யாழ்ப்பாணத்தில் அரங்கேறிய ‘பசில்’ நாடகம்..!! (கட்டுரை)
சர்ச்சைக்குரிய விடயங்களைப் பற்றி, குறிப்பாக இன ரீதியாக, முக்கியமான விடயங்களைப் பற்றி அறிக்கையிடும் போது, ஊடகங்களின் நடத்தை, பல சந்தர்ப்பங்களில் சர்ச்சைக்குரியதாகி விடுகிறது.
ஏனெனில், தேசிய கடமையை நிறைவேற்றி வருவதாகப் பறைசாற்றிக் கொள்ளும் பல ஊடகங்கள், தேசியளவில் மிகவும் முக்கியமான விடயங்களை மக்களிடமிருந்து மறைக்க முற்படுகின்றன.
சில சந்தர்ப்பங்களில் அவ்வாறு மறைப்பதில் அர்த்தம் இல்லை என்பது தெளிவாக இருக்கையிலும், அவை அச்செய்திகளை மறைக்கவே செய்கின்றன. உதாரணமாக, அண்மையில் உயர் நீதிமன்றம் வழங்கிய மிக முக்கிய இரண்டு தீர்ப்புகளை, ஊடகங்கள் எவ்வாறு கையாண்டன என்பதைச் சுட்டிக் காட்டலாம்.
களனிப் பிரதேசத்தைச் சேர்ந்த எச். கே. தொன் சந்திரசோம என்பவர், கடந்த வருடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராக, வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
கூட்டமைப்பு, இலங்கைக்குள் தனி நாடொன்றை நிறுவுவதைத் தமது நோக்கங்களில் ஒன்றாகவும் குறிக்கோள்களில் ஒன்றாகவும் வைத்திருப்பதாகப் பிரகடனப்படுத்துமாறு கோரியே, அவர் அந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
தமிழரசுக் கட்சி, இலங்கையில் சமஷ்டி ஆட்சி முறையொன்றை கோருவதனாலேயே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார். ஆனால், உயர் நீதிமன்றம், கடந்த ஓகஸ்ட் மாதம், அந்தக் கோரிக்கையை நிராகரித்து, தமது தீர்ப்பை வழங்கியது.
தற்போதைய தேசத்துக்குள் சமஷ்டி முறையிலான ஆட்சி அமைப்பைக் கோருவதானது, பிரிவினைவாதத்தைப் பிரசாரம் செய்வதாகக் கருத முடியாது என்றும், எனவே, இலங்கைத் தமிழரசுக் கட்சி, இலங்கை நாட்டுக்குள் தனியான அரசொன்றை உருவாக்குதலை ஆதரிக்கவோ, அதற்கு துணைபோகவோ, அதை ஊக்குவிக்கவோ, அதற்கு நிதி வழங்கவோ இல்லை எனவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.
இது பலருக்கு, குறிப்பாக தெற்கில் பலருக்கு, மிகவும் வெறுப்பான தீர்ப்பாக இருந்திருக்கலாம். ஆனால், செய்தி என்ற வகையில், அது மிகவும் முக்கியமானதொரு தீர்ப்பாகும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமிருக்க முடியாது.
ஏனெனில், சமஷ்டி என்றால் பிரிவினைவாதமே என்று, தெற்கில் பல அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் நபர்கள் கருதி வரும் நிலையில் தான், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால், அதற்கு இந்நாட்டு அச்சு ஊடகங்களில் இடமோ, இலத்திரனியல் ஊடகங்களில் நேரமோ கிடைக்கவில்லை. விந்தை என்னவென்றால், பல தமிழ் ஊடகங்களும் இச்செய்தியைப் புறக்கணித்தமையே ஆகும்.
தீர்ப்பு வேறு விதமாக அமைந்து, அதாவது சமஷ்டி ஆட்சி அமைப்பைக் கோருவது நாட்டுப் பிரிவினையைக் கோருவதற்கு சமம் என்றும், எனவே, தமிழரசுக் கட்சி சட்ட விரோதமான கட்சியென்றும் தீர்ப்பு அமைந்து இருந்தால், இதே ஊடகங்கள், குறிப்பாக சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள், அந்தச் செய்திக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் என்பதை எவரும் ஊகித்துக் கொள்ளலாம்.
