வாழ்வு தரும் இதயம் பற்றி இதயப்பூர்வமாக சிந்தியுங்கள்..!!
ஆரோக்கியத்திற்கு மையமாய், விளங்குவது இதயம் தான். எனவேதான் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது விலை மதிப்பற்றது, மிக மிக முக்கியமானது. நன்கு, தங்கு தடையின்றி இயங்கிக் கொண்டு, சீராக இரத்தத்தை பிற உறுப்புகளுக்கு அனுப்பிக் கொண்டு மெளனமாக செயல்படும் இதயத்திற்கும், அதன் பராமரிப்பிற்கும் சரியான கவனமும், ஆய்வுகளும், சிறந்த முயற்சிகளும் மிக அவசியம்.
இதய ஆரோக்கியம் என்பதைப் பற்றி ஓரளவு ஆழமாகத் தெரிந்து கொண்டால்தான், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் அவசியம் புரியும் அதற்கான முயற்சிகளையும் எடுக்க முடியும் வருமுன்னர் காப்பது என்பது மிக முக்கியம் ; சொல்லப் போனால் வந்த பின் சிகிச்சை அளிப்பதைவிட முக்கியமானது. நியாயமான, அறிவியல் பூர்வமாக சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும், ”நமது இதயத்தை தூண்கள் போல் தாங்குபவை எவை? எதனால் இதயம் வலுவிழக்கிறது? இதயத்தின் எதிரிகளை எப்படி அறிவது? எப்படித் தடுப்பது? இவற்றையெல்லாம் சரியாக செய்தால் நமக்கு என்ன பலன் கிடைக்கும்?’ என்பது போன்ற பல கேள்விகள் எழுவது நிச்சயம்.
ஆரோக்கியமான இதயத்தைத் தாங்கும் முதல் அடிப்படைத் தூண், சரியான ஆரோக்கியமான உணவு தான். இதய ஆரோக்கியத்திற்கான சரியான உணவினால் என்ன கிடைக்கும்? உணவு என்பது காலத்திற்கேற்ப மாறி வருகிறது. அதன் பல்வேறு முகங்களும் காலத்திற்கேற்ப தேவைகளுக்கேற்ப மாறி வருகின்றன. ஆயினும் எப்போதும் மாறாமல் இருப்பது ஒன்றுதான்.
சரிவிகித உணவு (பேலன்ஸ்டு டயட்) என்பது எப்போதும் சிறந்தது. அங்கங்கே அருகில் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டு எவ்விதமான சத்தையும் ஒரேயடியாகக் குறைத்துவிடாமல் தயாரிக்கப்படும் உணவே என்றும் சிறந்தது. பாதுகாப்பானது. சத்துணவு ஆலோசகர்கள் இதற்கு உதவலாம். அடுத்த தூண் சரியான உடற்பயிற்சி.
உடலுக்கும் உள்ளத்திற்கும் நாம் அளிக்கும் சரியான பயிற்சிகள் தான் உண்மையிலேயே நம்மை நீண்ட நாள் வாழ வைக்கின்றன. இது காலத்தை வென்ற ஓர் உண்மை ; யாராலும் மறுக்க முடியாத உண்மை. ஆரோக்கியமான உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான உடலை உருவாக்கும். உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் மெதுவாக ஓடினால் (ஜாக்கிங்) உங்கள் பேரக் குழந்தைகளுடன் நடக்க முடியும்!
உங்கள் பேரக் குழந்தைகளுடன் நடந்தால், கொள்ளுப் பேரன்களுடன் விளையாடவும் முடியும் உங்கள் உடலை அன்புடனும், கனிவுடனும் பாதுகாக்கும் விதத்தில் உடற்பயிற்சி செய்யுங்கள். தேவைக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்து துன்பங்களை வரவழைத்துக் கொள்ளாதீர்கள். மூன்றாவது தூண், ஆபத்துக் காரணிகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் இது சற்று சிக்கல்கள் நிறைந்த தூண். இவற்றுக்கான எதிரிகளை நாம் முதலில் பட்டியலிட வேண்டும் பிறகு வெல்ல வேண்டும்.
உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் அதிக சர்க்கரை, உயர்ந்த அளவு இரத்தத்தில் கொலஸ்ட்ரால், புகை பிடித்தல், அதிக உடல் பருமன், மிகவும் சுறுசுறுப்பற்ற வாழ்க்கை முறை, மன இறுக்கம் போன்ற எல்லாமே இதற்கு எதிரிகள் தான். இவற்றை எதிர்த்து நமது இதயத்தைக் காக்கும் போரில், உணவும் உடற்பயிற்சியும் நமக்கு உறுதுணையாக நிற்கும். உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனை கேட்டு அதன்படி நடந்தால் வெற்றி உறுதி. சரியான இடைவெளிகளில் பரிசோதனைகளையும் (மெடிக்கல் செக்கப்களும்) செய்து கொள்வது அவசியம்.
புகைபிடித்தலை தவிர்ப்பது அவசியம். அதே போல் புகை பிடிப்பவர்களை, புகை பிடிக்கும்போது தவிர்ப்பதும் அவசியம். சமூகப் பொறுப்புணர்வோடு அனைவருமே புகைபிடித்தலைத் தவிர்த்தால், சமூகமே ஆரோக்கியமாக மாறும். சுறுசுறுப்பில்லாத மந்தமான வாழ்க்கையும், அதிக மன அழுத்தமும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை. எல்லாத் துறைகளையும் போல், இதிலும் சரியாக, சமச்சீராக அனைத்திலும் கவனம் செலுத்துதல் அவசியம். வேலையோ, அதிக வேலையோ என்றுமே ஒருவரையும் கொன்று விடாது. ஆனால் விருப்பமின்றி உற்சாகமின்றி செய்யும் வேலையினால் ஆபத்தே அதிகம். தான் செய்யும் வேலையை விரும்பி சந்தோஷமாக செய்வதை ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.
இத்தனை முயற்சிகளுடன் நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருந்தால், என்ன பலன் கிடைக்கும் என்ற கேள்வி எழலாம்! கட்டாயமாக நீண்ட ஆயுள் கிடைக்கும்! நல்ல துடிப்பான நன்கு செயல்படக் கூடிய, சவால்களை எளிதில் சந்திக்ககூடிய ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும்! அது மட்டுமின்றி, இவ்வாறு உள்ள ஒருவரைப் பார்த்து பலர் உற்சாகமாகப் பின்பற்றுவதால், சமுதாயமே ஆரோக்கியமான, துடிப்புள்ள சமுதாயமாக மாறுவது உறுதி.
Average Rating