இலங்கை அரசியலில் சமஷ்டியை ஆதரிக்காதவர்கள் இல்லை..!! (கட்டுரை)

Read Time:25 Minute, 6 Second

கடந்த மூன்று தசாப்த காலத்தில் அரசமைப்பு மாற்றம் பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அரசின் தன்மையே முக்கியமான விடயமாகவும் சர்ச்சைக்குரிய விடயமாகவும் அரசியல் அரங்கில் பேசுபொருளாகவும் மாறியது.

அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தமிழர்கள் தமக்கு, சமஷ்டி முறையே வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளதோடு, சிங்களவர்கள் ஒற்றை ஆட்சி முறையே நாட்டில் இருக்க வேண்டும் எனப் பிடிவாதமாக இருந்துள்ளனர்.

இனப்பிரச்சினை, சாத்வீக போராட்டங்களில் இருந்து, ஆயுதப் போராட்டமாக மாறி, அதுவும் முடிவுற்று, தற்போது மீண்டும் போராட்டம் அரசியல் களத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தக் கால கட்டம் முழுவதிலும், தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றையாட்சி, சமஷ்டி போன்ற அரசியல் பதங்களுக்காகச் சண்டை பிடித்துக் கொண்டே வந்துள்ளனர்.

தற்போதும் அந்தச் சண்டை மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்காக, முழு நாடாளுமன்றத்தையும் அரசமைப்புச் சபையாக மாற்றி, அதன்கீழ் நியமிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை, அக்குழுவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததை அடுத்தே, சர்ச்சை மீண்டும் தலைதூக்கியிருக்கிறது.

இப்போது, பத்திரிகைகளை எடுத்துக் கொண்டாலும், தொலைக்காட்சி விவாதங்களை எடுத்துக் கொண்டாலும், அவற்றில் இந்தப் பதப் பிரயோகமே, பிரதான தலைப்பாகி விட்டுள்ளது. பொதுவாக, வழமைபோல் தமிழர்கள், “ஒற்றையாட்சி முறையை ஏற்க முடியாது” என்று அடம்பிடிக்கையில், “ஒற்றையாட்சியை விட மாட்மோம்” எனச் சிங்களத் தரப்பார் உறுதியாகக் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இந்த முறை ஒரு வித்தியாசமான கருத்தை, கடும் சிங்களத் தேசியவாதியான டொக்டர் குணதாச அமரசேகர முன்வைத்திருக்கிறார்.

ஏனைய சிங்கள அரசியல்வாதிகள், அரசமைப்பில் உள்ள ஒற்றையாட்சி என்ற பதத்தை மாற்றக் கூடாது என்று கூச்சலிடும் போது, அமரசேகர, “அவ்வாறு மாற்றுவதற்கு இந்த நாடு ஒன்றும் ஒற்றை ஆட்சியுள்ள நாடல்ல” எனப் பலமான ஆதாரங்களுடன் கூறியிருக்கிறார்.

கடந்த வாரம், ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையொன்றின் மூலமே அவர் இந்த வாதத்தை முன்வைத்துள்ளார். அந்தக் கட்டுரையின் முக்கியத்துவத்தின் காரணமாக, அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழ்ப் பத்திரிகையொன்றிலும் பிரசுரிக்கப்பட்டு இருந்தது.

இலங்கை, ஒற்றையாட்சி அமைப்பைக் கொண்ட நாடாக, அதன் அரசமைப்பிலேயே குறிப்பிடப்பட்டு இருந்த போதிலும், அது சமஷ்டி ஆட்சி அமைப்பைக் கொண்ட நாடாகும் என அவர் வாதிடுகிறார்.

1987 ஆம் ஆண்டு, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவுக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில், செய்து கொள்ளப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு, நிறைவேற்றப்பட்ட 13 ஆவது அரசமைப்பின் மூலமே, இலங்கை சமஷ்டி ஆட்சி அமைப்பைக் கொண்ட நாடாகியது என அமரசேகர கூறுகிறார்.

எனவே, இலங்கையில் ஒற்றையாட்சி அமைப்பு முறையை, மீண்டும் கொண்டு வருவதற்காக 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை இரத்துச் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.

ஒரு நாட்டின் அடிப்படைச் சட்டம் அரசமைப்பாகும். நாட்டின் தன்மையையும் அதில் தான் குறிப்பிடப்படுகிறது. இலங்கையின் அரசமைப்பின்படி, அமரசேகர கூறுவதைப் போல், சமஷ்டி ஆட்சி அமைப்பைக் கொண்ட நாடல்ல இலங்கை.

