கடனை திருப்பி தராததால் வாலிபர்களை ஏவி பெண் கற்பழித்து கொலை: பெண் உள்பட 3 பேர் கைது…!!
ரூ.50 ஆயிரம் பணத்துக்காக வாலிபர்களை ஏவி பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இடுக்கி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடனை திருப்பி தராததால் வாலிபர்களை ஏவி பெண் கற்பழித்து கொலை: பெண் உள்பட 3 பேர் கைது
கைது செய்யப்பட்ட மகாலட்சுமி மற்றும் சங்கர், ராஜூ.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வெள்ளையாங்குடியை சேர்ந்தவர் முருகன் (வயது 53). கூலித்தொழிலாளி. இவரது மனைவி வாசந்தி (48). இவர்களுக்கு விஷ்ணு என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளை கோவையில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
வாசந்தி தேனி மாவட்டம் உத்தமபாளையம் சின்னமனூர் கொம்பை சிவசங்கர் நகரை சேர்ந்த மகாலட்சுமி (42) என்பவரிடம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார். 4 மாதங்கள் கழிந்த பின்னரும் வாசந்தி கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாலட்சுமி கேரளாவில் உள்ள வாசந்தி வீட்டுக்கு பணம் கேட்க சென்றார். ஆனால் வீட்டில் யாரும் இல்லை. அப்போது வாசந்தி தனது மகன் விஷ்ணுவுடன் கோவையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.
கடன் வாங்கிக்கொண்டு தன்னை ஏமாற்றுவதாக மகாலட்சுமி ஆத்திரம் அடைந்தார். வாசந்தியை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்ட மகாலட்சுமி நெல்லை ஆலங்குளத்தை சேர்ந்த சங்கர் (28), சின்னமனூர் சிலிப்பர் காலனி முனிசிபல் குடியிருப்பதை சேர்ந்த ராஜூ ஆகியோருடன் கடந்த 2-ந்தேதி காலை 11 மணிக்கு வாசந்தியின் வீட்டுக்கு சென்றார். அப்போது வாசந்தியின் கணவர் வேலைக்கு சென்று விட்டார். மகன் விஷ்ணு மட்டும் வீட்டில் இருந்தான். அவனிடம் கேட்டபோது தனது தாய் வாசந்தி வெளியே சென்றிருப்பதாக கூறினான். இதனையடுத்து சிறுவனிடம் நாங்கள் பணம் கேட்டு வந்ததாக உனது தாயிடம் கூறு என்று சொல்லிவிட்டு மகாலட்சுமி கிளம்பினார். வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள் சிறிதுநேரம் அந்த பகுதியில் காத்திருந்தனர். பின்னர் மீண்டும் வாசந்தி வீட்டுக்கு சென்றனர்.
அப்போது வாசந்தி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். மகன் விஷ்ணு வெளியே சென்றிருந்தான். அப்போது வாசந்தியிடம் பணம் கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் தற்போது பணம் இல்லை என்றார்.
இதனையடுத்து மகாலட்சுமி தன்னுடன் வந்த ராஜூ, சங்கர் ஆகிய 2 பேரையும் ஏவி வாசந்தியை கற்பழிக்க வைத்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து கதவை திறந்து உள்ளே சென்ற மகாலட்சுமி மயங்கி கிடந்த வாசந்தியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகை மற்றும் 1 பவுன் மோதிரத்தை பறித்தார். அதன்பின்னர் 3 பேரும் தலையணையை எடுத்து வாசந்தியின் முகத்தில் வைத்து அமுக்கி கொலை செய்தனர். மூச்சு நின்றது தெரிந்த பின்னர் வாசந்தியின் செல்போனை எடுத்துக்கொண்டு 3 பேரும் தனித்தனியாக தப்பினர்.
வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய அவரது கணவர் முருகன் வந்து பார்த்தபோது வாசந்தி கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் கட்டப்பணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வாசந்தி மகன் விஷ்ணுவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவம் நடந்தபோது மகாலட்சுமி 2 வாலிபர்களுடன் வீட்டுக்கு வந்ததாக கூறினான்.
இதனையடுத்து மகாலட்சுமியை போலீசார் தேடினர். அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வாசந்தியின் செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் நேற்று மகாலட்சுமியை பிடித்தனர். அவரது தகவலின் பேரில் நெல்லையை சேர்ந்த சங்கர், சின்னமனூரை சேர்ந்த ராஜூ ஆகியோரையும் பிடித்தனர். பின்னர் 3 பேரையும் கைது செய்த கட்டப்பணை போலீசார் நகை குறித்து விசாரணை நடத்தியபோது வாசந்தியின் 3 பவுன் நகையை இங்குள்ள நகைகடையில் ரூ.42 ஆயிரத்துக்கு விற்பனை செய்து விட்டதாக மகாலட்சுமி கூறினார்.
ரூ.50 ஆயிரம் பணத்துக்காக வாலிபர்களை ஏவி பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இடுக்கி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating