சிக்கல்களுக்குள் சிக்கும் வடக்கு மாகாணசபை..!! (கட்டுரை)
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தலைமையிலான வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் வாரியம் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.
வடக்கு மாகாணசபையின் ஆயுள்காலம் இன்னமும், சுமார் ஒரு வருடம் வரையே இருக்கின்ற நிலையில், மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற இந்த மாற்றம், பல்வேறு இழுபறிகளின் பின்னர்தான் நடந்தேறியிருக்கிறது.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் இப்போது, விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சை, சிவநேசனிடம் கையளித்திருக்கிறார்.
சுகாதார அமைச்சர் பதவி, மருத்துவர் குணசீலனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மூன்று மாத காலத்துக்கு என தற்காலிகமாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களான, அனந்தி சசிதரனும், சர்வேஸ்வரனும் நிரந்தர அமைச்சர்களாகத் தொடர்ந்தும் பதவி வகிக்கவுள்ளனர்.
டெனிஸ்வரனிடம் இருந்த அமைச்சுகளைப் பகர்ந்து கொண்டுள்ளதன் மூலம், முதலமைச்சரும், தற்காலிக அமைச்சர் என்று பதவியேற்ற அனந்தி சசிதரனும் இப்போது கூடுதல் அதிகாரங்களைப் பெற்றவர்களாக மாறியுள்ளனர்.
வடக்கு மாகாணசபையில் கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வந்த பல்வேறு குழப்பங்களுக்குப் பின்னர், இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
புதிய அமைச்சர்கள் நியமனத்தின் பின்னால், இடம்பெற்ற பல்வேறு குழப்பங்களும், புதிய அமைச்சர்கள் அடுத்த ஒரு வருட காலத்தில் எதைச் சாதிக்கப் போகிறார்கள் என்ற கேள்வியும், முக்கிய கவனிப்புக்குரிய விடயங்களாக மாறியிருக்கின்றன.
இந்தப் புதிய அமைச்சர்கள் நியமனத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரன், பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிட்டது. அமைச்சர்கள் தெரிவில் அவர் கடைப்பிடித்த அணுகுமுறைகளே பல்வேறு குழப்பங்களுக்குக் காரணமானது.
முதலமைச்சர் விக்னேஸ்வரன், 2013 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், தனது அமைச்சர்களைத் தெரிவு செய்த போது, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பரிந்துரைகளை எவ்வாறு புறக்கணித்தாரோ, அதுபோலவே, இந்த முறையும் செயற்பட்டிருந்தார்.
2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபையின் முதலாவது அமைச்சர்கள் வாரியம் அமைக்கப்பட்டபோது, ஈ.பி.ஆர்.எல்எவ்வின், பரிந்துரைக்கமைய, சர்வேஸ்வரனை நியமிக்காமல், அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பொ. ஐங்கரநேசனை அமைச்சராக நியமித்தார்.
இப்போது, அதேநிலை கூட்டமைப்பின் மற்றொரு பங்காளிக் கட்சியான டெலோவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
டெனிஸ்வரனுக்குப் பதிலாக, தமது கட்சியின் சார்பில் விந்தன் கனகரத்தினத்தை அமைச்சராக நியமிக்குமாறு டெலோ உயர்மட்டம் பரிந்துரைத்தது. ஆனால், முதலமைச்சர் விக்னேஸ்வரன், அவரை அமைச்சராக நியமிக்காமல், மன்னார் மாவட்டத்தில் இருந்து டெலோ சார்பில் போட்டியிட்ட குணசீலனை சுகாதார அமைச்சராக நியமித்திருக்கிறார்.
இதன் மூலம் டெலோவின் பரிந்துரை உதாசீனம் செய்யப்பட்டுள்ளது. இது அந்தக் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, அவரைக் காப்பாற்றுவதற்கான காத்திரமான நடவடிக்கைகளை எடுத்தவர்கள் டெலோவின் மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கமும் விந்தன் கனகரத்தினமும் தான்.
இவர்கள் இருவருக்குமே, அமைச்சர் பதவி மீது ஒரு கண் இருந்தது உண்மை. தற்காலிக அமைச்சர்கள் நியமனத்தில்போது, அமைச்சராகப் பொறுப்பேற்க முடியுமா என்று தன்னிடம் முதலமைச்சர் கேட்டதாகவும், தான் அதை மறுத்து விட்டதாகவும், சிவாஜிலிங்கம் கூறியிருந்தார். ஆனாலும், டெலோவின் உயர்மட்டக் குழுவில், சிவாஜிலிங்கத்துக்கா, விந்தனுக்கா அமைச்சர் பதவியைக் கொடுக்கலாம் என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இருந்து இருவரும் அமைச்சர் பதவியைக் குறி வைத்திருந்தனர் என்பதும், அதை ஏற்கத் தயாராக இருந்தனர் என்பதும் உறுதியானது.
