கண்கட்டி விளையாட்டு..!! (கட்டுரை)

Read Time:16 Minute, 13 Second

image_1c001956aeஉத்தேச அரசமைப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டம் மற்றும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் போன்ற பேச்சுகளால்தான் அரசியல் அரங்கு நிறைந்து போயுள்ளது.

ஆனால், மக்களில் பெரும்பான்மையானோர், இவை தொடர்பில் எதுவிதப் புரிதல்களும் இல்லாதவர்களாக இருக்கின்றனர். படித்த மட்டத்தவர்களிடம் கூட, இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையான தெளிவுகளைக் காண முடியாதுள்ளது.

மேற்படி விடயங்கள் தொடர்பில், அடிக்கடி வெவ்வேறான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் எதை நம்புவது, எதை நிராகரிப்பது என்பதைப் பகுத்தறிவதற்கே, அநேகமானோருக்கு நேரம் போதாமலுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம், கடந்த வாரம், நாடாளுமன்றில் நிறைவேறியிருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின்போது, இதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தபோதும், இப்போதுதான் அதை நிறைவேற்ற முடிந்திருக்கிறது.

இந்தத் திருத்தச் சட்டத்தில், உள்ளூராட்சி சபைகளுக்குப் புதிய எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சபைகளுக்குமான உறுப்பினர்களின் எண்ணிக்கைகள், குறித்துச் சொல்லப்பட்டுள்ளன.

மேலும், முக்கியமான சில விடயங்களும் இதில் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, முஸ்லிம் சமூகத்துக்கு இந்தத் திருத்தச் சட்டம், பாதிப்பாகவே அமையும் என்று, பல திசைகளிலிருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், அவை குறித்து, அலட்டிக் கொள்ளாமலேயே, உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றில், முஸ்லிம் தலைவர்கள் கைகளை உயர்த்தி விட்டு வந்துள்ளனர்.

உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணயம் மற்றும் உறுப்பினர் எண்ணிக்கை தொடர்பில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆனால், அவற்றில் கணிசமானவற்றை நிவர்த்திக்காமலேயே குறித்த திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்ட மூலம், தொடர்பிலான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இடம்பெறுவதற்கு முன்னதாக, சபையில் பேசிய முஸ்லிம் தலைவர்கள், அதிலுள்ள குளறுபடிகளையும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி ஆவேசமாகப் பேசியிருந்தனர்.

ஆனாலும், அவர்கள் சுட்டிக்காட்டிய அனைத்து விவகாரங்களும் அந்தச் சட்ட மூலத்தில் இருக்கத்தக்கதாகவே, அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இது, மிகப்பெரும் முரண்நகையாகும்.

நிறைவேற்றப்பட்டுள்ள உள்ளூராட்சித் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் பிரகாரம், அம்பாறை மாவட்டத்திலுள்ள 68 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட சம்மாந்துறை பிரதேச சபைக்கு 12 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 58 ஆயிரம் வாக்களர் தொகையைக் கொண்ட தெஹியத்தகண்டி பிரதேச சபைக்கு 23 உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபை முஸ்லிம்களையும் தெஹியத்தகண்டி சிங்களவர்களையும் பெரும்பான்மையாகக் கொண்டவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட உள்ளூராட்சி சபைகளுக்கு இவ்வாறு பாரிய அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளமையை மேற்படித் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தில் கணிசமாகக் காண முடிகிறது.

இன்னொருபுறம், உள்ளூராட்சித் தேர்தல்களின்போது, வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கப்பட வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றாத வேட்பாளர் பட்டியல் நிராகரிக்கப்படும். இந்த நிபந்தனையானது, முஸ்லிம் கட்சிகளுக்குப் பெருத்த சவாலை, ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் நமது நாட்டிலுள்ள பெண்களினுடைய ஈடுபாடு மிகவும் மட்டமான நிலையிலேயே உள்ளது.

அதுவும் முஸ்லிம் பெண்கள் அரசியலுக்குள் பிரவேசிப்பதென்பது அபூர்வமாகும்.
காரணம், இஸ்லாமிய நெறிமுறைகளை முழுவதுமாகப் பின்பற்றிக் கொண்டு, இலங்கை அரசியலில் முஸ்லிம் பெண்கள் இயங்குவதென்பது மிகவும் சவாலானதொரு விடயமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், 25 சதவீதமான முஸ்லிம் பெண்களை, அரசியலுக்குள் ஈர்த்துக் கொள்ள முடியுமா என்பது கேள்விக்குரியதாகும்.

இவ்வாறானதொரு நிலையில், அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பிலும், அதில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீடு தொடர்பிலும் கருத்துத் தெரிவித்தார்.

“வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 25 சதவீதம் வழங்க வேண்டும். அதில் எந்தவிதப் பிரச்சினையுமில்லை. அரசியலுக்குள் பெண்கள் வருவதில் எவ்வித தவறுகளையும் நான் காணவில்லை. அவர்கள் அரசியலுக்கு வருவதன் மூலம், இந்த அரசியலை இன்னும் கொஞ்சம் நாம் செழுமைப்படுத்தலாம்” என்று ரவூப் ஹக்கீம் அதன்போது கூறினார்.

இருந்தபோதும், அரசியலை பெண்கள் மூலம் எவ்வாறு செழுமைப்படுத்த முடியும் என்பதை, மு.கா தலைவர் இதன்போது விவரிக்கவில்லை.

இதேவேளை, “அரசியலுக்குள் பெண்கள் வருவதில் எவ்வித தவறுகளையும் நான் காணவில்லை” எனத் தெரிவித்த ரவூப் ஹக்கீம், அவ்வாறுதான் கூறுகின்றமையை உலமாக்கள் (இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்) மன்னிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

குறித்த விடயம் தொடர்பாக, தான் வெளியிட்ட கருத்தில், தவறுகள் எவையும் இல்லை என்றிருந்தால், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடம் மு.கா தலைவர், மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? என்பது குறித்தும் நாம் இங்கு கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இலங்கையில் இப்போதுள்ள அரசியல் கலாசாரங்களை அடியொற்றியபடி, முஸ்லிம் பெண்கள் அரசியலுக்குள் நுழைவதில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடையே பல்வேறு கருத்து முரண்பாடுகள் உள்ளன. இப்போது, காணப்படும் அரசியல் அரங்கு, முஸ்லிம் பெண்களுக்குப் பொருத்தமற்றது என்றும், அதனால் முஸ்லிம் பெண்கள் அரசியலுக்குள் நுழையக் கூடாது என்றும் கூறுகின்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் உள்ளனர்.

இது குறித்து மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் மிக நன்கு அறிவார். அதனால்தான், “அரசியலுக்குள் பெண்கள் வருவதில் எவ்வித தவறுகளையும் நான் காணவில்லை” என்று கூறியதோடு, அவ்வாறு கூறியமைக்காக உலமாக்கள் தன்னை மன்னிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

எது எப்படியிருந்தாலும், 25 சதவீதமான பெண்களால், தமது வேட்பாளர் பட்டிலை முஸ்லிம் அரசியல் கட்சிகள் நிரப்புவதென்பது மிகச் சவாலான விடயமாகும்.

உதாரணமாக, 20 வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய ஓர் உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் வேட்பாளர் பட்டியலில், எட்டுப் பெண் வேட்பாளர்களை உள்ளடக்க வேண்டும். ஓர் உள்ளூராட்சி மன்றத்துக்கான பிரதேசத்தில் 08 முஸ்லிம் பெண் வேட்பாளர்களைத் தேடிப் பிடிப்பதென்பதே கடினமான காரியமாக இருக்கும்.

எனவே, தேர்தல் நிபந்தனையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, அதிகளவான பெண் வேட்பாளர்களின் பெயர்கள் ஒப்புக்காகவே இட்டு நிரப்பப்படும் நிலை ஏற்படும். அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண் வேட்பாளர்களில் அதிகமானோர், வெறும் ‘டம்மி’யாகவே இருக்க வேண்டிவரும். இங்கு ‘டம்மி’ என்பதன் அர்த்தம், குறித்த வேட்பாளர்கள் பெயரளவில் மட்டுமே இருப்பர்; தேர்தல்க் களத்தில் இறங்கிச் செயற்பட மாட்டார்கள்.

