கோபமும் வெறுப்பும்கூட மகிழ்ச்சி தருமாம்..!!
கோபம், வெறுப்பு கூடாது என்பதுதான் பொதுவாகக் கூறப்படும் அறிவுரை. ஆனால் கோப, வெறுப்பு உணர்ச்சியும்கூட மகிழ்ச்சி தரக் கூடும் என்கிறது ஒரு புதிய ஆய்வு.
விரும்பும் உணர்ச்சிகளை மனதால் அனுபவிக்க முடிந்தால் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள், அந்த உணர்ச்சி கோபம், வெறுப்பு போன்ற விரும்பத்தகாத உணர்ச்சிகளாக இருந்தாலும் பரவாயில்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது.
மகிழ்ச்சி என்பது, வெறுமனே இன்பத்தை அனுபவிப்பது மற்றும் வலியைத் தவிர்ப்பது மட்டுமல்ல, அதற்கும் மேலானது என சர்வதேச ஆய்வுக் குழுவின் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரேசில், ஜெர்மனி, சீனா, இஸ்ரேல், கானா, போலந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 300 பல்கலைக்கழக மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அவர்கள் என்ன உணர்ச்சியை விரும்பினார்கள் என்றும், என்ன உணர்ச்சியை அனுபவித்தார்கள் என்றும் பங்கேற்பாளர்களை ஆய்வாளர்கள் கேட்டுள்ளனர்.
மக்கள், வாழ்க்கைத் திருப்தியை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பதை இதை வைத்து ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. தாங்கள் விரும்பியதற்கு நிகராக அனுபவிக்கும் உணர்ச்சிகள் இருந்தால் மக்களின் வாழ்க்கை திருப்தியுடன் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
அதாவது, நீங்கள் விரும்பும் உணர்ச்சியை உங்களால் அனுபவிக்க முடிந்தால், நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். சோகம், வெறுப்பு என அந்த உணர்வு விரும்பத்தகாத உணர்வாக இருந்தாலும் பரவாயில்லை என ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னணி ஆய்வாளர் டாக்டர் மாயா தாமிர் கூறியுள்ளார்.
அன்பு போன்ற நேர்மறை உணர்ச்சிகளைக் குறைவாக உணர 11 சதவீத மக்கள் விரும்புவதாகவும், வெறுப்பு, கோபம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை அதிகம் உணர 10 சதவீத மக்கள் விரும்புவதாகவும் இந்த ஆய்வு கூறியுள்ளது.
ஒரு மோசமான கணவரை விட்டுச் செல்ல விரும்பும் ஒரு பெண், உண்மையில் அவ்வாறு செய்யத் தயாராக இல்லை. காரணம், கணவருடன் இருந்து அவரை வெறுப்பதன் மூலம் அப்பெண் மகிழ்ச்சியை அனுபவிப்பதாக உணருகிறார் என்கிறார், தாமிர். விரும்பத்தகாத உணர்வுகள் எனக் குறிப்பிடும்போது, இந்த ஆய்வானது கோபத்தையும் வெறுப்பையும் மட்டுமே மதிப்பீடு செய்கிறது.
ஆனால், பயம், குற்றவுணர்வு, துக்கம் மற்றும் பதற்றம் போன்றவற்றை விரும்பத்தகாத உணர்வுகள் என வரையறுக்க முடியாது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஆய்வு பொருந்தாது என டாக்டர் மாயா தாமிர் கூறு கிறார். “மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர் களைவிட அதிக சோகமாகவும், குறைவான மகிழ்ச்சியுடனும் இருக்க விரும்புவார்கள். இது பிரச்சினையை அதிகரிக்கவே செய்யும்” என்று மாயா கூறுகிறார்.
“மேற்கத்திய கலாசாரங்களில், எல்லா நேரமும் மிகவும் நன்றாகவே உணர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் நன்றாக உணர்ந்தாலும், இன்னும் சிறப்பாக உணர வேண்டும் என்று அவர்கள் நினைக்கலாம். அது, ஒட்டுமொத்தமாகக் குறைவான மகிழ்ச்சியை அவர்களுக்குக் கொடுக்கலாம்” என்கிறார் மாயா.
கோபம், வெறுப்புக்குப் பின்னாலும் இவ்வளவு விஷயம் இருக்கு!
Average Rating