‘மாநிலத்தில் சுயாட்சி. மத்தியில் கூட்டாட்சி’: தமிழகத்தில் மீண்டும் விஸ்வரூபம்..!! (கட்டுரை)

Read Time:13 Minute, 42 Second

New Delhi: A View of Parliament house during the ongoing Winter Session in New Delhi on Wednesday. PTI Photo by Kamal Kishore (PTI12_9_2015_000201B)
New Delhi: A View of Parliament house during the ongoing Winter Session in New Delhi on Wednesday. PTI Photo by Kamal Kishore (PTI12_9_2015_000201B)
மத்திய- மாநில உறவுகள் குறித்த திடீர் பிரசாரம் தமிழகத்தில் மீண்டும் புறப்பட்டிருக்கிறது. இதுவரை ஆட்சியிலிருக்கும் முதலமைச்சர்கள் “மாநில அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன” என்ற வாதத்தை எடுத்து வைத்து வந்தார்கள்.

குறிப்பாக, முதலமைச்சராக இருந்த கருணாநிதி இதற்கான யுத்தத்தையே மத்திய அரசுடன் 1970களில் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

“மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என்ற முழக்கத்தை ஐம்பெரும் முழக்கமாக அண்ணா மறைவுக்குப் பிறகு, திருச்சியில் கூடிய மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் முன் வைத்தது.

அதற்கு முன்பே, 1967 தேர்தல் அறிக்கையிலேயே திராவிட முன்னேற்றக் கழகம், மாநில சுயாட்சி பற்றிய முழக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. என்றாலும், இப்போது தமிழகத்தில் எதிர்கட்சிகள்தான், மாநில அதிகாரம் பறிபோகிறது என்ற குரலை எழுப்பி வருகின்றன. ஆளுங்கட்சியான அ.தி.மு.க சார்பில் அப்படியொரு வாதத்தை இன்னும் எடுத்து வைக்கவில்லை.

70 களில் கிளம்பிய, மாநில சுயாட்சி முழக்கத்துக்கு அர்த்தமுள்ள அறிக்கை ஒன்றைப் பெறுவதற்காக ‘ராஜமன்னார் குழு’ அமைக்கப்பட்டது.

மத்திய- மாநில அரசாங்கங்களின் உறவுகள் பற்றி ஆராய்ந்து, இந்தக் குழு அளித்த அறிக்கை குறித்து, 1974இல் ஐந்து நாட்களுக்கும் மேலாகத் தமிழக சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்று, இறுதியில் தீர்மானமாகவே நிறைவேற்றப்பட்டது.

“மாநிலத்துக்கு அதிக அதிகாரம் கொடுக்க வேண்டும்” என்பதுதான் இந்த விசாரணைக்குழுவின் முக்கிய பரிந்துரை. தமிழகம் தனிக் கொடி கேட்டது; சுதந்திர தினத்தன்று முதலமைச்சரே தேசியக் கொடியை ஏற்றும் உரிமை பெற்றது; எல்லாம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது உருவானாலும், ‘ராஜமன்னார் குழு’தான் “மாநில சுயாட்சி” விவகாரத்தில் தி.மு.க தமிழகத்தில் அமைத்த முதல் குழு.

கருணாநிதிக்குப் பிறகு வந்த, மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரும் மாநில சுயாட்சித் தீர்மானத்தை, சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் கேட்ட மாநில சுயாட்சியை, முதலமைச்சராக இருந்த காலத்தில் ஜெயலலிதாவும் கைவிடவில்லை.

அவர் வெளிப்படையாக மாநில சுயாட்சி கோரிக்கையை வைக்கவில்லை என்றாலும், மாநிலத்தின் அதிகாரம் என்பதில், அவர் இறுதி வரை உறுதியாகவே இருந்தார்.

மத்திய அரசு கொண்டு வந்த, சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் போன்ற பல முக்கிய சீர்திருத்தச் சட்டங்களை “மாநில அதிகாரம் பாதிக்கப்படுகிறது” என்றும், “கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக இருக்கிறது” என்றும் கூறி கடுமையாக எதிர்த்திருக்கிறார். சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்துக்காக அனைத்து முதலமைச்சர்களின் ஆதரவையும் மத்திய அரசுக்கு எதிராகத் திரட்டினார்.

