வடக்கில் காலூன்றும் கனவு..!! (கட்டுரை)
மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சியை இழந்து கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்குப் பின்னர், சில நாட்களுக்கு முன்னதாக, வடக்குக்கான பயணத்தை, அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷ மேற்கொண்டிருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரைத் தவறாக வழிநடத்தி தோல்விக்கு இட்டுச் சென்றவர்கள் என்று, பசில் ராஜபக்ஷ மீதும், கோட்டாபய ராஜபக்ஷ மீதும், பரவலான விமர்சனங்கள் இருந்து வருகின்றன.
அதிலும் பசில் ராஜபக்ஷவே, அதிகாரத்தைத் தனது கையில் எடுத்துக் கொண்டு, மோசமாகச் செயற்பட்டாரென, தீவிரமான குற்றச்சாட்டுகள் உள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தபோது, அவருக்கு பசில் ராஜபக்ஷ மதிப்பளிக்கவில்லை என்றும், அவரை மோசமாக நடத்தினார் என்றும், சத்துரிக்கா சிறிசேன, அண்மையில் வெளியிட்டிருந்த ‘ஜனாதிபதி தந்தை’ நூலில் எழுதியிருக்கிறார்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், பசில் ராஜபக்ஷவால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. அதுவே கடைசியில், மைத்திரிபால சிறிசேன, பொது வேட்பாளராகப் போட்டியிடத் துணியவும், அவருக்குப் பின்னால் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் செல்வதற்கும் காரணமாகியது.
சில நாட்களுக்கு முன்னர் கூட, அமைச்சர் டிலான் பெரேரா, பசில் ராஜபக்ஷவை அருகில் வைத்திருக்கும் வரை, மஹிந்த ராஜபக்ஷவால் தலையெடுக்க முடியாது என்று கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில் தான், பசில் ராஜபக்ஷவின் வடக்குக்கான பயணம் அமைந்திருந்தது.
போருக்குப் பின்னர் வடக்கில் அபிவிருத்தி மற்றும் பனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்கும் திட்டங்கள் அனைத்தையும், பசில் ராஜபக்ஷவே கவனித்து வந்தார். எனவே அவருக்கு, வடக்கில் அதிகாரிகள் தொடக்கம் உள்ளூர் அரசியல்வாதிகள் வரை அறிமுகம் அதிகம்.
பசில் ராஜபக்ஷவின் வடக்குப் பயணம், அவரது பொதுஜன பெரமுன கட்சியை, வடக்குக்கும் விரிவாக்கிக் கொள்வதற்கானதேயாகும்.
மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காகவே, இந்தக் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், மஹிந்த ராஜபக்ஷ இன்னமும், இதன் தலைமைப் பதவியை ஏற்கவில்லை.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறி, பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையை ஏற்றுக் கொள்ளும் துணிச்சல், மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்னமும் வரவில்லை. அதனால் பசில் ராஜபக்ஷவை முன்னிறுத்தி, கட்சியைப் பலப்படுத்தி வருகிறார்.
உள்ளூராட்சித் தேர்தலில் பெரியதொரு வெற்றியைக் காண்பித்து, அதன் மூலம் மூன்றாவது அரசியல் சக்தியாக பொதுஜன பெரமுனவைப் பிரகடனம் செய்யும் திட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தனக்குச் செல்வாக்கு இருக்கிறது என்று காண்பிக்க வேண்டிய தேவை, மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருக்கிறது. வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் செல்வாக்கை வெளிப்படுத்தத் தவறினால், சிங்களக் கட்சியாகவோ, இனவாதக் கட்சியாகவோ அடையாளப்படுத்தப்பட்டு விடும் என்ற அச்சம், மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருக்கிறது.
