்ட வாக்குறுதிகள் தொடர்பான கவலையை இந்த ஆய்வு மேலும் உறுதிப்படுத்துகிறது. நலனோம்புகையைத் தவிர, அரசாங்கம் வீடமைப்புக்கு 25 சதவீத அதிகரிப்பையும் சுகாதாரம், விவசாயம் மற்றும் நீர்பாசனம் ஆகியவற்றுக்கு 30 சதவீதத்துக்கும் மேலான அதிகரிப்பையும் சமூக சேவைகள் மற்றும் கல்வி ஆகியவற்றுக்கு 40 சதவீதத்துக்கு மேற்பட்ட அதிகரிப்பையும் வாக்குறுதியளித்தது.
எனினும் உண்மையான செலவினம் இடம்பெறத் தவறியது. சுகாதாரத்திலும் கல்வியிலுமான அதிகரிப்பு 5 சதவீதமாக (கிட்டத்தட்ட ஒரு பணவீக்க செவ்வையாக்கல் மாத்திரமே) இருந்தது. வீடமைப்பு, சமூக சேவைகள் மற்றும் விவசாயமும் நீர்ப்பானமும் ஆகியவற்றிலான செலவினம் உண்மையில் 8 சதவீதத்துக்கும் 13 சதவீதத்துக்குமிடையில் வீழ்ச்சியுற்றது.
பொதுமக்கள் விழிப்புணர்வு நலன் முக்கியம்
தேர்தல் ஆண்டுக்குப் பின்னர் மீறப்படும் வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகளைப் பொறுத்தவரை, நலனோம்புகை செலவினம்தான் ஒரேயொரு விதிவிலக்காகும்.
யதார்த்தமற்ற வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள் விடயத்திலும் நலனோம்புகை செலவினம்தான் ஒரேயொரு விதிவிலக்காகும். 2016 இல் நலனோம்புகைக்கான வாக்குறுதியளிக்கப்பட்ட அதிகரிப்பு அளவில் மிகச்சிறியது. அது 8 சதவீதம் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்பட்டது. (இச்சமூகத் துறைகளுள் வேறு எதையும் விடக் குறைவு) அது கிட்டத்தட்ட 9சதவீதம் ஒரு தாராளமான உண்மை அதிகரிப்பைக் கண்டது. (இச்சமூக துறைகளுள் வேறு எதையும்விட அதிகம்)
நேரடியான, கண்கூடான மாற்றங்கள் நலனோம்புகைச் செலவினத்தின் 84 சதவீதமாக இருந்ததென்பது குறிப்பிடத்தகுந்ததாகும்: ஓய்வூதியக் கொடுப்பனவு (ஓய்வு பெற்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு) 68சதவீதம், சமுர்த்தி பயன்கள் (வறிய குடும்பங்களுக்கு) 16 சதவீதம் மக்கள் தொகையில் பெரும் எண்ணிக்கையிலானோர் இம் மாற்றங்களிலிருந்து பயன்பெறுகிறார்கள். இலங்கையில் 580,000 க்கு மேற்பட்டவர்கள் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இலங்கைக் குடும்பங்களுள் 25 சதவீதத்துக்கும் மேற்பட்டவை சமுர்த்தி பயன்களைப் பெறுகின்றன.
புதிய நிதி அமைச்சர்கள்
பொருளாதாரத்துக்கான கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் நீர்பாசனம் ஆகிய துறைகளின் முக்கியத்துவத்தை அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளதோடு, இவை நாட்டின் அபிவிருத்தி மாதிரிகளில் முன்னுரிமைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
எனினும், இந்த மூன்று துறைகளுக்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் உண்மையான முன்னுரிமை (வார்த்தை ஜாலங்கள் தவிர) குறித்து மக்களை ஏமாற்றுவதற்கு அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் வரவு செலவுத் திட்டத்தை பயன்படுத்த முடிந்துள்ளது. வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பான கண்காணிப்பும் பொதுமக்கள் விழிப்புணர்வும் இல்லாமையானது, நிதி அமைச்சர்கள் பொறுப்புக்கூற வைக்கப்படாது, வரவு செலவுத்திட்டத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை சத்தமின்றி மாற்றுவதற்கு உதவுகின்றது.
அரசாங்கம் தனது பதவிக் காலத்தின் கிட்டத்தட்ட அரைவாசியை எட்டுகிறபோது, 2017 இல் மங்கள சமரவீரவுக்கு நிதி மற்றும் ஊடக அமைச்சு ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, எரான் விக்கிரமரத்ன நிதி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகைய இடைக்கால நியமனங்கள் வழமையாக புதிய நம்பிக்கைளோடும் எதிர்பார்ப்புகளோடும் வரும். இவ்விரு அமைச்சர்களும் கடந்த கால வழக்கங்களிலிருநது விலகிச் சென்று, நடைமுறையில் பின்பற்றப்படும் ஒரு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கான ஒரு வாய்ப்பைத் தற்போது கொண்டுள்ளனர்.
2015 செப்டெம்பரில், இலங்கையில் புதிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடரில் தைரியமான அறிக்கையொன்றை விடுத்தார். “எனவே, சந்தேகவாதிகளுக்கு நான் கூறுகின்றேன், கடந்த காலத்தின் மீறப்பட்ட வாக்குறுதிகள், அனுபவங்கள் மற்றும் தலைகீழ் திருப்பங்கள் ஆகியவற்றைக்கொண்டு எம்மை கணிப்பிடாதீர்கள்” என்று அவர் கூறினார்.
எனினும், இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. சமரவீரவின் அறிக்கை ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் மீறப்பட்ட வாக்குறுதி பட்டியலைப் பெருப்பிக்கவே செய்துள்ளது. ஒருவேளை, இப்போது நிதி அமைச்சர் என்ற வகையில், சமரவீர அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் தனது வார்த்தைகளை மீண்டும் கூறலாம்.
இந்தத் தடவை, அதை நிறைவேற்றும் சிறந்த வாய்ப்பையும் பெறலாம்.
2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் திட்டமிடும் நடைமுறை தற்போது நடைபெற்று வருகிறது. புதிய அமைச்சர், 2018 ஆம் ஆண்டுக்கும் அதற்கப்பால் உள்ள காலத்துக்குமான, ஒரு தொகுதி, புதிய வரவு செலவுத் திட்டக் கடப்பாடுகளைச் சமர்ப்பிப்பார்.
புதிய நிதி அமைச்சரால் வழங்கப்படும் வாக்குறுதிகள், அர்த்தமுள்ளவையாகவும் யதார்த்தமானவையாகவும் (தோல்வியடைவதற்கு திட்டமிடுதல் அல்ல) இருப்பதையும் வழங்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு போதுமான திட்டமிடலும் கண்காணிப்பும் இருப்பதையும் உறுதி செய்வாரா? இது 17 பில்லியன் டொலர் பெறுமதியான கேள்வியாகும்.
(‘வெரிட்டே ரிசேர்ச்’ பொருளாதாரம், சட்டம், அரசியல் மற்றும் ஊடகம் முதலிய துறைகளில் உயர் மட்ட தீர்மானம் மேற்கொள்பவர்களுக்கு மூலோபாய பகுப்பாய்வு சேவை வழங்கும், கொழும்பை மையமாக்கொண்ட ஒரு பல்துறைசார் சிந்தனைக் குழாமாகும். உங்கள் கருத்துரைகள் வரவேற்கப்படும். மின்னஞ்சல்: [email protected])
Average Rating