தற்போதைய அரசமைப்பின் இரண்டாவது வாசகத்தின்படி, ‘இலங்கையானது ஒற்றையாட்சி அமைப்பைக் கொண்ட குடியரசாகும்’. மாகாண எல்லைக்குள் சட்டவாக்க அதிகாரங்களுடன், மாகாண சபைகளை உருவாக்கும் நோக்கத்துடன் 13 ஆவது அரசமைப்புத் திருத்தம், 1987ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட போதிலும், அரசமைப்பில் இருந்த ஒற்றையாட்சி என்ற பதம் மாற்றப்படவில்லை.

இலங்கை, சமஷ்டி ஆட்சி அமைப்பைக் கொண்ட நாடாகும் என்ற தமது வாதத்தை நிரூபிப்பதற்காக அமரசேகர, இலங்கையில் 43 ஆவது பிரதம நீதியரசராக இருந்து, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், குற்றப் பிரேரணையொன்றின் மூலம், பதவிநீக்கம் செய்யப்பட்ட ஷிராணி பண்டாரநாயக்கவின் அறிக்கை ஒன்றிலிருந்து, சில பகுதிகளை மேற்கொள் காட்டுகிறார்.

13ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர், அந்தத் தீர்ப்பைப் பற்றிய தமது விமர்சனக் கருத்தாகவே, அப்போது கொழும்புப் பல்கலைகழகத்தில் சட்டத்துறை விரிவுரையாளராகவிருந்த ஷிராணி பண்டாரநாயக்க, இந்த அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அவர் அதில் இவ்வாறு கூறுகிறார்,
‘மாகாண சபைப் பட்டியலில் உள்ள ஒரு விடயம் தொடர்பாக, மாகாண சபையின் சட்டமொன்றுக்கும் (நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட) தற்போதுள்ள சட்டமொன்றுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டால், அந்த மாகாணச் சட்டம், அம் மாகாணத்தில் அமுலில் இருக்கும் வரை, (நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட) தற்போதுள்ள சட்டம் இடைநிறுத்தம் செய்யப்பட்டும், செயலிழந்தும் இருக்கும் என அரசமைப்பின் 154 (ஐ) (ஆ) பிரிவு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. மேலும், 13 ஆவது திருத்தத்தின் பிரமாணங்கள், 1978 ஆம் ஆண்டு அரசமைப்பின் பிரிவு 2 ஐ மீறுகின்றது என்ற, எதிர்கால வாதத்துக்கும் இது வழி சமைக்கிறது. இரண்டாவது பிரிவு, மிகத் தெளிவாக, இலங்கை ஒற்றையாட்சி நாடு என்பதை எடுத்துரைக்கின்றது. நாடாளுமன்றத்தினால் ஆக்கப்பட்ட சட்டங்களுக்கு, சமமான சட்டங்களை ஆக்கக் கூடிய மாகாண சபைகளுக்கு, நாடாளுமன்றத்தினால் ஆக்கப்பட்ட சட்டங்களை இடைநிறுத்தி, செயலிழக்கச் செய்யக் கூடிய சட்டங்களையும் ஆக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, தற்போதைய நிலையில் ஒருவர் வாதிடலாம். அது நாட்டை, அதன் தன்மையில், சமஷ்டி அமைப்பைக் கொண்டதாக மாற்றியுள்ளது’. இவ்வாறு கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தினால் ஆக்கப்பட்ட சட்டங்களை இடைநிறுத்தி, செயலிழக்கச் செய்யும் அதிகாரங்கள், மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டு இருப்பதாகக் கூறும் ஷிராணி பண்டாரநாயக்கவை, 2013 ஆம் ஆண்டு, பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்குவதற்கும், மாகாண சபைகளின் அந்த அதிகாரங்களே காரணமாகியது என்பது முக்கிய காரணமாகும்.
இந்த அறிக்கையை வெளியிடும்போது, மாகாண சபைகளுக்கு, இது போன்ற அதிகாரங்களை வழங்கக் கூடாது என்று வலியுறுத்துவதே, ஷிராணி பண்டாரநாயக்கவின் நோக்கமாகியது. ஆனால், 2013 ஆம் ஆண்டு அவரே, அந்த அதிகாரங்களுக்கு ஆதரவாக செயற்பட்டமை விசித்திரமான விடயமாகும்.