அதேவேளை, இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கப் போகும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ், முஸ்லிம்களின் வாக்குகளும் முக்கியமானவை.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியில், வடக்கு, கிழக்கு மக்களின் பங்கு, கணிசமாகவே இருந்தது.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போது, ஆரம்பத்தில் வெற்றி பெறப் போவது யார் என்ற குழப்பமான நிலை காணப்பட்டது. வடக்கின் முடிவுகள் தனக்குச் சாதகமாக இருக்கவில்லை என்று அதிகாலையில் தெரிந்து கொண்டவுடன் தான், மஹிந்த ராஜபக்ஷ, அலரி மாளிகையை விட்டு வெளியேறும் முடிவை எடுத்தார்.
அந்தளவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் வாக்குகள், தீர்க்கமானவையாக இருந்தன. இனி வரப்போகும் ஜனாதிபதித் தேர்தல்களிலும் அந்த நிலை தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே தான், தேசியக் கட்சியாக நிலைத்திருக்க வேண்டுமாயின், பொதுஜன பெரமுனவை வடக்கிலும் விரிவாக்க வேண்டும் என்று ராஜபக்ஷ தரப்பினர் நினைப்பதில் ஆச்சரியமில்லை.
புதிய கட்சியை வடக்கில் பிரபலப்படுத்துவதற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த பசில் ராஜபக்ஷ, வடக்கில் வெளியிட்டுள்ள சில கருத்துகள், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பாக வெளியிட்ட கருத்து, போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளியிட்ட கருத்து, காணிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்து என்பன, அவற்றில் முக்கியமானவை.
அதேவேளை, அரசாங்கத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அவர் கடுமையாக விமர்சித்திருப்பதில், ஆச்சரியம் ஒன்றுமில்லை.
முதலமைச்சர் விக்னேஸ்வரனை தெற்கில் உள்ளவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்ற கேள்விக்கு, அவர் வடக்கில் உள்ள மக்களின் ஏகோபித்த தலைவராக மதிக்கப்படுகிறார் என்ற கருத்தை, பசில் ராஜபக்ஷ கூறியிருக்கிறார். அதனை ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
வடக்கில் உள்ள மக்களின் ஆதரவைப் பெற்ற ஒருவர், தெற்கில் எதிர்க்கப்படுவதில் உள்ள நியாயம் என்னவென்று பசில் ராஜபக்ஷ விளக்கமளிக்கவில்லை.
வடக்கு மக்களின் ஆதவைப் பெற்ற முதலமைச்சர் விக்னேஸ்வரனை சுதந்திரமாகச் செயற்படவிடாமல், ஆளுநரையும், அரச அதிபரையும், தலைமைச் செயலாளரையும் பயன்படுத்தி முடக்கிப் போட்டது தமது அரசாங்கம் தான் என்பதை, பசில் ராஜபக்ஷ மறந்து விட்டு பேசியிருக்கிறார்.
கூட்டமைப்புத் தொடர்பாக இருக்கின்ற மக்களின் எதிர்ப்பு உணர்வுகளையும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பாக இருக்கின்ற உணர்வுகளையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதே, பசில் ராஜபக்ஷவின் உத்தி. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை என்பது இதனைத் தான்.
போர்க்குற்றங்கள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பசில் ராஜபக்ஷ, இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லை என்றும், ஆனால் சிறிய குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் அவற்றைப’ போர்க்குற்றங்கள் என்று கூற முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
இதனை, “இராணுவத்தினர் குற்றங்களில் ஈடுபட்டனர் என்று பசில் ராஜபக்ஷ ஒப்புக் கொண்டிருக்கிறார்” என்று, சிங்கள நாளிதழ் ஒன்று, தலைப்புச் செய்தியாக வெளியிட, பரபரப்பாகியிருக்கிறது தெற்கு அரசியல் களம். எனினும், பசில் ராஜபக்ஷ அதனை மறுக்கச் சர்ச்சையாக மாறியிருக்கிறது.
ஏற்கெனவே, மஹிந்த ராஜபக்ஷ அணியினர் மீது கடுப்பில் இருக்கும் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பசில் ராஜபக்ஷ, இராணுவத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்ற குற்றச்சாட்டைக் கிளப்பியிருக்கிறார்.
