கல்யாணத்துக்கு தயாராகும் பெண்களுக்கு அலங்காரம்..!!
மணப்பெண்களுக்கு அழகு முக்கியம். அவர்களை அழகாக்குவது அலங்காரம். அதனால் இப்போது திருமணத்திற்கு தயாராகும் எல்லா பெண்களுமே, மணப்பெண் அலங்காரத்துக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். மணப்பெண் அலங்காரத்துக்கு எப்போது, எப்படி திட்டமிடவேண்டும் தெரியுமா?
மூன்று மாதங்களுக்கு முன்பே அலங்காரத்திற்கான அடிப்படை பணிகளை தொடங்கவேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால், ஒரு மாதத்திற்கு முன்பாவது தொடங்கிவிடுங்கள்.
* உங்கள் மனதுக்குபிடித்த, திறமையான அழகுக்கலை நிபுணரை முதலில் தேர்ந்தெடுங்கள். அவர் ஏற்கனவே மணப்பெண் அலங்காரம் செய்திருப்பார். அந்த போட்டோக்களை வாங்கிப் பாருங்கள். உங்கள் உறவுப்பெண்களுக்கோ, தோழிகளுக்கோ அவர் அலங்காரம் செய்திருந்தால், அவர்களிடமும் அது பற்றி பேசி முடிவெடுங்கள்.
* அழகுக்கலை நிபுணர் யார் என்று முடிவுசெய்துவிட்டால், உடனடியாக அவரை சந்தித்து அலங்காரத்தின் அடிப்படை பணிகளை தொடங்கிவிடுங்கள். உங்கள் சருமத்தின் வகையை பற்றியும், செய்யவேண்டிய அலங்காரத்தின் தன்மையை பற்றியும் அவர் உங்களுக்கு எடுத்துரைப்பார்.
* அடிக்கடி பார்லர் செல்லும் வழக்கம் இல்லாதவர்கள் வாக்சிங், திரெட்டிங், பேஷியல் போன்றவைகளை முதலிலே ஆரம்பித்துவிடலாம். திருமணத்திற்கு சில வாரங்களே இருக்கும்போது திரெட்டிங், வாக்சிங் போன்றவைகளை செய்தால் சருமம் சிவந்து, வீங்கும் நிலை உருவாகிவிடும். பிளச், பேஷியல் போன்றவை சிலருக்கு அலர்ஜியை தோற்றுவிக்கலாம். அதனால் இவைகளை எல்லாம் முதலிலே சோதித்துப்பார்த்துக்கொள்வது நல்லது.
* பேஷியல், கிளனப் போன்றவைகளை தொடங்கிய பிறகு, வெயிலில் செல்லக்கூடாது என்றும், சில வகை சோப்- கிரீம்களை பயன்படுத்தவேண்டும் என்றும் அழகுக்கலை நிபுணர்கள் சொல்வார்கள். அதை உதாசீனப்படுத்தாமல் பின்பற்றுங்கள். ஏன்என்றால் அலர்ஜியை தவிர்க்க அவைகள் அவசியமானதாக இருக்கும்.
* அழகுக்கலை நிபுணர் உங்களை அழகுப்படுத்த தயாராகும் முன்பே, நீங்கள் வழக்கமாக கூந்தல் அலங்காரம் செய்யும் வடிவம், கண்மை இடும் தன்மை, தொடர்ந்து உபயோகிக்கும் அழகு சாதன பொருட்களின் பிராண்ட், எவை உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தியது என்பன போன்ற அனைத்து விஷயங்களையும் தெளிவாக அவரிடம் கூறிவிடுங்கள். திருமணத்திற்கு எந்த மாதிரியான உடை ஸ்டைலை தேர்ந்தெடுக்கிறீர்கள், எந்த மாதிரியான அலங்காரத்தை விரும்புகிறீர்கள் என்பதை எல்லாம் தெளிவாக அவரிடம் விளக்கிவிடுங்கள்.