ஆனால், இவர்கள் இருவருமே இப்போது இலவு காத்த கிளிகளாகியிருக்கின்றனர்.
சுகாதார அமைச்சர் பதவியை அந்த துறை சார்ந்த ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, டெலோவின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட மருத்துவ கலாநிதி குணசீலனுக்கு கொடுத்திருக்கிறார் முதலமைச்சர். துறைசார் அனுபவம் பெற்றவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவது கூடுதல் பொருத்தமே என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
அதற்காக, ஏனையவர்களால் அந்த அமைச்சை நிர்வகிக்க முடியாது என்று அர்த்தமில்லை. அமைச்சர் பதவி என்பது, ஒரு நிர்வாகப் பதவியே தவிர, சுகாதார அமைச்சர், மக்களுக்கு வைத்தியம் பார்க்க வேண்டிய ஒருவர் அல்ல.
மாகாணசபை ஒன்றுக்கு மருத்துவர் ஒருவர் தெரிவு செய்யப்படாது போனால், சுகாதார அமைச்சராக எவரும் பதவியேற்காமல் இருந்து விடுவதில்லை.
எனவே, துறைசார் அனுபவமுள்ளவர்களைத் தான் அமைச்சர்களாக நியமிக்க முடியும் என்ற வாதம் எல்லா விடயங்களிலும் எல்லா நேரங்களிலும் பொருத்தமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
அதேவேளை, டெலோவினால் பரிந்துரைக்கப்பட்ட விந்தனையோ, அவருக்கு அடுத்தபடியாகக் கட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்த சிவாஜிலிங்கத்தையோ அமைச்சராக நியமித்தால், யாழ்ப்பாண மாவட்டத்தின் ஆதிக்கமே அமைச்சர்கள் வாரியத்தில் மேலோங்கும். ஏனென்றால், ஏற்கெனவே அமைச்சர்கள் வாரியத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான முதலமைச்சர் விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன், சர்வேஸ்வரன் என மூவர் இருந்தனர். இந்த நிலையில் ஐந்து பேர் கொண்ட அமைச்சர்கள் வாரியத்தில் நான்கு பேர் ஒரே மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது அநீதியானது. இப்போதைய நியமனத்தின் மூலம், மன்னார் மாவட்டத்துக்கு மீண்டும் அமைச்சர்கள் வாரியத்தில் பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது.
அதுபோலவே, அமைச்சர்கள் வாரியத்தில் இதுவரை காலமும் புறக்கணிக்கப்பட்டு வந்த புளொட்டுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கும், இம்முறை வாய்ப்பு அளித்திருக்கிறார் முதலமைச்சர். விவசாய அமைச்சராக சிவனேசன் நியமிக்கப்பட்டதன் மூலம் இந்தக் குறை நீக்கப்பட்டுள்ளது. ஐங்கரநேசன் மற்றும் குருகுலராசா ஆகியோர் பதவி விலகிய பின்னர், தற்காலிக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டபோது, சிவனேசனுக்கு அமைச்சர் பதவியை வழங்கும் வாய்ப்பை முதலமைச்சர் நிராகரித்திருந்தார்.
ஊடகவியலாளர் சிவராம் படுகொலையுடன், தொடர்புபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு இருப்பதாகத்தாம் அறிந்திருப்பதாலேயே அமைச்சராக நியமிக்க முடியவில்லை என்று, அதற்கு முதலமைச்சர் காரணம் கூறியிருந்தார்.
எனினும், முதலமைச்சரின் அந்தக் குற்றச்சாட்டை நிராகரித்திருந்த சிவநேசன், முதலமைச்சரால் தமக்கு எழுதப்பட்ட கடிதம் ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டது குறித்தும் விசனம் வெளியிட்டிருந்தார்.
தற்காலிக அமைச்சர்கள் நியமனத்தின்போது, படுகொலைக் குற்றச்சாட்டைக் காரணம் காட்டி ஒதுக்கி வைத்த சிவனேசனை, இப்போது முதலமைச்சர், அமைச்சராக நியமிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
அதுமாத்திரமன்றி, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரையில், அவர் நிரபராதியே என்றும் கூறியிருக்கிறார்.