கடந்த ஓகஸ்ட் மாதமே, உயர் நீதிமன்றம் இதேபோல், தேசிய அளவிலும் இன ரீதியாகவும் மிகவும் முக்கியமான மற்றொரு தீர்ப்பையும் வழங்கியது. வில்பத்துப் பிரதேசத்திலிருந்து போர் காலத்தில், தமிழீழ விடுதலை புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள், மீண்டும் அப்பகுதியில் குடியமர்வது தொடர்பாக, அண்மைக் காலமாக ஏற்பட்டு வரும் பெரும் சர்ச்சையைப் பற்றியே, அந்தத் தீர்ப்பு அமைந்திருந்தது.
இந்தக் குடியமர்வை எதிர்த்து, அமைச்சர்களான ரிஷாத் பதியுதீனுக்கும் காமினி ஜயவிக்கிரம பெரேராவுக்கும் எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
ஆனால், அம்மக்களின் குடியமர்வு சட்டப்படியே இடம்பெற்று வருவதாகவும் முப்பது வருடப் போர் காலத்தில், புலிகளால் விரட்டப்பட்ட மக்கள், தமது பழைய காணிகளிலேயே குடியமர்ந்து வருகிறார்கள் என்றும் அந்தத் தீரப்பில் கூறப்பட்டது.
வில்பத்துப் பிரதேசத்தில், சட்ட விரோதமாக முஸ்லிம்கள் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள் என்றும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து உதவி கிடைப்பதாகவும் அண்மைக் காலமாக சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் முழுப் பக்கக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தன.
தொலைக் காட்சி விவாதங்களின் போது, மணித்தியாலக் கணக்கில், இது தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. ஆனால், அதே அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள், இந்தத் தீர்ப்பைக் கண்டுகொள்ளவில்லை.
நாம் முன்னர் கூறியதைப் போல், தீர்ப்பு வேறு விதமாக அமைந்து இருந்தால், அதாவது, வில்பத்து பிரதேசத்தில், முஸ்லிம்கள் காடுகளை அழித்து குடியமர்கிறார்கள் என்று தீர்ப்பு அமைந்திருந்தால், அது நிச்சயமாகப் பல வாரங்களாக, பல ஊடகங்களில், முக்கிய இடத்தைப் பெற்றுக் கொண்டிருக்கும்.
தமது வாசகர்கள் விரும்பாததை வழங்க, ஊடகங்கள் தயங்குவது உண்மை. ஆனால், இந்த விடயங்களின் போது, தமது வாசகர்கள் மட்டுமன்றி, தாமும் விரும்பாததனாலேயே ஊடகங்கள் அவற்றை வெளியிடவில்லை.
மேலும், இது போன்ற, சில உதாரணங்களையும் குறிப்பிடலாம். இலங்கையில் தற்போது தங்கியிருக்கும் ரொஹிங்கியா அகதிகள், மிரிஹான பொலிஸ் தடுப்பு நிலையத்தில் தங்கியிருக்கும் போது, அவர்களில் ஒரு யுவதி, பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரால் பாலியில் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். இந்தச் செய்தி மறைக்கப்பட்டது.
பின்னர், இந்த அகதிகள் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டு, கல்கிசையில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் போது, பௌத்த துறவிகளும் குண்டர்களும் அந்த இடத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதன் பின்னர் தான், பாலியல் குற்றம் வெளியே வந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு, நந்திக் கடலில் நினைவுத் தூபி எழுப்புவதில் தவறில்லை என, சிறுபான்மையினருக்கு எதிராகச் செயற்பட்டு வரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், கொழும்பில் கடந்த மாதம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது கூறியதாக, தமிழ்ப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தன.
பின்னர் அவரது கூற்றைப் பாராட்டித் தமிழ்த் தலைவர்கள் ஆற்றிய உரைகளும் அப்பத்திரிகைகளில் வெளிவந்தன. ஆனால், சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் அதனை வெளியிடவில்லை.
