அற்புதமான வேலைபாடுகள் நிறைந்த பெரிய ஒற்றை வளையல்கள்..!!
இன்றைய நாளில இளம் பெண்களின் கரங்களில் தவழ்வன பெரிய தங்க வளையல்கள் தான். அதிக விருப்பமும், ஆர்வமும் நிறைந்த நகையாய் தற்போது பெண்களை கவரும் விதத்தில் ஒற்றை பெரிய வளையல்கள் உலா வருகின்றன. பாரம்பரிய திருமண நகைகளின் வகையில் இந்த பெரிய வளையல்கள் பழங்கால வடிவமைப்பு மற்றும் தற்கால வடிவமைப்பு என்றவாறு கூடுதல் மெருகுடன் வடிவமைக்கப்படுகின்றன.
இந்த பெரிய வளையல்கள் அனைவரின் கவனத்தை தன் வண்ணம் ஈர்க்கும் வகையில் இருப்பதுடன், அணிபவரின் கையின் கவுரவத்தையும், அழகையும் மேம்படுத்தும் வகையில் உள்ளது. அனைத்து வயதுள்ள பெண்களும் இதனை விரும்பி அணியலாம். குறிப்பாக இளம்வயதினர் மற்றும் மத்திய வயதுள்ள பெண்களே விரும்பி வாங்கி அணிகின்றனர்.
ஆசிய நாடுகள் பலவற்றிலும் புதிய நவநாகரீக அணிகலனான இந்த பெரிய ஒற்றை தங்க வளையல்கள் அதிகமாக பிரபலமாகி வருகின்றது. இந்த பெரிய வளையல்கள் அனைத்தும் பெரும்பாலும் அணிபவரின் கையில் நுழைந்து சென்று விடாது. காரணம் கையில் கச்சிதமாக அமர்வதற்கு ஏற்ப பிரித்து மாட்டி கொள்ளும் கொக்கியுடன் இவ்வளையல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வளையல்கள் எவ்வளவு பெரியதாகவும், மெல்லிய மற்றும் தகடு அமைப்பில் இருப்பினும் அணியும் போது வளைவோ, சேதமோ ஏற்படாது. அதிக வேலைப்பாடு மற்றும் எனாமல், கற்கள் பதித்த வளையல்கள் என்பதால் விழாகளுக்கு அணிந்து சென்று உடனே கழற்றி பாதுகாத்திடுவது நலம்.
தங்கமணி குஞ்சரங்கள் தொங்கும் பிலிகிரி வளையல் :
அற்புதமான தங்க நகை வேலைப்பாடு நிறைந்த இந்த வளையல் பெண்களின் கரங்களில் ஓர் நடன சாம்ராஜ்யத்தையே நிகழ்த்திடும். ஆம் அந்த அளவிற்கு வளையலின் இரு ஓரப்பகுதிகளிலும் தங்க மணி குஞ்சரங்கள் தொங்குகின்றன. அதில் பட்டையிலான வளைபின்னல் வேலைப்பாட்டின் இடையஇடையே மூன்று தங்க மணிகள் ஊஞ்சலாடுகின்றன. பட்டையான அமைப்பில் வளைவுகளாய் தங்க முத்துக்கள் மேலெழும்பியவாறு இடையில் சல்லடை அமைப்பும் தனித்துவத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.
எனாமல் பட்டாம்பூச்சி பறக்கும் வலை பின்னல் வளையல் :
பெரிய அகலமான வளைபின்னல் அதிக செதுக்கல்களுடன் இருக்க அதன் மேல் அழகிய வண்ண பட்டாம்பூச்சிகள் மற்றும் பூக்கள் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இரு பிரிவுகளாக பிரித்து அணியும் வகை என்பதால் இருபக்கமும் இதே வடிவமைப்பு பிரம்மாண்ட வளையல் அமைப்பை தருகிறது. நேர்த்தியான வளைவுகளுடன் பிலிகிரி வேலைபாட்டுடன் இவ்வளையல் உள்ளது.
டெம்பிள் வளையல்கள்:
டெம்பிள் ஜிவல்லரி என்ற இறைஉருவம் பொறித்த மற்றும் கோயில் சின்னங்கள் நகை வடிவமைப்பிலும் பெரிய வளையல்கள் வருகின்றன. கையில் இறுக பிடிக்கும் அமைப்பில் மஹாலட்சுமி, அஷ்டலட்சுமி, பாரம்பரிய பூவேலைப்பாடு, சின்னங்கள் செதுக்கப்பட்ட இவ்வளையல்கள் அணியும் வகையிலும், மாட்டும் வகையிலும் உருவாக்கி தரப்படுகின்றன.
கல்பதித்த ஒற்றைவளையல்கள் :
நடுவில் கயிறு போன்ற அமைப்பும், ஓரப்பகுதிகள் இருபுறமும் ஓவல் வடிவில் நடுப்பகுதி மரகத கல்லும் சுற்றி சிறு சிறு மாணிக்க கல்லும் பதியப்பட்ட அமைப்பும், இடைவெளிவிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவே சதுர அமைப்பும் அதில் வெள்ளை கல் பதியப்பட்டுள்ளது. இதன் கீழ் ஓரப்பகுதிகள் சிறு சிறு முத்துக்களால் இணைக்கப்பட்டுள்ளது. ஓர் அழகிய முத்து, மாணிக்க, மரகத தோரணம் இருபுறமும் உள்ளவாறு அழகுடன் இவ்வளையல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அழகிய வெள்ளை கற்கள் மட்டும் பதித்த பட்டை வடிவ பூ வளையல் மற்றும் பிலிகிரி வளையல்கள் அதிஅற்புதமாக உள்ளன. ஒற்றை பெரிய வளையல்கள் பெண்களின் அழகிய கலைசின்னயமாய் வலம் வருகின்றன.
Average Rating