ஆகவே, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் பாதுகாத்த மாநில அதிகாரம், இப்போது பறி போகின்றது என்ற உணர்வு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம், காவிரி நீர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, பாலாறு பிரச்சினை போன்ற கர்நாடக, கேரள, ஆந்திர மாநில பிரச்சினைகளில் மத்திய அரசு, தமிழகம் எதிர்பார்த்தவாறு உதவவில்லை என்ற கோபம் உருவாகியிருக்கிறது.

அது மட்டுமின்றி, மருத்துவக் கல்லூரிகளுக்கான ‘நீட்’ தேர்வில் மாநில சட்டமன்றமே நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்ற எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது.

தமிழக நலன்கள் பாதிக்கப்படுவதால் “மாநில உரிமைகள் பறிபோகிறது” என்ற குரல் தமிழகத்தில் எழுந்து, மீண்டும் “மாநிலத்தில் சுயாட்சி. மத்தியில் கூட்டாட்சி” என்ற முழக்கம் விஸ்வரூபம் எடுக்கிறது.

அதற்கான முதல், “மாநில சுயாட்சி” மாநாட்டை தொல்திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் அமைப்பு 21 ஆம் திகதி நடத்தி முடித்திருக்கிறது. இதில் அண்டை மாநிலமான கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயனும், புதுவை முதலமைச்சர் நாராயணசாமியும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து, டிசெம்பர் 21 ஆம் திகதி அகில இந்திய தலைவர்களை அழைத்து “மாநில சுயாட்சி” மாநாடு ஒன்றை நடத்தப் போகிறார் வைகோ.

தி.மு.க தலைவர் கருணாநிதி செயல்படாத நிலையிலும், ஜெயலலிதா இல்லாத நிலையிலும் “மூன்றாவது தலைவராக” வேண்டும் என்ற சிந்தனையில் இந்த மாநாட்டை முன்னெடுப்பதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களுக்கு எல்லாம் போட்டியாக, மாநில சுயாட்சி முழக்கத்தை முதன் முதலில் கையிலெடுத்த தி.மு.க சார்பிலும், ‘அகில இந்தித் தலைவர்களை வைத்து மாநில சுயாட்சி மாநாடு’ நடக்கப் போகிறது. இதை 21 ஆம் திகதி நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் மாநில சுயாட்சி மாநாட்டில் கலந்து கொண்ட தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

“அதிகாரங்கள் அனைத்தும் மத்தியில் குவிந்து கிடக்கக் கூடாது” என்ற கோரிக்கை, தொடர்ந்து இந்தியாவில் உள்ள மாநிலங்களால் எழுப்பப்பட்டு வருகிறது. மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றிய இரு மாநிலங்கள் என்று எடுத்துக் கொண்டால் முதல் மாநிலம் தமிழ்நாடு; இன்னொரு மாநிலம் காஷ்மீர்.

ஆனால், காலப் போக்கில் “மத்தியில் கூட்டாட்சி” என்ற அடிப்படையில் 1989க்குப் பிறகு, மாநிலக் கட்சிகள் மத்திய அரசு பங்கேற்க முற்பட்டன. மத்தியில் ஆட்சிக்கு வரும் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் போதிய பெரும்பான்மை பெற முடியாத நிலையில், மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சியிலிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மாநில கட்சிகளே, மத்திய அரசில் பங்கேற்றதால் ஏறக்குறைய 1989க்குப் பிறகு மாநில சுயாட்சியின் முழக்கம் மங்கியே இருந்தது என்றே கூறலாம்.

மத்திய மாநில அரசு உறவுகள் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட ‘சர்க்காரியா’ ஆணைக்குழுவாக இருந்தாலும் சரி, ‘பூஞ்ச்’ ஆணைக்குழுவாக இருந்தாலும் மத்திய- மாநில அரசு உறவுகள் குறித்து அறிக்கை கொடுத்தாலும், மாநில உரிமைகள் பற்றிய கோரிக்கை வலுவாக எழவில்லை.