* திருமண நாளில் உடுத்தவேண்டிய உடை, நகை போன்றவைகளை வாங்கச் செல்வதற்கு முன்பு, உங்கள் அழகுக்கலை நிபுணரை சந்தித்து ஒருமுறை ஆலோசனை கேளுங்கள். உங்கள் உடல் வடிவம், சரும நிறம், முக அமைப்புக்கு தக்கபடி, எந்த நிற- எந்த டிசைன் உடைகள் வாங்கவேண்டும் என்பதையும், எந்த மாடல் நகைகளை வாங்கவேண்டும் என்பதையும், அவர் உங்களுக்கு சொல்லித்தர வாய்ப்பிருக்கிறது. நிச்சயம் அவரது அனுபவம் உங்களுக்கு கைகொடுக்கும்.
* பலவகையான சரும சிகிச்சைகள் இப்போது உள்ளன. பருக்களை அகற்றி சருமத்தை நிறமாக்கலாம். கண்களை சுற்றி இருக்கும் குறைபாடுகளை நிவர்த்திசெய்யலாம். புருவங்களில் அழகான மாற்றங்களை உருவாக்கலாம். சிரிக்கும்போது கண்களை சுற்றி விழும் சுருக்கங்களை நிவர்த்திசெய்யலாம். மூக்கைச் சுற்றி அழகுபடுத்தவும், உதடுகளை மேலும் அழகாக்கவும் முடியும். நீங்கள் விரும்பும் பல மாற்றங்களை சருமத்திலும், உடல் அமைப்பிலும் செய்யமுடியும். இவைகளில் உங்களுக்கு எது தேவை என்பதை பற்றி முதலிலே அழகுக்கலை நிபுணரோடு கலந்தாலோசித்து முடிவெடுங்கள்.
* சில வகை அழகு சிகிச்சைகளை அவசரப்பட்டு செய்துவிடக்கூடாது. அதற்குரிய நிபுணர்களின் ஆலோசனை பெற்று, குறிப்பிட்ட மாதங் களுக்கு முன்பே தொடங்கிவிடவேண்டும். ஆர்வக்கோளாறில் புதிய தொந்தரவுகளுக்கு வழிவகுத்துவிடக்கூடாது.
* முகத்தில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்க லேசர் ஹேர் ரிமூவல் சிகிச்சையை செய்துகொள்ள சில பெண்கள் முன்வருவார்கள். திருமணம் முடிந்த உடன் வாக்சிங், திரெட்டிங் போன்றவைகளை செய்யாமல் இருக்க இந்த முன்ஏற்பாட்டை செய்வதுண்டு. ஆனால் திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாவது இந்த சிகிச்சையை செய்திடவேண்டும். விரைவாக பலன் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஸ்டீராய்டு கிரீம்களை பயன்படுத்தினால் பக்கவிளைவுகள் தோன்றிவிடக்கூடும். இதில் கவனமாக இருங்கள்.
* உடல் முழுவதுமுள்ள சருமத்திற்கு அழகு கிடைக்க பாடி பாலீஷிங், முழு உடல் வாக்சிங், ஹேர் ஸ்பா, ஹேர் கலரிங், ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங், ஸ்மூத்னிங், ஹைட்ரா பேஷியல் போன்றவைகளை செய்ய விரும்புகிறவர்கள் குறைந்தது நான்கு மாதங்களுக்கு முன்பாவது அதற்கான அடிப்படை பணிகளை தொடங்கவேண்டும்.
* ஏர் பிரஷ் மேக்அப் இப்போது பிரபலமாகிக்கொண்டிருக்கிறது. இதனை பெரும்பாலான அழகுக்கலை நிபுணர்கள் கையாளுகிறார்கள். சருமத்தில் வேகமாக ஸ்பிரே செய்து அழகுபடுத்தும் முறை இது. இது ஒரு கோட்டிங் போலவே இருக்கும். வியர்வையிலும், மழையிலும் அழியாது.
* உங்கள் தோழிக்கோ, உறவுப் பெண்ணுக்கோ பொருத்தமாக இருந்த அலங்காரம், உங்களுக்கும் பொருந்தும் என்று கூறமுடியாது. அதனால் நன்றாக யோசித்து, சோதித்துப்பார்த்து சரியான மேக்அப் முறையை தேர்ந்தெடுங்கள்.
Average Rating