அவர்கள், தேர்தலில் போட்டியிடுவதாகவும் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். 25 சதவீதமான பெண்கள், வேட்புமனுவில் இருக்க வேண்டும் என்கிற நிபந்தனையை நிறைவு செய்வதற்காக மட்டும், அவர்களின் பெயர்கள் வேட்பு மனுக்களில் இட்டு நிரப்பப்படும்; அவ்வளவுதான்.

கள நிலைவரம் இப்படித்தான் இருக்கும் என்றால், வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 25 சதவீதம் வழங்கப்படுதல் வேண்டும் என்கிற, நிபந்தனைக்கான பலன் கிடைக்குமா என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெளிப்படையாகச் சொன்னால், இந்த நிபந்தனையின் மூலமாக, எதைப் பலனாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, அது கிடைப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாகவே தெரிகிறது.

பெண்களை அரசியலுக்குள் உள்வாங்குவதற்கான வேலைத் திட்டங்கள் அடி மட்டத்திலிருந்து இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. பெண்கள் உரிமை பற்றியும் பெண்களுக்கான அரசியல் பற்றியும் உயர் தட்டுப் பெண்களிடம் மட்டுமே பேசப்பட்டு வருகிறது. கிராமிய மட்டத்திலுள்ள பெண்களிடம் அரசியலுக்குள் நுழைய வேண்டும் என்கிற எந்தவிதமான ஆர்வத்தையோ, அறிவையோ அரசியல் கட்சிகள் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, முஸ்லிம் கட்சிகள் இந்தப் பக்கமாக இதுவரை எட்டியும் பார்க்கவில்லை.

முஸ்லிம் பெண்களை அரசியலுக்குள் கொண்டு வருவதற்கான வேலைத் திட்டத்தை மேற்கொள்ளும்போது, இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுடன் இணைந்து, அரசியல் கட்சிகள் செயற்படுவது நல்லதொரு வழிமுறையாக அமையும். இல்லாவிட்டால், முஸ்லிம் சமூகத்துக்குள் இதனால், பாரிய முரண்பாடுகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

இஸ்லாமிய நெறி முறைகளுக்குள் இருந்து கொண்டு, அரசியலைப் பெண்கள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்கிற அறிவூட்டல்கள் வழங்கப்பட்ட பின்னர்தான், முஸ்லிம் பெண்களை அரசியலுக்குள் கொண்டுவரும் செயற்பாடுகளை முஸ்லிம் அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

இதேபோன்று, அரசாங்கத் தொழில் செய்கின்றவர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியாததொரு நிலைவரமும் உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தின் மூலம் உருவாகியுள்ளது. அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது தொழிலில் இருந்து ஒரு வருடத்துக்கு முன்னராகவே விலகிக் கொண்டால் மட்டுமே, அவர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியும் எனவும், திருத்தச் சட்டம் கூறுகிறது.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்காக வழங்கப்படுகின்றமைபோல், நிரந்தரமான, கொழுத்த சம்பளம் வழங்கப்படுவதில்லை. இவ்வாறானதொரு நிலையில், தமது வருமானத்துக்கான, மூலமாக இருக்கின்ற அரசாங்கத் தொழிலை இழந்து விட்டு, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு யாரும் துணிவார்களா என்பது கேள்விக்குரியதாகும். இதன்படி பார்த்தால், உள்ளூராட்சித் தேர்தலில் படித்தவர்கள் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் இல்லைப் போலவே தெரிகிறது.

புதிய உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தில், மேற்கூறப்பட்டவற்றைப்போல், ஏராளமான குறைகளும், குழப்பங்களும் இருக்கின்றமையைத் தெரிந்து கொண்டுதான், அதற்கு ஆதரவாக 120 பேர் வாக்களித்துள்ளனர். குறிப்பாக, முஸ்லிம் சமூகத்துக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிந்து கொண்டுதான், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கைகளை உயர்த்தியுள்ளார்கள்.

தூக்கக் கலக்கத்திலும் பழக்க தோசத்தில் உயரும் கைகளும் உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பன்றிக்கு அஞ்சி ஓடுகையில் மின்வேலியில் சிக்கியவர் பலி..!!
Next post ரசிகர்களுக்காக கவர்ச்சி காட்டுகிறேன்: மனம்திறந்த டாப்சி..!!