சட்டத்தின்படி எந்தத் தவறைச் செய்திருந்தாலும், தகுதிவாய்ந்த நீதிமன்றம் ஒன்றினால் குற்றம் காணப்படும் வரையில், சந்தேகநபர் ஒருவர் நிரபராதியே.
வடக்கு மாகாண அமைச்சர்கள் இருவருக்கு எதிராக விசாரணைக் குழுவினால் குற்றம்சாட்டப்படாத போதிலும், அவர்கள் மீது மற்றொரு விசாரணைக் குழுவை அமைக்கப் போவதாகக் கூறி, கட்டாய விடுப்பில் செல்லுமாறு கோரியவர்தான் முதலமைச்சர். அதுதான் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு இட்டுச் சென்றது.
பின்னர், இது இயற்கை நீதிக்கு அப்பாற்பட்டது என்று இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டிய பின்னர் தான், முதலமைச்சர் இறங்கி வந்தார்.
இப்போதும் கூட டெனிஸ்வரனின் பதவி நீக்கத்துக்கு முதலமைச்சர் எந்த முறையான காரணத்தையும் முன்வைக்கவில்லை. ஆனால், சிவனேசனின் நியமனம் தொடர்பாகக் கேள்வி எழுப்பிய போது முதலமைச்சர், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதிதான் என்று கூறியிருக்கிறார். இது முதலமைச்சரின் முன்னுக்குப் பின் முரணான செயலாகவே உள்ளது. இந்த விடயத்தில் மாத்திரம் அவர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை.
அனந்தி சசிதரன் மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளை வழங்கிய போது, “தற்காலிக ஏற்பாடு தான், மூன்று மாதங்களுக்கே அவர்கள் பதவியில் இருப்பார்கள்” என்றே முதலமைச்சர் கூறியிருந்தார்.
ஆனால், இப்போதுள்ள நிலையில், அவர்களின் பதவிகள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன. இது முன்னரே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் முதலமைச்சர், அதை இன்னமும் நேர்மையான முறையில் வெளிப்படுத்தியிருக்கலாம்.
தமிழரசுக் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்று அறிவிக்கப்பட்ட பின்னர், அனந்தி சசிதரனை அந்தக் கட்சியின் சார்பில், அமைச்சராக நியமிப்பதாக முதலமைச்சர், அறிவித்திருந்தார்.
அதே முதலமைச்சர், டெலோவில் இருந்து இடைநிறுத்தப்பட்டதைக் காரணம் காட்டி, டெனிஸ்வரனை அந்தப் பதவியில் இருந்து நீக்கியது, முரணான செயல்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன், அமைச்சர்கள் நியமனத்தில் கட்சித் தலைவர்களின் தலையீட்டை முற்றாக நிராகரித்திருக்கலாம். அதன் மூலம் அமைச்சர் பதவிக்குத் தகுதியானவர்கள் என்று தான் கருதுவோரை சுதந்திரமாக தெரிவு செய்திருக்கலாம்.
ஆனால், பங்காளிக் கட்சிகளின் கூட்டத்தில், கட்சிகளின் பரிந்துரைகளையும் கவனத்தில் கொள்வதாக ஒரு முடிவை எடுத்த பின்னர், அதற்கு முரணாக அவர் முடிவுகளை எடுத்தது நியாயப்படுத்தக் கூடிய செயல் அல்ல.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சி தனித்து முடிவெடுப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கும், முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கும் வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை.
முதலாவது அமைச்சர்கள் வாரியத்திலும் அமைச்சர்களை முதலமைச்சரே தெரிவு செய்தார். இப்போதும் அவ்வாறே செயற்பட்டிருக்கிறார்.
முன்னைய அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்கத் தயாராக இருக்கவில்லை.
ஆனால், இப்போது, நியமித்துள்ள அமைச்சர்கள் குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு அதிகம்.
ஏனென்றால், மீண்டும் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் வந்தால், அதற்கு பொறுப்புக்கூறும் நிலை தனக்கு வரும் என்பது முதலமைச்சருக்கு நன்றாகவே தெரியும்.
எனவே, அமைச்சர்களை கவனிப்பதில் தான் எஞ்சிய ஓர் ஆண்டையும் முதலமைச்சர் கழிக்கப் போகிறார். அத்தகைய விழிப்பு நிலை, முதலமைச்சருக்குச் சோர்வையே தரும்.
அது வடக்கு மாகாணசபையைத் திறம்பட வழிநடத்துவதற்கு வழி வகுக்குமா என்பது சந்தேகம்தான்.
Average Rating