தான் ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக குற்றச்சாட்டுச் சுமத்திய போது எகிறிக் குதித்த அரசியல்வாதிகள், பௌத்த பிக்குகள் எல்லாம், இராணுவத்தினர் குற்றமிழைத்திருக்கலாம் என்று பசில் ராஜபக்ஷ கூறிய போது அமைதியாக இருப்பது ஏன் என்று, பொன்சேகா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தாம், தவறிழைத்த தனிநபர்களைச் சுட்டிக்காட்டியே குற்றஞ்சாட்டியதாகவும் ஆனால், பசில் ராஜபக்ஷ, ஒட்டுமொத்த இராணுவத்தையும் குற்றமிழைத்தனரெனக் காட்டிப் பேசியிருக்கிறார் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தாங்களே படையினரின் பாதுகாவலர்கள் என்று ராஜபக்ஷ அணியினர் கூறிவருகின்ற நிலையில், பசில் ராஜபக்ஷவின் இந்தக் கருத்து, கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கே பசில் ராஜபக்ஷ, இராணுவத்தைக் காட்டிக் கொடுத்திருக்கிறார் என்பது, சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு.
அது ஒருவகையில் உண்மையும் கூட. பசில் ராஜபக்ஷ வடக்கில் மேற்கொண்ட பயணத்தின் போது, தமிழ் மக்களை எந்த வழிகளில் ஈர்க்க முடியுமோ, அத்தகைய கருத்துகளையே வெளியிட்டிருக்கிறார். இதுபோன்ற கருத்துகளை, அவரால் தெற்கில் போய் கூற முடியாது.
சில வாரங்களுக்கு முன்னர் கூட, போர்க்குற்றங்கள் தொடர்பாக எதிர்மறையான கருத்துகளை வெளியிட்ட பசில் ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்தில் அதற்கு முரணான கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். ஏனென்றால், அப்போது தான், தமது கட்சியை அங்கு விதைக்க முடியும் என்பது அவருக்குத் தெரியும்.
வடக்கில் காணிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள் விவகாரங்கள் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தவை.
இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் தொடர்பாக பசில் ராஜபக்ஷ வெளியிட்டுள்ள கருத்துகள், ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், படையினர் வசமுள்ள அனைத்து தனியார் காணிகளும் விடுவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை இழக்கும் வரையில், இந்தக் காணிகளை விடுவிக்க தயாராக இருக்கவில்லை. மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக, காணிகளை விடுவிப்போம் என்ற வாக்குறுதியை, பசில் கொடுக்க முயன்றுள்ளார்.
அதைவிட, 2005இல், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர், எந்தவொரு தனியார் காணியும் கைப்பற்றப்படவில்லை என்றும், அதற்கு முன்னர் இந்திய அமைதிப்படையினரும் இராணுவத்தினரும் கைப்பற்றிய காணிகளிலேயே படையினர் நிலை கொண்டிருந்தனர் என்ற வரலாற்றுப் புரட்டு ஒன்றையும், பசில் ராஜபக்ஷ வெளியிட்டிருக்கிறார்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தப் பின்னர் தான், வடக்கில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள், இராணுவத்தினர் வசம் வந்தன. அதற்குப் பின்னர் தான் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இராணுவம் அபகரித்தது என்ற உண்மையை, இலகுவாக அவர் மறைக்கப் பார்த்திருக்கிறார்.
கேப்பாப்புலவு போன்ற இடங்களில் போராடும் மக்களின், காணிகள் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் தான் அபகரிக்கப்பட்டவை. அதனை பசில் ராஜபக்ஷ மறந்து விட்டிருக்கலாம். ஆனால், தமிழ் மக்கள் இதையெல்லாம் அவ்வளவு இலகுவாக மறந்து விடுவார்கள் என்று அவர் கணக்குப் போட்டால், அது பகல் கனவாகவே இருக்கும்.
பசில் ராஜபக்ஷவுடன் இருக்கும் வரை, மஹிந்த ராஜபக்ஷவினால் தலையெடுக்க முடியாது என்ற டிலான் பெரேராவின் கருத்து, இந்தச் சந்தர்ப்பத்தில் தான் ஊன்றிக் கவனிக்க வைக்கிறது.
Average Rating