அசல் பட்டு சேலையை அடையாளம் காண்பது எப்படி?..!!
பார்போற்றும் பட்டு துணிகள் அதை அணிபவர்களுக்கு தெய்வீக அழகை தரும் என்று புகழ்வார்கள். பட்டு சேலைக்கு தோஷம் இல்லை என்பது ஐதீகம்.தமிழகத்தில் காஞ்சீ புரம், ஆரணி, திருப்புவனம் மற்றும் ஆந்திர மாநிலம் தர்மாவரம் ஆகிய பட்டுகள் உலக பிரசித்தி பெற்றவை. இதில் காஞ்சீபுரம் பட்டுதான் அதிகளவில் பெண்களால் விரும்பி வாங்கப்படும் பட்டு சேலை ஆகும். உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக நமது நாட்டில்தான் பட்டு நூல்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு 4 வகையான பட்டு நூல்கள் இருந்தாலும், பட்டுப்புழுவில் இருந்து எடுக்கப்படும் மல்பெரி பட்டு நூலில் நெய்யும் பட்டு சேலைகளே அதிகம். கையால் நெய்த பட்டு சேலைக்குதான் மவுசு அதிகம். தற்போது பட்டுசேலையை கையால் நெசவு செய்ய போதிய ஆட்கள் இல்லாததால், எந்திரங்கள் மூலம் கையால் நெய்யப்படுவது போன்றே பட்டுசேலை நெய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சாதாரண பட்டு சேலையை அசல் பட்டு சேலை என்று ஏமாற்றி விற்பனை செய்யும் நிலை நீடித்து வருகிறது.
அசல் பட்டு சேலை எவ்வாறு இருக்கும்? அதை அடையாளம் காண்பது எப்படி? என்பது குறித்து கோவையை சேர்ந்த பட்டு உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:-
கடந்த 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னன் வடமாநிலத்துக்கு படையெடுத்து செல்லும்போது பட்டு சேலையின் மகத்துவத்தை அறிந்தான். உடனே அவன் குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா பகுதியை சேர்ந்த பட்டு சேலை தயாரிப்பவர்களை தமிழகத்துக்கு அழைத்து வந்தான். பின்னர் பட்டு சேலை தயாரித்து அம்மனுக்கு அணிவித்தான். அத்துடன் ராணிக்கும் பட்டுசேலையை வாங்கி கொடுத்தான்.
அந்த சேலையை ராணி அணிந்தபோது, அவரின் அழகு இன்னும் மெருகேறியது. இதைத்தொடர்ந்து அதிகளவில் பட்டு சேலைகளை ராணிக்கு வழங்கினான். பின்பு, உயர் பதவியில் இருப்பவர்கள் பட்டுசேலையை தங்கள் மனைவிகளுக்கு வாங்கிக்கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தமிழகத்தில் பட்டு கலாச்சாரம் வளர தொடங்கியது.
பொதுவாக பட்டு சேலையை திருமணம் உள்பட முக்கிய விழாக்களுக்கு அணிந்து செல்வார்கள். பட்டு சேலையில் சரிகை புரக்கோடு, கோர்வை, பட்டு செல்ப் என்ற வகைகள் உள்ளன. சரிகை புரக்கோடு வகையில் டிசைன்கள் குறைவாக இருக்கும். கோர்வையில் ஆங்காங்கே டிசைன்கள் இருக்கும். பட்டு செல்ப் வகையில் டிசைன்கள் அதிகமாக இருக்கும்.
அசல் பட்டு சேலையின் குறைந்த விலை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை உள்ளது. இதில் சாதாரண விழாக்களுக்கு கட்டக்கூடிய சேலை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரையும், மணப்பெண் உடுத்தும் சேலை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரையும் உள்ளது. இந்த சேலையில் உள்ள பட்டுகள் அனைத்தும் பட்டு நூலை அவித்து செய்யப்பட்டது ஆகும். அதன் தரம் நன்றாக இருப்பதுடன், கண்ணை கவரும் வகையில் இருக்கும்.
மேலும் பெரிய பணக்காரர்கள் லட்சக்கணக்கான மதிப்பில் பட்டு சேலைகள் அணிந்து செல்கிறார்கள் என்று கூறுவதை நாம் கேட்பது உண்டு. பட்டு சேலையில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரைதான் செய்ய முடியும். அதில் தங்க ஜரிகை இருக்கும். அதற்கு மேல் விலை கொண்ட சேலையில் விலை உயர்ந்த வைரக்கற்கள் பொறிக்கப்பட்டு இருக்கும். இதனால்தான் அந்த பட்டு சேலைகளின் விலை அதிகம்.
பட்டு சேலையை ஏழை-எளிய மக்களும் வாங்கி உடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கோரா பட்டு என்ற வகை சேலை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பட்டு சேலையின் நூலை அவிக்காமல் அப்படியே செய்வார்கள். இதனால் இதன் விலை குறைவு. அதாவது ரூ.2,500-ல் இருந்தே கிடைக்கும். இந்த வகை சேலையும் அசல் பட்டு சேலையை போன்று மிருதுவாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
அடையாளம் காண்பது எப்படி?