மேலும், விவரமாகக் கூறுவதாக இருந்தால், 2012 ஆம் ஆண்டு, மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம், ‘திவிநெகும’ சட்ட மூலத்தைக் கொண்டு வந்தபோது, அதை மாகாண சபைகளின் அங்கிகாரத்துக்கு அனுப்ப வேண்டும் என, ஷிராணி தலைமையிலான உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அப்போது, வட மாகாண சபை, தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டு இருக்கவில்லை. எனவே, ‘திவிநெகும’ சட்டத்தை சகல மாகாண சபைகளினதும் அங்கிகாரத்துடன் நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அது மாகாண சபைகளின் அதிகாரத்தினால் நாடாளுமன்றத்தின் சட்டமொன்று இடைநிறுத்தப்பட்டதற்கும் செயலிழக்கச் செய்யப்பட்டதற்கும் சிறந்த உதாரணமாகும்.

உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கிய போது, தமது சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போய்விடும் என்பதை அறிந்த மஹிந்த அரசாங்கத்தின் தலைவர்கள், ஷிராணி மீது கடும் கோபம் கொண்டனர். எனவேதான், வேறு காரணங்களை முன்வைத்து, அவரைக் குற்றப் பிரேரணை மூலம், பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

‘திவிநெகும’ சட்ட மூலம் கொண்டு வரப்பட்டபோது, அதை ஆராய்வதற்கான மாகாண சபைகளின் உரிமையை ஆதரித்தே, ஷிராணி தீர்ப்பு வழங்கினார். ஆனால், 1987 ஆம் ஆண்டு, 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், மாகாண சபைகளுக்கு அவ்வாறு மத்திய அரசாங்கத்தின் சட்டங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்களை வழங்குவதை எதிர்த்தே, அவர் மேற்படி அறிக்கை மூலம் கருத்துத் தெரிவித்து இருந்தார்.

டொக்டர் அமரசேகர, இலங்கையானது சமஷ்டி ஆட்சி அமைப்பைக் கொண்ட நாடாகும் என்ற தமது வாதத்தை நிரூபிப்பதற்காக அரசமைப்புத் துறையில் நிபுணரான காலஞ்சென்ற மூத்த சட்டத்தரணி எச்.எல்.டி சில்வாவையும் மேற்கோள் காட்டுகிறார். 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை அங்கிகரித்து, உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது, “இலங்கையின் நிலைமை, இந்தியாவில் இருக்கும் சமஷ்டி முறையைப் பார்க்கிலும், அவ்வளவு மாற்றமானது அல்ல” என சில்வா கூறியிருக்கிறார்.

இலங்கையில் இருப்பது ஒற்றையாட்சி அமைப்பல்ல; சமஷ்டி ஆட்சி அமைப்பே என்று கூறுவதற்கு, இவற்றை விட மிகத் தெளிவானதோர் விளக்கத்தை, காலஞ்சென்ற பேராசிரியர் சி.ஜி. வீரமந்திரி, 1986 ஆம் ஆண்டு வழங்கியிருந்தார். அக்காலத்தில், இந்தியாவின் தலையீட்டால், மாகாண சபை முறை இலங்கையில் ஆராயப்பட்டு வந்தது.
அப்போது, அவுஸ்திரேலியாவில் மொனாஷ் பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில், பேராசிரியராக கடமையாற்றிய வீரமன்திரி, மாகாண சபை முறையை ஆராய்ந்து, அதனால் ஏற்படும் மாற்றங்களைச் சட்டத்துறை கண்கொண்டு விமர்சித்து இருந்தார்.(அவர் பின்னர், நெதர்லாந்தில் ஹேக் நகரில் இயங்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உப தலைவராகவும் கடமையாற்றினார்.)

மாகாண சபைகளைப் பற்றிய அவரது அந்த விளக்கத்தில், அதிகாரப் பரவலாக்கல் எங்கேயோ, அங்கெல்லாம் பரவலாக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாகச் சட்டமியற்றும் அதிகாரம், பிராந்திய அலகுகளுக்கு கிடைத்துவிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில், இலங்கையில் மாகாண சபைகளுக்கு, மாகாணத்துக்கான சட்டமியற்றும் அதிகாரம் கிடைப்பதாகவும், அதனால் நாட்டில் நாடாளுமன்றம் உள்ளிட்ட, சட்டமியற்றும் சபைகள் பல உருவாகுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

ஒரு நாட்டில் சட்டமியற்றும் நிறுவனங்கள் ஒன்று இருந்தால், அந்த நாட்டில் இருப்பது ஒற்றையாட்சி என்றும் சட்டமியற்றும் நிறுவனங்கள் பல இருந்தால், அந்த நாடு சமஷ்டி அமைப்புள்ள நாடாகிவிடுவதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

எனவே, மாகாண சபைகள் உருவாக்கப்பட்டது முதல், இலங்கை ஒற்றையாட்சி அமைப்பை இழந்து, சமஷ்டி அமைப்புள்ள நாடாகிவிட்டது என, பேராசிரியர் வீரமன்திரி குறிப்பிட்டு இருந்தார்.