அதேபோல், மாநிலங்களில் உள்ள ஆட்சி கலைப்பும் உச்சநீதிமன்றம் வழங்கிய
எஸ்.ஆர் பொம்மை வழக்கு தீர்ப்புக்குப் பிறகு தடைபட்டது என்பதால், ஆட்சி கலைப்பு அபாயத்தில் இருந்தும் மாநில கட்சிகளின் அரசுகள் பெருமளவில் தப்பின.

“மாநில கட்சிகள் மத்திய அரசில் பங்கேற்றது” “மாநில அரசுகள் கலைப்பு தடுக்கப்பட்டது” இரண்டும், மாநில சுயாட்சி கோரிக்கையின் முனையை மழுங்க வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இப்போது மத்தியில் முதல் முறையாக, ஏறக்குறைய 1989க்குப் பிறகு ஒரு கட்சி மக்களவையில் சொந்தமாக, அறுதி பெரும்பான்மை பெற்றிருக்கிறது. ஆட்சி அமைக்க 272 எம்.பிக்கள் தேவை என்ற நிலையில் பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையிலான பா.ஜ.கவுக்கு 281 எம்.பிக்கள் பலம் இருப்பதால் மாநில கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டிய நிலையில் பா.ஜ.க இல்லை. மாநில கட்சிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையிலும் இல்லை.

16 எம்.பிக்கள் கொண்ட தெலுங்கு தேசம் பா.ஜ.கவின் கூட்டணியில் இருந்தாலும், அவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறதே தவிர, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் இல்லை.

தமிழகத்தில் அ.தி.மு.கவுக்கு 37 எம்.பிக்கள் மக்களவையில் இருந்தாலும், அந்த எம்.பிக்களின் ஆதரவில் பா.ஜ.க இல்லை.

மம்தா பானர்ஜிக்கு 34 எம்.பிக்கள் பலமிருந்தாலும், அக்கட்சியும் பா.ஜ.க கூட்டணி கட்சியில்லை. பிஜூ ஜனதா தளத்துக்கு 20 எம்.பிக்கள் இருந்தாலும், அந்தக் கட்சிக்கும் மத்திய அரசை அழுத்தம் கொடுக்கும் தைரியம் இல்லை.

ஆகவே மத்திய அரசைப் பொறுத்தவரை மாநில கட்சிகளின் ஆதிக்கம், 2014 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு முடிவுக்கு வந்து விட்டது என்பதே உண்மை.

இப்படி, மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் மத்திய அமைச்சரவையில் அறவே இல்லை என்ற நிலையில்தான், மாநில சுயாட்சிக் கோரிக்கை மீண்டும் வலுப்பெறுகிறது. இதற்கு முன்பு இருந்த மத்திய அரசுகள் அமைத்தது போல் ‘சர்க்காரியா’, ‘பூஞ்ச்’ ஆணைக்குழுக்களை மத்திய- மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய இப்போது பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு முன் வருமா என்பது பில்லியன் டொலர் கேள்வி.

ஏனென்றால் அதற்கான அவசியம் ஏதும் பா.ஜ.கவுக்கு இப்போது இல்லை. ஆகவே, மாநிலக் கட்சிகளின் ‘மாநில சுயாட்சி’ முழக்கம் வலுப்பெற வேண்டுமென்றால், மத்தியில் உள்ள ஆட்சிக்கு மாநில கட்சிகளிடம் உள்ள எம்.பிக்கள் தேவை என்ற நிலை உருவாக வேண்டும்.

அந்த பிரசாரத்துக்கான முதல் விதை சென்னையில் விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் போடப்பட்டுள்ளது. இந்த விதை மேலும் பல மாநில கட்சிகளின் முழக்கமாக மாறுமேயானால், இந்தியாவில் மீண்டும் “மத்திய – மாநில உறவுகள்” குறித்து ஆராய ஒரு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் மத்தியில் வரும் எந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என்பதுதான் இன்றைய நிலைமை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக்பாஸில் தனக்கு பிடித்த நபர் ஆரவ் இல்லை… ஒவியா அதிரடி பேச்சு…!!(வீடியோ)
Next post போலீஸ் வேடத்தில் நடிக்க பயந்தேன் – ஸ்ரீபிரியங்கா…!!