‘மாநில சுயாட்சி’ கொள்கையை நினைவுபடுத்திய ‘நீட்’..!! (கட்டுரை)
தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டமை, அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மாநில பாடத் திட்டத்தின் கீழ் உள்ள ப்ளஸ் டூ பரீட்சையில் 1,200 மதிப்பெண்களுக்கு 1,176 மதிப்பெண்களைப் பெற்ற, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அனிதா, மத்திய அரசாங்கம் கொண்டு வந்த ‘நீட் பரீட்சையில்’ சித்தி பெற முடியவில்லை.
குக்கிராமத்தில் பிறந்த அந்த மாணவிக்கு, அதிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அந்த மாணவியின் மருத்துவக் கனவு கலைந்த நிலையில், அனிதா தற்கொலை செய்து கொண்டார். அதன் விளைவாக இன்று ‘நீட்’ பரீட்சைக்கு எதிராக, தமிழகத்திலுள்ள மாணவர்கள் மிகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் ஒரே வரி, ஒரே பரீட்சை என்ற அடிப்படையில், மருத்துவக் கல்லூரிகள் அனைத்திலும் சேர்வதற்கு ‘நீட்’ பரீட்சை கட்டாயம் என்று 2010 இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அறிவித்தது.
இந்திய மருத்துவ சபை, இரு அறிக்கைகளை வெளியிட்டு, மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கும், மருத்துவ மேற்படிப்புக்கும் ‘நீட்’ பரீட்சையில் சித்தி பெற வேண்டும் என்ற நிலை உருவானது.
மாநில அரசாங்கங்கள் பலவும் இந்தப் பரீட்சையை எதிர்த்தன. அவர்கள் சொன்ன காரணம், இந்தப் பரீட்சை, சமூக நீதியின் கீழான இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு புறம்பானது. அதேபோல், கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள ஏழை மாணவர்களுக்கு பயனளிக்காது, என்றும் வாதிட்டனர்.
அனிதாவின் மரணம், அது உண்மையென்று நிரூபித்திருக்கிறது. இலங்கைப் போரை நிறுத்த வேண்டும் என்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீக்குளித்த செங்கொடி போல், இன்று, ‘நீட்’ பரீட்சையை எதிர்த்துத் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரணம், மாணவர்கள் போராட்டத்தில் எழுச்சியை உருவாக்கி விட்டது.
இந்த ‘நீட்’ பரீட்சை விவகாரத்தில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு வரிசையில் நிற்க, ஆளும் அ.தி.மு.க அரசாங்கமும் மத்திய அரசாங்கமும் இன்னுமோர் அணியில் நிற்கின்றன. “மாநில அரசாங்கம், ‘நீட்’ பரீட்சையிலிருந்து தமிழகத்துக்கு விலக்குப் பெறத் தவறி விட்டது” என்று, தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கின்றன. “நீட் பரீட்சையால் சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளது” என்ற, பிரசாரத்தை வலுப்படுத்தியிருக்கின்றன.
ஒவ்வோர் அரசியல் கட்சிகளும், மாணவி அனிதா குடும்பத்துக்கு நிதியுதவி அளித்தாலும், தி.மு.க சார்பில் பத்து இலட்சம் ரூபாய் அளித்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் நிதியுதவியைப் பெற்றுக் கொண்ட அனிதா குடும்பம், மாநில அரசாங்கத்தின் ஏழு இலட்சம் ரூபாய் நிதியுதவியைப் பெற மறுத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ஆட்சித் தலைவரே வற்புறுத்தியும் அந்த நிதியுதவியைப் பெற மறுத்து விட்டனர். அந்த அளவுக்கு ‘நீட்’ உணர்வு பூர்வமாகி விட்டது. எதிர்க்கட்சிகளும் பா.ஜ.கவும் போட்டி போட்டுக் கொண்டு பிரசாரத்தில் இறங்கி விட்டன. எதிர்க்கட்சிகள், “மாநில உரிமை பறிக்கப்பட்டு விட்டது” என்று, வாதிடுகின்றன. ஆனால், ‘நீட்’ தேவை என்று பா.ஜ.க சார்பில் வாதிடப்படுகிறது.