தற்போது கைத்தறி மூலம் பட்டு சேலையை செய்ய போதிய ஆட்கள் கிடைக்காததால் விசைத்தறி மூலம் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் கைத்தறி மூலம் செய்யப்படுவதுபோன்று செய்யப்படுவதால், வித்தியாசம் தெரிவது இல்லை. சிலர் அசல் பட்டு என்று கூறி நைலான் நூல் கலவையில் செய்யப்பட்ட சேலையை, பட்டு சேலை என்று கூறி விற்பனை செய்து விடுகிறார்கள்.
அசல் பட்டு சேலையை கையில் தூக்கிப்பிடித்துக்கொண்டு அதை விரலால் சிறிது தடவி பார்த்தாலே அதன் தன்மை தெரிந்து விடும். மிகவும் மென்மையாக இருப்பதால் பட்டு சேலையை பற்றி தெரியாதவர்கள்கூட எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். முக்கியமாக சேலையின் ஓரத்தில் போடப்பட்டு இருக்கும் சுங்குமுடிகள் அளவாக ஒரே சீரான முறையில் இருக்கும். அதுபோன்று அசல் பட்டு சேலையை கையால் சுருட்டி மடித்தாலும் அதில் உள்ள பட்டுநூல் உடையாது.
சுங்குமுடிகள் சீராக இல்லாமல் இருப்பதை யாராவது பட்டு சேலை என்று கூறி கொடுத்தால் அது அசல்பட்டு கிடையாது. அதுபோன்று ஜரிகைகூட இல்லாத அசல் பட்டு சேலையின் ஆரம்பவிலையே ரூ.8 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும். கடையில் இருந்து சேலையை எடுத்து வரும் வரை நமக்கு பட்டு சேலைதான் என்று எண்ணம் இருக்கும். ஆனால் வீட்டிற்கு வந்ததும் இது பட்டு சேலையாக இருக்காதோ என்ற சந்தேகம் ஏற்பட்டு விடும்.
அதை எளிதான முறையில் கண்டுபிடிக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. அதாவது சேலையின் ஓரத்தில் தொங்கும் நூலை வெட்டி அதில் தீ வைத்தால், அது நின்று எரியும். அதுதான் அசல் பட்டு. ஆனால் கலவையான பட்டு சேலையின் நூலை வெட்டி அதில் தீ வைக்கும்போது, அதன் நூல் நமது முடி எரிவதைபோன்று சுருங்கிக்கொண்டே செல்லும். இதை வைத்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த முறையை கடையில் வைத்து செய்ய முடியாது. வீட்டில் வைத்து செய்யும்போதும் மிகக்கவனமாக செய்ய வேண்டும். சேலையில் பட்டுவிட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
பொதுவாக சிலர் பட்டு சேலை என்றாலே அதிக எடை கொண்டதாக இருக்கும் என்று எண்ணுகிறார்கள். தற்போது உள்ள நவீன காலத்தில் விசைத்தறி மூலம் செய்யப்படுவதால் அதன் எடை குறைவு. அத்துடன் டிசைன்கள் அதிகம். அசல் பட்டு சேலையின் ஆயுட்காலம் 100 ஆண்டுகளுக்கும் அதிகமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பராமரிப்பது எப்படி?
பட்டு சேலையை மற்றதுணிகள் போல துவைத்துவிடக்கூடாது. பட்டு சேலையில் அழுக்கு மற்றும் கரையை எடுக்கக் கூடிய திரவங்கள் கிடைக்கிறது. அதை வாங்கி பயன்படுத்தலாம். சிலர் தெரியாமல் பட்டு சேலையை டிரைவாஷ் செய்து விடுகிறார்கள். அவ்வாறு செய்தால் அதன் பளபளப்பு குறைந்துவிடும். அவ்வாறு செய்யவே கூடாது.
ஒரு வாளி தண்ணீரில் ஒரு லிட்டர் பாலை கலந்து, அதில் பட்டு சேலையை முக்கி வெயிலில் காயப்போட வேண்டும். அவ்வாறு செய்யும்போது, பட்டு சேலையில் மேலும் பளபளப்பு அதிகரிக்கும். அத்துடன் குறைந்தது 6 மாதத்துக்கு ஒருமுறை வெயிலில் ஒருமணி நேரம் காய வைக்க வேண்டும். மாதத்துக்கு ஒருமுறை சேலையின் மடிப்பை மாற்றி மடிக்க வேண்டும்.
சிலர் பட்டு சேலையை உடுத்திவிட்டு கழற்றியதும், அதை மடித்து வைத்துவிடுவார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. நமது உடலில் உள்ள வியர்வை அதன் மீது பட்டு இருக்கும். அதை காயவைத்துவிட்டு வைக்கும்போது எந்த பாதிப்பும் வராது. குறிப்பாக பட்டு சேலையை சரியான முறையில் பராமரித்து வந்தால் பல ஆண்டுகள் வரை அதன் பளபளப்பு, மென்மை போகாது.
Average Rating