அரசியல் கைதிகளை மறந்து மோதிக்கொள்ளும் அரசியல்வாதிகள்..!! (கட்டுரை)
அநுராதபுர சிறைச்சாலையில், மூன்று அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், மூன்றாவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், அதை வைத்து அரசியல் நலன் தேடுவதற்காக இன்னொரு போராட்டமும், தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது.
வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த தமது விசாரணைகள், திடீரென அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதைக் கண்டித்தும், மீண்டும் தமது வழக்குகள் வவுனியாவிலேயே விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோரியே, மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கடந்த 13ஆம் திகதி, வடக்கில் முழு அளவிலான அடைப்புப் போராட்டம் ஒன்றும் நடாத்தப்பட்டது. வட மாகாண ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடாத்தப்பட்டது.
அதற்கு மறுநாள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் நடைபெறும் சில நிகழ்வுகளில் பங்கேற்பதாக இருந்தது.
அரசியல் கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணம் வருவதற்கு எதிர்ப்புக் கிளம்பியது.
யாழ்ப்பாணத்தில், ஜனாதிபதி கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்வு, தேசிய மட்டப் பாடசாலை தமிழ் மொழித்தின விழா ஆகும். அந்த நிகழ்வை ஒழுங்கமைத்திருந்தவர், கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன்.
அந்த நிகழ்வில் பங்கேற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, எந்த இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில், அமைச்சர் இராதாகிருஷ்ணனின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமைச்சர் மனோ கணேசனும் கூடுதல் அக்கறை கொண்டிருந்தார்.
அவர் ஜனாதிபதியை அவசரமாகச் சந்தித்து, அரசியல் கைதிகள் விவகாரம், யாழ்ப்பாணத்தில் நடக்கவுள்ள போராட்டம் குறித்துப் பேசியிருந்தார்.
எப்படியாவது, ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வில் குழப்பம் நிகழ்ந்து விடக் கூடாது என்பதே, அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
முன்னதாக, அமைச்சரவைக் கூட்டத்தில் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்துத் தாம் பேசியதாகவும், அரசியல் கைதிகளின் போராட்டம் குறித்து, தமக்கு எதுவும் தெரியாது என்று ஜனாதிபதி தம்மிடம் கூறியதுடன், வழக்குகளை வவுனியாவுக்கு மாற்றுவதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு ஏற்கெனவே பணிப்புரை விடுத்திருந்ததாக ஜனாதிபதி கூறியதாகவும், அமைச்சர் மனோ கணேசன் தான், தகவல் வெளியிட்டிருந்தார்.
அவ்வாறு கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியல் கைதிகள் போராட்டம் நடத்துவதை அறிந்து கொண்ட பின்னரும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக வழக்குகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆக, தமக்குத் தெரியாது என்று கூறிய ஜனாதிபதிக்கு, எல்லாம் தெரிந்த பின்னரும் கூட, எந்த மாற்றமும் நிகழவில்லை.
யாழ்ப்பாணத்தில் தமிழ் மொழித்தின விழா, எந்த இடையூறும் இன்றி நடத்தப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
போராட்டம் நடத்துவோரை ஜனாதிபதி சென்று சந்திக்கவும் திட்டமிடப்பட்டது.
அதற்கமைய, மறுநாளான கடந்த 14ஆம் திகதி, கறுப்புக் கொடியுடன் யாழ். இந்துக் கல்லூரிச் சந்தியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர்களை நோக்கி, காரில் இருந்து இறங்கி, ஜனாதிபதி நடந்து சென்றார். அவர்களுடன் பேச முனைந்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், தம்பிராசா போன்றவர்கள் ஜனாதிபதியுடன் கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், சிரித்தபடியே ஜனாதிபதி அவர்களைப் பேச்சு நடத்த வருமாறு அழைத்தார். ஆனால், அவர்கள் அதற்கு இணங்கவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காரை விட்டு இறங்கி, போராட்டம் நடத்துவோரை நோக்கிச் சென்ற போது, அந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமாரும், செயலாளர் கஜேந்திரனும், பின்னால் சென்று விட்டனர்.
அவர்கள் ஜனாதிபதியுடன் பேசாமல் ஒதுங்கியிருந்து விட்டு, மைத்திரிபால சிறிசேனா காரில் மீண்டும் ஏறிக் கொண்டதும், “வெளியேறு வெளியேறு மைத்திரியே வெளியேறு” என்று கோசமிட்டனர்.
இந்தப் போராட்டம் முடிந்த பின்னர், யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், போராட்டம் நடத்துவோருடன் ஜனாதிபதி சந்தித்துப் பேசுவது, ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நாடகம் என்றும், அதற்கு சிவாஜிலிங்கம் துணைபோனதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
வடக்கில் முழு அடைப்புப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது, ஆளுநர் செயலகத்தில் நடந்த போராட்டத்தின் பின்னர், சிவாஜிலிங்கம், ஆளுநர் மாளிகைக்குச் சென்று பேச்சு நடத்தியிருந்தார்.
அதை அடிப்படையாக வைத்து, சிவாஜிலிங்கம் அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படுவதாகவும், அரசியல் கைதிகளின் போராட்டத்தையும், அவர்களின் குடும்பத்தினரையும் தவறாக வழிநடத்துவதாகவும் கஜேந்திரகுமார் குற்றம் சாட்டினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தியது தவறானது என்றும், அரசாங்கத்துக்கு நற்பெயரைத் தேடிக்கொடுக்க முயன்றார் சிவாஜிலிங்கம் என்றும் அவர் சாடியிருந்தார்.
எனினும், ஜனாதிபதியுடன் இந்த விவகாரம் குறித்து முதலில் பேசியவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தான். அவரைக் கஜேந்திரகுமார் விமர்சிக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் இருவரும் தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் பங்காளிகள்.