அடுத்ததாக, சில நாட்களுக்கு முன்னர், முன்னாள் பொருளாதார அமைச்சரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான பசில் ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, அவர் தமிழ் மக்களை வளைப்பதற்காக, தமிழ் மக்களின் காணிகளை வழங்க வேண்டும் என்றும் வேறு பல விடயங்களையும் தெரிவித்து இருந்தார்.
அந்தச் செய்தியும் அரச ஊடகங்கள் தவிர்ந்த, சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களில் வெளிவரவில்லை.
ஊடகங்களின் செயற்பாடு குறித்து, இம்முறை நாம் ஆராயப்போகும் விடயம் அல்ல; பசில் ராஜபக்ஷவின் யாழ்ப்பாண விஜயத்தையே நாம் இம்முறை ஆராயப் போகிறோம்.
பசிலின் விஜயத்தைப் பற்றிய செய்தியை சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் மறைத்ததைக் கூற முற்படும் போது, அது போன்ற, பல சம்பவங்கள் இருந்தமையால், அவற்றையும் இங்கே குறிப்பிட்டோம். அது ஒரு நீண்ட முன்னுரையாகியது.
முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸின் தலைமையில், மஹிந்த ஆதரவாளர்கள் அண்மையில் ஆரம்பித்த, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி என்ற கட்சிக்கு, அங்கத்தவர்களைச் சேர்க்கும் திட்டத்தின் ஓரங்கமாகவே பசில் வட மாகாணத்துக்குச் சென்றிருந்தார்.
தென் பகுதியில், அவர்கள் போகாத பல இடங்கள் இருக்கையில்தான், அவர் வடக்கே சென்றுள்ளார். இது சிறுபான்மை மக்களின் வாக்குகளின் பெறுமதியை அவர்கள் உணர்ந்திருப்பதையே காட்டுகிறது.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதும், 2010 ஆம் ஆண்டு, ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போதும், சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் மஹிந்தவையும் அவரது தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையும் ஆதரித்தனர்.
ஆனால், 2010 ஆம் ஆண்டு அந்தச் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமலே வெற்றி பெறக் கூடிய அளவில், அவருக்கும் அவரது தலைமையிலான ஐ.ம.சு.முவுக்கும் சிங்கள, பௌத்த வாக்குகள் கிடைத்தன.
புலிகளுக்கு எதிரான போரில், வெற்றி பெற்றவுடன் அந்தத் தேர்தல்கள் இடம்பெற்றமையே அதற்குக் காரணமாகும்.
இதனால், இனி எப்போதும் சிறுபான்மை மக்களின் வாக்குகளின்றியே தேர்தல்களில் வெற்றி பெறலாம் என மஹிந்தவும் அவரது சில அமைச்சர்களும் நினைத்தனர்.
இதனை அப்போது அமைச்சராகவிருந்த ஜாதிக்க ஹெல உருமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க, பகிரங்கமாகவே கூறியிருந்தார். ஆனால், போர் முடிந்தவுடன் நிலவிய நிலைமையைப் போலல்லாது, சாதாரண காலங்களில், சிங்கள மக்கள் இரண்டாகப் பிளவு பட்டே இருப்பார்கள். அப்போது சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெரும் கட்சியே வெற்றி பெறும்.
இந்த உண்மையை நிரூபிக்கும் நிலைமையை, பொது பல சேனா அமைப்பு, 2012 ஆம் முதல் 2014 ஆம் ஆண்டு வரை பெரு முயற்சி எடுத்து உருவாக்கிவிட்டது. அந்த அமைப்பு, முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் மஹிந்தவிடமிருந்து அந்நியப்படுத்தியது.
தமிழ் மக்கள் எப்போதோ, மஹிந்தவைக் கைவிட்டு இருந்தனர். எனவே, 2015 ஆண்டு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் மஹிந்தவும் மஹிந்த ஆதரவு அணியும் படு தோல்வியடைந்தன.
