‘இப்போது யார் சாதி பார்க்கிறார்கள்?’..!! (கட்டுரை)
இலங்கையின் வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காணப்படும் சாதியின் தாக்கம் தொடர்பான கலந்துரையாடல்கள் அதிகரித்திருக்கின்றன. இந்தக் கலந்துரையாடல்கள் ஆரம்பித்த புள்ளியென்பது, எந்தளவுக்கு ஆரோக்கியமானது என்பது கேள்விக்குரியதாக இருந்தாலும், முக்கியமான முடிவுகளைக் கொண்டுவரக்கூடிய கலந்துரையாடலாக இது மாற வேண்டுமென்பதே, அநேகமானோரின் அவாவாக இருக்கிறது.
அருளினியன் என்ற எழுத்தாளர் எழுதிய “கேரள டயரீஸ்” என்ற புத்தகம், யாழ்ப்பாணத்தில் அண்மையில் வெளியிடப்பட முயலப்பட்டபோது, சர்ச்சைகள் எழுந்திருந்தன. இந்தியாவின் சஞ்சிகையொன்றில் அவர் எழுதிய ஆக்கம் சம்பந்தமாகவே சர்ச்சை காணப்பட்டது. ஆனால், அந்தச் சர்ச்சையையும் தாண்டி, அவரது தற்போதைய நூல், யாழ்ப்பாணத்தின் சாதி சம்பந்தமாகப் பேசுகிறது என்பது, அவரது சஞ்சிகை ஆக்கத்துடன் சம்பந்தப்படாத புத்தகத்துக்கான கண்மூடித்தனமான எதிர்ப்புக்குக் காரணமாகவோ அமைந்ததோ என்ற கேள்விகளை எழுப்பியது.
இந்தச் சூழ்நிலையில் தான், இலங்கையின் தமிழ்ச் சூழலில் – குறிப்பாக இணையச் சூழலில் – சாதியம் சம்பந்தமான கலந்துரையாடல்கள் அதிகரித்திருக்கின்றன.
கலந்துரையாடல்கள் சொல்வது என்ன?
சாதியம் பற்றிய அண்மைக்காலக் கலந்துரையாடல்களில் ஈடுபடுவோரில் ஒரு பகுதியினர், சாதியம் என்பது தமிழ்ச் சமூகத்தில் இல்லவே இல்லை, அல்லது பெரிதளவில் இல்லை என்ற கருத்தை முன்வைக்கின்றனர். “இப்பெல்லாம் யார் சேர் சாதி பார்க்கிறா?” என்பது தான், அவர்களது மகுட வாக்கியமாக இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை, சாதாரண நகர்ப்புறச் சூழலில், வெளிப்படையான சாதியப் பாகுபாடுகள் இல்லாத நிலைமை, சாதியமே இல்லையென்பதைக் காட்டுகிறது என்பதாக இருக்கிறது.
ஒரு வகையில், அந்த எண்ணத்தில் சிறிதளவில் உண்மை இருக்கிறது. சில தசாப்தங்களுக்கு முன்னர், தாழ்த்தப்பட்ட சாதியினர் சந்தித்த நேரடியான ஒடுக்குமுறைகள் தற்போது குறைந்திருக்கின்றன. ஆனால் அதற்காக, சாதியே இல்லையென்று கூறிவிட முடியுமா?
1983ஆம் ஆண்டிலோ அல்லது அதற்குப் பின்னரான சில ஆண்டுகளிலோ, தமிழர்கள் மீது அரச இயந்திரத்தால் காட்டப்பட்ட அளவுக்கு, நேரடியான, மூர்க்கத்தனமான பாகுபாடுகள் தற்போது காணப்படவில்லை. அதற்காக, தமிழர்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் இல்லை என்று கூறிவிட முடியுமா?
ஒரு தனிநபருக்கு, சாதிப் பாகுபாட்டின் பாதகத்தை அனுபவிக்க வேண்டி வரவில்லை என்பதற்காக, சாதிப் பாகுபாடே இல்லையென்று கூறுவது, சாதிப் பாகுபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் அத்தனை மக்களின் வலிகளையும் ரணங்களையும், “போலியானவை” என்றழைப்பதற்குச் சமனில்லையா?
மறுபக்கமாக, “சாதியைப் பற்றி எப்போதும் கதைத்துக் கொண்டிருந்தால், அது மேலும் வளரும். அதை அப்படியே விட்டுவிடுவது தான் சிறப்பானது” என, “நடுநிலைக் கருத்தை” முன்வைப்பவர்கள் இருக்கிறார்கள்.
சாதியைப் பற்றிக் கதைக்காமல் அப்படியே விடுவதால், சாதி அப்படியே அழிந்துவிடும் என்பது, மூடத்தனமான எண்ணமாகும். இதற்கான சிறப்பான உதாரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் காணப்பட்ட காலத்தில், வடக்கில், சாதியம் என்பது பெரிதளவில் முன்னுரிமையில் காணப்படாத நிலையை அவதானிக்க முடிந்திருக்கும்.
