ராக்கெட்குண்டுகள் விசாகப்பட்டினம் வழியாக விடுதலை புலிகளுக்கு சப்ளை: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்
சென்னையில் இருந்து ஆந்திராவிற்கு கடத்திச் செல்லப்பட்ட ராக்கெட் லாஞ்சர் மற்றும் குண்டுகள் விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக விடுதலைப்புலிகளுக்கு சப்ளை செய்வதற்காக அனுப்பப்பட்டதா என்பது குறித்து பெருத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் மாவோயிஸ்ட் நக்சலைட்டு தீவிர வாதிகளை ஒடுக்கவதற்காக ஆந்திர போலீஸ் கடும் நடவடிக்கை எடுத்து நக்சலைட் செயலாளர் மாதவ் என்பவர் உள்பட 8 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதனால் போலீசாருக்கு பலத்த பதிலடி கொடுப்பதற்காக தீவிரவாதிகள் பல வழிகளில் செயல்பட்டு வருகின்றனர். பெரிய தாக்குதலில் ஈடுபடவும் திட்டம் தீட்டி அதனை காலை வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனராம். இந்நிலையில் நக்சல் தீவிர வாதிகளுக்கு பல இடங்களில் இருந்து ஆயுதங்கள் சப்ளை செய்யப்படுவதாகவும் ஆந்திர போலீசாருக்கு கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மகபூப் நகருக்கு ஆயுதங்கள் வந்துள்ளதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் குடோன்களிலும், பார்சல்களிலும் ஆந்திர போலீசார் சோதனை செய்ய ஆரம்பித்தனர்.
இந்த அதிரடிச் சோதனையில் 600 ராக்கெட் குண்டுகள், 275 ராக்கெட்டு லாஞ்சர்கள் மற்றும் 70 ஜெலட்டின் குச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த பொருட்கள் யாவும் லாரி மூலம் சென்னையில் இருந்து அனுப்பப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து, சென்னை போலீசார் தீவிரமடைந்து சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் மேனாம்பட்டு சாலையில் உள்ள கிராந்தி டிராவல்ஸ் அலுவலகத்தில் விசாரணை செய்தனர். விசாரணையில் வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து வந்ததாக கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் சென்னை மாநகர கமிஷனர் லத்திகா சரன் மற்றும் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் கூடுதல் கமிஷனர் ரவி ஆகியோர் மேற்பார்வையில் துணைகமிஷனர் சூடேஸ்வரன் தலைமையிலான போலீசார் சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள கிராந்தி டிராவல்சின் தலைமையிலுலகத்தில் சோதனை செய்தனர். சோதனை வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. ஆனால் அவர்கள் விசாரணையில் இந்த பார்சல் புக் செய்தவர் கொடுத்த விலாசம் தவறானது என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்தப் பார்சல் மே மாதம் புக் செய்யப்படதாகவும், நூல் மில்களில் நூல் சுற்றுவதற்கான குச்சிகள் என்றும் புக் செய்தவர்கள் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேற்கொண்டு எந்த தடயமும் கிடைக்கவில்லை. ஆனால் புக் செய்தவரின் அடையாளத்தை அங்குள்ள ஊழியர்கள் கூறியுள்ளனர். அதை வைத்து கம்ப்யூட்டர் மூலம் புக் செய்தவரின் உருவத்தை வடிவமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இவை சென்னையில் புறநகர் பகுதிகளில் தயார் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் வேலூர் மாவட்டம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கிராந்திடிராவல்சின் தலைமையகம் ஆந்திராவில் உள்ளது. இதற்கு ஆந்திராவில் 419 இடங்களில் கிளைகள் உள்ளன. சென்னையில் 6 இடங்களில் கிளைகள் உள்ளன. இதன் உரிமையாளர் ஆந்திராவில் உள்ளார். இதனால் சென்னையில் இருந்து துணைக் கமிஷனர் அருண் தலைமையில் ஒரு தனிப்படை போலீசார் ஆந்திரா சென்றுள்ளது. அங்கு அவர்கள் உளவுத்துறை டி.ஐ.ஜி. மற்றும் பிரகாசம் மாவட்ட எஸ்.பி.யுடன் ஆலோசனை நடத்தி கிராந்தி டிராவல்ஸ் உரிமையாளரிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.
இந்நிலையில் ஆந்திராவில் உள்ள மகபூப் நகர் மற்றும் பிரகாசம் மாவட்ட போலீசாரும் சென்னைக்கு வந்துள்ளனர். அவர்கள் சென்னையில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகளிடம் பேசிய பின்னர் லாரி பார்சல் அனுப்பட்ட கிரந்தி டிராவர்டசிலும் விசாரணை செய்ய உள்ளனர்.
இந்நிலையில் இந்த ராக்கெட்டு குண்டுகள் அனுப்பப்பட்டது குறித்து வேறு ஒரு சந்தேகமும் தமிழ்நாடு போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையை கடுமையான சண்டை நடந்து வருகிறது. விடுதலைப் புலிகள் பல இடங்களில் இருந்தும் ஆயுதங்கள் மற்றும் அத்யாவசியப் பொருட்களை வாங்கி இருந்தனர்.
தற்போது தமிழ்நாட்டில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களோ அல்லது பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசியப் பொருட்களோ கடத்த முடியாத அளவு கடலோர காவல்படையினரில் கப்பல் ரோந்தும் அதிகரிக்கப்ப்டடுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் கடற்கரை கிராமங்களில் எல்லாம் சோதனைச் சாவடிகள் அதிகாரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து அத்தியாவசியப்பொருட்கள் எதுவும் இலங்கைக்கு கடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய இடங்களில் தீவிரவாதிகளோ அல்லது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களோ ராக்கெட் குண்டுகள் பயன்படுத்துவதில்லை. தமிழ்நாட்டில் குண்டு கலாச்சாரம் தான் அதிகரித்துள்ளது. அதனால் ராக்கெட் குண்டுகள், ராக்கெட்டுகளை ஏவும் லாஞ்சர்கள் ஆகியவற்றை விடுதலை புலிகளுக்கு தமிழ்நாட்டு கடற்கரை மூலம் அனுப்ப முடியாததால் ஆந்திராவுக்கு கொண்டு சென்று அங்கிருந்து, விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக விடுதலைப் புலிகளுக்காக கடத்தி செல்வதற்காக ஏற்பாடுகள் செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் போலீசார் சோதனை முடுக்கிவிடப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து சென்னை மாநகர கமிஷனர் லத்திகா சரண் மற்றும் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் ஆகியோரிடம் கேட்டபோது விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினர்.