எனவேதான், இப்போது மஹிந்த அணிக்குச் சிறுபான்மை மக்கள் தேவைப்பட்டுள்ளது. எனவேதான், பசில் வட பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். அப்போது, அவர் தெற்கில் சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய பல கருத்துகளைத் தெரிவித்து இருந்தார். அவற்றை மேலும் விவரித்து, கடந்த வாரம், தமிழ்ப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றிலும் குறிப்பிட்டு இருந்தார். அப்போது, அவர் வெளியிட்ட சில முக்கியமான கருத்துகளை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.
“வடக்குடன் எனக்குத் தனிப்பட்ட ரீதியில் ஒரு பிணைப்பு இருக்கிறது. கண்ணி வெடிகளை அகற்றுவதிலிருந்து, விவசாயம் செய்வது முதலான பணிகளை மேற்கொண்டேன்.
பாடசாலைகளை அமைத்தேன். யாழ்தேவியை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினோம்”.
“அண்மையில் திலீபன் நினைவு தினத்தை அனுஷ்டித்ததாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் என்னிடம் கூறினார்கள். எமது ஆட்சிக் காலத்தில் அவ்வாறான விடயங்கள் இடம்பெறவில்லை எனக் குறிப்பிட்டார்கள். நாங்கள் இன்னும் ஒரு வருடம் ஆட்சியில் இருந்திருந்தால், இது போன்ற விடயங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும். நாங்கள் கட்டம் கட்டமாக, இந்த உரிமைகளை உறுதிப்படுத்திக் கொண்டு வந்தோம்”.
“எமது ஆட்சிக் காலத்தில்தான், அதிகளவில் காணிகள் விடுவிக்கப்பட்டன. தற்போது கூடப் பொது மக்களின் காணிகளை விடுவிக்க முடியும். சில காணிகளை விடுவிக்க முடியாவிட்டால், அவற்றுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். வடக்கில் காணியற்ற மக்களுக்கு, அரசாங்கம் காணிகளை வழங்க வேண்டும். அதனைச் செய்யமல் இருப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை”.
“காணாமல்போனோரின் உறவினர்களின் பிரச்சினைகளை, நாம் அனுதாபத்துடன் பார்க்க வேண்டும். இந்தப் பிரச்சினையை விரைவில் தீர்ப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். நாங்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தான் பரணகம ஆணைக்குழுவை நியமித்தோம். ஆனால், தற்போது இந்தப் பிரச்சினையை வைத்து அரசியல் செய்யப்படுகின்றது”.
“போரின் போது, போர்க் குற்றங்கள் இடம்பெறவில்லை. ஆனால், யாராவது ஒரு சிலர் குற்றம் செய்திருந்தால் அது தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்”.
இவ்வாறு, மஹிந்தவினதும் கோட்டாபயவினதும் சகோதரனா என்று ஆச்சரியப்படத் தக்க கருத்துகளை, பசில் தெரிவித்து இருக்கிறார்.
இராணுவ அதிகாரி ஒருவருக்குப் பதிலாக, சிங்களவராக இருந்தாலும் ஒரு சிவிலியனை வட மாகாண ஆளுநராக நியமியுங்கள் என்று தமிழ்த் தலைவரகள் கோரிக்கைக்கு மேல் கோரிக்கை முன்வைத்தும், அதனையாவது நிறைவேற்றாத அரசாங்கம் ஒன்றின் தலைவர்களில் ஒருவர் தான் இவ்வாறு கருத்து வெளியிட்டு இருக்கிறார்.
அரசாங்கம், படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிக்க வேண்டும் என அவர் யாழ்ப்பாணத்தில் கூறும் போது, தெற்கில் அவரது அரசியல் கூட்டாளிகளான தேசிய சுதந்திர முன்னிணியின் தலைவர் விமல் வீரவன்சவும் பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மின்பிலவும் தற்போதைய அரசாங்கம் காணிகளை விடுவிப்பதை எதிர்த்து குரல் எழுப்புகின்றனர்.
காணிகளை விடுவிப்பதானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் எனச் சிங்கள மக்களைத் தூண்டுகிறார்கள்.