விடுதலைப் புலிகள் சார்பில், சாதியை ஒழிப்பதற்கான சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும், சாதியை ஒழிப்பதென்பது, அவர்களின் பிரதான நோக்கமாக இருந்திருக்கவில்லை. அவர்களுடைய நோக்கம், வேறாக இருந்தது. அதனால், அக்காலத்தில் சாதியென்பது, இல்லாமல் செய்யப்பட்டது என்பதை விட, ஒடுக்கி வைக்கப்பட்டது என்பதே பொருத்தமானதாக இருக்கும்.
ஆனால், விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில், மீண்டும் சாதியின் ஆதிக்கமும் அதன் நடவடிக்கைகளும், யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் சூழ்நிலையைப் பார்க்க முடிகிறதே? சாதியைப் பற்றிக் கதைக்காமல், பல ஆண்டுகளாக இருந்த போது, அது ஏன் அழியவில்லை?
இப்படியான “நடுநிலைக் கருத்துகள்”, உண்மையில் மோசமானவை. “இறுதி யுத்தத்தில் நடந்தவற்றை மறந்துவிடுங்கள். அதைப் பற்றித் திரும்பத் திரும்பப் பேசுவதால், பிரச்சினை தான் அதிகரிக்கும். நடந்ததை மறந்துவிட்டு, அரசியல் தீர்வு பற்றிக் கலந்துரையாடுங்கள்” என்று வழங்கப்படும் “நடுநிலைக் கருத்துகளைப்” போன்று தான், சாதியம் பற்றிய மேற்படி கருத்துகளும் அமைகின்றன.
நடந்த உண்மைகளைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட தரப்புக்கு, இழப்பீடுகளும் நீதியும் வழங்கப்படாத வரையில், ரணங்கள் ஆறுவதில்லை, மக்களின் வலிகள், இல்லாமல் போவதில்லை. உலகில் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்ட அனைத்து நாடுகளின் வரலாற்றையும் எடுத்துப் பார்த்தால், இந்த உண்மையைக் கண்டறிய முடியும்.
சாதிப் பிரச்சினை உண்மையில் இருக்கிறதா?
யாழ்ப்பாணச் சனத்தொகையில் சுமார் 50 சதவீதம், தாழ்த்தப்பட்ட சாதியினங்களைச் சேர்ந்த மக்களாக இருக்கின்றனர் எனக் கணிக்கப்படுகிறது. ஆனால், அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் இல்லை என்ற நிலையே காணப்படுகிறது.
இலங்கையில், குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ் மக்களின் கொள்கை விடயங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளிலும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவரும் கொள்கை ஆராய்ச்சிக்கான அடையாள நிறுவனத்தால், கடந்தாண்டு இறுதியில் நடத்தப்பட்ட சாதியம் சம்பந்தமான கலந்துரையாடலில், இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டது.
50 சதவீதமான மக்களுக்கு, ஒரு பிரதிநிதியும் இல்லையென்பது, எவ்வளவு கொடூரமானது? இலங்கையின் நாடாளுமன்றத்தில், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வெறுமனே 13 நாடாளுமன்ற உறுப்பினர்களே (அதாவது 5.77 சதவீதமானோரே) பெண்களாக உள்ளனர் என்ற நிலை காணப்படுகிறது. இந்த நிலைமையே, உலகில் மிகவும் தாழ்ந்த நிலையாகக் கருதப்படுகிறது.
ஆனால், இலங்கை நாடாளுமன்றத்தில், பெண்களே இல்லாத ஒரு நிலையைச் சிந்தித்துப் பார்த்தால், அது இன்னமும் மோசமாக இருக்கின்றதல்லவா? அந்த நிலையில் தான், தமிழ் மக்களில் – குறிப்பாக வடக்குத் தமிழ் மக்களில் – தாழ்த்தப்பட்ட சாதியினர் காணப்படுகின்றனர். ஆனால், அதைப் பற்றிய கலந்துரையாடல்களும் உரையாடல்களும், போதிய அளவில் முன்னெடுக்கப்படுகின்றனவா என்றால், இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. ஏன் இந்த நிலைமை காணப்படுகிறது என்பதைப் பற்றி ஆராய வேண்டிய பொறுப்பு, அனைவருக்கும் இருக்கிறதல்லவா?
இதில், முக்கியமான ஒரு விடயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். சாதாரண மட்டத்தில், சாதியம் பற்றிய கலந்துரையாடல்கள், போதுமான அளவில் காணப்படவில்லை என்பது உண்மையென்ற போதிலும், இடதுசாரி அமைப்புகள், இதில் முக்கியமான பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றன என்பது முக்கியமானது.
யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில், மக்கள் குடியிருக்கும் இடங்களுக்கு அருகில் அமைந்துள்ள மயானங்களை, வேறு இடங்களுக்கு மாற்றுமாறு, மக்கள் போராடி வருகின்றனர். இரண்டு மாதங்களைக் கடந்து நடைபெறும் இந்தப் போராட்டத்துக்குத் துணையளிப்பவர்களாக, இடதுசாரிகள் இருக்கின்றனர். மாகாணத்தின் முதலமைச்சர், தங்களை வந்துகூடப் பார்க்கவில்லையென, புத்தூரில் போராடும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆனால், முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம், இப்படியான செயற்பாடுகளை எதிர்பார்த்துத் தான் மக்கள் வாக்களித்தனரா என்ற கேள்வியும் எழுகிறது. அவர், உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதோடு, சைவ/இந்து சமயத்தை, கடுமையாகக் கடைப்பிடிப்பவராக உள்ளார். அவர், முதலமைச்சராக அறியப்பட முன்னரே, இலங்கையில் பிரபலமான ஒருவர். பிரேமானந்தா போன்ற, வன்புணர்வுக் குற்றம் நிரூபிக்கப்பட்ட கயவர்களை, வெளிப்படையாகவே ஆதரித்த ஒருவர்; முதலமைச்சர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்ட போது, தாழ்த்தப்பட்ட சாதிகளையும் ஏனைய மதங்களையும் விமர்சிக்கும் அல்லது தாழ்வாக எண்ணும் இந்துமதக் கடும்போக்குவாதிகளின் ஆதரவு, அவருக்கு காணப்பட்டது. இவற்றையெல்லாம் தாண்டித் தான், அவருக்கான வாக்குகள் அளிக்கப்பட்டன. “வீட்டுச் சின்னத்தில் கழுதையை நிறுத்தினாலும் வாக்களிப்போம்” என்ற எண்ணத்தில், அந்த வாக்குகள் அளிக்கப்பட்டனவா, அல்லது அவரின் கொள்கைகளை ஏற்றுத் தான் அளிக்கப்பட்டனவா என்பது, வாக்களித்த மக்களுக்கே வெளிச்சம்.
யாழ்ப்பாணத்தின் ஆதிக்கச் சமூகத்தின் இந்தச் செயற்பாடுகள், இந்து/சைவ மக்களில் தாழ்த்தப்பட்ட மக்களை மாத்திரமன்றி, யாழ்ப்பாண தமிழ்ச் சமூகத்தில் சிறுபான்மையினராகக் காணப்படும் ஏனைய மதத்தவர்களையும், இந்த ஆதிக்கச் சிந்தனை அல்லது ஆதிக்கப் புத்தி அடக்கி, ஒடுக்குகிறது.
இதில் குறிப்பிடத்தக்கதாக, தமிழ்ச் சமூகத்தில் சிறுபான்மையினராகக் காணப்படுவோர் முன்வைக்கின்ற குற்றச்சாட்டு, பெரும்பான்மைச் சமூகத்தின் மீது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகம் முன்வைக்கும் அதே குற்றச்சாட்டாகத் தான் இருக்கிறது: “உங்கள் சமூகத்திலுள்ள மிதவாதப் போக்குடையவர்கள், என்ன காரணத்துக்காக இந்தப் பாகுபாடுகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகக் குரல் கொடுக்கிறார்கள் இல்லை” என்பது தான், அந்தக் குற்றச்சாட்டு.
கடந்தகால நடவடிக்கைகள் எவ்வாறிருந்தாலும், இப்போதிருந்தாவது, இவ்விடயத்தில் வெளிப்படையான கலந்துரையாடல்கள் இடம்பெற்று, சாதியத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அரசமைப்புக்கான மக்களின் பரிந்துரைகளில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தனிநபர்களும், சாதிய அடிப்படையிலான அரசியல் பிரதிநிதித்துவத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர் என்று, அரசமைப்புச் சீர்திருத்தங்களுக்கான பொதுமக்கள் கருத்தறியும் செயற்குழு, இவ்வாண்டு ஜூலையில் தெரிவித்திருந்தது.
வழக்கமான நடவடிக்கைகள் எவையும் பலனளிக்கவில்லையெனில், சாதிய ஒதுக்கீடுகளுக்கான அழுத்தங்களை வழங்குவதைத் தவிர, வேறு வழிகள் இருக்காது. ஆனால், இவை பற்றிய வெளிப்படையான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றாலே தவிர, இதில் எந்தவிதமான முன்னேற்றங்களும் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் கிடையாது. அதேபோல, மாபெரும் அறிஞரும் சீர்திருத்தவாதியுமான டொக்டர் அம்பேத்கரின், “சாதியை உடைப்பதற்கு உண்மையான தீர்வு, கலப்பு மணமே. வேறு எதுவும் சாதியைக் கரைக்க முடியாது” என்ற கருத்தையும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். கலப்புத் திருமணங்கள், காதல் மூலமாகவும் உருவாக முடியும், சாதாரணமான திருமணங்கள் மூலமாகவும் உருவாக முடியும். இரண்டுக்கும் அவசியமாக இருப்பது, திறந்த மனதுடன் இருக்கும் தன்மை தான்.
அண்மைக்காலச் சர்ச்சைகளும் கலந்துரையாடல்களும், சாதியம் பற்றிய பாகுபாடுகளைக் களைவதற்கான அற்புதமான வாய்ப்பை வழங்கியிருக்கின்றன. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தப் போகிறோமா என்பது தான், எங்கள் மீது தற்போதுள்ள கேள்வியாக இருக்கிறது. செய்யப் போகிறோமா?
Average Rating