மலேசியாவின் மாநிலங்களுக்கு, இலங்கையில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அளவில், அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்றும், ஆனால், சமஷ்டி அமைப்பைக் கொண்ட நாடாக, மலேசியா கருதப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியிருந்தார்.

அதாவது, இலங்கையின் அரசமைப்பில் இன்னமும், இலங்கை ஒற்றையாட்சி அமைப்பைக் கொண்ட நாடாகக் குறிப்பிடப்பட்டாலும், நாட்டில் இருப்பது சமஷ்டி ஆட்சி முறையே. இதைத்தான் அமரசேகரவும் கூறுகிறார். 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் கொண்டு வரப்பட்ட போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும், ஏனைய பல அமைப்புகளும் அத்திருத்தத்தின் மூலம், நாடு சமஷ்டி அமைப்பைக் கொண்ட நாடாகி விடுவதாகக் கூறியே அதை எதிர்த்தனர்.

அந்த அடிப்படையில், அவர்கள் நடாத்திய ஆர்ப்பாட்டங்களின் போது, அரச படைகளின் துப்பாக்கி சுட்டினால் நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

ஆனால், இப்போது புதிய அரசமைப்பைத் தயாரிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வரும்போது, நாட்டின் ஒற்றையாட்சி முறை மாற்றப்படக் கூடாது என அவர்களே கூச்சலிடுகின்றனர். 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், நாடு சமஷ்டி முறையைத் தழுவியிருந்தால், இப்போது நாட்டில் எவ்வாறு ஒற்றையாட்சி முறை இருக்க முடியும்? வெறும் சொல் மட்டுமே அரசமைப்பில் இருக்க முடியும்.

அன்று அவர்கள் நடத்திய போராட்டங்கள் சரியென்றால், இப்போது நாட்டின் ஒற்றையாட்சி முறை இல்லாமல் போகப் போகிறது என அவர்கள் நடத்தும் போராட்டங்கள் அர்த்தமற்றவையாகும்.

இப்போது அவர்கள், ஒற்றையாட்சி முறை போகப் போகிறது என்று கூறுவது சரியென்றால், 13 ஆவது திருத்தத்தின் மூலம், ஒற்றையாட்சி முறை இல்லாதொழிக்கப்படப் போவதாக அன்று, அவர்கள் நடத்திய போராட்டங்கள் அர்த்தமற்றவையாகும்.

இது ஒரு புறமிருக்க, நாட்டில் ஏறத்தாழ சகல பிரதான கட்சிகளும் சமஷ்டி ஆட்சி முறையைத் தமது வரலாற்றில் ஒரு முறையாவது ஆதரித்துத் தான் இருக்கிறார்கள். அவ்வாறு செய்தவர்கள், மற்றவர்கள் சமஷ்டி முறை வேண்டும் என்று கூறினால், அவர்கள் நாட்டைப் பிளவு படுத்தப் போவதாகவும் துரோகிகள் என்றும் கூறுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு, சுயாட்சி வழங்க வேண்டும் என, முதன்முதலாகக் கூறிய, தென் பகுதியைத் தளமாகக் கொண்ட கட்சி, மக்கள் விடுதலை முன்னணியே. 1977 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அவர்களது கொள்கைப் பிரகடனத்திலேயே அது குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் கட்சி, அதன் பின்னர் அந்தக் கொள்கையை மாற்றியதாக எந்தவித தகவலும் இல்லை.

விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் பெரும்பாலான உறுப்பினர்கள், மக்கள் விடுதலை முன்னணியிலேயே ஆரம்பத்தில் இருந்தனர். ஜாதிக ஹெல உருமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்கவும் முன்னர் மக்கள் விடுதலை முன்னணியிலேயே இருந்தார்.

அவர்கள், அக்கட்சியில் இருக்கும் போதும், இதே கொள்கைப் பிரகடனமே அக்கட்சியின் கொள்கைப் பிரகடனமாக இருந்தது. அதாவது, அவர்களும் ஒரு காலத்தில், அதிகாரப் பரவலாக்கலையும், அதன் மூலம் சமஷ்டி முறையின் அடிப்படையையும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஆனால், முதன் முதலாக ஒற்றையாட்சி என்ற பதத்தைக் கைவிட முயற்சித்தவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவே.