‘நீட்’ பரீட்சை, படிப்படியாக இப்போது, ‘மாநில அதிகாரம்’, ‘மாநில உரிமை’ என்ற திசையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், கல்வி, மாநில பட்டியலில் இருந்தது. ஆனால், நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, கல்வி, மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டு விட்டது.
இந்தப் பட்டியலுக்கு மாற்றிய பிறகு, இன்றைய நிலையில் கல்வியில் மத்திய அரசாங்கம் சட்டம் கொண்டு வரலாம்; மாநில அரசாங்கம் சட்டம் கொண்டு வரலாம். ஆனால், இந்திய மருத்துவ சபை போன்ற நிறுவனங்கள், மத்திய அரசாங்கத்தின் கீழ் வருவதால், அது தொடர்பான சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம், மத்திய அரசாங்கத்திடம் போய் விடுகிறது.
அதன்படிதான் இப்போது, அகில இந்தியாவிலும் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு ஒரே ‘நீட்’ பரீட்சை என்று, புதிய அறிக்கை மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் சட்டமும் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது மத்திய அரசாங்கம்.
கல்வி, பொதுப்பட்டியலுக்குப் போன காரணத்தால்தான், மத்திய அரசாங்கம் மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கையில் மூக்கை நுழைக்கிறது என்று கருதும் கட்சிகள், “கல்வியை மாநிலப் பட்டியலுக்கே திரும்பக் கொண்டு வர வேண்டும்” என்று, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசாங்கத்துக்குக் கோரிக்கை வைக்கின்றன.
‘கூட்டுறவு கூட்டாட்சி’ என்பது, பா.ஜ.கவின் தத்துவம். அதன் அடிப்படையில் “கல்வி பற்றி சட்டம் இயற்றும் உரிமையை மாநிலத்துக்கே கொடுத்து விடுங்கள்” என்ற கோரிக்கை, இப்போது ‘நீட்’ பரீட்சையால் தமிழகத்தில் வலுத்து வருகிறது. இது, 1960 களில், தி.மு.க முன் வைத்த ‘மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி’ என்ற கொள்கையை நினைவுபடுத்துகிறது.
அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசாங்கத்திடம் குவிந்து கிடக்கின்றன என்ற சிந்தனையின் அடிப்படையில், முதன் முதலில் 1967ஆம் ஆண்டு, தி.மு.க தேர்தல் அறிக்கையில் ‘மாநில சுயாட்சிக் கோரிக்கை’ முன் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் முதன் முதலில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ராஜமன்னார் தலைமையில் ‘மத்திய- மாநில உறவுகள்’ பற்றி ஆராய்வதற்குக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கையின் பேரில், மத்தியில் உள்ள பல அதிகாரங்கள் மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, தமிழக சட்டமன்றத்தில் 1974இல் ‘மாநில சுயாட்சித் தீர்மானமே’ நிறைவேற்றப்பட்டது.
பேரறிஞர் அண்ணாவில் தொடங்கி, தி.மு.க தலைவர் கருணாநிதி ‘மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி’ என்ற கோட்பாட்டை தமிழகத்தில் முழக்கமிட்டார்கள். எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்த பின்னரும், 1983இல் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார். இப்படி 60களில் கேட்ட மாநில சுயாட்சி கொள்கை, இப்போது தமிழகத்தில் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியிருப்பதற்கு ‘நீட்’ பரீட்சை காரணமாக அமைந்திருக்கிறது.
மாநில சுயாட்சியின் ஒரு குரலாக இப்போது ‘கல்வியை’ மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது. ஆனால், அதற்கான வலுவோ அல்லது எம்.பிக்கள் பலமோ இப்போது தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு இல்லை.