காணி விடுவிப்பு தொடர்பாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்னவும் விசித்திரமான கருத்தொன்றை வெளியிட்டு இருந்தார். காணி விடுவிப்புக்கு இருந்த தடை பசிலின் கூற்றினால் அகற்றப்பட்டுவிட்டது என அவர் கூறியிருந்தார்.
அதாவது, மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களின் விமர்சனங்களுக்குப் பயந்தே அரசாங்கம் இதுவரை, மீதமாக உள்ள காணிகளை விடுவிக்காமல் இருக்கின்றது என்றே அவர் மறைமுகமாகக் கூறுகிறார். உண்மையும் அது தான்.
நாங்கள் இன்னும் ஒரு வருடம் பதவியில் இருந்திருந்தால் திலீபன் உள்ளிட்ட புலிகளின் தலைவர்களை நினைவு கூர, இடமளித்து இருப்போம் என பஷில், யாழ்ப்பாணத்தில் வைத்து கூறுகிறார். ஆனால், ஏற்கெனவே நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டிப் புலிகள் மீண்டும் தலை தூக்குவதாக, அவரது கட்சியின் தலைவரான ஜீ.எல். பீரிஸே, தெற்கில் மக்கள் மத்தியில் கூச்சலிடுகிறார். விமல், கம்மன்பில ஆகியோரைப் பற்றிக் கேட்கத் தேவையில்லை.
“போர்க் குற்றங்கள் இடம்பெறவில்லை; ஆனால், குற்றங்கள் இடம்பெற்று இருந்தால் அவற்றைப் பற்றி விசாரிக்க வேண்டும்” எனப் பசில் கூறுகிறார். குற்றங்கள் இடம்பெற்று இருந்தால், மேலும் என்ன விசாரிக்க இருக்கிறது? குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டியது தானே; குற்றங்கள் இடம்பெற்று இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது எப்படி? அதற்குக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும். ஆனால், விசாரிக்கப் போனால், இதோ நாட்டை பாதுகாத்த படை வீரர்களைத் தூக்கு மேடைக்கு அனுப்பப் போகிறார்கள் எனப் பொதுஜன முன்னணியின் தலைவர்களும் அதன் துணைக் கட்சித் தலைவர்களும் கூச்சலிடுகிறார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ, மேலும் ஒரு வருடம் பதவியில் இருந்திருந்தால் திலீபன் போன்ற புலித் தலைவர்களுக்கான நினைவுக் கூட்டங்களை நடத்த அவர் அனுமதியளித்து இருப்பார் என, பசில் கூறுவதை நம்பலாமா? நிச்சயமாகஇல்லை. புலிகளின் மயானங்களையாவது விட்டு வைக்காதவர்கள் புலித் தலைவர்களை நினைவுகூர இடமளிப்பார்களா?
பசில் தமது சகாக்களின் ‘தேசப்பற்றை’ தோலுரித்தே காட்டிவிட்டார். அரசாங்கம் காணிகளை விடுவிக்கும் போதும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் போதும், வட பகுதி மக்கள் புலிகளுக்காக நினைவுக் கூட்டங்களை நடத்துவது, ஒரு புறமிருக்க, தமது பிள்ளைகளுக்காக விளக்கேற்றும் போதும், துரோகம் என்று கூறிய பசிலின் சகாக்கள், அவரது கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அவர்களது ‘தேசப்பற்று’ எங்கே போயிற்று? பசிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும் அவரது யாழ்ப்பாண விஜயத்தின் பின்னரும், அரசாங்கம் தமிழர்களுக்கு நாட்டைத் தாரைவார்த்துக் கொடுக்கப் போவதாக அவர்கள் கூறி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்துக்குச் சென்று, தமிழ் மக்களுக்கு என்னென்னவோ கூறிவிட்டு வரலாம். ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்த பசிலால் முடியுமா? குறைந்த பட்சம் யாழ்ப்பாணத்தில் கூறியதை கொழும்பில் ஓர் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திக் கூற அவரால் முடியும் என்றால், ஓரளவுக்கு அவரை நம்ப முடியும்.
Average Rating