கூட்டமைப்பை விட்டுத் தனியாக வெளியேறும் நிலை வந்தால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து செயற்பட சுரேஷ் பிரேமச்சந்திரன் திட்டமிட்டுள்ளார்.
அதுபோல, சுரேஷ் பிரேமச்சந்திரனைக் கூட்டமைப்பை விட்டு வெளியே கொண்டு வருவதற்கு கஜேந்திரகுமாரும் முயற்சிக்கிறார். கஜேந்திரகுமார் பகிரங்கமாகவே பலமுறை இதற்கான அழைப்பையும் விடுத்திருந்தார்.
கஜேந்திரகுமாரின் குற்றச்சாட்டுகளை அடுத்து, சிவாஜிலிங்கம் பதிலுக்கு ஒரு செய்தியாளர் மாநாட்டைக் கூட்டி, அவருக்குச் சவால் விடுத்துள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்து தாம் எதையும் செய்யவில்லை என்றும், ஊரார் பிள்ளைகளின் உயிருடன் விளையாட வேண்டாம் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.
அரசியல் கைதிகள் விடயத்தில், அரசியல் இலாபம் தேட முனைய வேண்டாம் என்றும், யாருடனாவது பேச்சு நடத்தி, அவர்களை மீட்பதே ஒரே வழியாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
சிவாஜிலிங்கம் மீது துரோகக் குற்றச்சாட்டை கஜேந்திரகுமார் வீசியதால், அவர் ஆவேசமடைந்திருக்கிறார். இதனால், கஜேந்திரகுமாரை நோக்கிப் பகிரங்க விவாதத்துக்கு வருமாறும் சவால் விடுத்திருக்கிறார்.
போர் முடிவுக்கு வந்த நான்காவது நாள், புதுடெல்லிக்குச் சென்றது, போரின் இறுதிநாட்களில் புலிகளின் அரசியல் தலைவர்களின் சரணடைவுக்கு பசில் ராஜபக்ஷவுடன் பேசியது, விமானத்தில் முதல்வகுப்பில் ஜெனிவாவுக்குச் செல்வது, வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து ஐ.நாவில் சாட்சியமளிக்காமை என்று கஜேந்திரகுமார் மீது அடுக்கடுக்கான கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும் தொடுத்திருக்கிறார் சிவாஜிலிங்கம்.
அதற்கும் அப்பால், சம்பந்தன், சுமந்திரனைக் குற்றம்சாட்டுவதே கஜேந்திரகுமாருக்குத் தெரிந்த அரசியல் என்றும் அதை விட்டால் வேறு ஏதும் தெரியாது என்றும் சாடியிருக்கிறார் அவர்.
ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நடத்தப்பட்ட கறுப்புக்கொடிப் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடைவிதித்ததை அறிந்தவுடன் தயங்கிய கஜேந்திரகுமார், தாம் அந்த இடத்துக்கு வந்து போராட்டம் நடத்திய பின்னரே அங்கு வந்து சேர்ந்தார் என்றும் கூறியிருந்தார்.
சிவாஜிலிங்கத்தின் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு கஜேந்திரகுமார் நிச்சயம் பதிலளிக்காமல் இருக்க முடியாது. விரைவில் அவர் மற்றொரு செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்.
இது, வடக்கு அரசியலில் புதியதொரு குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தல்கள் நெருங்கும் சூழலில், கூட்டணிகளும், கூட்டமைப்புகளும் மாறலாம் என்ற எதிர்பார்ப்புகளும் ஏற்பட்டிருந்த சூழலில், வடக்கின் அரசியல் பிரமுகர்கள் ஒருவர் மீது மற்றவர் சேற்றை வாரியிறைக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால், அரசியல் கைதிகளின் போராட்டமும் அவர்களின் பிரச்சினையும் மறக்கப்படும் நிலைக்கு வந்து விடுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அரசியல் கைதிகள் விவகாரம் என்றாலும் சரி, காணிகள் விடுவிப்பு விவகாரம் என்றாலும் சரி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம் என்றாலும் சரி, தொடர்ச்சியாகப் போராட்டங்களை ஊக்குவிக்கும் தரப்புகளாக இருக்கும் அரசியல் கட்சிகள் எதுவுமே, அதற்காக முற்றுமுழுதாக நின்று குரல் கொடுப்பதில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, செந்தூரன் என்ற மாணவனின் உயிர் இழக்கப்பட்டது. அதற்குப் பின்னாலும், அரசியல் காரணிகள் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அந்த மாணவனின் மரணம் நிகழ்ந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், அரசியல் கைதிகளின் விவகாரத்துக்கு தீர்வு காணப்படவில்லை.
அதேவேளை, அரசியல் கைதிகளுக்காக உயிரை மாய்த்துக் கொண்ட மாணவனை யாரும் நினைவில் கொள்வதாகவோ, அவர்களின் குடும்பத்தினரைத் திரும்பிப் பார்ப்பதாகவோ தெரியவில்லை.
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில், சில பொதுவான குணாம்சங்களைக் கொண்டிருப்பார்கள். அது தமிழ் அரசியல்வாதிகளுக்கும் கூடப் பொருத்தமானது.
கடிதம் எழுதுதல், நாடாளுமன்றத்தில் பிரேரணை கொண்டு வருதலே தமது கடப்பாடு என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் போன்றவர்களும், போராட்டங்களை நடத்தி, மக்களின் கவனத்தைத் தமது பக்கம் ஈர்ப்பது தான் தமது கடப்பாடு என்று வேறு சிலரும், கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
இவை மாத்திரமே, அரசியல் கைதிகளின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிகள் என்றால், இந்தளவுக்கும் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா?
Average Rating