இனப் பிரச்சினைக்குத் தீர்வாக, 1995 ஆம் ஆண்டு, அவரது தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் தயாரித்து, ‘பக்கேஜ்’ என்ற பெயரில், பலரால் அழைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தில், ஒற்றை ஆட்சி என்ற பதம் இருக்கவில்லை.

மாறாக, இலங்கை ‘பிராந்தியங்களின் ஒன்றியம்’ என்றே அந்தத் திட்டத்தில் அழைக்கப்பட்டது. இது சந்திரிகாவின் இணக்கத்துடன் அல்லது அவரது தேவைக்கேற்பவே நடந்தது.

விசித்திரமான விடயம் என்னவென்றால், இன்று ஒற்றையாட்சிக்காக சிங்கள மக்களைத் தூண்டும், கூட்டு எதிரணியின் தலைவர்களில் ஒருவரும், சந்திரிகாவின் அரசாங்கத்தில் அரசமைப்புத் துறை அமைச்சராக இருந்தவருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸே, இந்தத் தீர்வுத் திட்டத்தை வரைந்தார் என்பதே.

அதிலும் முக்கியமான விடயம் என்னவென்றால், அதற்காக அவர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவரும் அரசமைப்புச் சட்டத்துறையில் நிபுணருமான காலஞ்சென்ற கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் உதவியை பெற்றார் என்பதே.

சந்திரிகாவின் அரசாங்கம், மீண்டும் 2000 ஆம் ஆண்டில், புதிய அரசமைப்பு வரைவொன்றை தயாரித்து இருந்தது. அது நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கும் மேற்படி ‘பக்கேஜ்’ என்று அழைக்கப்பட்ட தீர்வுத் திட்டமே அடிப்படையாகியது.

சந்திரிகா அதை எவ்வித தயக்கமுமின்றி, சமஷ்டி அரசமைப்பு என்றே குறிப்பிட்டார். அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, ஐ.தே.க உறுப்பினர்கள், அதன் பிரதிகளை நாடாளுமன்றத்துக்குள்ளேயே தீயிட்டுக் கொழுத்தினர்.

ஆனால், 2001 ஆம் ஆண்டு ஐ.தே.க பதவிக்கு வந்தபோது, அக்கட்சி தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன், சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து, தாமும் சமஷ்டி ஆட்சி முறையை ஏற்றுக் கொண்டது. சமாதானப் பேச்சுவார்த்தைகளின் மூன்றாவது சுற்று, 2002 ஆம் ஆண்டு நவொம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களில், நோர்வே நாட்டின் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற போது, சமஷ்டிக் கட்டமைப்புக்குள் இனப் பிரச்சினைக்குத் தீர்வு தேட, இரு சாராரும் இணக்கம் தெரிவித்தனர்.

அந்தப் பேச்சுவார்த்தைகளின் போதும், அரசாங்கத்தின் தூதுக்குழுவின் தலைவராக ஜீ.எல்.பீரிஸே செயற்பட்டார். இரண்டு பிரதான கட்சிகளின் சார்பிலும் சமஷ்டி முறையைக் கொண்டு வர முயற்சித்த அவர், நாட்டில் வாழும் முதன்மை சமஷ்டிவாதி என்றுதான் கூற வேண்டும்.

ஜனாதிபதி சந்திரிகா, அந்த இணக்கத்தை எதிர்த்து, சிங்கள மக்களைத் தூண்ட முற்படவில்லை. மாறாக, 2000 ஆம் ஆண்டிலேயே, தாம் சமஷ்டித் தீர்வொன்றை முன்வைத்ததாக, மார்தட்டிக் கொண்டார்.

முக்கியமான விடயம் என்னவென்றால், புலிகளுக்கும் ஐ.தே.க தலைவர்களுக்கும் இடையிலான இந்தச் சமஷ்டி உடன்படிக்கையை, எதிர்த்து எவரும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை என்பதே. அது மட்டுமல்ல, 2003 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் புலிகள் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிய போது, இப்போது சமஷ்டி முறையை எதிர்க்கும் ஸ்ரீ ல.சு.கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட சகல எதிர்க்கட்சிகளும் அது தொடர்பாகக் கவலை தெரிவித்து, கூட்டு அறிக்கையொன்றையும் வெளியிட்டனர்.

இவ்வாறான வரலாறு உள்ளவர் தான் இப்போது ஒற்றை ஆட்சி வேண்டும் என்றும் சமஷ்டி முறையை ஆதரிப்பவர்கள் துரோகிகள் என்றும் கூறுகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெர்சல் படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை..!!
Next post தமிழ் கற்க ஆர்வமாக இருக்கிறேன்: ஷாலினி பாண்டே..!!