என்.டி.ஆர். – லட்சுமி சிவபார்வதி உறவு பற்றி புதிய சினிமா: ராம் கோபால் வர்மா அறிவிப்பு..!!
ஆந்திர அரசியலிலும், திரைப்படத் துறையிலும் புரட்சிகள் செய்த என்.டி.ராமராவ், தனது 70_வது வயதில் லட்சுமி சிவபார்வதி (வயது 38) என்ற கல்லூரி பேராசிரியையை மறுமணம் செய்து கொண்டார். 1983 ஜனவரியில் ஆட்சியைக் கைப்பற்றிய என்.டி.ராமராவ், சிறந்த முறையில் ஆட்சி நடத்தி மக்களின் பேராதரவைப் பெற்றார்.
இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின் பிரதமராக பதவி ஏற்ற ராஜீவ் காந்தி, பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திக்க தீர்மானித்தார். அதன்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 1984 டிசம்பர் 24, 27 தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அப்போது இந்தியா முழுவதும் “ராஜீவ் அலை” வீசியது. பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 508 இடங்களில் 401 இடங்களை இ.காங்கிரஸ் பிடித்தது. ஆனால் ஆந்திராவிலோ “ராமராவ் அலை”தான் வீசியது. ஆந்திராவில் உள்ள 42 பாராளுமன்றத் தொகுதிகளில் 34 இடங்களில் தெலுங்கு தேசம் போட்டியிட்டு 30 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 6 இடங்களே கிடைத்தன.
இந்த வெற்றி அளித்த தைரியத்தில் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே சட்ட சபையைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த என்.டி.ராமராவ் முடிவு செய்தார். ஆந்திர சட்டசபை கலைக்கப்பட்டு 1985 மார்ச் மாதம் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் ராமராவின் தெலுங்கு தேசம் 202 இடங்களைப் பிடித்து அமோக வெற்றி பெற்றது.
காங்கிரஸ் 291 இடங்களில் போட்டியிட்டு 49 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆயினும் 1989-ல் நடைபெற்ற சட்ட சபைத் தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியது. என்.டி.ராமராவின் தெலுங்கு தேசம் கட்சி தோல்வியைத் தழுவியது.
காங்கிரஸ் கட்சி 182 இடங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசத்துக்கும், அதன் தோழமைக் கட்சிகளுக்கும் 94 இடங்களே கிடைத்தன. காங்கிரசைச் சேர்ந்த டாக்டர் எம்.சென்னாரெட்டி முதல் மந்திரியானார்.
இந்நிலையில், என்.டி.ராமராவ் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. கல்லூரி பேராசிரியையாக பணியாற்றிய லட்சுமி சிவபார்வதி, என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு விரும்பினார். அதற்கு ராமராவ் சம்மதித்தார். சிவபார்வதி என்.டி.ராமராவை அடிக்கடி சந்தித்து, வாழ்க்கை வரலாற்றை எழுதி வந்தார்.
இதற்காக என்.டி.ராமராவின் வீட்டிற்கு பல முறை சென்று வந்தார். இந்த சந்தர்ப்பம் அவர்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தி, காதல் அரும்பியது. சிவபார்வதி ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி, கணவர்களை விவாகரத்து செய்தவர். அந்த கணவர்கள் மூலம் 3 குழந்தைகளும் இருந்தனர்.
என்.டி.ராமராவின் மனைவி தாரகம் காலமாகி விட்டபோதிலும், மகன், மகள்கள் 11 பேரும், அவர்களின் மூலம் 30-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளும் இருந்து வந்தார்கள். என்.டி.ராமராவுக்கும், சிவபார்வதிக்கும் காதல் இருப்பதாகவும், அவர்கள் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், பத்திரிகைகளில் “கிசுகிசு”க்கள் கசிந்தன. இதை இருவருமே முதலில் மறுத்தனர்.
ஆனால், தான் மறுமணம் செய்து கொள்ளப்போவதை 9-9-1993 அன்று (திருமணத்துக்கு 2 நாட்களுக்கு முன்) ராமராவ் பகிரங்கமாக அறிவித்தார். என்.டி.ராமராவ் கதாநாயகனாக நடித்த “மேஜர் சந்திரகாந்த்” என்ற தெலுங்கு படத்தின் 100-வது நாள் விழா திருப்பதியில் நடந்தது.
அந்த விழாவில் அவர் பேசும்போது, “கல்லூரி பேராசிரியை லட்சுமி சிவபார்வதியை நான் மறுமணம் செய்து கொள்ளப்போகிறேன்” என்று அறிவித்தார். என்.டி.ராமராவ் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமானால், அவர் இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஜோசியர்கள் கூறியதாகவும், அதன்படியே அவர் மறுமணம் செய்ததாகவும் அப்போது பத்திரிகைகள் எழுதின.
அவரது இந்த முடிவுக்கு கட்சியினரிடையேயும், குடும்பத்தாரிடையிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பின்னர், 11-9-1993 அன்று தனது 70-வது வயதில் லட்சுமி சிவபார்வதியை திருமணம் செய்துகொண்ட என்.டி.ஆர். பிள்ளைவரம் வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்த செய்திகள் அந்நாட்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின் 1994-ம் ஆண்டு நடந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. என்.டி.ஆர் முதலமைச்சரானார். சிவபார்வதியின் ஆதிக்கம் அரசியலில் அதிகமாகியதைத் தொடர்ந்து கட்சியில் உட்பூசல்கள் வந்தன. என்.டி.ஆரின் மருமகனான சந்திரபாபுவும், மகனான நடிகர் பாலகிருஷ்ணாவும் எதிர்அணியாக மாற, தெலுங்குதேசம் கட்சி உடைந்தது. 1995-ல் ராமராவ் ராஜினாமா செய்தார். அதனையடுத்து சந்திரபாபு நாயுடு சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்தி முதல் மந்திரியானார்.
18-1-1996 அன்று என்.டி.ஆரின் மறைவுக்கு பிறகு தெலுங்கு தேசம் கட்சியை தனது தலைமையின்கீழ் கொண்டுவர லட்சுமி சிவபார்வதி எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. தெலுங்கு தேசம் கட்சியின் தலைமை அவரது மருமகனான சந்திரபாபு நாயுடு கைக்கு மாறியது.
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய கதை களங்களை தேர்வு செய்து படம் தயாரிக்கும் இயக்குநர் ராம் கோபால் வர்மா, மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ஆர். – லட்சுமி சிவபார்வதி இடையிலான உறவை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
இதற்கான அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இந்தப் படம் என்.டி.ஆரின் வாழ்க்கையில் உண்மையில் நடந்தது என்ன? என்பதை பிரதிபலிப்பதாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியான பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த லட்சுமி சிவபார்வதி, இதுதொடர்பாக, என்னுடன் நேரிலோ, தொலைபேசி வழியாகவோ தொடர்புகொண்டு ராம் கோபால் வர்மா பேசவில்லை. அவர் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க விரும்பினால் நான் வரவேற்பேன்.
ஆனால், அந்த படத்தில் உண்மைகள் மட்டுமே இடம்பெற வேண்டும். அவரை அவமதித்தவர்கள் மற்றும் முதுகில் குத்தியவர்கள் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Average Rating