‘மெர்சல்’ படத்தில் எந்த காட்சிகளும் நீக்கம் இல்லை: ரசிகர்கள் மகிழ்ச்சி..!!
நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான ‘மெர்சல்’ படம் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
படம் மருத்துவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பழிவாங்கும் கதை என்றாலும் மத்திய-மாநில அரசுகளை தாக்கும் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன.
மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை கிண்டல் செய்யும் காட்சிகளுக்கு பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவற்றை நீக்க வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கினார்.
அவரைத் தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோரும் ‘மெர்சல்’ பட காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பா.ஜனதா வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்ததால் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாகவும் பா.ஜனதாவுக்கு எதிராகவும் அரசியல் கட்சிகள் களம் இறங்கின.
தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி, ச.ம.க. என அ.தி.மு.க. தவிர அனைத்து கட்சிகளும் தமிழ் திரை உலகமும் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு தெரிவித்தன. எந்த காட்சியையும் நீக்க கூடாது என்றும் குரல் கொடுத்தனர்.
இதற்கிடையே இதுவரை சினிமா பிரச்சினைகளில் தலையிடாத காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், கபில் சிபில், சசிதரூர் ஆகியோரும் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டனர்.
இதனால் ‘மெர்சல்’ படத்தில் வரும் ஜி.எஸ்.டி. காட்சிகள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய அளவில் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு கிடைத்தது.
‘மெர்சல்’ பட வசனம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். இதன் மூலம் தமிழின் பெருமையை மதிப்பிழக்க செய்யாதீர்கள் என்று பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரி கபில்சிபல் தனது டுவிட்டரில் ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா பற்றி ‘மெர்சல்’ படத்தில் கருத்துக்களை முன்வைக்க விஜய்க்கு உரிமை உண்டு. பேச்சு சுதந்திரத்துக்கு பா.ஜனதா புதிய வரையறை கொடுக்கிறது. எது சரி, எது தவறு என்பதை பா.ஜனதா தீர்மானிக்க முயற்சிக்கிறது என்று சாடியுள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் தனது டுவிட்டரில், தேசத்துக்கு சுதந்திரம் வாங்கித்தந்த “காங்கிரஸ் அதை பேணி காப்பதில் உறுதியாக உள்ளது, அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சுதந்திரம் தான் நமது பாதுகாப்பு” என்று கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேபோல் காங்கிரசை சேர்ந்த ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட்டும் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி.க்கு எதிரான காட்சிகளை நீக்கச் சொல்வது அநீதியானது என்று கூறியுள்ளார்.
‘மெர்சல்’ படத்தில் சர்ச்சை காட்சிகள் தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர் ராமசாமி அறிக்கை வெளியிட்டார். அதில், ‘மெர்சல்’ பட சர்ச்சை வேதனை அளிக்கிறது. இது யாருக்கும் எதிரானது அல்ல என்று பா.ஜனதா முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்தும், தொலைபேசி மூலமும் விளக்கம் அளித்தோம், அதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இனி அவர்கள் பார்வையில் எதிர்ப்பு நியாயமாக இருந்தாலும் அதற்காக சர்ச்சை காட்சிகளை நீக்க தயாராகவே இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
‘மெர்சல்’ பட விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேவையற்ற எதிர்ப்பை உருவாக்கியிருப்பதாக பா.ஜனதா மேலிடம் கருதுகிறது. காட்சிகளை நீக்கினால் மிரட்டல் காரணமாக நீக்கப்பட்டதாகி விடும். எனவே காட்சிகள் நீக்கம் இருக்காது என்றே தெரிய வருகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் ‘மெர்சல்’ பட தயாரிப்பு நிர்வாகி ஹேமா ருக்மணி தனது டுவிட்டரில் ‘மெர்சல்’ படத்தில் எந்த காட்சியும் நீக்கமோ அல்லது அழிப்போ கிடையாது” என்று தெளிவுபடுத்தி உள்ளார்.
Average Rating