அ.தி.மு.கவுக்கு, 50க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் இருந்தாலும், அந்தக் கட்சியின் தயவில் மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கம் ஆட்சியில் இல்லை. அதேபோல், தி.மு.கவுக்கு இருக்கும் நான்கு எம்.பிக்கள் தயவிலும் மத்திய அரசாங்கம் இல்லை.
மத்தியில் உள்ள ஆட்சிக்கு தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க, தி.மு.க ஆதரவு நிச்சயம் தேவை என்ற நிலை, 1996 முதல் 2014 வரை இருந்தது. அந்த காலகட்டத்தில் இரு கட்சிகளும் நினைத்திருந்தால், கல்வி போன்ற மாநில உரிமை சார்ந்த விடயங்களில் அதிக அதிகாரத்தை மத்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றிருக்க முடியும். ஆனால், அப்போதெல்லாம் அமைதி காத்த இந்த கட்சிகள், இப்போது ‘கல்வி’யைத் திரும்பவும் மாநில பட்டியலுக்கு கொண்டு வாருங்கள் என்று கோரிக்கை விடுப்பது வியப்பானது. தமிழக கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, கல்வியை மாநில பட்டியலுக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திலும் மத்திய அரசாங்கம் இல்லை.
மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில், ‘கூட்டுறவுக் கூட்டாட்சி’ என்று கூறினாலும், மருத்துவக் கல்லூரிகளுக்கு, பொறியியல் கல்லூரிகளுக்கு, நீதித்துறைக்கு என்று அனைத்துக்கும் ‘நீட்’ பரீட்சை போன்று அகில இந்திய அளவில் பரீட்சை கொண்டு வருவதில் உறுதியாக இருக்கிறது. அதன் முதல் கட்டம்தான் மருத்துவக் கல்லூரிகளுக்கான ‘நீட்’ பரீட்சை.
அடுத்த கட்டமாக, மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ள கீழமை நீதிமன்றங்களிலும் நீதிபதி நியமனத்துக்கு, அகில இந்திய அளவில் பரீட்சை கொண்டு வர இப்போதே உச்சநீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது மத்திய அரசாங்கம்.
ஆகவே ‘நீட்’ பரீட்சை என்பது, நிஜமாகி விட்டது. ஆகவே, இனி மேல் ‘நீட்’ பரீட்சை இல்லாமல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து விட முடியும் என்ற கனவு அனைத்து மாணவர்களுக்குமே பொய்த்துப் போன ஒன்றுதான்.
மாநில உரிமை, மாநில சுயாட்சி என்றெல்லாம் ‘கல்வி’யை மாநில பட்டியலுக்கே மாற்றுங்கள் என்று கூறுவது ஒரு புறமிருந்தாலும், நிஜ நிலைமையை புரிந்து கொண்டு ‘நீட்’ பரீட்சைக்கு தமிழக மாணவர்களை முழு வீச்சில் தயார் செய்வதுதான் சிறந்த வழியாக இருக்கும்.
அந்த வழியை நோக்கி மாநிலம் செயற்பட வேண்டும் என்றால், ஸ்திரமான அரசாங்கம் மாநிலத்தில் இருக்க வேண்டும். அதேபோல், மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கத்தின் கல்விப் பாடத்திட்டத்தை மேலும் தரமுள்ளதாக்க தனி நிதியுதவி அளித்து, மாநிலப் பாட திட்டத்தின் தரத்தை உயர்த்த அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்.
‘நீட்’ இன்றைய நிஜம். அதை எதிர்கொள்வதே நாளைய வரலாறாக அமையும். சமூக நீதி, மாநில உரிமை பாதிக்கப்படுகிறது என்பது உண்மை. ஆனால்? ஸ்திரமான மாநில அரசாங்கம் இல்லாத சூழ்நிலையும் தமிழகத்தில் உள்ள எம்.பிக்களின் தயவால்? மத்தியில் ஆட்சியில்லை என்ற நிலையும் அந்த உரிமைகளுக்காக குரல் கொடுக்க உகந்த நேரமல்ல இது என்பதே நிதர்சனம்.
Average Rating